Tuesday, August 17, 2010

மொழி மொழியாம் பழமொழியாம்

 ஓர் நண்பரின் அப்பா, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவர். பழைய கால விஷயங்களையும் கிண்டல் அடிப்பார்.  இன்றைய நிலவரங்களையும் நன்கு விமர்சிப்பார். அவருடன் பேசும் போது, நேரம் போவதே தெரியாது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்."   - பழைய மொழி.
நேர்மையாய் இருக்கும் அதிகாரிகளைத் தான் தமிழக  அரசு,  இன்று "கொல்கிறது" ..........
'இன்றைய அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா,'  என்ற மக்களின் எண்ணப்போக்கும் காரணமோ?

நியூஸ்:
http://timesofindia.indiatimes.com/city/chennai/IAS-crusader-refuses-to-give-up-fight-against-corrupt-forces/articleshow/6238906.cms

அப்படியே,  பழமொழிகள் பற்றி பேச்சு வந்தது.  அவர், "அந்த காலத்தில, பல சமயங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல  என்று தெளிவுபடுத்தி கொண்டு) ,    அறிவில் முதிர்ந்தவர்  யோசித்ததை - புரிந்து கொண்டதை  -  அப்படியே பால பாடமாக மற்றவர்கள் மனதில் ஏற்றி விடுவார்கள்.    "ஏன்? எதற்கு?" என்று கேட்க   விடாமல்,   " இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், சாமி கண்ணை குத்திரும்!" என்று சொல்லி பயமுறுத்தி அடக்கி விடுவார்கள்.  அதற்கும் அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு "கொள்ளி வாய் பிசாசு" மற்றும் "மல்லிகைப்பூ கேட்கும் மோகினி பேய்," என்றார்.

சில பழமொழிகள் மற்றும் "எதிர்" பழமொழிகள் சுட்டிக் காட்டி,  எப்படியெல்லாம் குழப்பி உள்ளனர் என்று விளக்கினார்.
அவரவர் தங்கள் வசத்திக்கேற்ப - சூழ்நிலைக்கேற்ப - பொருள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

*   தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
அஞ்சு வயசுல, அண்ணன் தம்பி; பத்து வயசுல, பங்காளி.

*  தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
   தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேற.

* அகன்று இருந்தால் நீண்ட உறவு;  கிட்ட இருந்தால் முட்ட பகை.
சொந்தம் உதவுற மாதிரி, பந்தம் இல்லாதவன் உதவுவானா? 

*  நாலடி  என்றாலும் தனக்கு என்று ஒரு இருப்பிடம் இருக்கணும்.
அசை போட்டு விழுங்குவது,  மாடு; அசையாமல் விழுங்குவது,  வீடு.

*  ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.
வாய்மையே வெல்லும். (Honesty is the best policy)

*  அஞ்சினவனுக்கு யானை; அஞ்சாதவனுக்கு பூனை.
பூனைக்கு மணியை கட்டுவது யார்?

*  புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.
 பசி வந்தால், பத்தும் பறந்து போம்.

*  வாய் உள்ள பிள்ளை, பிழைக்கும்.
நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும்.

*  கடவுள் அமைத்த மேடை.  நாம் அதில் ஆடுகிறோம்.
ஆடத் தெரியாதவள்,  மேடை கோணல் என்றாளாம்.

*  கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
 பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.

*   நாய் வாலை நிமிர்த்த முடியாது.
 அடிக்க அடிக்க,  அம்மியும் நகரும்.

*  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

*  பெண்ணின் மனதையும்  கடலின் ஆழத்தையும்  கண்டது யார்?
ஆழம் தெரியாமல், காலை விடாதே!

* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.
பொறுத்தார்,  பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)

எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." 

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்.


பி.கு.:  மாதவன் சார் அனுப்பியது:  லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் --  முயற்சியுடையார்  இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மற."



Sunday, August 15, 2010

சோகம் என்றாலும் சிரிப்பு

கடந்த சில நாட்களாக பயணங்கள் ........ இன்ன பிற வேலைகள்......
பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை.  மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.  ஆனால், நிறைய விஷயங்கள் உண்டு. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். 

  "இடுக்கண் வருங்கால், நகுக...." என்ற வள்ளுவர் வாக்கு, எந்த அளவுக்கு நடைமுறைக்கு உதவும் என்று யோசித்தது உண்டு.  வாழ்க்கையில்,  சில சமயங்களில்  அதை கடைப்பிடித்த போது,  உண்மையில் சூழ்நிலையின் இறுக்கம் குறையத்தான் செய்கிறது.   தாமும்  உறுதியாய் நின்று,  மற்றவர்களின் மேல் தங்களின்  கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க  ,    நகைச்சுவை உணர்வு  நன் மருந்தாக  அமைந்து விடுகிறதே!


சவுண்டு பார்ட்டி: 

ஒரு கட்டிடத்தில் இருந்து 15 அடிகள் கால் தவறி  கீழே விழுந்து விட்ட ஒரு தோழியின் தந்தையை (தமிழ் நாட்டில் இருந்து  அமெரிக்கா  வந்தவர்)  காண,  ஒரு மருத்துவமனையின் Surgical ICU வுக்குள் நுழைந்தோம்.  முதுகு தண்டில்,  எலும்புகள் சில பகுதிகளில்  நொறுங்கி விட்டதால்,  இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்து இருந்தது.  முதல் surgery மட்டுமே ,  பத்து மணி நேரங்களுக்கு மேலாக நடந்தது.   வலியின் மிகுதியில் சத்தம் கொடுத்துக் கொண்டு  இருந்தவரை  பார்க்கும் போது, பாவமாக இருந்தது.
ஆதரவுடன் கரம் பற்றி, "அங்கிள், ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டேன்.
 அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து,  "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்,"  என அந்த நேரத்திலேயும்  அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது, அவருடன்  சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.


முயற்சி திருவினையாக்கும்: 

ஒரு நண்பரின் மனைவி, கடலை மாவில் ஏதோ இனிப்பு செய்து (முயற்சி செய்து!!!!) கொண்டு இருந்தார்.  அவரிடம்,  "என்ன ஸ்வீட் செய்யப் போறீங்க?" என்று நான் கேட்டதும்,
எந்த வித பதட்டமும் இல்லாமல்,  "சித்ரா, நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை.... கூழ் மாதிரி வந்தா,  பேசன் (besan = கடலை மாவு) கீர் ;  இளக்கமாக வந்தால், பேசன்  பர்பி;  கட்டியாகிப் போச்சுனா, மைசூர் பாக்.  அதையும் மீறி, கல்லு மாதிரி  ஆகி விட்டது என்றால்,  இருக்கவே இருக்கு எங்கள் வீட்டுக் குப்பை கூடை.  எந்த ஸ்டேஜ்ல வரப் போவுது தெரியாம கிண்டிக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுங்க."
(கடைசியில்,  மைசூர் பாக்குக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட ஒரு புது பக்குவம் வந்தது என்பது வேற விஷயம்! எண்ணிப் பார்த்துட்டேன். என் பற்களின் எண்ணிக்கை குறையவில்லை.  தப்பிச்சேன்டா, சாமி! அந்த இனிப்புக்கு, நாங்க வைத்திருக்கிற பெயர்:  "கல்"லூர்  பாக் )


"பால்" சோறு:

 பார்டிக்காக உணவு தயாரித்து கொண்டு இருந்த தோழிக்கு உதவியாக அவளது அம்மாவும் நானும் இருந்தோம். அப்பொழுது அங்கே தன் குழந்தைக்கு சோறு ஊட்ட வந்த இன்னொரு தோழி,  சூடான சாதம் எடுத்து தட்டில் போட்டு விட்டு,  fridge உள்ளே இருந்த கிண்ணத்தில் இருந்ததை எடுத்து சாதத்தில் ஊற்றிய பின் தான்,  தான் எடுத்தது தயிர் இல்லை,  மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள்.  அப்பொழுது தோழியின் அம்மா, " என்னம்மா இது?  தோசை மாவுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கே?" என்று கேட்டார்கள்.    இவள்  முகம் கோணாமல் - சளைக்காமல் - சட்டென்று, " ஆன்ட்டி,  நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. வித்தியாசம் தெரியல," என்று பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.

சுவாசத்தில் கலப்பாயே: 

என் அமெரிக்க தோழி ஒருத்திக்கு  கொஞ்சம் depression .  ஒரு
change of place க்காக எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது,   Jaya Max இல் சில பாடல்களை, அவளுடன்  சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்.   தொடர்ந்து வந்த மூன்று பாடல்களில்,   ஹீரோ ஆசையுடன் முத்தமிட நெருங்குவதும், ஹீரோயின் மேடம் முகத்தை திருப்பி கொண்டு விலகி விடுவதுமான வழக்கமான சீன்கள்.  அதை கவனித்த தோழி, "ஹீரோக்கள்  முத்தமிட வரும் முன் , வாய் துர்நாற்றத்துக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.  ஹீரோயின்கள்   சகிக்க முடியாமல் எப்படி டீசன்ட் ஆக  விலகி விலகி போகிறார்கள்," என்று சொன்ன பிறகு தான், ஒரே விஷயம், அடுத்தவர் பார்வையில் -  வேறு அர்த்தத்தில் -  எப்படி எல்லாம் தெரிகிறது  என்று நினைத்து சிரித்தேன். அவளுடைய depression நேரத்தில், எப்படி பேசுவது - எதை பற்றி பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் அது வரை இருந்த இரண்டு பேரும்,  அதன் பின் பல விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. 


காதல் அணுக்கள் - neutron- electron: 

நண்பர் ஒருவர்,  ஒரு மாதமாக  சரியாக சாப்பிடாமல் - தூங்காமல் - இரவு பகல் - சனி ஞாயிறு - என்று ஒரு  Human Health  research project இல் மூழ்கி, அவரது லேப் வேலையே  (lab work ) கதி என்று இருந்தார்.  அதன் பின்னும்  அவர் எதிர்பார்த்து இருந்த ரிசல்ட் வராததால், வெறுத்து போய்விட்டார். மீண்டும்  இப்படி வொர்க் செய்ய  வேண்டுமே என்ற எரிச்சல் வேறு.
வீட்டுக்கு வந்ததும்,  மிகவும் ஆதரவாக அவர் மனைவி, " நீங்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டு, சோபாவில் ரிலாக்ஸ் செய்ங்க.   நான் காபி கொண்டு வரேன்," என்றார்.
அந்நேரம்,   நமீதா பாடல் ஒன்று தமிழ் சேனலில் ...... கோபமும் எரிச்சலுமாய் வந்து எங்களோடு  உட்கார்ந்தவர், நமீதாவை பார்த்து விட்டு சத்தம் போட்டு சிரித்தார்.
"செல்களை (cells)  மொத்தமாக பார்த்தால், ரிலாக்ஸ் ஆகிறது.  அதே,   ஒற்றை ஒற்றை செல்லாய் பார்த்து cell research செய்து fail ஆகிவிட்டால்,  stress அதிகம் ஆகி விடுகிறது," என்று சொல்லி சிரித்தார்.


"Laughing faces do not mean that there is absence of sorrow;  but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare. 
 A great sense of humor can make the dull moments, brighter.  


Monday, August 2, 2010

அவள் ஒரு "தொடர்பதிவு"

உருப்படியாக (????????????????????) நானே ஒரு டாபிக் யோசித்து எழுதி,  ஒரு மாதத்துக்கு மேலாக ஆகி விட்டது.... தொடர் பதிவு தயவில் -  மற்ற பதிவர்கள் கொடுத்த டாபிக் தயவில்   எழுதி .....ஜூலை மாதத்தை  ஓட்டி இருக்கேன் என்று இன்றுதான் பார்த்தேன்.... அவ்வ்வ்வ்.....

அப்படியும் இப்படியுமா போயி ஆகஸ்ட் வந்துவிட்டது.  என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.... எழுத எத்தனையோ விஷயங்கள்.......... ம்ம்ம்ம்..... என்ன எழுதலாம்?

மீண்டும், இந்த வாரத்தில் வரும் நான்கு நாட்கள் பயணம் தான் நினைவுக்கு வந்தது.  அந்த நாட்களில், ப்லாக் பக்கம் வருவது சாத்தியப் படாதே என்ற "கவலை" வேறு.....  இந்த நினைப்ஸ் மேட் மீ சிரிப்ஸ்  யா.....

எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள்,  பின்னூட்டம்,  லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா.....   ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?


சரி, இந்த வார quota வுக்கு என்ன எழுதலாம்?  என்னமோ பதிவு  போடலைனா,  கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்து விடும் என்கிற நினைப்பு.... ...... சித்ரா, உனக்கே இது டூ மச்..... மச்சி,  மச்சான்,  மச்சினியா தெரியல?

என்ன பதிவு போட? ம்ம்ம்ம்.....  என்ன இடுகை போட?
யோசிக்காம போடு....... கூகிளார் கொடுத்த "சொத்து" உரிமையோடு ......

"சும்மா"  பற்றி கூட எழுதியாச்சு...... இனி,   சும்மா வேற  என்ன எழுதலாம்?

சமூதாய அக்கறை கொண்டு ஏதாவது எழுதலாம்.  சீரியஸா எழுதுற மூடு இல்லை.... ம்ம்ம்.... வேறு என்ன எழுதலாம்?


ஒரு பெரிய ஆழமான விஷயத்தை எடுத்து,  நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து,  நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....
ம்ம்ம்ம்....... என்ன எழுதலாம்?

 
 
நம்ம  புளப்பு  "சிரிப்பா சிரிக்கிற" மாதிரி வாழ்க்கை போனால்,   tragedy  -
நம்ம புளப்பை பார்த்து நாமே சிரிக்க முடிந்தால்,  காமெடி.
ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?

 என்னைப் போய் சிலர், "பிரபல" பதிவர் என்று சொல்கிறார்கள்.  இறை அருள்,  பதிவுலக நண்பர்களின் ஊக்கமான பின்னூட்டங்கள்,  அவர்களின் பரிசாக பரிந்துரைகள் மற்றும் "லைக்"கள்,  என்று  இன்னும் "பிற(ர்) பலத்தில்" இருப்பதை சொல்கிறார்களோ?  எல்லோருக்கும் நன்றி சொல்லி எழுதலாம்.... ம்ம்ம்ம்.... எப்படி சொல்லி   எழுதலாம்?

 பதிவுலக நண்பர்கள்,  உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால்,  என்ன ஆகும்?  எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும் என்று யோசித்து எழுதலாம்........ ம்ம்ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?


இறைவன் vs மனிதன் என்று ஏதாவது எழுதலாமா?
மனிதன் இருப்பது உருவத்திலா?
மனிதம் உள்ள இதயத்திலா?
 இறைவன் இருப்பதும் உருவத்திலா?
இருக்கும் நம்பிக்கையிலா?
மனிதனின் புரிதல்,  பகுத்து அறிவதிலா?
இறையன்பை  பகுத்து உணர்வதிலா?
ம்ம்ம்ம்ம்ம்........ என்ன எழுதலாம்?

இன்னும் பெண்டிங்ல இருக்கிற தொடர் பதிவு அழைப்புகளுக்கு ஏற்ற மாதிரி யோசித்து எழுதலாம்....ம்ம்ம்ம்.... எப்பொழுது எழுதலாம்?

சரியா போச்சு..... "அவளோட எண்ணங்கள்" என்று தலைப்பு வைத்து இருக்கலாமோ?
சே,..... இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் நண்பரின் பெற்றோர்களை impress பண்றேன்   என்று அவர்களுக்கு கம்பெனி கொடுக்க,   டிவியில்  பழைய பாலச்சந்தர் படம், "அவள் ஒரு தொடர்கதை" பார்த்து விட்டு,  "ஞே"  "ஞா"  " ஞி"   " ஞீ "   "ஞௌ"   என்று முழிக்கும் போது பதிவு எழுத வரக்கூடாது..... முடிவே இல்லாத முடிவு  .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல.....  ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்.....
The End !!!

ஸ்ரீராம். said... விகடன் குட் ப்லாக்ஸ்ல உங்கள் இந்தப் பதிவு....

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp