Tuesday, November 30, 2010

தலையணை சண்டை

 தோழி ஒருத்தி நேற்று அழைத்து பேசினாள்.  'சித்ரா, நீ உன் ப்லாக்ல வித்தியாசமான ஊர்கள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள் பற்றி எழுதுறியே.  இன்னைக்கு நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உடனே உன் நினைப்பு வந்துச்சு.  அந்த விஷயத்தை பற்றி எல்லா தகவல்களும் தொகுத்து உனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கேன். பாத்துட்டு சொல்லு," என்று உற்சாகத்துடன் பில்ட்-அப் கொடுத்தாள்.

சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.

இதோ, அவள் அனுப்பிய இன்றைய வெட்டி பேச்சு டாபிக்:

WORLD (???)  PILLOW FIGHTING CHAMPIONSHIPS:

 14 வயதிற்கு மேற்பட்ட "பெரியவங்க" மட்டுமே பங்கு பெறும்  இந்த போட்டி,  36 வருடங்களாக நடத்தப்படுகிறது. 
பெரும்பாலும் 20 + தான் போட்டிக்கு வராங்க. 
California மாநிலத்தில் உள்ள Kenwood என்ற இடத்தில் தான் இந்த "அறிவுபூர்வமான" போட்டி நடக்க ஆரம்பிச்சுதாம். இப்போ,  நிறைய இடங்களில்  நடக்குதாம். 
பெரிய புள்ளத்தனம் எல்லாத்தையும் அரங்குக்கு வெளியே கழட்டி  வச்சுட்டு வந்து விளையாடுற ஒரு சின்னப்புள்ளத்தனமான போட்டியாம்.  விளங்குனாப்புல தான்!

சொதசொதனு ஈரத்துடன்  இருக்கிற ஒரு களிமண்ணு பரப்பு  (pit of mud).  அதுக்கு மேல, வழுவழுனு இருக்கிற ஒரு மரக்கட்டை.  

போட்டியாளர் கையில், ஒரு தலையணை - வாத்து இறைக்கைகளால்  (Goose feathers - not duck feathers) நிரப்பப்பட்ட தலையணையை தண்ணீரில் முக்கி, ஈரப்படுத்தி கொடுத்து இருப்பார்கள். தலையணையை ஒரு கையில் மட்டுமே பிடித்த படி, கட்டையின் ஒரு முனையில் இருந்து நடுவில் -  களிமண்ணுக்குள் விழாமல் - வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.  அதே போல, மறுமுனையில் இருந்து இன்னொரு போட்டியாளர் வருவார்.  அடுத்த கையையோ காலையோ உபயோகிக்காமல்,  இந்த ஈரத் தலையணையை வைத்து அடித்தே அடுத்தவரை, களிமண்ணுக்குள் விழ வைக்க வேண்டும்.   

முப்பது வினாடிக்கு மேலாக அடிக்காமல் டபாய்க்க கூடாது.  ஒரு நிமிடத்துக்குள் யாரும் விழாவிட்டால், ஒரு கையை பின்னால் வைத்து கொண்டே, மறு கையில் தலையணையுடன் அடுத்தவரை தள்ள முயல வேண்டும்.  


இப்போவே  முட்டிக்கணும் போல இருக்கிறவர்கள்,  அந்த பக்கமா போய் சுவத்துல  முட்டிக்குங்க. கம்ப்யூட்டர் ல முட்டி கிட்டி வச்சு, damage ஆனா கம்பெனி பொறுப்பு எடுக்காது.  

சரி, அது ஒரு பக்கம் என்றால்,  Michigan மாநிலத்தில் Grand Rapids என்ற இடத்தில் நடந்த தலையணை சண்டையை பாருங்க:  பி.கு. இந்த மாதிரி தலையணை சண்டை அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளில் இப்படி தெருக்களில் "தலையணை சண்டை" நடக்குது என்பது கொசுறு செய்தி.   உலக நாடுகளில் உள்ள சுமார் 25 பெரிய நகரங்களில்,  நடந்து இருக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Pillow_fight_flash_mob

நாளைக்கு உங்களுக்கு யாருடனாவது  என்ன பிரச்சனை என்றாலும்,  தெருவுல தலையணை சண்டை போட்டு தீத்துக்கோங்க. ஏதோ "உலக அமைதி"க்காக, என்னால ஆன கடமை உணர்ச்சியில், சொல்லிட்டேன்.   சரியா, மக்கா!
 இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!

Saturday, November 27, 2010

நன்றி மறப்பது நன்றன்று

இந்த ஸ்பெஷல் நட்சத்திர  வாரத்தை, என்னால் மறக்கவே முடியாது.

நவம்பர் 22 முதல் 28 வரை தமிழ்மண நட்சத்திரமாக இருக்க, என்னை  தேர்ந்து எடுத்த தமிழ்மண குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னை பொறுத்தவரை எல்லாம் இறைவன் செயல் தான்.  சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - சில சமயம், காரணங்கள் நமது சாதாரண அறிவுக்கு எட்டாமல் போகலாம்.     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,  வேறு ஒரு புரிதலில் வாழ்க்கையின் அர்த்தம் - காரணங்களுடன் எல்லாமே கடந்து போகலாம்.

எனக்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டியது இருந்ததால்,  அதில் என்ன எழுதலாம் - எப்படி எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்ததில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்து கொண்டு இருக்கும் சில சம்பவங்களின் இறுக்கமான சோக பிடியில் இருந்து வெளியே வர பெரிதும் உதவியது.  திங்கள் அன்று "முன்ன பின்ன செத்து இருந்தால்தானே? " என்று புலம்பி ஆரம்பித்த வாரத்தில்,  "மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்"  என்று நான் கற்று கொண்டேன்.   இந்த வாரத்தை,  எப்படி மறக்க முடியும்?   உங்களின்  ஆதரவான பின்னூட்டங்கள்  மூலம், எனக்கு தேவையான சப்போர்ட் மற்றும் உங்களின் தூய அன்பினை கண்டு நெகிழ்ந்தேன்.  பதிவர்களாக இருப்பவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.  அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.


நவம்பர் 26 , வெள்ளி அன்று - அர்ச்சனாவின் பெற்றோரும் அவளது அண்ணனும் இங்கு வந்து விட்டார்கள்.  டிசம்பர் 4 , அர்ச்சனாவின் பிறந்த நாள் வருவதால், அது முடிந்த பின்,  வேறு ஒரு நாளில்   அர்ப்பணாவின் மறைவை குறித்து   அவளுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
அர்ச்சனா இன்னும் intensive care unit தான் இருக்கிறாள்.   இரண்டு வாரங்களுக்குள், அட்லாண்டாவில் உள்ள ஒரு Rehab மருத்துவமனைக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.  அவளுக்கு அங்கு வைத்து ஆறு மாதங்கள் வரை தெரபி மற்றும் treatment தொடர்ந்து நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் தள்ளி போய்விட்டால், இப்பொழுது போல அடிக்கடி நான் அவளை பார்க்க முடியாது.   அவள் பூரண நலன் பெற்று திரும்பி வர தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

நவம்பர் 28 , என் தந்தை, திரு. பொ.ம. ராசமணி அவர்களின்  முதலாம் ஆண்டு நினைவு நாள்.  அவரை பற்றி பெருமையுடன் நினைத்து பார்த்து, அவரை எனக்கு தந்தையாக தந்த இறைவனுக்கு நன்றி  சொல்கிறேன்.
என் அம்மாவுக்கு அவர் காதலுடன் எழுதி இருந்த  கவிதைகளை, என் தம்பி ஒரு கவிதை தொகுப்பு புத்தகமாக - "ஆதலால் காதல் செய்வீர்!" என்ற தலைப்பில்,  அவர் நினைவு நாளான இன்று,  நெல்லையில் வெளியிடுகிறான்.  அந்த தொகுப்பு -  புத்தகமாக வர வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமும் என்று சொல்லி சென்று இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், எனது தம்பியின் திருமணத்தின் போது, என்றும் இளமையாய் நின்ற என் தந்தை வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த படம். 

தொடர்ந்து தங்களது பரிந்துரை மூலமாகவும் - பின்னூட்டங்கள் மூலமாகவும் - வோட்டு மூலமாகவும் - விருதுகள் தந்தும்,  நானும் ஒரு தமிழ்  பதிவர் என்ற அங்கீகாரம் கொடுத்து,  என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. 


எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, November 26, 2010

(அமெரிக்காவில்) சோளம் விதைக்கையிலே......

சென்ற மாதம், நிறைய இடங்களில் குழந்தைகளுக்கென Fall Festival - (Autumn Festival)  நடந்தது. 

எங்கள் ஊரிலும் நடந்தது.  இங்கே  உள்ள University இல் இருக்கும் விவசாய கல்லூரி டிபார்ட்மன்ட் பேராசிரியர்களும், மாணவர்களும்,   அவர்களது research மற்றும் studies க்காக உள்ள  சோள காட்டில் இந்த விழாவை  நடத்தினார்கள்.

முதலில், கார் பார்க் செய்ததும்,  எல்லோரையும்  Farm area வுக்கு அழைத்து செல்ல,  tractors வரிசையாக நின்று கொண்டு இருந்தன. அவற்றின் பின்னால் வைக்கோல் கட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து இருக்கைகளாக (seats ) அமைத்து வைக்கப்பட்டு இருந்தன.  ஏறி கொண்டோம்.  வித்தியாசமான அனுபவம்.  சேர வேண்டிய இடத்தை அடைந்ததும்,  முதலில் எங்களை வரவேற்றது, பால் பண்ணை துறை.  பெரிய பண்ணையில் மிஷின் மூலம் மொத்தமாக கறக்கும் வண்ணம் விளக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வீடுகளில், இன்னும் பசு நேசரின் "செண்பகமே .... செண்பகமே...." முறைதான்.   மழலை பட்டாளத்துக்கு தாங்களும் செய்து பார்க்க ஆசை. அதற்காகவே, ஒரு மரத்தில்,  பசு (wooden milking cow) போல செய்து வைத்து இருந்தார்கள். அதனுள், பால் மாதிரி வெள்ளையாக தண்ணீர் வேறு.  Latex (ஒரு வகை ரப்பர்) மடுவில் இருந்து "பால்" கறந்து மகிழ்ந்தார்கள். நல்ல வேளை, மரப்பசு. குழந்தைகள் வந்த வரத்துக்கு,  நிஜ பசு என்றால்,  விஜயகாந்த் கையில் அகப்பட்ட வில்லன் மாதிரி துவம்சம் ஆக்கப் பட்டு இருக்கும். ஹா,ஹா,ஹா,.....


 அது முடிந்ததும்,  அடுத்து எங்களை  பண்ணை வீடுகளில் (Farm House) வளர்க்க முடிகின்ற கால்நடைகளையும் பறவைகளையும் காண்பதற்கு அழைத்து சென்றார்கள். ஆடு, மாடு, பன்றி, வான் கோழி, கோழி, கழுதை, குதிரை, லாமா , முயல் என்று பட்டியல் நீண்டது. 


நிறைய படங்கள் இருக்கின்றன. ........ பதிவின் நீளம் கருதி போட இயலவில்லை.

அப்புறம்,  miniature குதிரையில் ஏறி, குழந்தைகளை ஒரு ராட்டினம் மாதிரி அழைத்து சென்றார்கள்.  ஒரு கம்பத்தை சுற்றி,  நான்கைந்து குட்டி குதிரைகள் கட்டப்பட்டு இருந்தன. குழந்தைகளை வைத்து ராட்டினம் மாதிரி சுற்றி சுற்றி வர செய்து இறக்கினார்கள்.  எனக்கு என்னமோ நம்ம ஊரு செக்கு மாடு மாதிரி இருந்தது.


அதன் பின்,  சாக்குத் துணி  வைத்து சறுக்கி வைக்கோல் போருக்குள் விழுந்து, குழந்தைகள் போட்ட ஆட்டம்  இருக்கிறதே...... சூப்பர். எங்கள் குழந்தைகளை காரணம் காட்டி, அவர்களுக்குத்  துணைக்கு செல்வது போல நாங்களும் அவர்களுடன்  சறுக்கி கொண்டோம். ஹி,ஹி,ஹி,ஹி.....
வைக்கோல் போருக்குள் விளையாட்டு: 
 நான் ரசித்து பார்த்தது, மண் குவியல் போல நன்கு காய்ந்த முத்தி போன சோளத்தை (corn) ஒரு இடத்தில் பரப்பி வைத்து இருந்தார்கள். அதற்குள், குழந்தைகள் குதித்து - தங்கள் கை கால்களை புதைத்து - விளையாடியதை பார்த்தது -  ஒரு குதூகல கவிதை.

Corn Maze:

அப்புறம்,  ஆறு  அடிகளுக்கு மேலே வளர்ந்து இருந்த சோளகாட்டுக்குள், ஒரு பக்கமாக நுழைந்து வழி கண்டு பிடித்து, மறு பக்கமாக வர வேண்டும்.  தவறான வழியில் திரும்பி விட்டால், சுற்றி சுற்றி சோளக்காட்டுகுள்ளேயே வந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.  ஒரு இடத்தில், உயரே ஒரு மேடை அமைத்து வைத்து இருந்தார்கள். அதில் ஏறி பார்த்தால்,  அந்த Corn Maze பாதை, எந்த வடிவத்தில் அழகாக அமைக்கப் பட்டு இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.

காலியான Barrels வைத்து குழந்தைகளுக்கென ஒரு சின்ன ரயில் வண்டி:


இப்படியாக பல விஷயங்கள்.   ...........  உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான். 

வந்து இருந்த மக்கள்,  தங்கள் வீடுகளில், மரம் மற்றும் செடிகள் வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை  அங்கே இருந்த விவசாய துறை மாணவர்களிடம் இலவசமாக கேட்டு தெளிவு பெற்று கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.  அந்த மாணவர்களுடன் பேச்சு கொடுத்தோம்.  

"நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள்  கிடைக்காமல் போய் விடுகின்றன.  எல்லாமே வீடியோ கேம்ஸ் மற்றும் டிவி என்ற வட்டத்தில் முடிந்து விடுவதில்லை.  இந்த மாதிரி திருவிழாக்களில்,   அவர்களக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
அவர்களை வயல் வெளிகளுக்கு வர வைக்கிறோம்.  சிறு வயதில் இருந்தே இந்த வாழ்க்கையில் ஈடுபாடும் - ஒரு ஈர்ப்பும் - வர உதவி விட்டால்,  இன்று வந்த குழந்தைகளில் ஒரு சிலராவது விவசாய வாழ்க்கைக்கு வர ஆசைப்படுவார்கள்.  அந்த துறையில் படித்து, நிறைய சாதிக்க விரும்புவார்கள்.


மேலும், இன்று குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கும் அவர்களது வழக்கமான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நல்ல மாறுதல்.  பலர், இங்கு வந்து செலவிடும் நேரங்களில் மீண்டும் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள்.
அமெரிக்கர்களில்,  சிலர் தங்களது ஐம்பதாவது வயதிலேயே தங்களது வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு,  கிராமப் புறங்களுக்கு வந்து விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு,  முட்டை பண்ணை அல்லது பால் பண்ணையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.  அரசாங்கமும்,  அப்படி வருபவர்களை நன்கு ஊக்குவிக்கிறது," என்றார்கள். 

விவசாய துறை மாணவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் மேலும் கூடியது.  அவர்கள், பொறுப்புடன் சிறு குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டுவதை பாராட்டினோம்.  மேலை நாட்டு கலாச்சாரம் என்று எதை எதையோ பின் பற்றுபவர்கள், என்றுதான் இந்த மாதிரி விஷயங்களையும்  பின் பற்றுவார்களோ?

 படங்கள்:  கூகுள்  - நன்றி.

Thursday, November 25, 2010

எந்த ஊரு நேம் பஜ்ஜியோ?

Excuse number 1:  வியாழன் அன்று,  அமெரிக்காவில் "Thanksgiving Day" கொண்டாடப்படுகிறது. வியாழன் முதல், ஞாயிறு வரை பலருக்கு லீவு தான்.  எங்கள் வீட்டில்  விருந்தினர்கள் விசிட். 
Excuse number 2 :  கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் .
Excuse number 3 : "தமிழ்மண நட்சத்திரம்" காரணமாக,  தினம் ஒரு இடுகை  என்பது எத்தனை பெரிய சவால் என்பதை புரிந்து கொள்கிறேன்.  ஈஸி ஆக, தினம் ஒரு இடுகையை தரும்  பதிவர்களுக்கு, ஒரு ஸ்பெஷல் வணக்கம்.
Excuse number 4 :  வேற என்ன excuse எல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதனால் சகல பதிவர்களுக்கும்  அறிவிப்பது என்னவென்றால்,  உங்கள் பதிவுகளில்,  மீண்டும் பின்னூட்டப் புயல் அடிக்க, சிறிது நாட்கள் ஆகும்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  இப்போ draft பரணிலேயே ரொம்ப நாட்களாக இருந்ததை, தூசி தட்டி எடுத்து,  எழுதி  முடித்த இன்றைய  கோட்டா இடுகை:

 நான் Texas க்கு  புதிதாக வந்து இருந்த சமயம்:

இந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்த தோழி ஒருத்தி, சென்னையில் தன் உறவினர் ஒருவர், தன் கடைக்கு நேமாலோஜி (Nameology)  படி -  Vani (வாணி) ஸ்டோர்ஸ்  என்று தன் மகள் பெயரில்  இருந்ததை,   Vaannee (வான்நீ)  ஸ்டோர்ஸ் என்று மாற்றி விட்டதாக சொன்னாள். நல்ல வேளை, அவர் மகளையே இன்னொரு வீட்டுக்கு மாற்ற சொல்லவில்லை. தப்பிச்சிட்டா! என்று கமென்ட் அடித்து கொண்டோம்.   பின், என்னை ஒரு இந்திய Association நடத்திய விழாவுக்கு அழைத்துச்  சென்றாள். 

"எல்லாமே புது முகங்களாக இருக்குதே .... யாரையும் தெரியாது.  சீக்கிரம் திரும்பி போய்டலாம்," என்றேன்.  "போடி புள்ள,  நீதாண்டி இங்கே புது முகம். அவங்க எல்லாம், இங்கேயே பல வருஷமாக பழம் தின்னு கொட்டைய   போட்டவங்க.  நல்ல கதையா இருக்குதே!" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.  அவ்வ்வ்.....

ஒரு வீராப்புடன், நானே என்னை  அறிமுகப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
அருகில் இருந்தவரிடம்:

"Hi - Hello,  I am Chitra."
"Oh!  I am Shawn."
"ஷான்?"
"ஸ்ரீனிவாசன் தாங்க.  சொந்த ஊரு,  அம்பாசமுத்ரம். அமெரிக்கர்கள் கூப்பிட வசதியாக ஷான் என்று சொல்லிடுவேன். அந்த பழக்கத்திற்கு இப்போதும் வந்துட்டுது."
(மக்கா, உங்களுக்கே ஓவரா தெரியல. என்னை பார்த்தால், ஸ்ரீனிவாசன் என்று சொல்ல கஷ்டப்படுற ஆளு மாதிரியா தெரியுது?)

ஆனால்  சும்மா சொல்ல கூடாது! ஷானுக்கு ரொம்ப நல்ல மனசு. அவரே, என்னை தனது நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


இனி,   "நேம் ஈஸியாலாஜி அமெரிக்க பஜ்ஜி சொஜ்ஜி " படி  மாறி இருந்த இந்திய பெயர்களைப்  பாருங்க.

Gary - கேரி - குருப்ரீத் சிங்
Matt - மது
Anna - ஆனந்தி
Rick - ரிக் - ராகவபெருமாள்
ஸ்டான்லி - தேனப்பன்
MARK -   மாதவ் (M) அனந்த (A) ராம (R) கிருஷ்ணன் (K)
 Steve - ஸ்டீவ் - ஷைலேந்தர் தேவ்.
Kayla - கேய்லா - குழலி
Danny - தினேஷ் மணி
Paul - பாலசுந்தரம்
Andy - ஆனந்தன்
Ash - அக்ஷயா
Sam - சாமிநாதன்.
Sara - சாரா - சரஸ்வதி
Chris - கிருஷ்ணகுமார் 
Jay - ஜைலேந்தர் சிங்
Ray - ராம்குமார்
Bob - பாபுமோகன்
Becky - பாக்கியலட்சுமி
 Jack - ஜெகன்நாத் ஷர்மா
Tammy - தேஜஸ்வினி
Vickie - விக்கி - விசாலாட்சி
Nancy - நாகேஸ்வரி
Luke - லக்ஷமணன்
Max - மாதேஷ்வர்
Nathan - நாதன் அல்ல நேதன் -  நரேந்திரன்
Bryan - ப்ரயன் - பரணிகுமார் ரெட்டி
Pam - பிரமீளா தேவி
Ron - ரான் - ராம சுப்பிரமணியன்
Mike - மீனாக்ஷி சுந்தரம்.
Dan - தாண்டவ மூர்த்தி.
Cathy - கார்த்திக்கா

இவங்க இப்படி "அமெரிக்க நேம் ஈஸியாலாஜி"க்காக பெயர்களை மாற்றி கொண்ட பின்,  அமெரிக்க வாழ்க்கை ரொம்ப நல்லா - ஈஸி ஆக  இருக்குதாம். 


இது ஒரு புறம் இருக்க,  சில அமெரிக்கர்களை சந்திக்கும் போது அந்த ஊரில்,  தங்களது தெரிந்த இந்தியர்களை பற்றி உயர்வாக  சொல்ல  ஆரம்பிப்பார்கள்.  அவர்கள் சொல்லும் பெயர்களை வைத்து யாராக இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்குள் ........ ஸ்ஸ்ஸ்ஸ் ......  யப்பா.......  (என் பெயரை  பெரும்பாலும் சரியாக சொல்லி விடுவதால், தப்பிச்சேன்! சிலர் மட்டும்   - ச்சிட்ரா  - Chitra  -  )

சன் டீப் or சன் டிப்  -  Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா) 
அ  ராவின் - Aravind (அரவிந்த்)
 சைத்தான்  யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா

கஸ்ஹந்த் சாம் (Sam )  - அது என்ன கல்கண்டு கஷ்டம்டா சாமி என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது,  எழுதி காட்டினார்.
Kuzhanthai Sami -  குழந்தை சாமி

ஒரு டவுட்டு:  யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது,  "zha "  ("ழி" - "zhi ")  என்று எழுதணும்னு விதி அமைத்தது?  ரூல்ஸ்  போட்டவங்க, தமிழ் மக்களை தவிர, வேற யாருக்கும் அதை  பற்றி சொல்லல போல.  நம்மாட்களை தவிர,  மத்தவங்க "ஜா" - "ஸா" -  "zaa " மாதிரி தான் வாசிக்கிறாங்க.  அவர்களிடம், "zha " என்று இருந்தால் "ழ" என்று சொல்லணும் என்று சொல்லி கொடுக்கிறதுக்குள்ள - உள்ள தமிழும் எனக்கு  மறந்து விடும் போல.  அதனால், நானே இப்போ "L " தான் போட்டு எழுதி காட்டுவேன்.  இந்த ரூல் மீறிய குற்றத்திற்காக,  என்னை தமிழச்சி இல்லைன்னு ஒதுக்கி வச்சிருவாங்களோ?  pleeeeeez ......அப்போ  யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.....

மக்காஸ்.... உங்களுக்கும் இந்த மாதிரி பெயர்ஸ் ...சாரி, பெயர்கள் தெரிந்தால்  எஜூதி - எஸூதி  - சே,  ezhuthi - eLuthi - எழுதி - பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Wednesday, November 24, 2010

CNN வெளியிட்டுள்ள டாப் 10 ஹீரோக்கள்

வணக்கம்:  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா"

கடந்த எட்டு  வாரங்களாக சிறந்த சேவைகள் செய்பவருக்கான விருதுக்கென ஓட்டு எடுப்பு, CNN நடத்தியது.  அதன் முடிவுகள் இப்பொழுது வெளியாகி உள்ளன.
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/index.html


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு:
http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html

2010 CNN Hero of the Year ஆக - இதுவரை,  செக்ஸ் அடிமைகளாக இருந்த சுமார் 12000 பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை மீட்டெடுக்க உதவிய அனுராதா கொய்ராலா அம்மையார் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

 இவரது சேவைகளுக்கு மேலும் உதவும் வகையில், இவருக்கு $100,000 வழங்கப்பட்டது.
 டாப் 10 ஹீரோக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்,  அவர்கள் சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம்
$ 25,000 வழங்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கும் மேலான நாடுகளில் இருந்து,  10,000 க்கும் மேலான நபர்களை , அவர்களது சமூதாய சேவைகளுக்கென மக்கள்  சிபாரிசு செய்து இருந்தனர்.  ஒரு குழு அமைத்து அவர்களில் சிலரை தேர்ந்து எடுத்து வாக்கெடுப்புக்கு அறிவித்தனர்.  வாக்கெடுப்பு மற்றும் குழுவின் பரிந்துரை படி,  பத்து பேர்களை தேர்ந்து எடுத்து கௌரவித்து உள்ளனர்.

Alphabetical order படி (ranking படி அல்ல) தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்:

Guadalupe Arizpe De La Vega  :

Juarez என்ற மெக்ஸிகோ  நகரத்தில்  மருத்துவமனை கட்டி, இலவச மருத்துவம் ஏழை மக்களுக்கு  கிடைக்க செய்தவர்.

Susan Burton :

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில்,  மது மற்றும் drug போதைக்கு அடிமையாகி சிறைக்கு கூட சென்று வந்துள்ள பெண்களுக்கு மறுவாழ்வும் வீட்டு வசதியும் செய்து கொடுத்து, அவர்கள் திருந்தி வாழ சேவை செய்பவர்.

Linda Fondren :

அமெரிக்காவில், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில்,  அதிக உடல் எடையால் பல நோய்களுக்கு உள்ளான மக்களுக்கு தீவிர பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊட்டுவதன்  மூலம் உடல் இளைக்க உதவுகிறார்.

Anuradha Koirala :


1993 ஆம் ஆண்டில் இருந்து,  நேபால் நாட்டில்,  செக்ஸ் அடிமைகளாக   விற்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு மறு வாழ்வுகளும் வேண்டிய உதவிகளும் கிடைக்கும் படி சேவை செய்து வருகிறார். இந்திய நேபால் எல்லையிலும் கண்காணித்து , இப்படி விற்கப்பட்டு வரும் பெண்களை காப்பாற்றி வருகிறார்.


Narayanan Krishnan :

 2002 ஆண்டு முதல், தனது அக்ஷயா டிரஸ்ட் மூலம்,  கைவிடப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து,  உணவு வழங்கி வருகிறார்.Magnus MacFarlane-Barrow :


1992 ஆம் ஆண்டில் இருந்து , Scotland நாட்டில் இருந்து Mary's meals என்கிற சேவை நிறுவனம் மூலம்,  உலகத்தில் பல பகுதிகளில் இருக்கிற 400,000 குழந்தைகளுக்கு இலவச உணவு கிடைக்கும் வண்ணம் உதவி வருகிறார்.


Harmon Parker :


1997 ஆம் ஆண்டில் இருந்து, கென்யா நாட்டில்,  தன் கைப்பட சிலர் உதவியுடன் 45 மரப்பாலங்கள் காட்டாறுகளுக்கு மேல கட்டியுள்ளார்.  திடீர் என்று பிரவாகமாக எடுத்து வரும் வெள்ளங்களில் இருந்தும்,  கொடிய மிருகங்களிடம் இருந்தும்  இந்த பாலங்கள் மூலமாக ஏழை மக்கள் தப்பிக்க உதவி வருகிறார்.


Aki Ra:

1993 ஆம் ஆண்டு முதல், கம்போடியா நாட்டில்,  சுமார் 50,000 landmines (கண்ணி வெடிகள்)  கண்டுபிடித்து எடுக்க உதவி வருகிறார்.

Evans Wadongo :

23 வயதுதான் ஆகும் இவர், கென்யா நாட்டில்  புகை அடிக்கும் மண்ணெண்ணையும் தீயையும் மட்டுமே எரிபொருளாக - ஒளிக்காக - நம்பி அவதி பட்டுக்கொண்டு இருந்த பல கிராம மக்களுக்கு பயன் படும் விதமாக சூரிய வெப்பம் (Solar Power) கொண்டு எரியும் lanterns கண்டுபிடித்து விநியோகம் செய்து வருகிறார். 


Dan Wallrath :

2005 ஆம் ஆண்டில் இருந்து,  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் காயம்பட்டு திரும்பி வந்துள்ள போர் வீரர்கள் சிலருக்கு, இலவச வீடுகளை, சிலர் உதவியுடன் தன் கைப்பட கட்டி கொடுத்து வருகிறார்.  இப்பொழுது, இந்த குழு ஐந்து வீடுகளை அமெரிக்காவில்,  Texas மாநிலத்தில் கட்டி வருகின்றது.

  தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் ,  மனித நேயம் மட்டும் இருந்தால்,  சமூதாயத்தில்  மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள்,  எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம். 

இவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் சமூதாயத்தில் மேல் உள்ள அக்கறையையும்  மதித்து, இவர்களுக்கு வோட்டு போட்டு,  அங்கீகாரம் கிடைக்க செய்த அனைவருக்கும் நன்றிகள்.  இனி, இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம். 

(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள்  எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!!  ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......) 

நன்றி, வணக்கம்.  இப்படிக்கு ஒரு ஆதங்க  பெருமூச்சுடன்,  உங்களிடம் இருந்து விடை பெறுவது, தம்பட்டம் தாயம்மா. 


 

Tuesday, November 23, 2010

வாயை வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்கலாம்

 நானும், ஒரு இந்திய நண்பரும், இரண்டு அமெரிக்கர்களுடன் (மருத்துவ மாணவர்கள்)  சும்மா பேசி கொண்டு இருந்தோம்.  பேச்சு  - அங்கே சுத்தி - இங்கே சுத்தி -  ரைட்டுல திரும்பி -   லெஃப்ட்ல கட் பண்ணி -   ஒரு ரவுண்டு அடிச்சு நேரா  இந்திய கலாச்சாரத்தில் வந்து விழுந்தது.  நாங்களும்  பெருமையாக இந்தியாவில் இன்னும் மேலோங்கி இருக்கும் "Arranged Marriages"  பற்றி சொல்ல ஆரம்பித்தோம்.   "ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை முதல்,  இந்தியாவின் குறைந்த விவாகரத்து விகிதம் வரை எதையும் விட்டு வைக்கவில்லை.

அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவர்களில்,  Ben என்பவர்   ஆங்கிலத்தில்,  "நான் கேட்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள்.   நான் நேற்று தான், எனது வகுப்பில், உலகம் முழுவதும்  இருக்கும் பிரச்சனையான AIDS பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.   உலக நாடுகளிலேயே, AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது  இடத்தில் இந்தியா இருக்கிறது.   நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது?  வட இந்தியாவை விட, தென் இந்தியாவில்  ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகம் பரவி உள்ளதாகவும் statistics  இருக்கிறதே," என்று சந்தேகம் கேட்பது போல  அணுகுண்டு கேள்விகளை வீசி கொண்டு இருந்தார்.

http://www.indexmundi.com/g/r.aspx?t=10&v=35
http://www.indexmundi.com/map/?v=35&l=en&t=10

பேச்சு,  பேச்சாத்தான் இருக்கணும்.  இப்படி லா பாயிண்ட் எல்லாம்  வச்சு கேள்வி கேட்டு "தாக்க" கூடாது என்று சொல்லணும் போல இருந்தது.  ஆனால்,  என் மூளை -    திருவிழா நேரத்துல, அம்மா அப்பா கிட்ட சொல்லிக்காமலே  பலூன்காரன் பின்னால போற சின்ன புள்ளையாட்டம் -  மனசுக்குள்ள ரெட் சிக்னல் அடிக்கவும்,  என் கிட்ட சொல்லிக்காமலே,  ஹாய்யா எங்கேயோ போய்டுச்சு.   "மேல்மாடி"யில்  ஆள் இருக்கிறாப்புல தெரியல.   பரீட்சையில நல்ல கேள்வி கேட்டாலே, தலை நாலு நாளுக்கு வலிக்கிற மாதிரி  சொரிஞ்சி யோசிப்பேன்.  என்னை நிக்க வச்சு நல்லா கேள்வி கேக்குறாங்களே, இதுக்கு நாலு ஆளை வச்சு சொரிஞ்சி யோசிக்கணும் போல.


கூட இருந்த இந்திய நண்பருக்கு வந்ததே கோபம்!  "என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க?  ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை  வச்சு - அப்படி  சொல்லாதீங்க, "  என்று பாய்ந்தார்.

Ben விடாமல், "ஏன்?  அவர்களும்  இந்தியர்கள் - தென் இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.

என்னுடைய லொடலொட வாய், இப்போ "கப்சிப்"!  நண்பரும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் தானே?

" ஒரு அமெரிக்க பெண்ணை, கல்யாணம் கட்டிக்கணும்னா நான் யோசிப்பேன். ஆனால், தென் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கணும்னா, நான் யோசிக்க தேவையில்லை," என்று சூடு குறையாமல் சொன்னார்.

அவரது கையை பிடித்து அழுத்தினேன்.  அமெரிக்காவுல,  இன்னைக்கு நடக்கப் போகும் கொலைக்கு நான்தான்  சாட்சியா அப்படின்னு தோணுச்சு.
"AIDS சர்ச்சை:  தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!"  அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது. 
"கோன் பனேகா HIV? -  ஆந்திர மதராசி? or சென்னை மதராசி?"  அப்படின்னு  வட நாட்டு ஆளு  ஒருத்தர்,  ஹிந்தி  சேனல்ல ஒரு டிவி ப்ரோக்ராம் நடத்துற மாதிரி தெரிஞ்சுது. 

                                       Ben சிரித்துக் கொண்டே, " அமெரிக்கர்கள் அனைவரும் AIDS   நோயாளிகள் என்று எதற்கு நினைக்கிறீர்கள்?  இந்த சர்வே பார்த்த பிறகும், இந்தியாவில் அனைவரும் அப்படித்தான் என்று நான் நினைக்கவில்லையே, " என்றார்.

என் நண்பரோ,  "இந்தியாவில் யாரோ செய்யுற தப்புக்கு, எதற்கு மொத்த  இந்திய  பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும்? பெரும்பான்மையோர் ஒழுங்காத்தான் இருக்கோம்,"என்றார்.
 Ben , நண்பரின் தோளைத் தட்டி கொடுத்த படி,  "நாட்டில் இருக்கும் ஒரு  problem பற்றி பேசாவிட்டால்,  நாட்டில் அந்த problem இல்லவே இல்லை  என்று அர்த்தம் இல்லை.  It is just a form of denial. பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும்.  அதை ஒழிக்க முடியும்," என்று கூறி விட்டு தன் நண்பருடன் சென்று விட்டார்.

புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுத்து இருப்பீங்க .... "அசட்டு "  புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுக்க ஆள் தேடிக்கிட்டு இருந்தீங்கனா,   என் நண்பருக்கு தான் அன்னைக்கு கொடுத்து இருப்பீங்க..... யெம்மா ... என்னா அசடு! என்னா வழிசல்! என்னா சமாளிச்சிஃபையிங்  ஆஃப் இந்தியா ஸ்மைல்!


  அவர்கள் சென்றதும் என்னிடம்,  " அமெரிக்கர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கு தெரியும்.  அவர்கள், இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாம் நினைக்கிறாங்களோ? "

"நான் வேணா ஒரு சர்வே எடுக்கவா?" என்று கேட்டேன்.  

""ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்.  அதையே கண்டுக்காமல் தான், இந்திய கலாச்சாரம் பற்றி பேசிக்கிட்டு இருக்கேன்.  நம்ம நாட்டில் நடக்கிற,  தெரிஞ்சே செய்யுற சில  தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்?   நான் சுவத்துல முட்டிக்கிறதா?  மரத்தில முட்டிக்கிறதா?  எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா? என்று சர்வே எடுத்து சொல்லுங்க," என்று ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா காட்டினார்.

பஞ்ச் டயலாக் அடிக்க என் மூளையின் உதவியை மீண்டும் தேடினேன்.  "மேல்மாடி"யில்  அமைதியாக நின்று, "என் புருஷன்தான் - எனக்கு மட்டும் தான்," என்று  என் கணவரின் முகம் பார்த்து   முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.  தொந்தரவு  செய்யாமல் நடந்தேன்.

இந்தியாவில் AIDS ஒழிப்பு பற்றிய விவரங்களுக்கு:
   http://www.avert.org/aidsindia.htm

ஹலோ

Monday, November 22, 2010

மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.

நேற்றைய பதிவின் மூலம், இங்கு அருகில்  உள்ளவர்களிடம்  வெளிப்படையாக காட்ட முடியாத - சொல்ல முடியாத - என் உணர்வுகளை பகிர்ந்து இருந்தேன்.  எழுத்தில் கொட்டியபின்,  மனம் அமைதி ஆனது.   ஆறுதலாக, கரிசனையுடன்  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.   

இங்கு உள்ள  இறுகி போன சூழ்நிலை - மன நிலையில் இருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது, சில நிமிடங்கள் அர்ப்பணாவை பற்றி நினைத்தேன்.  அவளது மறைவின் சோக பிடியில் இருந்து நான்  வெளி வர,  அவள் வாழ்ந்த வாழ்க்கையே எனக்கு உதவுகிறது. 
  


அர்ப்பணாவின் வாழ்க்கை,   சீக்கிரம் முடிந்து போய் இருக்கலாம். ஆனால், கடைசி நிமிடம் வரை, நன்றாக சிரித்து விட்டு சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய் இருக்கிறாள்.  "Live for the moment" என்று எங்கள் அனைவருக்கும் காட்டி விட்டு சென்று இருக்கிறாள்.  யாரும் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது,  பிறர் நலன் கருதியும்  உதவி செய்து,  வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்.   தன் காரியமாக மட்டும் இருந்து விட்டு, நல்ல படியாக வாழ பாக்கி வைத்து விட்டு செல்ல கூடாது  என்று சொல்லி கொடுத்து இருக்கிறாள்.  A quote to share:  (Author unknown)
 தோழிகள், அனைவரும் சந்திக்கும் போது, பலர்,  அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள்.  இவள் எப்பொழுதும் சந்தோஷமாக - positive ஆக பேசி கொண்டு இருப்பாள்.  "நீங்க எல்லாம் இங்கே இப்படி கவலை படுவதால் மட்டும்,   அங்கே அந்த வேலை அல்லது பிரச்சனை,  தானாக  முடிந்து விடுமா?  அப்புறம் எதற்கு அதை பற்றியே நினைத்து கொண்டு , புலம்பி கொண்டு இருக்கீங்க?  அவரவருக்கு இருக்கும் டென்ஷன் இல் இருந்து விடுபட,  ஒரு change குத்தானே சந்தித்து கொள்கிறோம். இங்கேயும் அதே டென்ஷன் நினைப்புதானா?" என்று உணர வைப்பாள்.


"அடுத்து வரப் போகும்  கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும்  நினைங்க.  வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது.  உற்சாகமாக இருக்கும்" என்பது அவளின் பாலிசி.
Life is not just a terrifying thing, but a terrific thing too.  


அர்ப்பணாவின் மறைவிலும்,   எங்களால்  இன்னும் புன்னகைக்க முடிகிறது என்றால்,  அவளை பற்றி நினைக்கும் போது, அவள் வாழ்ந்த வாழ்க்கையில்  உள்ள அர்த்தமும் ஒரு காரணம். எங்கள் புன்னைகைகளில் அவளும் வாழ்கிறாள்.
  என்னை பழைய உற்சாகத்துடன் மீட்டு எடுத்து கொண்டு வர இதுவே போதுமே!!!!
இப்படி ஒரு நட்பு  கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும்.  கிடைத்து விட்டு "போனால்" அல்ல.

தமிழ்மண நட்சத்திரத்துக்காக , எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

Sunday, November 21, 2010

முன்ன பின்ன செத்து இருந்தால் தானே?

எங்கள் சின்ன வயதில், பாக்கியம் என்ற பாட்டி, எங்கள் ஊரில் இருந்ததை மறக்க முடியாது.    வெள்ளந்தி மனம் கொண்டவர்.  சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல், மற்றவர்களிடம் கேட்பார்.  "என்ன பாட்டி, இது கூட தெரியாதா?" என்று யாராவது கேட்டால் போதும் - "தம்பி, முன்ன பின்ன செத்து இருந்தால் தானே,  சுடுகாடு தெரியும்? எனக்கு எப்படி தெரியும்?" என்று சொல்லி பொக்கை வாய் காட்டி சிரிப்பார்.

அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ? அந்த பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமோ? எனக்கு  தெரியாது. ஆனால்,  கடந்த நவம்பர் 12 ந் தேதி மாலை ஐந்து மணியில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள்,  எனக்கு பல அர்த்தங்களை,   கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றன.

அர்ச்சனாவும் அர்ப்பணாவும்  பல கனவுகளுடன்,  மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர்கள்.  இந்த டிசம்பர் மாதத்துடன்,  தங்களது இரண்டரை வருட படிப்பை முடித்து விட்டு,   ஜனவரியில் இருந்து வேலை தேடுவதில் மும்முரமாக இருக்க திட்டம்.

இந்த சூழ்நிலையில்,  எனது நெருங்கிய தோழிகளுள் ஒருத்தியான அர்ப்பணா,  நவம்பர் 12,   ஒரு பெரிய விபத்தில் சிக்கி சில மணி நேரங்களில் எங்களை விட்டு சென்றாள்.  அர்ச்சனா, பின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு - Spinal Cord Injury - ஆகி  paralyzed ஆக மருத்துவமனையில் critical care இல் இருக்கிறாள்.  அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இரட்டை பிறவிகள் - எனக்கு இரட்டை தோழிகள் - அர்ச்சனாவும் அர்ப்பணாவும் 

 விபத்து நடப்பது சகஜம்தான்.   அதில் மரணம் சம்பவிப்பது,  நியூஸ் ஐட்டம் என்று ஆகி விடுகிறது - அது நம் வீட்டிலேயே நடக்கும் வரை.  "முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்?"

எங்கள் ஊரில் இந்தியர்கள், மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்போம். அதிலும் 35 - 40 பேர்கள், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக இங்கு வந்து செல்பவர்கள்.  இந்த சம்பவம் எங்களை, உலுக்கி எடுத்து இருக்கிறது.

நடந்தது நடந்து விட்டது. அழுதோமா - முடித்தோமா - போனாமா என்று இருக்கும் சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது,  தொலைத்து விடுகிறோமோ? 

சிலர் அர்ச்சனாவை கவனித்து கொள்ள - வேறு சிலர்,  அர்ப்பணாவை இந்தியாவுக்கு அனுப்பவதில் உள்ள பேப்பர் வொர்க் செய்ய வேண்டியது இருந்தது.  Indian Embassy ,  இந்த மாதிரி இந்தியர்கள் பரிதவிக்கும் நேரங்களில்,  இன்னும் கொஞ்சம் ஆதரவாக பேசி -  விஷயங்களை நல்லபடியாக விளக்கி -  செய்ய வேண்டிய காரியங்களை, அவர்களது வேலையாக/கடமையாக  மட்டும் நினைக்காமல் (just an official work) ,  கலங்கி போய் இருக்கும் உள்ளங்களுக்கு கரிசனையாக செய்யும் உதவியாக - கொஞ்சம் passion உடன் செய்து இருக்கலாமோ?  Indian Embassy  நிலைமை, எண்ணம் தெரியாமல் எதுவும் நான் சொல்ல கூடாதோ?  

நான் கடந்த வாரத்தில், கொஞ்சம் சிரிக்க மறந்துதான் போனேன்.  அது மட்டும் அல்ல, என் உணர்ச்சிகளையும் ஒதுக்கி வைத்தேன். அர்ப்பணாவுக்காக  அழவா?  அர்ச்சனாவுக்காக கவலைப் படவா?  அழுது கொண்டு இருக்கும், மற்ற இந்திய மாணவர்களை ஆறுதல் படுத்தவா?  அர்ப்பணாவை  "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து  கவனிக்கவா?  உடனே இங்கே கிளம்பி வர துடித்தும், வர முடியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோரின் மன நிலையை நினைத்து கலங்கி நிற்கவா? 

அர்ச்சனாவுக்கு இது வரையில் அர்ப்பணாவின்   மறைவு பற்றி தெரியாது.  பெற்றோர்கள் வந்த பின்,  அவர்களே  நேரம் பார்த்து சொல்லி கொள்ளட்டும் என்று காத்து இருக்கிறோம்.   ஆனால்,  இரட்டை பிறவிகளுக்கே உள்ள அமானுஷ்ய உணர்வு எதையோ அவளுக்கு எச்சரிக்கிறது  என்று நினைக்கிறோம்.  அர்ப்பணா பக்கத்து அறையில்,  இவளை போல்தான் எழுந்து வர முடியாத நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறாள் என்று சொல்லி இருக்கிறோம்.  நம்பாமல்,  போட்டோ வேண்டும் என்றாள்.  எங்கள் தோழி, வினு, அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள்.  அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது? 

மஞ்சள் உடையில்:  அர்ப்பணா - மற்றவர், அர்ச்சனா  - இந்த புகைப்படத்தை,  "தனி மரங்களின்"  இந்த வருட தீபாவளி பார்ட்டி போது,  நவம்பர் ஐந்தாம் தேதி அன்று, நான் எடுத்தேன். 

எல்லாவற்றையும் கடந்து,  என்னை திணற அடித்தது எது தெரியுமா?  ஒரு நொடியில்,  அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர்.  சமீபத்தில் தான், படிப்பு முடித்து விட்டு சிகாகோ ஏரியாவில் வேலையில் சேர்ந்தார். மே மாதம் தான் திருமணம் ஆகி உள்ளது. ஜூலை மாதம் தான், அவர் மனைவி அமெரிக்கா வர முடிந்தது.  தன் மனைவிக்கு  தான் படித்த University யையும் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக Kentucky வந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

மதியம், எங்கள் வீட்டில்,  ஒன்றாக நாங்கள்  சாப்பிட்டதும்,  நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டார்கள். எனக்கு,  இரவு உணவு அனைவருக்கும் சமைக்கவும்,  இன்னும் பிற வேலைகளும் இருந்ததால், வரவில்லை என்று சொல்லி விட்டேன்.  அவர்கள் எங்கள்  வீட்டை விட்டு கிளம்பிய  இரண்டு மணி நேரத்தில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

நிதினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் மனைவிக்கு சில காயங்கள்.  அவற்றிற்கு மருந்து இட்டு, வீட்டில் இருந்தே கவனித்து கொள்ள சொல்லி,  மருத்தவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள்.   அவளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு.

எனது ஆருயிர் தோழியை, என்னை விட்டு பிரிந்து செல்ல வைத்தவன், வேறு யாராவது என்று இருந்து இருந்தால்,  மனதார திட்டி இருப்பேன்.  ஆனால்,  என் கவனிப்பில், என் பொறுப்பில், என் வீட்டில்,  guilty feelings உடன் கண் முன் நிற்கும் போது, என்ன செய்வது?  

இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு  குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள்.  முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே!  ஆனால்,  சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது.  என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல்,  எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட  முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? என் எதிரி என்று யாராவது இருந்தால் கூட,  இப்படி ஒரு மன நிலையில் சிக்க கூடாது என்று வேண்டி கொள்கிறேன்.

மருத்துவமனையில், அர்ச்சனாவை பார்த்து விட்டும் வருத்தப் படுவேன் -  வீட்டில்,  நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன்.  நான் நல்லவளா? கெட்டவளா? 

 பி.கு.:   அர்ப்பணா, நவம்பர் 21 அதிகாலை, இந்திய நேரப்படி , இறுதி சடங்குக்காக ஊருக்கு வந்து விட்டாள்.  அவள் பெற்றோருக்கு விசா கிடைத்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள், அர்ச்சனாவை கவனிக்க வந்து விடுவார்கள்.
நிதின்,  போலீஸ் ரிப்போர்ட்க்காக காத்து கொண்டு இருக்கிறான்.  அவன் மட்டுமே காரணமா? அவனது காரை இடித்த அடுத்த காரை ஓட்டியவருக்கும் பங்கு உண்டா என்று தெரிய வரும்.  லீகல் நடவடிக்கைகள், அதன் பின் எடுக்கப்படும்.

நாளை,  "அர்ப்பணாவுக்கு  அர்ப்பணம்" ......... எழுதலாம் என்று இருக்கிறேன்.

Sunday, November 7, 2010

தனி மரங்களின் தீபாவளி.

இந்தியாவில் இருக்கும் வரை, தீபாவளி குதூகலத்துக்கும்  கலகலப்புக்கும் பஞ்சம் இருந்ததில்லை.... எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் முதலில் வர்ண கோலங்கள் களை கட்டி விடும்.  பக்கத்து வீடுகளில் உள்ள தீபாவளி பட்சணங்கள் எங்கள் வீட்டிலும் அணி வகுத்து வரும்.  பட்டாசுகள்  - இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று பாராது - எல்லோரும் சேர்ந்து வெடிப்போம்.   அப்படியாக இருந்து விட்டு,  அமெரிக்க வந்த பின்  குடும்பத்தை மட்டும் அல்ல, அக்கம் பக்கத்து வீட்டினரையும்  தொலைத்து விட்டு, திருவிழா கூட்டத்தில் காணாமல் போன சிறுமி போல கண்களில் நீருடன் திகைத்து நின்ற முதல் தீபாவளியை மறக்க முடியாது.

அப்பொழுது  என் கணவர் தனது Ph.D. படிப்பில் சேர்ந்து இருந்த நேரம்.  இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்கு வந்து இருந்த  பல மாணவர்களும் தங்கி இருந்த Apartments Complex  அது.  எங்களைத் தவிர,  இன்னும் மூன்று  ஜோடிகள். மற்றவர்கள் எல்லாம் தனிக்காட்டு ராஜாக்கள்.

மறு வாரம் தீபாவளி.... எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது. கனத்த இதயத்துடன்,  தோழிக்கு கால் செய்து பேசினேன். பட்டும் படாமல் பேசினாள். என்னவென்று கேட்டேன். "home- sick. வீட்டை ரொம்ப தேடுது , " என்றாள்.  எனக்கே சந்தோஷம் பஞ்சம் என்று அங்கே பேசினால், அவள் கிட்ட இன்னும் சந்தோஷப் பஞ்சம், ஜிங்கு ஜிங்குனு தலை விரித்து ஆடி கொண்டு இருந்தது. இது வேலைக்கு ஆவுறதில்லை - என்ன சொல்வதென்றும் தெரியவில்லை  - பெருமூச்சுடன் போன் வைத்து விட்டேன்.

அடுத்த நண்பரை அழைத்து பேசினேன். அங்கும் அதே  ரெட் சிக்னல். "போங்கப்பா - இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நான் வரல," என்று போன் வைத்து விட்டேன்.  மூன்றாவது நண்பர், கார்த்திக் அழைத்து பேசினேன்.  போன் எடுத்த உடனேயே,  "சித்ரா, தீபாவளிக்கு என்ன பண்றீங்க?" என்று கேட்டார்.  இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லைதான்...
"கார்த்திக், நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுரவ.  என்கிட்டே போய் இதென்ன கேள்வி?" என்றேன்.
கார்த்திக் சளைக்காமல், "அது எங்களுக்கு தெரியாதா?  உங்களை என்ன - தீபாவளிக்கு ஸ்பெஷல் பூஜை பண்ணலியா என்று கேட்பேன்?  தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்து பண்ணலியா என்று தான் கேட்பேன்.  நீங்கள் எல்லாம் இப்படி அமைதியா இருந்தா, எங்களை மாதிரி தனி மரங்களுக்கு கல்யாணம் ஆகிற வரை தீபாவளியை டிவியில தான் பார்க்கணுமா?" என்றாரே பார்க்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ, என் சோக மனதில் ஒரு பட்டாசு கொளுத்தி போட்டு விட்டார்.  என் கண்களில் ஸ்பார்க் தெரிந்தது.   வாயில் சிரிப்பு மத்தாப்பு...... எத்தனை தீபாவளிக்கு தான் ஊர் நினைவில் சோக கீதம் பாட முடியும்? தொடர்ந்து சில போன் கால்கள்.  இது, அனுதாப பேச்சுக்கு அல்ல.  சரவெடி பிளான்க்கு......


தீபாவளி என் வீட்டில் என்று முடிவு செய்தேன்.  எல்லோரும் பங்கு எடுக்கும் விதமாக, ஆளுக்கு ஒரு ஐட்டம் கொண்டு வரும்  பாட்லக் டின்னெர் (potluck dinner) என்று முடிவு செய்தேன். ஒரு தோழி, தனக்கு லட்டு செய்யத் தெரியும் என்றார்.... ஒருவர்,  முறுக்கு என்றார் - ஒரு நண்பர்,  அவியல் என்றார் - ஒரு நண்பர் - வடை என்றார். இப்படியாக ஒரு நீண்ட மெனு - ஆயிரம் வாலா பட்டாசாக நீண்டது. நானும் என் பங்குக்கு இரண்டு ஐட்டம் செய்து வைத்தேன்.

மள மள வென்று, எங்கள் வீட்டில் தீபாவளி அன்று கூட்டம் சேர ஆரம்பித்தது.  Home-sick என்று சோர்ந்து இருந்த தனி மரங்கள் முகங்களில்,  தீபாவளி தீபங்களின் பிரகாசம்.  தோழமையுடன் ஒவ்வொருவரின் அனுசரணையான வாழ்த்துக்களில்  எங்கள் குடும்பங்களை கண்டோம்.   ஊரில்,  குடும்பத்தினர் போல பழகிய அக்கம்  பக்கம் வீட்டினரின் நட்பு பிடிப்பை கண்டோம்.  சந்தோஷம் வாண வேடிக்கையாக மின்னியது.

சாப்பாட்டுக்கும் கலகலப்பான பேச்சுக்கும் குறைவு இல்லாமல், களை கட்டியது.  அந்த தீபாவளியில் கார்த்திக் எனக்கு கற்று கொடுத்த பாடத்தை இன்று வரை மறந்ததில்லை.   ஒவ்வொரு வருடமும் தீபாவாளி வருகிறது - ஊர் நினைவு வருகிறது - அமெரிக்கா வந்த முதல் வருடத்தில், மனதை அழுத்திய home-sickness நினைவுக்கு வருகிறது.  எங்கள் வீட்டருகே இருக்கும் முதன் முதலாய்  "தனி மரமாய்" இருக்கும்  கல்லூரி மாணவர்கள் முகத்தின் சோகம் புரிகிறது.  என் கணவர் உற்சாகத்துடன் பேசி அழைக்கிறார்.  அவரவருக்கு தெரிந்த உணவு வகைகளை கொண்டு வருகிறார்கள்.

தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை.   குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது.  தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது ..........  ஆஹா...... !  ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே!http://www.ladiesspecial.com/IssueDisplay.asp?BookId=33
இந்த மாதம் "லேடீஸ் ஸ்பெஷல்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை, இது.  என்னை கட்டுரை எழுத சொல்லி ஊக்குவித்த தேனம்மை அக்காவுக்கு நன்றி.

படங்கள்:  நன்றி, கூகுள்!