Sunday, January 16, 2011

நல்லா படிச்சீங்களா?

தமிழ்மண 2010 விருதுகளை  வென்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,   எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிக்கிறேன்ங்க! 


எனது கல்லூரி தோழி உமாவை, நான் சென்ற முறை திருச்சி சென்ற பொழுது, சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்பொழுது உமா, பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தாள்.
" நல்லா படிக்கிறியா?"
இப்படி ஒரு மெகா புளித்து போன  கேள்வி கேட்ட வாய்க்கு, அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர்  தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும்.   செய்யல..... நல்ல பொண்ணு!

"நல்லா படிக்கிறேன். கிளாஸ்ல first .  நீங்க என் அம்மா கிளாஸ் மேட் தானே?  எங்க அம்மா எப்படி படிப்பாங்க?", என்று கேட்டாளே பார்க்கலாம்.
"உங்கள் அம்மாவும் கிளாஸ் first ஆகத்தான் இருந்தாங்க," என்று உண்மையைத்தான் சொன்னேன்.
இருந்தாலும், நம்பாத மாதிரி ஒரு லுக் விட்டாள்.
"அம்மாவோட friend ல. அப்படித்தான் சொல்வீங்க."

நல்ல வேளை,  "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை.  ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! 

அவர்கள் வீட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபொழுது....  மனதில்  "flashback....." ஓடாமல் இருக்குமா?

நான் படித்த கான்வென்ட்டில் டென்த் வரை, இங்கிலீஷ் மீடியம் ஒரே ஒரு  செக் ஷன் மட்டும் தான். அதனால்,  என்னுடன் முதல் வகுப்பில் இருந்து டென்த் வரை படித்தவர்கள் - ஒரு சிலரை தவிர - மற்றவர்கள்  மாறவே இல்லை. அதே குரூப் தான்.

நிஜமாவே  தங்கள் படிப்பில், கருமமே  கண்ணாய் இருந்தவர்கள் - புத்தகத்தை படிச்சு - தவளையை கிழிக்கிற  first குரூப் எல்லாம் எடுத்துட்டு - நான் டாக்டர் ஆகப் போறேன் - engineer ஆகப் போறேன் - குப்பை கொட்டுனாலும், அதை கம்ப்யூட்டர்ல தான் கொட்டப் போறேன் -   என்று  + 1   இல் தான்  பிரிந்து சென்றார்கள். 

மற்றவர்கள்,  புத்தகத்தை படிச்சுட்டு அதையே கிழிக்கிற (பிட்டுக்குதான், ஹி  ஹி ஹி ஹி ..... )   குரூப்ஸ்  தேடி பார்த்து எடுத்து படித்தோம்.  அப்புறம்,  ஆர்ட்ஸ் காலேஜ் கூட சேர்ந்து ஒரே படையாக - வேறு வேறு டிகிரி வாங்க சென்றோம்.  மதிய உணவு நேரம்,  பலர்  பெரும்பாலும் சந்தித்து கொள்வோம்.

இதில்,   B.Com சேர்ந்த நானும் இன்னொரு தோழியும்  - B.A. History சேர்ந்த ஒருத்தியை சும்மா கலாய்த்து கொண்டே இருப்போம்.
ஒரு நாளு  அவளும் "பொறுத்தது போதும்.  பொங்கி எழு, மனோகரி!" மாதிரி பொங்கப் பானையாய் பொங்கிட்டா!

"படிக்கிறது Bachelor of Commerce தானே?  Bachelor of C(k)ombus (கொம்புஸ்) இல்லையே....  என்னமா அலட்டிக்கிறீங்க ...... நான் B.A. முடிச்சிட்டு,  அடுத்து உங்களுக்காகவே லா காலேஜ்ல  சேர்ந்துட்டு லாயர் ஆகிட்டு  - உங்க  மேல மான நஷ்டம் - மனக் கஷ்டம்னு எல்லாம் சொல்லி - நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டு - நீங்க வேலை பார்க்க போற பேங்க்லேயே,  நீங்க கொள்ளை அடிச்சாத்தான் அதை கட்ட முடியும்ங்கற நிலைமைக்கு உங்களைத் தள்ளி - உங்களுக்கு எதிரா நானே வாதாடி,  உங்களை ஒரு வழி பண்றேன்," என்று சொல்லிவிட்டு, தன் முன்னால் இருந்த புத்தக கட்டின் மேல  சத்தியம் செய்தாள்.

ஐயோ...... விளையாட்டுக்கு என்றாலும், இப்படி படிக்கிற புக் மேல சத்தியம் பண்ணிட்டாளே என்று  எட்டி பார்த்தோம்.  "Women's Era" பத்திரிகை ஒன்று அவளது History course books மேல இருந்தது.  அட்டைப் படத்தில்,  ஏதோ ஒரு  பொண்ணு சிரித்து கொண்டு இருந்தாள்.  அய்யோ.... பாவம்.... யார் பெத்த பொண்ணோ?


அருகில் இருந்த  B.Com. கிளாஸ் மேட் தோழி , "சரி, விடுமா.  எனக்கு  Reserve Bank Governor வேலை கொடுத்துட்டு , என் signature காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி   பேசாதே.   நானே அகப்பை (கரண்டி)  பிடிக்கப் போற  கைக்கு, Accountancy எதுக்குன்னு  உள்ளூர புலம்பிக்கிட்டு இருக்கேன். நீ வேற மிரட்டாதே."


அன்று சிரிப்போசை அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.....  இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.   இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ...... அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட,  இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள்.   History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள்,   Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள்.   அதற்குள், படிக்கும் போது மட்டும் என்ன அலப்பறை பண்றோம் என்று சிரித்து கொண்டேன்.

மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை.  அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... 

இந்த நினைப்பு ஒரு பக்கம் திடீர்னு வந்தப்போ,   ஒரு நண்பரின் பர்த்டே  பார்ட்டிக்கு போக வேண்டியது வந்தது .  வந்து இருந்த எல்லோருமே, ஆந்த்ராவில் இருந்து அமெரிக்காவுல  மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க வந்தவர்கள்.  அதில் ஒருவன்,  பயங்கர பாலையா காரு fan .........

அவன் வீட்டில் இருந்து வரும் போதே, நல்லா "தண்ணி"  அடிச்சிட்டு  வந்தாச்சு .... சிறிது நேரத்தில்,   தன்னையே பாலையாவாக நினைத்து தெலுங்கில் ஆக்ரோஷமாக வசனம் பேச ஆரம்பித்து விட்டான்.  எனக்கோ, தெலுங்கு - ஹிந்தி எல்லாமே ஒண்ணுதான்..... விளங்காத போது, அது என்ன பாஷையாக இருந்தால் என்ன?  இருந்தாலும், அவனது பாலையா சேட்டைகளை கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பாலையா, விரலைத் தூக்க - ஒரு காட்சியில் ட்ரைன் ஒன்று பின்னோக்கி செல்லும்.  அந்த காட்சியை வைத்து மற்றவர்கள்,  அவனை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு எல்லோர் மேலும் கோபம் அதிகமாகியது.  திட்ட ஆரம்பித்தான்..... மற்றவர்கள் முகத்தை பார்த்தேன்.  அவங்க  லுக் விட்ட விதம்  சரியா இல்லை.....  தெலுங்கு புரியாமல் இருந்ததை பாக்கியமாக கருதினேன்.  என்ன சொல்லி திட்டி இருப்பான்  என்று புரியாமலே புரிந்த மாதிரி இருந்துச்சு.....

அடுத்த பில்டிங்கில்  இருந்த  அவனது  வீட்டுக்கு (apartment) அழைத்து சென்று விட,  இரண்டு பேர்  முனைந்தார்கள்.

பார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான்.  வீர வசனம் பேசினான் -  "இருக்கா?  இல்லையா?"  என்பதற்கே ஸ்பெஷல் பொங்கல் திருநாள் பட்டிமன்றம்,  டிவியில  நடத்தி முடிவெடுக்க வேண்டி  இருந்த தன் மீசையை தட்டி விட்டு கொண்டான் - தன் தொடையை தட்டி கொண்டு, ஒத்தை விரலை தூக்கி விட்டு என்னவென்னவோ சொல்லி விட்டு,  அப்படியே ஒரு விரலை நீட்டிக்கொண்டு நின்றான்.



என்ன ஆச்சு என்று கேட்ட போது,   கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒருவர்  " இல்லை,  அவனை கிண்டல் செய்ததற்கு, அவனது கோபத்தை தூண்டி விட்டுட்டோமாம்.    இப்போ, அங்கே நின்னுக்கிட்டு இருக்கிற நம்ம கிஷோர்  ஓட காரு பின்னோக்கி  போகுமாம்.  சபதம் போடுறான்.  அந்த கார்,  அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும்,  நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"
 
டைம் பார்த்தோம்.  இரவு மணி, ஒன்று.  குளிர் - zero டிகிரிக்கும் கீழே.....  நீட்டிய விரலை மடக்காமல்,  நிற்கிறான் .... நிற்கிறான்..... சிலையாட்டம் நிற்கிறான் ......  அப்படியே  கடுங்குளிர்ல விறைச்சு போய்த்தான் நின்னானோ என்னவோ......

வேறு வழி இல்லாமல்,  அவன் அசந்த  சமயம்  கிஷோர்,  தன் காரில் ஏறி,  கார் ஸ்டார்ட் செய்து காரை reverse செய்து "பின்னுக்கு" போகச் செய்தான்.  பாலையா ரசிகருக்கு பரம சந்தோஷம்.... மீண்டும் ஒற்றை விரல் தூக்கி, எங்கள் அனைவருக்கும் ஒரு வார்னிங்..... பின், ஒரு வெற்றி புன்னகை.... சந்தோஷமாக தன் வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் போவதையே சிறிது நேரம்,  வெறித்து பார்த்து கொண்டு இருந்த எங்களின் சிரிப்போசை அடங்கவும் ரொம்ப நேரம் ஆச்சு......

இன்னும் சில வருடங்களில்,  இவனும் பெரிய வேலையில் இருக்கலாம்.   இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?

Monday, January 10, 2011

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்

பொங்கல் ஸ்பெஷல் பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த பொழுது,  நாங்கள் சில வருடங்கள் முன், பொங்கல் சமயம்,  அமெரிக்காவில்,  New Mexico மாநிலத்தின் தலைநகரம் - Santa Fe க்கு சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது..... கிராமிய சூழ்நிலையில், பொங்கல் கொண்டாடுவது தனி அழகு என்று சொல்லி கொண்டு இருந்த நேரம், என் கணவர் சாலமன், அந்த வருடம் என்னை  ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி, அங்கே அழைத்து சென்றார்.  அமெரிக்காவிலேயே  மிகப் பழமையான தலைநகரம், இதுதான். (The oldest Capital City in USA)     Santa என்றால் புனித - Holy என்று அர்த்தம்;  Fe என்றால் Faith - நம்பிக்கை  என்று அர்த்தம் என்று விளக்கம் தந்தார்.

சரி,  வழக்கம் போல ஊர் சுத்தல் என்று சாதரணமாக கிளம்பி சென்ற எனக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.

அமெரிக்காவில் உள்ள மற்ற தலைநகரங்கள் போல அல்லாது, குறைந்த மக்கள் தொகையுடனும்  நிறைய கலை அம்சங்களுடனும் இந்த நகரம் இருப்பது,  இதன் தனி சிறப்பாகும்.  இங்கே ஸ்பெஷல் என்னங்கறீங்க?  அந்த நகரத்தின் கட்டட அமைப்புதான். அப்படியே ஆ ...... னு வாய் பாத்து கிட்டே வந்தேன்.  நம்ம ஊரில், மண் வீடு ஏழ்மையின் சின்னமாக கருதப்பட்டு கொண்டு வரும் வேளையில்,  பெரிய பெரிய ஹோட்டல், மாளிகைகள் எல்லாம் மண் வீடு அமைப்பிலேயே கட்டி, அசத்தி கொண்டு இருக்கிறார்கள்.  வாவ்!

மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் கலாச்சாரமும், அந்த பகுதிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு வரும் செவ்விந்தியர்கள் எனப்பட்ட Native Americans பழக்க வழக்கங்களும் இணைந்து  நகரம் முழுவதும் முத்திரை பதித்து  உள்ளன.
இவர்கள் செய்யும் கை வினைப்பொருட்கள் - ஓவியங்கள் - கலை அம்சங்கள் ஒரு பக்கம் நேரடி விற்பனைக்கு கிடைக்கும் வண்ணம்,  நகரம் முழுவதும் கலைக்கூடமாக காட்சி அளித்தது.   இங்கே பாருங்க... மண் குடங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருந்தாங்க.....

நியூ மெக்ஸிகோவில் கோடை காலம் - உச்சி வெயில் மண்டையை புளக்கிற மாதிரி இருக்கும்.  Dry Heat வேறு அனல் காத்தடிக்க மிரட்டும்.  குளிர் காலம், அதிக குளிரில் வெடவெடக்க வைக்கும்.  இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வீடுகள், மண்வீடுகள் தான் (Adobe style - அடோபி)  என்று Native Americans கண்டு பிடித்து கொண்டு,  அதிலேயே பெரும்பாலான வீடுகளையும் கடைகளையும் கட்டி வைக்க, அதையே இன்னும் - "பெரியவா சொல்லிட்டா..... சரியாத்தான் இருக்கும்...." என்று கடைபிடிக்கிறாங்க மக்கா.

 இவர்களது பாரம்பரியத்தை மதிக்கும் பொருட்டு, Old Santa Fe பகுதி முழுவதும் மண்ணின் நிறம் (Earth Tone) கொண்டு பிரதானமாக கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் தான் இருக்க வேண்டும் என்ற அரசாங்க  விதி உண்டு. அதனால், இந்த பகுதியில் உள்ள உணவு விடுதிகளும், கடைகளும்,   வீடுகளும் ,  பெரிய 5 Stars Hotels கூட Adobe Style கொண்டு தான் கட்டப்பட்டு இருக்கின்றன.  நம்ப முடியலியா?  அமெரிக்கா என்றாலே நியூ யார்க் மட்டும் இல்லைப்பா.....

 கீழே உள்ள படங்கள், 5 Star  Hotel Santa Fe மற்றும் Loretta Inn and Spa Resort :  நம்ப முடிகிறதா?


கிறிஸ்தவ ஆலயம் ஒன்று.  மிகப் பழமையான ஆலயம் என்ற பெயர் பெற்ற San Miguel Chapel:


 மண் வீட்டு பங்களா:


இதுவும் அமெரிக்காவில் இருக்கும் வீடுதான்:
 
நிச்சயமா இது அந்த ஊரு நாட்டாமை வீடு இல்லை:






அங்கே விற்பனைக்கு இருந்த ஒரு வீட்டை வேடிக்கை பார்த்தோம்.  முன்னாலே அந்த கொடி இல்லைனா, இது அமெரிக்காவில் இருக்கும் வீடுதான் என்று, அங்கே இருந்த நானே நம்பியிருப்பது கஷ்டம் தான்.





ஒரு வீட்டின் உள்ளே இருந்த வரவேற்பறை:

மேல தாங்கு கட்டையுடன் அப்படியே ஒரு கிராமிய மணம் கமழும் அறை:

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரூம் ஒன்றின் அறை:
அரிக்கேன் விளக்கு - வண்டி - எதையும் விடல. .....






மேல உள்ள படம், அங்கே இருந்த கடை வீதி: 
ஒரு Native American கடையில் இருந்த ஜமுக்காள போர்வைகள்:

கைத்தறி தொழில் - குயவர்கள்,  மண் பாத்திரங்கள் - மண் வீடுகள்  என்று இந்த தலைநகரம் - கிராம நெடியுடன் அசத்தியது.  அது மட்டும் இல்லைங்க - முத்தாய்ப்பாக -
இங்கு உணவு வகைகளில்,  அதிகம் காரம் சேர்த்து கொள்கிறார்கள்.  வீடுகளின் முன்னும் கடைகளின் முன்னும்,  சிவந்த மிளகாய்களையும் பூண்டுகளையும் மாலைகளாக தொடுத்து காயப் போட்டு இருப்பதை பார்த்து நிஜமா - ஊரு நினப்புல கண்ணுல தண்ணி வந்துட்டுது. 



இப்படியாக ஒரு தலைநகரமே, மண் வீடு - மண் குடம் - என்று  நம்ம ஊரு பொங்கலுக்கு தயாராக இருக்க - - -   நான்தான், அரிசி - வெல்லம் - பருப்பு - கரும்பு - எடுத்துட்டு போகாம போயிட்டேன்.  முதலிலேயே தெரிந்து இருந்தால், அங்கேயே பொங்கல் வச்சு கொண்டாடி இருந்து இருக்கலாம். 
இனி என்ன - வருஷா வருஷம் பொட்டியை கட்டிக்கிட்டு, Santa Fe போய்தான் பொங்கல் கொண்டாடிட்டு  வரணும் போல..... 

ஒரு டவுட்டு:  இந்த Native Americans செய்றது எல்லாமே நம்ம ஊரு சரக்கு மாதிரி இருக்கே..... இவங்க எல்லாருமே,   அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து,  அமெரிக்காவில் முதன்  முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ?  

அந்த தலைநகரத்தை பத்தி நிறைய எழுதலாம் - அப்புறமா ஒரு நாளு சொல்றேன். ....... இப்போ எல்லோரும் பொங்கல் கொண்டாட போங்க......பட்டணத்தில் தான் இருக்கோமே என்று,   கிராமத்தை மறந்துராதீங்க, மக்கா....... 
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
 


Tuesday, January 4, 2011

ஆண்களின் டிரஸ் ?



 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.......  அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும் கூட போனஸ் ஆக இப்போவே வெட்டி பேச்சில் இருந்து  வருகிறது.......


எல்லோருக்கும் இந்த ஆண்டு புது பொலிவுடன் - நம்பிக்கையுடன் ஆரம்பித்து இருக்கும் என்று நம்புகிறேன்..... ஒரு வழியாக - வெற்றிகரமாக - இரண்டு வாரங்களுக்கு மேலாக - ஈமெயில்,  பதிவுலகம்,  Facebook பக்கம் வராமல் இருந்து விட்டேன்.  இதெல்லாம் இல்லாமல் கூட,  உலகம் எப்போவும் போல தான் சுத்துதுங்க..... நிஜமா......

இப்போதான் பெட்டி படுக்கையோட ஊரில் இருந்து இறங்கியாச்சு.....  கொடுத்த வாக்குப் படி,  ஜனவரி ஐந்தாம் தேதி வந்து ஆஜர் போடணும் என்ற கடமை உணர்ச்சியில் இங்கே வந்து எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்.
கருத்து - சிந்திக்க - சிரிக்க - எல்லாம் இன்னும் அந்த பெட்டிக்குள்ளேயே இருக்குதோ என்னவோ.....  ம்ம்ம் ....
பெட்டியை திறக்கணும்  என்று கூட தோணவில்லை..... அதற்குள் வெள்ளி கிழமை வரும் பயணம் கண் முன் வந்து நிக்குது.....  ஆஆ......

சரி, அதை விடுங்க மக்காஸ் .......

எங்கள் பயணத்தின் போது,  இந்தியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா  வந்து இருக்கும் சிலரை சந்திக்கும்  வாய்ப்பு கிடைத்தது.  புது வருட திருநாளை குறித்து , ஒரு அமெரிக்க நண்பர்,  எட்வர்ட் உடன் சேர்ந்து அவர்களுடன் பேசி கொண்டு இருந்த பொழுது,  மகேஷ் என்பவர்,  "புது வருடத்துக்கு எனக்கு டிரஸ் ஊரில் இருந்து கொண்டு வந்து விட்டேன்," என்று ஆங்கிலத்தில் சொல்ல எட்வர்ட்  விழித்தார்.
"You wear a women's dress for New Year?"
"No, only Men's dress."
"In India, you have dress for men too?"
ஐயா, சாமி..... இதுக்கு மேல ஏதாவது சொன்னால் - கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி என்று ..... மகேஷிடம் இங்கே டிரஸ் என்றால் பெண்கள் அணியும் உடைக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஆண்களுக்கு "outfit" அல்லது " clothes" என்றுதான் சொல்வார்கள் என்று  விளக்கினேன்.


சுப்பு என்ற தமிழர் அசடு  வழிய ஒரு blonde பெண்ணிடம் கடலை போட,  மரியாதையுடன் உளறியதையும் மறக்க முடியாது.... ஏதோ  இங்கிலீஷ்ல இலக்கணம் சுத்தமாக ....."As I am suffering from fever னு ஆரம்பிச்சு .... Yours sincerely னு முடிக்கிற " ரேஞ்சுல அவளுடைய பேரு கேட்டார்.
"May I kindly know your good name, please?" என -
அந்த பெண் சத்தமாக சிரித்தபடி,  "I never knew I had a bad name too..." என்றாள்.
 



அப்புறம், சுந்தரம் என்ற நண்பர் புதிதாக வந்த சமயம்,   சாரா என்ற அமெரிக்க பெண் அவருக்கு முதன் முதலாக கடைக்கு சென்று வர உதவ முன் வந்தாள் .....  அவர் வாங்கிய பொருட்களை காரில் வைக்க அவர் காத்து இருப்பது தெரியாமல், சாரா இன்னொரு தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள்.  சுந்தரம்  பவ்யமாக அவளிடம்,
"I want to open the dicky, please" என்று கேட்க, அவள் கோபத்தில் திட்ட ஆரம்பிக்க .... விவரம் புரியாமல் இவர் முழிக்க.....
அருகில் வந்த இன்னொரு இந்திய மாணவர்,  சுந்தரத்திடம், " இங்கே கார் பின்பக்கத்தை  ட்ரன்க் (trunk) என்றுதான் சொல்வார்கள். நீ சொல்லியது வேற "பொருள்" படும், " என்ற பின் - சுந்தரம் முகத்தில் அசடு வழிய - விஷயம் தெளிந்து சாரா சிரிக்க.....
அட, அட, அட......


ஊருக்கு ஏத்த மாதிரி எதை மாத்துறீங்களோ இல்லையோ...... பேச்சை மாத்த வேண்டியது இருக்கே.....
நெல்லை சீமையில,   பிரிட்டிஷ் இங்கிலீஷ் படிச்சுட்டு வந்து, இங்கே அமெரிக்க இங்கிலீஷ்ல குப்பை கொட்டுரோமே..... யம்மா.....சாரி..... மம்மி டோய்..... ஆச்சி டோய்..... டமில் வால்க டோய் !!!
American English vs British English: 

அமெரிக்காவுக்கு இந்த வருடம் புதிதாக வருபவர்கள், நோட் தீஸ் பாயிண்ட்ஸ் ப்ளீஸ்...... தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்..... இருக்கட்டும்....  வேறு ஏதாவது டவுட்டு இருந்தா சொல்லுங்க.... சுந்தரம் அல்லது மகேஷ் வந்து தெளிவு படுத்துவாங்க..... இது போல, நிறைய ஆப்பு வாங்கி கஷ்டப்பட்டு அமெரிக்காவுல அமெரிக்க இங்கலிபீசு படிச்சவுக ஆச்சே......

ஆமா..... உனக்கு எதுவும் இப்படி "மாட்டல்" கதை இல்லையா? என்று கேக்காதீங்க..... நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......