Wednesday, April 27, 2011

புயல் காரணமாக அடுத்த வாரம் சந்திக்கிறேன். அமெரிக்காவில்,   கடந்த இரண்டு நாட்களாக  மிசௌரி   (Missouri ),  கென்டக்கி (Kentucky),  டென்னசி (Tennessee),  அர்கன்சாஸ் (Arkansas) போன்ற மாநிலங்களில் உள்ள  பல பகுதிகளில் சுழல் காற்று சூறாவளி (Tornadoes) மற்றும் புயல் காற்றும் மழையும்  பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. 


 ஏரிகள் அதிகம் உள்ள பகுதிகளில்  வெள்ள அபாயங்களும்  (Flash Flood threat) ஏற்பட்டு உள்ளன. 
  This was  at  a place in Arkansas: நாங்கள் இருக்கும் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டு - மின்வெட்டு - இன்டர்நெட் தொடர்பு துண்டிப்பு - தொலைபேசி தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டு, உடனே சரி செய்யப்பட்டு உள்ளன.  ஊர்களுக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் சரிசெய்யும் வேலைகள் நடந்து கொண்டு உள்ளன.  இன்னும் மழையும் காற்றும் விட்டபாடில்லை.  

கடவுள் கிருபையால்,  நாங்கள் அனைவரும் நலமே.  
 
எங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் நிறைய மரங்கள் சாய்ந்து விட்டன.  எங்கள் வீட்டில் இருந்த மரங்களில்,   இரண்டு மரங்கள் விழுந்து விட்டன.  பக்கத்து வீட்டில், அவர்கள் போட்டு இருந்த வேலி பறந்து போய் தள்ளி விழுந்து விட்டது.  ஆனால்,  எங்களுக்கோ எங்கள் பகுதி வீடுகளுக்கு சேதம் இல்லை.  


ஆனால்,   பக்கத்து ஊர்களில் பலருக்கு பொருட் சேதம் ஏற்பட்டு உள்ளன. 


வாழ்க்கையை குறித்து புதிய பார்வையை - அனுபவத்தை - கடந்த சில நாட்களில் உணர்கிறேன்.  
DON'T TAKE YOUR LIFE FOR GRANTED.   APPRECIATE YOUR LIFE.   

அடுத்த வாரம் முதல் பதிவுலகம் பக்கம் வருகிறேன்.  மீண்டும் சந்திக்கிறேன்.  

படங்கள் - நன்றி: கூகுள்Tuesday, April 19, 2011

ஈஸ்டர் முயல், முட்டை போடுதா?நான் அமெரிக்கா வந்த புதிதில்,  ஈஸ்ட்டர் திருநாள் நெருங்கி கொண்டு இருந்த பொழுது, ஆலயத்தில் பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொண்டோம்.  அந்த சமயம் கடைகளுக்கோ அல்லது ஷாப்பிங்  மால் (mall ) சென்ற பொழுது, ஈஸ்ட்டர்க்கு பொருத்தமான இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள் வெளியே இல்லாமல்,  எங்கு பார்த்தாலும்  முயல் , கூடை நிறைய வண்ண நிற முட்டைகளை வைத்து இருப்பது போல படங்களும் chocolates மற்றும் அலங்காரங்களும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்  இருந்தன.  ஆண் முயல் - பெண் முயல் போன்று costumes அணிந்து கொண்டவர்களும் தென்பட்டார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  இந்தியாவில் இருக்கும் வரை,  ஈஸ்டர் என்பது கிறிஸ்தவ திருநாளாகவும்,  ஈஸ்டர் கொண்டாட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புமே காரணமாக கேட்டு பழகியவளுக்கு , இது புது மாதிரியாக இருந்துச்சு.  பொதுவாக உலக நாடுகளின் பார்வையில், அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடாகவே காணப்படுகிறது.  பெரும்பாலான அமெரிக்கர்கள்,  கிறிஸ்தவர்கள் தான்  என்பது உண்மையே.

ஆனால், ACLU என்ற ஒரு க்ரூப் பெரிய அளவில் வந்த உடன்,  எல்லா மதங்களின் (கிறிஸ்தவ மார்க்கம் உட்பட) திருவிழாக்களும் கொஞ்சம் பின் வாங்கி அவரவரின் ஆலயங்களிலும் ஆலயம் சார்ந்த இடங்களிலும் கோவில்களிலும் வீடுகளிலும் என்ற அளவுக்கு குறுக்கப் பட்டு விட்டன.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முன் உரிமை கொடுத்து சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வில் பொது இடங்களில், குறிப்பாக அரசாங்க பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான குறியீடுகளோ வழிபாடுகளோ இருக்க கூடாது என்று சட்டப் பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு ACLU முன்னேறி வந்து இருக்கின்றது.    


Majority   ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட,   இங்கு minority   ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின்  உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம்.  தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள்,  அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம். 

ACLU பற்றிய விவரங்களுக்கு: 


இது ஒரு புறம் இருக்க,  ஜெர்மனியில்,  கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பாக வசந்த காலத்தை கொண்டாடும் விதத்தில், செழுமை மற்றும் கருவுறுதிறன்க்கென்று இருந்த  தேவதையான (Goddess of Fertility)  Eostre   என்பவருக்காக கொண்டாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

  வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் என்பதால்,  முட்டை வளமையின் சின்னமாக கருதப்பட்டு வந்து இருக்கிறது.  முயல் இனம்,  குறுகிய நாட்களிலேயே பலுகி பெறுவதற்கு பேர் வாங்கியது.  அதனால் கருவுறுதிறன் சின்னமாக கருத்தப்பட்டு வந்து இருக்கிறது.  வசந்த கால திருவிழாக்களில் (Spring Festival)  இந்த சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யமென்ன?  இதன் பாதிப்பில்,   பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம்.  

Easter treats:  White Chocolate and Regular Chocolate bunnies and eggs: 
  


பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் சிலர், அமெரிக்க வந்து செட்டில் ஆன பொழுது, தங்களுடன் தங்கள் பாராம்பரிய பழக்க வழக்கங்களையும் கதைகளையும் சேர்த்து  அமெரிக்கா கொண்டு வந்து பரப்பி இருக்கிறார்கள்.  

ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளில்,  பின்னர்  missionaries வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பிய பொழுது,  வசந்த காலத்தை ஒட்டி வந்த ஈஸ்ட்டர் திருவிழாவோடு இந்த கதைகளும் ஒட்டி புது வடிவம் பெற்று விட்டன.  இத பார்றா!!!


கிறிஸ்தவ விழாக்களை வெளிப்படையாக பெரிய அளவில் கொண்டாட முறுமுறுத்த ACLU போன்ற அமைப்புகள் கூட, வசந்த காலத்துக்கென்று இருக்கும் - எந்த வித மதங்களின்  சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ -  அதன் அடையாளங்களாக  வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை.  

1970 s  இல் இருந்து, அமெரிக்காவில்  வியாபார நோக்கு (commercialism)  எல்லாவற்றிலும் தலையிட ஆரம்பித்த பின்,  முயல் , முட்டை போடும் கதைகள்  வியாபார திறன் சாயம் பூசப்பட்டு புது உரு பெற்று - ஜெர்மானிய பூர்வீகத்தை தொலைத்து - வீறு கொண்டு வந்து இன்று வரை உலா வந்து கொண்டு இருக்கிறது.
வரும் ஞாயிறு,  ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம்.  தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும்.   ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக   ஆங்கே ஆங்கே அவர்களுக்காக  வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து  சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ,  பூங்காக்களிலோ  இப்படி விளையாட்டுக்கள் நடக்கும்.  அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம். 

கீழ் உள்ள படத்தில்,  ஒபமா ஒரு சிறு குழந்தைக்கு முட்டை வேட்டையில் உதவுகிறார்: கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் என்று ஒரே வரியில் இந்தியாவில் கொண்டாடிவிட்டு வந்த எனக்கு - இப்படி ஜெர்மானிய பாரம்பரியம்  - நாத்திக பாதிப்பு - வசந்த காலம் -  குழந்தைகள் விளையாட்டு எல்லாம் கலந்து கட்டிய  வித்தியாசமான கிறிஸ்தவ திருவிழாவை கொண்டாடுவது  மலைப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

(கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும்  கிறிஸ்துமஸ் கூட,  கிறிஸ்துமஸ் தாத்தா என்று நம்ம ஊரில் அழைக்கப்படும் Santa Claus க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமெரிக்காவில்  கொண்டாடப் பட்டு வருவது, தனி கதை. )

கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும்   ஒரு நாட்டில்,  இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது.  இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து)  மற்றும் வீடுகளில் தவிர  பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல  மறைக்கப்பட்டு  (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. 


அனைவருக்கும்  ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!   

படங்கள்:  கூகுள் அக்காவுக்கு நன்றிகள். 

 

Monday, April 18, 2011

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?சென்ற வாரம்,   நாங்கள் வசிக்கும் ஊரில் இருக்கும் பல்கலைகழகத்துக்குச் செல்ல வேண்டியது வந்து இருந்தது. 

அப்பொழுது, அங்கே இருந்த பல்கலைகழக மாணவ மாணவியர்களிடம் இருந்த சில பொருட்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தன .    (பதிவர்  மூளை alert ஆயிடுச்சு.....ஹி,ஹி,ஹி,ஹி....) 
அங்கே நான் கண்ட  வித்தியாசமான  சில பொருட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  (கடமை....கடமை....பதிவர் குல  கடமை.....)

கேமரா எடுத்து செல்லாததால்  ( ம்க்கும்........ எடுத்துட்டு போய் இருந்தா மட்டும்???  போட்டோவை ஒழுங்கா எடுத்துட்டுதான் மறு வேலை பார்த்திருப்பேன் போல ஒரு பில்ட் அப்பு கொடுத்தால், நல்லாத்தான் இருக்குதுங்க.....)  இங்கே கூகுள் images மூலம் அவற்றை கண்டு பிடித்து,  இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.  கூகுள் அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்: 

1.  Vibram  Five Fingers Shoes: ($55 - $150)

இந்த விசேஷ  காலணிகளுக்கு  (Shoes)  ஐந்து விரல்கள் இருந்தன. 


2.  Laptops Carry bags:   ( $80 and above....) 

முதல் bag  - மெசேஜ் பார்த்தால்,  கலகலகலக்கல்! 
அடுத்தது:  Small Tent Laptop bag: (டென்ட் க்கு உள்ளே lap top வைத்து வொர்க் பண்ணலாம்.)3.  பல்கலைகழக  மாணவர்கள் அணிந்து இருந்த Funny T-shirt messages:  

"தண்ணி அடிக்க கூடாது என்று சொன்னாங்க .... எந்த தண்ணி என்று சொல்லலியே":

"college student னா இலக்கணம் சுத்தமாக ஆங்கிலம் பேசணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன?"
"இதுல மட்டும் சில பொண்ணுங்க தெளிவா இருக்காங்க.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..."
T shirt message on Facebook:  

T shirt message on Blog: enjoy....... 

நன்றி. வணக்கம்!
Monday, April 11, 2011

வசந்த கால பறவைகளே.....

ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம்  குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது....   எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்! 


எங்க வீட்டு மரங்களில் குறிப்பாக இப்போ நிறைய பறவைகள் கூடு கட்ட ஆரம்பிச்சு இருக்குது.... 
கார்டினல் எனப்படும் சிவப்பு நிற பறவைகளும்,  Blue Jay எனப்படும் நீல நிற பறைவகளும் நிறைய பார்க்கிறேன்.  

 Red Cardinals: 

 Blue Jays: நம்ம ஊரு போகி பண்டிகையில் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று சொல்லி  வீட்டை   புது பொலிவுடன் தயார் படுத்துகிற மாதிரி,   வசந்தம் வரும் போது,  "Spring Cleaning" என்று சொல்லி வீட்டை தயார் படுத்துவாங்க....   ஒன்றரை ஆண்டுகள் முன்னால் தான்,   இங்கே ஒரு வீட்டை வாங்கி, எங்க கிராமத்து அத்தியாத்தை தொடங்கி விட்டோம்.  அதனால், நானும் இந்த வருடம்  வசந்த கால சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கியாச்சு.... 

வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய -  அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று. 

எங்கள் வீட்டு ஜன்னல்: 


 நல்லவேளை,  அவசரப்பட்டு கலைக்காமல் இருந்தேன்.   ஆர்வ கோளாறில்,  உள்ளே எட்டி பார்த்தேன்.  வெள்ளை அல்லது பிரவுன் நிறத்தில்,  கோழிமுட்டையே  பார்த்து பழகியவளுக்கு,  இது என்ன புதுசா ஒரு நிறத்துல முட்டை இருக்குதே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.  இது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று காத்து நின்று கண்டு பிடிச்சேன். 

இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க,  ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது.  சந்தோசம் தாங்கல..... அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

Robin Bird:  

சின்ன வயதில், எங்கள் தாத்தா பாட்டிம்மா வீட்டில் தான் இந்த மாதிரி குருவி கூடுகளை பார்த்த ஞாபகம்.  இப்போ, எங்க வீட்டிலேயும் ............ சூப்பரோ சூப்பர்!  எங்க குட்டீஸ்களும் நாங்களும்,  மாத்தி மாத்தி, ஜன்னலுக்கு உள்புறம் நின்று கொண்டு அந்த கூட்டை வேடிக்கை பார்ப்பது தான் நல்ல பொழுதுபோக்காக இருக்குது....  பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... ஹையா..... Beauty of nature!

தாய்பறவை இரை தேட சென்ற பொழுது, அவசரமாக நான் கிளிக்கியது: ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால்,   எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன -  குருவிகளும் இருக்கின்றன.   பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன.  அப்படின்னா,  எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ?  சரியா சாப்பாடு கிடைக்கலியோ?  போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? காகங்கள் மட்டும் எப்படி தப்பி பிழைக்கின்றன -  ஐந்து ரூபா "கோழி"  பிரியாணி வந்த பின்னும்?  ம்ம்ம்ம்ம்ம்.......

House Sparrow: 


இன்றைய தேதிக்கு, எங்க கிராமத்துல இன்னும்  வசந்தம் இருக்குது..... பறவைகளின் கூடுகள் இருக்கின்றன..... நான் எங்க வீட்டு ராபின் (Robin)  குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ! 

  நன்றி:  பறவைகளின் படங்கள்:  கூகிள் அக்கா. 

Thursday, April 7, 2011

அரசியல் (மு)தல....!

நான் பதிவு எழுத வந்த ஒன்னேகால் வருடத்தில்,  ஒண்ணு ரெண்டு தான்  அரசியல் குறித்த  பதிவுகள் எழுதி இருக்கேன்.  முதலும் முக்கியமான ஆன பதிவு  :  நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்க:

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை

அந்த பதிவை எழுதியபின், எனக்கு என்ன கலங்கிச்சோ தெரியல ...அரசியல் பதிவுகள் பக்கமே அவ்வளவாக போகல.... சரி, இந்த வருஷம் வோட்டு தான் போட முடியல .... வக்கணையாக பேசி,  இன்னொரு  அரசியல் பதிவு இன்று புதுசா  போடலாமேன்னு முடிவு பண்ணி ஒரு காமெடி பதிவு எழுத நினைச்சேன். அப்புறம், அங்கே அரசியல் (மு)தலைகள் எல்லாம் மக்களை வச்சு காமெடி பண்ணி, அவங்க பொட்டியை நிரப்புறாங்களே , அது வச்சு காமெடி பண்ணாம ஒழுங்கா எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன். 

போன வருஷம், நவம்பர் மாதம் நாங்க இப்போ இருக்கிற ஊரில Mayor election நடந்துச்சு.   போட்டியிட்ட வேட்பாளர்கள் எல்லோரும் தனி ஆளாக,  அவரவர் கொள்கைகளை தெளிவாக பிரிண்ட் செய்து, பிட் நோட்டீஸ் கையில வச்சுக்கிட்டு, ஒவ்வொரு வீடாக வந்து ஹலோ சொல்லி பேசி கொடுத்துட்டு போனாங்க.... தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல.  அவங்க கூட கோஷம் போட ஆள் இல்லை ..... கழுத்தை சுத்தி கட்சி கொடி நிறத்துல துண்டு இல்லை.... மைக் இல்லை ..... கலகலப்பு இல்லை...... களேபரம் இல்லை..... என்னங்கடா தேர்தல் பிரச்சாரம் இது என்று நினைச்சிக்கிட்டேன்.   

அதில், Bill Wells என்று ஒரு வேட்பாளர்  வந்துட்டு போனதும், எங்க பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி வந்து,  "உங்களுக்கு இவரைத் தெரியுமா?  இவர் ரொம்ப நல்ல மனுஷன்.    இவர் முன்பு பள்ளிக்கூட பிரின்சிபால் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.  ரொம்ப நல்ல பெயர் எடுத்தவர்.  இவர் குடும்பமும் நல்ல முன் மாதிரியான குடும்பம் என்று  பெயர் வாங்கி உள்ளது.  அவர் மனைவி,  நிறைய பொது நல சேவைகளில் ஆர்வமாக முன்னின்று  பணி செய்பவர்.  இவர் தான் Mayor ஆக வர வேண்டும் என்று நிறைய பேர் பேசிக்கிறாங்க, " என்று சொல்லி விட்டு சென்றார். 

Mayor Bill Wells:  

தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிச்சாங்க.... இப்போ எங்க ஊருக்கு Bill Wells தான் மற்றவர்களை விட அதிக வாக்குகள் பெற்று ஜெயிச்சு Mayor ஆக இருக்கிறார். 
 அப்போதான் பக்கத்து வீட்டு பொண்ணு சொன்னது நியாபகத்துக்கு வந்துச்சு... ஒரு வேட்பாளர் ஜெயிக்க அவர் மட்டும் அல்ல, அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது.  

அதே மாதிரி,   கற்பு கிற்பு என்று அதிகம் அலட்டி கொள்ளாத அமெரிக்க நாட்டில்,  கிளின்டன் (Clinton)  ஜனாதிபதியாக இருந்தப்போ மோனிகா கூட அப்படி இப்படி இருந்துட்டார் என்று விஷயம் வெளியில் வந்தவுடன்,  மீடியா முதல் மக்கள் வரை, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டி குடைஞ்சு எடுத்தாங்க.  

"அட,  மோனிகாவுக்கு ஒரு "முடிவு" கட்டிட்டு - அவள் இருந்த இருக்கிற இடத்துல புல்லு முளைக்கிறதுக்கு வழி பண்ணாம - என்னது ஒரு அமெரிக்க ஜனாதிபதி இப்படி திருதிருனு  மாட்டிக்கிட்டு முழிக்கிறாருனு,"  எங்க நெருங்கிய தோழியோட மாமானார் சொன்னாப்போ,  நாங்க சிரிச்சு இருக்கோம்.

பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி கிட்ட ஒரு நாள் ஆர்வம் தாங்காம கிளின்டன் விவகாரம் எதுக்கு பெரிய விஷயமாச்சு என்று கேட்டுட்டேன்.   திருமணம் ஆனப்புறம்,  ஒரு affair வந்து - டைவர்ஸ் ஆகி - வேற கல்யாணம் செய்துக்கிறது சகஜம் தானே. மேலும்,  இங்கே நம்ம ஊரு மாதிரி சமூதாயத்துக்கு பயந்து  வாழறவங்க கிடையாது.  சுய விருப்பு வெறுப்பு படி தான் முடிவு எடுத்து இருப்பாங்க... அது அவங்க உரிமை என்று மத்தவங்க தலையிட மாட்டாங்க... அப்புறம், கிளின்டன்க்கு மட்டும் என்ன தனி பஞ்சாயத்து என்று வெட்டி பேச்சு பேசியே பழக்கப்பட்டதால  கேட்டுட்டேன். 

Bill Clinton: 


அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க:  "  மக்கள் எல்லோரும் தங்கள் நலவாழ்வை நல்லபடியாக பார்த்துக்கத்தானே, நம்பி ஒரு ஆளை தெரிந்தெடுத்து நாட்டை ஆள பொறுப்பாக நியமிக்கிறோம்.  ஜனநாயக ஆட்சியில், முதலில் அவர் மக்கள் பிரதிநிதி.   எங்களை சர்வாதிகரத்துடன் ஆள வந்தவர் அல்ல.  மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்.  சமூதாயம் எப்படி இருந்தாலும்,  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  உண்மையாக இருக்க வேண்டும். மோனிகா விஷயத்தில், கிளின்டன் பொய் சொன்னது பிடிக்கவில்லை. உண்மையை ஒத்துக்கொண்டு அவர் , மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் பொய் சொல்லி மறைக்கப் பார்த்தார். அதனால் அவமானப்பட்டார். அதன் பின், அவர் தவறு செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டார். அரசியல் தலைவர்களும் மனிதர்கள் தான். தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், மக்கள் தான் புரிய வைக்க வேண்டும்.  பக்கத்து வீட்டில் உள்ளவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது என்னை பாதிக்காத வரை.  ஆனால்,  அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள்.  அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்."

 அப்போதான் எனக்கு நிறைய சந்தேகங்கள் சரமாரியாக வந்துச்சு.... 


  இந்தியாவில் ....சரி வேணாம் விடுங்க.... 
தமிழ்நாட்டில்,  சராசரி மனிதரிடம் சமூதாயத்துக்கு பயந்து வாழும் எண்ணம் இருக்கும் அளவுக்கு, அரசியல் தலைவர்களிடம் இருக்கிறதா?  

கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம்  எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா? 

மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் அரசியல் தலைவர்கள் வருகிறார்களா?  இல்லை, மன்னர் ஆட்சி  காலத்தில் இருந்த மாதிரி,  வாரிசு ஆட்சி தான் ஏற்றது என்ற மன நிலையில் இருக்கிறார்களா? 

சமூதாயத்துக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்களா? 

தலைவன் தவறு செய்தால், அதை திருத்தும் எண்ணத்துடன் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரம் உள்ளதா?  இல்லை சர்வாதிகார நிலமைதானா? 

 இன்னும் நிறைய டவுட்டு   மாறி மாறி வந்துச்சு... அதை எல்லாம் பதிவுல சொன்னா, ஆட்டோ சுமோ எல்லாம் பிளேன்ல ஏறி எங்க வீடு தேடி வரும். எனக்கு எதற்கு வம்பு?  நான் கேக்கலப்பா ...நான் ஒண்ணும் கேக்கல....  ஹையா...... நானும் தமிழ் பொண்ணு தான்...... அப்படியே நீதி நியாயம் தர்மம் என்று பேசாமல்,  வாயை நானே பொத்திக்கிட்டு, கம்முனு  வேற வேலை பார்க்க போறேன் பாருங்க..... 


ஒரு முறை,  காந்தி தீவிரமாக சுதந்திர போராட்டத்தில இறங்கினப்போ,  ரவீந்தரநாத் தாகூர் (அவர் யாருன்னு யாராவது கேட்பீங்களே .... அவர் தாம்ப்பா, தேசிய கீதம் எழுதிய மகான்) காந்தி கிட்ட வந்து சொன்னாராம்:  " இந்திய மக்கள், இது வரை மன்னராட்சியில் பிறகு வெள்ளையர் ஆட்சியில் என்று மட்டுமே இருந்து பழகியவர்கள்.  இரண்டிலுமே ஆட்சி செய்கிறவர்களுக்கு அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி என்றால் என்ன சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.   அதன் பின், சுதந்திர இந்தியாவை அவர்கள் கையில் கொடுங்கள்."
அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"
மக்களை அவர் தயார் செய்வதற்குள், அவரே எதிர்பார்க்காத கலவர நிலையை நாடு சந்திக்க..... பிறகு என்ன நடந்தது என்று வரலாறு சொல்லுமே.   
அப்படியும் இப்படியுமா இத்தனை வருடங்கள் சுதந்திரம் வாங்கி ஓடி போயாச்சு.  மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வைக்கும் முதல் படி - பாடம்  எப்பொழுது நடக்கும்?  தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்?  


அடுத்த வாரம், எல்லோரும் முடிந்த அளவு முயற்சி செய்து வோட்டு போடுங்க.  A/C ரூம் ல இருந்துக்கிட்டு - என்னை மாதிரி வெளிநாட்டில் இருந்துக்கிட்டு கரிசனத்துடன் பதிவு போட்டு கிழிக்கிறதை விட,  வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும்.  

இந்த கட்சி விட்டா அந்த கட்சி  ... இந்த இலவசம் விட்டா அந்த இலவசம்  என்று இருக்காமல்,  தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு,  "நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி  - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள்.  வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே..... 


எங்க அப்பா இருக்கும் வரை, இப்படித்தான் தேர்ந்தெடுத்து வோட்டு போடுவார்.  ஒரு முறை, அவர் வோட்டு போட்டு வந்த ஆளுக்கு, தேர்தல் முடிவுகளில் விழுந்த வாக்குகள் மொத்தம் :  61 
 அந்த நல்ல மனிதரை நம்பி வாக்களித்தவர்கள் அறுபது பேர் தான்.  அதில் எத்தனை பேரு அந்த வேட்பாளரின்  குடும்பத்து உறவினர்களோ?   நிச்சயமாக யார் யாரு தனக்கு வோட்டு போட்டாங்க என்று அடையாளம் கண்டு பிடித்து நன்றி சொல்லி  இருப்பார்.  ஆனால்  இன்று வரை, யார் அந்த 61 வது ஆள் என்று தலையை பிச்சிக்கிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். 

இந்த நிலைமை, நம்மூரு அரசியல் நிலவரத்தின் சிரியஸ் விஷயமா இல்லை சீரியஸ் விஷயமா?  Sunday, April 3, 2011

அமெரிக்காவின் நஞ்சுபுரம்

எங்க நண்பர் ஒருவர், வேடிக்கையாக  கேட்டார்: 
"இந்தியர்களுக்கும் சீன மக்களுக்கும்   என்ன வித்தியாசம் தெரியுமா?" 
"உருவத்தில் இருந்து எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. எதுன்னு நீங்களே சொல்லுங்க."
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."

மற்றவர்கள் சிரிக்க, நானும் என் கணவரும் மட்டும் சிரிக்கவில்லை.  

காரணம்:   வித்தியாசமாக இருக்கும் இடங்கள், விழாக்கள் தேடி பிடித்து சென்று பார்க்கும் பழக்கம் உள்ள நானும் என் கணவரும்,  Texas மாநிலத்தில் இருந்த பொழுது,   தெரியாத்தனமாக ஒரு பாம்பு திருவிழாவுக்கு  சென்று விட்டு வந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.  அங்கே சென்ற பின் தான் கவனித்தேன். எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில்,  எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை.  எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல... 

கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது. 

வருடந்தோறும்,  Sweetwater என்ற சின்ன ஊரில்,  மார்ச் மாதத்தில் இரண்டாம்  வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) நடக்கும் இந்த திருவிழாவுக்கு  அந்த ஏரியா மக்களிடம் வரவேற்பு அதிகம்.  Rotary Club - Lions Club மாதிரி உள்ள ஒரு சமூக அமைப்பான Jaycees குழுவினர்,  "World's Largest Rattlesnake Round-up" என்று நம்ம பக்கம் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாதிரி,  பாம்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க. 


வரலாறு:  

ஒரு காலத்தில்,  அந்த பகுதிகளில்  விஷப்பாம்பு வகைகளில் ஒன்றான Diamondback  Rattlesnakes  அதிகமாக இருந்து இருக்கின்றன.  (இந்த பாம்புகளின் வால் பகுதிகளை, அந்த பாம்புகள்   கிலுகிலுப்பை - rattle - மாதிரி   ஆட்டி சத்தம் உண்டாக்கி எச்சரிக்கை செய்வதால், இந்த பெயர்.)   அதனால் கால்நடைகளும் பாதிக்கப் பட்டு வந்து இருக்கின்றன.  அந்த பாம்புகளின் வளர்ச்சியை குறைத்து, பாதுகாப்பு உள்ள இடமாக மாற்ற எண்ணி,   மக்களையே அந்த பாம்புகளை பிடித்து வரச் செய்து அழிக்க வகை செய்து இருக்கிறார்கள்.  
Diamondback Rattlesnake: 


வாலில் உள்ள கிலுகிலுப்பை (rattle) பகுதி:  


மக்களை உற்சாகப் படுத்தும் விதமாக,   "இருப்பதிலேயே அதிக நீள பாம்பை பிடித்து வந்தவர்" - அதிக எடை உள்ள பாம்பை பிடித்து வந்தவர்" என்று இன்னும் சில வகைகளாக பிரித்து பரிசுகள் வழங்கி இருக்கிறார்கள்.   ஆனால், இப்பொழுது அந்த அளவுக்கு பாம்புகள் தொல்லை  இல்லை என்றாலும் பழக்க தோஷம் யாரை விட்டது.   மக்களும் "ருசி" கண்ட பூனைகள் மாதிரி, பாம்பு பிடிக்க கை துருதுரு என இருக்குதுன்னு தொடர்ந்து சொல்ல,  52 வருடங்களாக தொடர்ந்து இந்த பாம்பு விழா நடக்குது.  

இதற்கெனவே பாம்பு பண்ணைகள் மூலமாக இந்த rattlesnakes வளர்க்கிறார்கள்.  விழா ஆரம்பிக்கும் நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் அந்த பாம்புகளை விட்டு விடுகிறார்கள்.  மக்கள் பாம்புகளை பிடித்து வர போட்டா போட்டி தான்.....  பரிசுகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன. பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள். 


இந்த விழா மூலமாக கிடைக்கும் நிறைய பணத்தில் தான்,  இந்த ஊரின் பல நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.   அதை குறித்த விவரங்களுக்கு: 


விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:  
வியாழன் அன்று மதியம்,  அரை மணி நேர Parade ஒன்று ஊரின் முக்கிய பகுதியில் நடக்கும். 

வியாழன் மாலை,  Miss Snake Charmer Scholarship Beauty Pageant  நடைபெறுகிறது. தங்கள் கல்லூரி படிப்புக்காக, Jaycees  வழங்கும் Scholarship (கல்வி உதவி தொகை) க்காக அழகி போட்டிகள் நடக்கும்.  அதில் வெற்றி பெறும் அழகிக்குத்தான், Miss Snake Charmer என்ற பட்டம் வழங்கப் படுகிறது. 

2009 Miss Snake Charmer அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்: 

வியாழன் முதல் ஞாயிறு வரை,  இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு. 
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான்  விஷமே ...சாரி, விஷயமே  என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது.....  ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....

பிடிச்சுட்டு வந்த பாம்புகளை எல்லாம் என்ன  பண்றாங்க என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்குது.... 

 அந்த ஊரில் உள்ள பெரிய அரங்கில் உள்ளும் நடக்கும் நிகழ்ச்சிகளை காண நுழைந்தோம்.   ஒரே பேடு ஸ்மெல்லு ..... ஆமாம்ப்பா ..... துர் நாத்தம்  தாங்கல ..... ஒரு பெரிய குழிக்குள் பிடித்து வரப்பட்ட எல்லா பாம்புகளும் போட்டு வைத்து இருந்தார்கள்.  அந்த பாம்புகள்,  தங்கள் பாதுகாப்புக்காக, எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம்  இப்படி ஒரு ஸ்ட்ராங் வாடையை - ஒரு மஞ்சள் திரவம் போல வெளிப்படுத்தி விடுமாம்.   ஆனால், அங்கே மக்கள் ஏதோ ரோசாப்பூ வாசனையில் அன்ன நடை போட்டுக்கிட்டு போற மாதிரி நடந்தாங்க.... நான் விடுவிடுவென அந்த இடத்தை கடந்து போய் விட்டேன்.  அந்த பாம்புகளிடம் இருந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது - அதை எப்படி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று மூன்று பேர்கள் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.  


அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு.... இரண்டு பேர்கள் ,  சில பாம்புகளை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து,  கசாப்பு கடைக்காரர் போல, பாம்பு தலையை வெட்டி கொண்டு இருந்தார்கள்.  நம்ம ஊர் பக்கம்,  ஆடுகள் பலி கொடுத்துட்டு போற மாதிரி, இங்கே சர்வ சாதாரணமாக பாம்புகளை பலி கொடுத்த மாதிரி சிரச் சேதம் செய்தாங்க...  அந்த தலைகளை ஒன்று விடாமல் சுத்தம் செய்து ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டார்கள். அப்புறம்,    டீன் வயதில் உள்ள சின்ன பெண்களும் ஆண் பிள்ளைகளும்,  தலைகள் இல்லாத பாம்புகளை ஒரு பெரிய கொடியில், ஏதோ துணி காயப் போடுற மாதிரி காயப் போட்டு விட்டு,  கிளிப் மாட்டி,  அதன் தோலை, ஒரு வீச்சாக பிய்ந்து விடாமல், ஒரே பீசாக உரித்து கொண்டு இருந்தார்கள். யம்மா..... என்று ஓடி போய்ட்டேன்.  அடுத்த பகுதியில் அப்படி உரிக்கப்படும் தோல்களை, எப்படி பதப்படுத்துகிறார்கள் (how to make them into snake skin  leather ) என்று ஒரு குட்டி வகுப்பு நடக்குது.   

அடுத்து ஒரு திருவிழா கடைகள்/சந்தை பரப்பி அந்த அரங்குக்குள்ளேயே வைத்து இருந்தார்கள்.   அந்த பாம்பின் தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட தலைகள் வைத்து - குட்டி பாம்பு முதல் பெருசுகள் வரை - செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டு இருந்தன. 

கைத்தடி, கம்மல்கள்,  வளையல்கள்,  பெல்ட், ஜாக்கெட்,  பூட்ஸ், கைப்பைகள்,  பர்சுகள்,  மோதிரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று வகை வகையாக இருந்தன. ஏதோ கண்காட்சியகம் போல பார்த்து கொண்டு இருந்தேன்.  அந்த பாம்பு கொத்துனா,  மனுஷனுக்கு சங்குதான்.  அந்த பாம்பை,  இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... விற்பனை கோலகாலமாக நடந்து கொண்டு இருந்துச்சு.  
rattlesnake belt, purse, money-clip: 

 rattlesnake pen: 

 rattlesnake கத்தி உறை:

அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க: 

 
 Rattlesnake Boots:  (most popular items) 

rattlesnake rattle ear rings:

rattlesnake real  bones necklace: 

நான் என் கணவரின் கையை பிடித்து கொண்டு, போதுண்டா சாமி..... என்னை பலி/பழி வாங்கியது போதும் ....வாங்க போகலாம் என்று இழுத்து கொண்டு வந்தால்,  அரங்கின் வெளியேறும் வாசல் பக்கம் - கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்துச்சு... வெளியே வர முடியல.  அப்புறம், மெல்ல வெளியே வந்தால் அந்த வாசல் பக்கம் தான் ஒரு கடை போட்டு,    french fries  உடன்  பாம்பு வறுவல் விற்றுக் கொண்டு இருந்தார்கள்.  ஏதோ மீன் வறுவல் மாதிரி மக்கள், என்ஜாய் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.  வயதானவர்கள் - சிறுவ சிறுமியர் - ஆண் பெண் - என்று எல்லோரும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.  

 corn dog என்பது நாய் கறி அல்ல,  சோள மாவில் முக்கி எடுத்து பொரிக்கப்பட்ட ஒரு வகை sausage ஆகும். 
Rattlesnake fry with french fries: 

 
நான் அங்கே பிடிச்ச ஓட்டத்தில் எங்க கார் பக்கம் வந்துதான் நிறுத்தினேன்.  நாங்க அப்போ இருந்த லபக் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டோம்.  பசித்தாலும்,  ஏனோ எதையுமே சாப்பிடத் தோணல .....ரெண்டு நாளைக்கு.......  அப்புறம் தான் சகஜ நிலைமைக்குத் திரும்பினேன். 

படங்கள்:  நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல.  நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால்,  என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும்.  அவ்வ்வ்வ்....) 

பதிவை  வாசிச்சிட்டு  உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா,  நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....
நாட்டுக்கு நாடு நஞ்சுபுர சம்பவங்கள் உண்டு போல.... அதற்கு அமெரிக்கர்களும் விதிவிலக்கு அல்ல. நேரில் பார்த்திரா விட்டால், நான் கூட நம்பி இருந்து இருக்க மாட்டேன்.