Saturday, October 22, 2011

அமெரிக்காவிலும் தீபாவளி திருநாள்



"தல" தீபாவளி பட்சணங்கள்:

திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின், அம்மா வீட்டில் கொண்டாட முடியாமல் வரும் தல தீபாவளியை மறப்பது பலருக்கு கடினமான வேலைதான்.

புது உடைகள் தயாராக இருக்கும். ஏதோ ஒரு தமிழ் சங்கமோ இந்திய சங்கமோ கலை நிகழ்ச்சிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும். குறிப்பாக, குழந்தை செல்வம் பெற்றவர்க்கு தீபாவளி நேரம் கோலாகலம் தான். குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு, ஊரு நினைப்பும், உறவினர்களின் பிரிவும் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்.

திருமணம் ஆகி அமெரிக்கா வந்த புதிதில், எனக்கு அமைந்த முதல் நட்பு வட்டம் - ஆந்திராவில் இருந்து வந்த புஷ்பா ; பெங்காலி பெண், மௌஷ்மி என்று சிறியதாக இருந்தது. மூவரும் முதல் தீபாவளி கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்த நேரம். ஊர் நினைவுகள் மனதில் பாரமாக அழுத்த ஒரு உற்சாகம் இல்லாமல் இருந்தோம். புஷ்பா ஒரு நாள், எங்களை அழைத்து, " முதல் தீபாவளிக்கு என்று ஸ்பெஷல் ஆக ஏதாவது செய்வோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதற்கு பதிலாக , நாமே பலகாரங்கள் எல்லாம் சேர்ந்து செய்தால் என்ன? நிச்சயமாக தீபாவளி களைகட்டிவிடும்," என்று பட்டாசாய் ஆங்கிலத்தில் படபடத்தாள்.

அந்த நேரம், எங்கள் மூவரில் புஷ்பாதான் கொஞ்சமாவது சமைக்கத் தெரிந்தவள். நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள். மௌஷ்மியோ எனக்கும் ஒரு படி மேல். living room (வரவேற்பு அறை) க்கும் கிச்சனுக்கும் (அடுக்களைக்கும்) வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிந்தாலே போதும் என்று திருமணம் செய்து கொண்டவள்.

அப்பொழுதெல்லாம் , தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)


மௌஷ்மி வீட்டுக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது வந்தது. புஷ்பாவிடம் கேட்டு தோசை செய்யப் பழகி விட்டதாக சொல்லி, என்னை அழைத்து இருந்தாள். அவளது சமையல் லேப் (lab)  நான் வெள்ளெலி. அடை, ஊத்தப்பம், சப்பாத்தி சேர்ந்த 3-in-1 ஐட்டம் ஒன்று முதலில் வந்தது. அதுதான் தோசையாம். தொட்டுக் கொள்ள பருப்பு ரசம் வந்தது. "சாம்பார் வைக்கவில்லையா?" என்றேன். "அதுதானே இது!" என்று அந்த ரசத்தை கை காட்டினாள். கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

"எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."

இப்படி இரண்டு கில்லாடி அடியாட்களை வைத்து கொண்டு, கிச்சனில்  சமையல் அடாவடிக்கு தயார் ஆகி விட்ட புஷ்பாவை இப்பொழுது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

"This Friday morning, come to my place. I asked my mom how to make " sweet laddus". Lets try it." மீண்டும் புஷ்பாவின் நுனி நாக்கு ஆங்கில அழைப்பு.

மௌஷ்மியும் நானும், "நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்.....நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்....... நாங்களும் சமையல் ரவுடிகள் தான்" என்று அவள் வீட்டுக்கு சென்றோம். புஷ்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்கள் சமையல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். அணுகுண்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு கூட இப்படி நுணுக்கமாக குறிப்பெடுக்கும் இரண்டு assistants கிடைத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடலை மாவை பக்குவமாக கலந்து வைத்தாள். சீனிபாகை தயார் செய்தாள். கண்ணு கரண்டியை எடுத்து பூந்திக்கு தயார் ஆனபோது, மௌஷ்மி ஒரு சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம். "புஷ்பா, எல்லாம் சரி. இந்த கடலை மாவில் எப்பொழுதுதான் lettuce சேர்க்கப் போறே?"

(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )

"lettuce???" புஷ்பா அதிர்ந்தாள்.
"நீதானே ..... ஸ்வீட் lettuce செய்யப்போவதாக சொல்லி போன் பண்ணியே," மௌஷ்மி வெள்ளந்தியாக ஆக பதிலளித்தாள்.
புஷ்பா, ஸ்வீட் laddus என்று ஸ்டைல் ஆக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது, மௌஷ்மிக்கு போனில் ஸ்வீட் lettuce என்று கேட்டு இருக்கிறது. ஆந்திராவில் அப்படி ஒரு தீபாவளி ஸ்வீட் ரொம்ப பாப்புலர் போல என்று நினைத்து வந்து இருக்கிறாள். அவள் விஷயத்தை சொல்லவும், நானும் புஷ்பாவும் புரையேறி கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.

அந்த சந்தோஷ சிரிப்பினாலோ என்னவோ, அன்னைக்கு லட்டுக்களில் இனிப்பு அதிகமாகி இருந்தது.

நான், முதலில் உளுந்து வடை செய்தபோது, உளுந்து போண்டாவாக வந்து கொண்டு இருந்தது. பின், உளுந்து அமீபாவாக shape மாறியது. நண்பர்கள் கையில் இருப்பது உளுந்து வடைதான் என்று நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது.

இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்.

இந்த தீபாவளி நேரத்தில், சமையல் ஆர்வ கோளாறு கொண்ட புது மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் - உள்ளே தள்ளியதை வெளியே துப்பவும் முடியாமல் - திருதிரு விழிகளுடன் வரும் புதிதாய் திருமணம் ஆன நண்பர்களுக்கு மறக்காமல் இனிய "தல(விதி) தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்ல மறக்காதீங்க. காரணம், முதல் தீபாவளி உள்ளவரை, சமையல் அலம்பல்கள் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்......



மற்ற அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: நன்றி கூகிள்வதி . ( இல்லை, ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ள ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)


(பின் குறிப்பு: அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )

Monday, August 29, 2011

பதிவுலகில் காமத்து பால்

ரொம்ப நாள் கழிச்சு "தம்பட்டம்" தாயம்மாவை சந்திக்க வேண்டியது வந்தது.

"என்ன சித்ரா, ஆளையே காணோமே. பதிவுகள் எழுதுறது கூட குறைஞ்சு போச்சே."
"தாயம்மா, வழக்கமான காரணம் தான். பல வேலைகள் வரும் போது, வெட்டிபேச்சுக்கு டைம் இல்லாம போயிடுது. "
"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."


" அதை ஏன் கேட்குற? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யய்யய்யயோ ........ !!!"
" என்ன ஆச்சு?"


"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. மெயில் பதில் சொல்லியே பொழுது போகுது. ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன். அபத்தமான விவாதங்களை அல்ல. "

"உன் சொந்த ப்லாக் உன் கருத்தை - உன் பீலிங்க்ஸ்சு சொல்ல உனக்கு உரிமை இல்லையா?"

" கொஞ்சம் வெட்டி பேச்சுக்கும் நேரம் ஒதுக்கி, பதிவு எழுத உட்கார்ந்தா...... இந்த வார்த்தை/கருத்து - இவங்களை காயப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு எரிச்சல் படுத்தி விடுமோ? - இவங்களுக்கு வருத்தப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு கோபம் உண்டாக்கி விடுமோ? - இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?"

" ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ......சித்ரா, நீ உன் மனசாட்சிக்கும் கூகுள் சொல்ற சட்ட திட்டங்களுக்கு தான் " I agree" என்று டிக் செய்துதானே ப்லாக் ஆரம்பிச்சு வச்சுருக்கே. உலகத்தில உள்ள ஏழு கோடி தமிழ் மக்களும் - அவங்க மனசுல போட்டு வச்சுருக்கிற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுதுறேன் என்றா ஒத்துக்கிட்டு ப்லாக் எழுத வந்தே? அப்புறம் எதுக்கு இந்த வீண் கவலை? "

"ஆஹா.... அப்படி ஒண்ணு இருக்கோ? கரெக்ட். அவங்க அவங்க ப்லாக் அவங்க அவங்க தான் தனிகாட்டு ராஜா/ராணி!"


"சித்ரா, இப்படி சொல்ற நீயே, சிலர் தங்கள் பதிவுகளில் கவர்ச்சி படங்கள் போடுவதை - தான் வைக்கிறதை - எதிர்க்கிறதா ஒரு பேச்சு இருக்குதே. "

" நான் அப்படி யார்க்கிட்டேயும் சொல்லல, தாயம்மா. அந்த டாபிக் அடிப்படையில் பதிவுகள் இருந்தால், நான் வாசிக்காமல் புறக்கணித்து விடுவேன். அதற்கு காரணம் கேட்டாங்க. அப்படி எழுதுறது அவங்க இஷ்டம். அதற்காக எனக்கு இஷ்டமில்லா பதிவுகளை நான் வாசித்து வோட்டு போடணும்னு என்கிற கட்டாயம் இல்லாததால், அந்த பதிவுகளை ஒதுக்கி வச்சுடுவேன் என்று பதில் சொல்லி இருக்கேன். அவ்வளவுதான்."

"சித்ரா, நீ போன பதிவில் ஒரு பதிலில் கூட - " தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள். " - உன்னை சிரிக்க வைக்குதுன்னு சொல்லி இருந்ததற்கு கூட கேள்வி வந்துச்சாமே. "

" ஆமாம், தாயம்மா. இப்போவும் அதையே தான் சொல்றேன். தனக்கு இந்த மாதிரி மேட்டர் தான் - படங்கள் தான் பிடிக்குது - அதை ஆசை தீர தன் பதிவிலும் போட்டு ஜொள்ளிக்கிறேன் ...sorry ..... போட்டு கொள்கிறேன் என்று சொல்லி தங்கள் பதிவுகளில் போட்டுக் கொள்ளட்டுமே. அதை விட்டுப்புட்டு, அப்படி எழுதினால் தான் கூட்டம் சேருது - அப்படித்தான் ஹிட்ஸ் கிடைக்குதுன்னு ஒரு டொச்சு காரணம் சொல்லி - அதையே தமிழ் பதிவுலக வேதவாக்காக புதிய பதிவர்களிடமும் பரப்பி , தான் மட்டும் இல்லை, தமிழ் பதிவுகள் வாசிக்க வருகிறவர்கள் எல்லாருமே "அந்த" மாதிரி முத்திரை குத்துவது போல ஆகிறதே. அந்த மாதிரி இல்லாமல் வரும் என்னை போன்றவர்களின் பதிவுகளையும் வாசிக்க தமிழ் மக்கள் இருக்கிறார்களே? நாம என்ன , கூகுள் சினிமா படமா எடுத்து விடுறோம்? ஒரு குலுக்கல் டான்ஸ் வைக்கலைனா commercial success ஆகாதுன்னு சொல்ல? எல்லாமே ஓசிதானே."


"ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, .......... சிரிச்சு முடியல. இப்போ புரியுது. குமுதம் - குங்குமம் - விகடன் போல பத்திரிகைகளின் பிசினஸ்க்காக கொடுக்கிற காரணம், இன்டர்நெட் பதிவுகள் எழுதுவதற்கு எப்படி ஒத்து வரும்?
அப்படி
கவர்ச்சி படங்கள்தான் பார்க்கணும் என்று இருக்கிற தமிழ் மக்கள் , எதற்கு ஒரு பதிவர் அப்படி ஒரு பதிவு போடுகிற வரைக்கும் காத்து இருக்கணும்? இருபத்துநாலு மணி நேர சர்வீஸ்..... கூகுள் இமேஜஸ் - யுடியூப் என்று இன்டர்நெட் எந்த நேரமும் கவர்ச்சியின் உச்சக்கட்ட படங்களுக்கா பஞ்சம்? கம்ப்யூட்டர் ஆன் செய்து - இன்டர்நெட் கனக்ட் பண்ணி வரவங்க - அப்படி படங்களை பார்க்க ப்லாக் பக்கம் வருகிறதற்கு பதிலாக, நேரிடையாக இவங்க படங்களை சுட்டு போடுற சைட் போய், பார்க்கலாமே. இன்டர்நெட் காரையே திருட வழி இருக்கிறப்போ, கார் டயர் மட்டும் உருட்டிக்கிட்டு போகிற மாதிரி.... ? "


"அதானே தாயம்மா. அப்புறம், ஒவ்வொரு தமிழ் பதிவர்களும் - தங்கள் தனித்துவத்தையும் - தனி திறமைகளையும் அடையாளம் காட்டத்தானே தனக்குன்னு ப்லாக் வச்சுருக்காங்க. . ஆங்கில பதிவுகள் காணப்படுகிற variety , தமிழ் பதிவுகள் குறைந்து போகிறதே, ஏன்? ஒரே மாதிரி மோல்ட்லேயே எழுதணும்னு நினைக்கிறதுதானே."


" அப்புறம், ஒரு பதிவுக்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று ஆங்கில பதிவுகள் வாசிக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன். கூகுள் அந்த அந்த டாபிக் வச்சு பதிவுகள் தேடும் போது, கரெக்ட் ஆக search பண்ணி relevant blog posts லிஸ்ட் பண்ணி காட்டுது. ஆனால், தமிழில் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருப்பது, ஒண்ணுமே புரியல. டைட்டிலேயே ஜொள்ளு விட வாங்க என்று அறிக்கை விட்டு கூப்பிட்டு விட்டு, பதிவில் "ஜெபம் செய்வதன் மகத்துவங்கள்" பத்தி எழுதவா முடியும் ? உனக்கு ஏதாவது புரியுதா, தாயம்மா?"


" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...."


"தாயம்மா, கேலி பண்ணாதே! இவர்களை விட்டால் திருக்குறள்ளேயே , எல்லா தமிழ் மக்களும் வாசிச்சு அதிக ஹிட்ஸ் கிடைக்கத்தான் ஒரு பிரிவுக்கு - "காமத்து பால்" என்று கவர்ச்சியா பேர் வச்சுருக்காங்க என்று சொன்னாலும் சொல்லுவாங்க..... ஹா, ஹா, ஹா, ஹா, ........."


" சில தமிழ் பதிவர்களுக்கு Quantity முக்கியம். எல்லாமே "ரமணா" விஜயகாந்த் மாதிரி statistical information தான். மற்றவர்களுக்கு Quality முக்கியம். இப்படி இரு கோணங்களில் பயணிக்கும் போது, எப்படி பிரபல பதிவர்கள் என்பதற்கும் - பிரபல பதிவுகள் என்பதற்கும் ஒரே மாதிரி இலக்கணம் இருக்க முடியும்?


ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள்.


சென்ற வாரத்தில் , பதிவுலகில் எட்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ILA விவசாயி தனது பதிவில்:

http://vivasaayi.blogspot.com/2011/08/blog-post_25.html

மீள் பதிவாக போட்டு இருக்கும் ஒரு பேட்டியில் இருந்து - தமிழ்மணத்தில் மிக முக்கியமானவரான காசி ஐயா என்பவர் சொன்ன அறிவுரையை - கவனிக்கவும்: அறிவுரை தான் - பதிவுலக சட்டம் அல்ல - இங்கே நானும் மேற்கோள் காட்டி கொள்கிறேன் .
" புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்"

" சித்ரா, ஒவ்வொரு பதிவரும் மனதிற்குள் ஒரு அளவுகோல் (standard) வைத்து இருப்பார்கள் போல. "

தாயம்மா, தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக் அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை.

ஓகே, தாயம்மா..... வழக்கம் போல உன்கிட்ட பேசினாலே எனக்கு பல விஷயங்கள் தெளிவா ஆயிடுது. நான் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு அப்புறமா சந்திக்கிறேன். "




Sunday, August 21, 2011

மூன்று முடிச்சுகள் - தொடர் இம்சை.




http://pinnoottavaathi.blogspot.com/2011/08/3.html


இந்த பதிவின் மூலம், உலக குடிமகன் , ஆஷிக் : வணக்கம்:

நான் பதிவு எழுத வந்த புதிதில், முதல் பின்னூட்டம் இட்ட பதிவர் - இன்று வரை எனக்கு மறக்காமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் கோமா மேடம் அவர்களுக்கும் : வணக்கம்.
http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html


http://vasagarthevai.blogspot.com/2011/08/3.html

பிரபு எம். முக்கும் வணக்கம்.
இவர்கள் மூவரும் என்னை தொடர் பதிவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து இருக்கிறார்கள்.

விரும்பும் மூன்று விஷயங்கள்:

1. தமிழ் பதிவுலகில், தொடர் பதிவு இம்சை இல்லாமல் இருக்க விரும்புகிறேன்.

2. நான் சமைக்கும் மட்டன் பிரியாணி, எங்க ஊரு அண்ணாச்சி ஹோட்டல் பிரியாணி மாதிரி வரும்படி விரும்புகிறேன்.

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(
எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)


விரும்பாத மூன்று விஷயங்கள்:

1. சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்.

2. ஜிவ்வென்று ஏறும் தங்கத்தின் விலை.

3. மயாமி பீச்சுக்கு வரும் "போல்ட்ஸ்".


பயப்படும் மூன்று விஷயங்கள்
:

1. அடுத்த தீவிரவாத ஒழிப்பு சீக்ரட் மிஷனுக்கு , ஒபாமா என்னை அழைத்து விடுவாரோ என்று பயப்படுகிறேன்.

2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன்.

3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.


புரியாத மூன்று விஷயங்கள்
:

1. பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?

2. தமிழ் - ஆங்கிலம் தவிர, வேறு எந்த மொழியில் யார் யார் - என்ன பேசினாலும் .....

3. ராக்கெட் சயன்ஸ்.


மேஜையில்
உள்ள மூன்று பொருட்கள்
:

1. computer

2. keyboard

3. mouse


சிரிக்கவைக்கும்
மூன்று விசயங்கள் (அல்லது மனிதர்கள்)
:

1. தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள்.

2. நான் பேசும் ஹிந்தி

3. இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் பட்டிமன்றங்கள் தான், உண்மையான பட்டிமன்ற இலக்கணம் கொண்டவை என்று தமிழ் மக்களை எளிதாக நம்ப வைத்து விட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் தனித்திறமை.


தற்போது
செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்
:

1. தொடர் பதிவுக்கு அழைத்தவர்களை, மனதார திட்டி ....ஆ.....சாரி, வாழ்த்தி நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

2. keyboard தட்டி , இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

3. மூன்று விஷயங்கள் குறித்த தொடர் பதிவுக்கு, மூன்று கேள்விகள் மட்டுமே ஏன் கொடுக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.


வாழ்
நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்
:

1. தமிழ் பதிவுலகம் விட்டு மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளுடன் விலகி விட வேண்டும்.

2. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.

3. தமிழ்மண மகுடத்தை, இனி தங்கத் தட்டில் வைத்து தான் தர வேண்டும் என்று , அடுத்த முறை பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டும்.


செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள் :

1. ஒரு வழியா இந்த தொடர் பதிவை எழுதி முடித்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

2. மூன்று விஷயங்களுக்கு மேலாக இன்னும் அதிக விஷயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

3. பத்தே நாட்களில், இன்னும் பத்து பவுண்டு எடை கூட செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.


கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள் :


1. தமிழ் தொலைக்காட்சிகளில் , விளம்பரங்களில் வரும் ஆங்கிலத்தமிழ் - மற்றும் ஹிந்தித்தமிழ்.

2. "சித்ரா, உங்க அக்கௌன்ட்ல போட வேண்டிய பில்லியன் டாலர் பணத்தை தவறுதலாக , கனிமொழி மேடம் அக்கௌன்ட்க்கு அனுப்பி விட்டோம்."

3. "உங்களுக்கு சிலை வைக்க போகிறோம்."


கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் :


1. ஜிகிடி, டகால்டி, தில்லாலான்கடி, தக்குடு போன்ற மேலும் பல அரும்பெரும் தமிழ் வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

2. இடத்துக்கு இடம் - ஆளுக்கு ஆள் - தகுந்த மாதிரி அலட்டல் வேலை செய்பவர்களை, நோகாமல் எப்படி நுங்கு எடுப்பது என்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. வேலை ஒழுங்கா நடக்க, பாஷா ரஜினி மாதிரி, "உண்மையை" சொல்ல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.


பிடித்த மூன்று உணவு வகைகள் :

1. நடப்பன ......
2. பறப்பன .....
3. நீந்துவன ......



அடிக்கடி முணு முணுக்கும் மூன்று paadalgal:


எனக்கு பாட்டு பாடியோ, பாடல்களை முணுமுணுத்தோ மற்றவர்களை கொடுமை படுத்த வேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. மன்னிக்கவும்.


பிடித்த மூன்று படங்கள்:

1. ரஜினிகாந்த் படம்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.

3. ஸ்டைல் மன்னன் ரஜினி படம்.


'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்:

1. உயிர்.

2. மூளை.

3. இதயம்.


இதை தொடரா பதிவாக மாற்றும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.