இது பதிவுலக அரசியல் பதிவு இல்லைங்கோ.....
நான் நெல்லைக்கு வந்த போது,
"நெல்லை பதிவர்கள் சங்க முன்னேற்ற கழக" தலைவர் : "உணவு உலகம் " புகழ் - அண்ணன் குல மாணிக்கம் - திரு. சங்கரலிங்கம் அவர்களையும் ,
மகளிர் அணித்தலைவி - சமூக சேவகி - "மனதோடு மட்டும் " கௌசல்யாவையும் நான்கைந்து முறைகள் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
எங்க ஊரில பெரிய ஆபிசர் ஆச்சே..... பந்தா எப்படி இருக்குமோ - அலுவலகத்தில் ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து appointment தருவார் என்று ஒரு எண்ணத்தில் தான் சென்றேன். அண்ணன் படு கூல் ஆக , அலுவலகத்துக்கு வெளியிலேயே கௌசல்யாவுடன் , காத்து இருந்தது, சந்தோஷ அதிர்ச்சி.
தான் ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.
நடக்கவிருந்த நெல்லை பதிவர் சந்திப்பு மீட்டிங் பற்றி ஏற்பாடுகளை உறுதி செய்யத்தான், இந்த குட்டி மீட்டிங். ஒரு சின்ன அலுவலக அறை. குட்டி மீட்டிங்க்கு குட்டி பில்டிங் ...என்னே ஒரு symbolic shot .....!
காளி மார்க் கடலை மிட்டாய், சூடான அல்வா, மிக்சர் சகிதமாக வரவேற்றார். முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு. அப்போ, கொடுத்த ஒரு ஆத்மார்த்தமான கடலை மிட்டாய் போஸ் ஒன்றை , அண்ணன் கிளிக்கி கொண்டார். அப்புறம் தான் சொன்னாங்க.... நெல்லை பதிவர் சந்திப்புக்கு advertisement ஆக அதை போட்டோ ஷாப் மாற்றி விட்டார். அவ்வ்வ்வ்......
எல்லாவற்றிலேயும் பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிக்க வேண்டும் என்றே கர்மமாக தான் இருப்பதை சொல்லாமல் சொன்னார்.
அடுத்த முறை சந்தித்தது நெல்லை பதிவர் சந்திப்பின் போதுதான். சங்கரலிங்கம் அண்ணன், சான்சே இல்லை..... ஏற்பாடுகளில் அமர்களப்படுத்தி இருந்தார். அவரது, ஆட்பலம் - பவர் பலம் எல்லாம் தெரிந்தன. ஆனால் அவரோ சந்திப்பை ஒளிபரப்ப டைரக்ட் ஆக ஆன்லைன் வீடியோ வரவில்லையே என்று பதிவுலக நண்பர் , நிரூபன் அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று டென்ஷன் ஆகி கொண்டு இருந்தார்.
தன்னடக்கத்துடன் , சக பதிவரின் கருத்துக்காக மரியாதை கொடுக்கும் குணத்தை சொல்லாமல் சொன்னார்.
அங்கே, பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்பும் கருத்தாழமிக்க பதிவர்களையும், தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பை பற்றி சொல்ல, தனி பதிவு வேண்டும்.......
"ஆண்டவா..... அங்கே இருந்த மாதிரியே, கமென்ட் அடிக்காமல் என் வாயை பொத்தி கொண்டு, இந்த பதிவை எழுதி முடிக்க உதவி செய்யும். ஆமென்."
(அதற்காக, பின்னூட்டத்தில் அதை இதை சொல்லி , என்னை உசுப்பேத்தி அடுத்த பதிவு அதை பத்தி எழுத வச்சுறாதீங்க, மக்காஸ்! எழுதுனாலும் எழுதிடுவேன். மி த பாவம்! )
அப்புறம், ஒரு orphanage சென்று பள்ளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்புக்கு ஒரு நாள், அண்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த குழந்தைகளின் நிலை, மனதை உருக்குவதாக இருந்தது. அந்த ஆசிரமத்துக்கும் பள்ளிக்கும் அண்ணனும் கௌசல்யாவும் செய்து வரும் உதவிகள், பல.
http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_4498.html
சமூக அக்கறையோடு அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டால், எந்த அளவுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சொல்லாமல் சொன்னார்.
பயணங்கள் மற்றும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக நிறைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் நேரம் அமையவில்லை. (என் அப்பாவின் மறைவுக்கு பின், நான் இந்தியா சென்ற முதல் ட்ரிப். நெல்லையில், எங்கள் வீட்டில் அந்த சோகத்தின் சாயல் இன்னும் பரவி இருந்தது. அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.)
அதனால், கடைகளுக்கு செல்லவும் முடியாமல் இருந்தேன். நெல்லை ட்ரிப் மறக்க முடியாதபடி செய்த அண்ணனை சந்தித்து விடை பெற்று கொண்டு வரலாம் என்று நினைத்து, ஊரை விட்டு கிளம்பும் முன் போன் செய்தேன். தன் அலுவலகத்தில் தான் இருப்பதாக சொன்னார். ஐந்து நிமிடங்கள் செல்லலாம் என்று முடிவெடுத்து வந்தேன். அப்பொழுது, என் நேரப் பற்றாக்குறையை புரிந்து கொண்டவர், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தார்.
நான் முதலில் அவரை சந்தித்த குட்டி அலுவலக கட்டிடம் இடிந்து போய் இருந்தது. காரணம் கேட்டேன். "உங்கள் முதல் சந்திப்புக்கு மறு நாள் தான் இப்படி ஆகி போச்சு. சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!" என்றார்.
தற்காலிக அலுவலக கட்டிடமாக, பக்கத்தில் இருந்த ஒரு பழைய கல்யாண மண்டபம் இயங்கி கொண்டு இருந்தது. "அண்ணா, நான் வந்த வேளை. உங்களுக்கு பெரிய அலுவலகம் கிடைச்சுடுச்சு." என்றேன்.
"இந்த முறை வந்துட்டு போறீங்க .... என்ன ஆகுதுன்னு பார்க்கிறேன், " என்றார்.
(கொசுறு செய்தி: இப்பொழுது சுகாதார துறையில் இருந்து உணவு துறை பிரிந்து வந்து, தனி துறையாக ஆக்கப்பட்டு, 300 பயனுள்ள பதிவுகள் கொடுத்த அண்ணனுக்கு பெரிய position கிடைச்சுடுச்சே!)
பக்கத்தில் இருந்த ஒரு பெரிய அட்டை பெட்டியை என்னிடம் கொடுத்தார். "பலகாரங்கள் வாங்க கூட, நேரம் இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாயே. இதில், முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம், மிக்சர், அல்வா எல்லாம் இருக்குது. அமெரிக்காவுக்கு எடுத்து கொண்டு போக," என்றதும், நிஜமாக என் கண்களில் நீர்.
பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். (அத்தோட பலகார பெட்டியும், ஹி ...ஹி....ஹி....ஹி.....)
ஏதோ அவரது பதிவுகளில், பின்னூட்டத்தில் விளையாட்டாக அண்ணன் என்று சொல்ல ஆரம்பித்தேன். அதை கருத்துடன் ஏற்று கொண்டு அவர் காட்டிய அன்பு, மதிப்பு மிகுந்தது. என் கணவர், " ஏதோ பதிவுலக அண்ணன் பார்த்து விட்டு வருவதாக சொல்லிட்டு போனே. வரும் போது, பொங்கல் சீர் பெட்டி மாதிரி ஒன்றை தூக்கி கொண்டு வந்து இருக்கிற. கரும்பும், எனக்கு பட்டு வேட்டி - சட்டையும் மட்டும் தான் மிஸ்ஸிங்," என்று கமென்ட் அடித்தார். அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு , அவருக்கும் ஒரு முறை கிடைத்து இருந்தது. மச்சான்ஸ் இரண்டு பேரும் இப்போ க்ளோஸ் தோஸ்த்து ஆகிட்டாங்க.
இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!