Thursday, October 29, 2009

சல்வார் fashion

பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன?  இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார் செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

வெறும் சல்வார்னு சொன்னா மதிப்பு இல்லையாம். latest ஸ்டைல் டிசைன் வாங்கியிருக்கீங்கன்னு உலகத்துக்கு நீங்க சொல்ற code word message தான் இந்த பெயர்கள்.

வேற ஒண்ணும் இல்லைங்க. சல்வார் சல்வார்தான். அத tightaa - loosaa - குட்டையா - நீளமா - பெருசா -  சிறுசா - நேரா - கோணலா-  sleeves இல்லாம -  ஸ்லீவ்ஸ் வைத்து -  குட்டை ஸ்லீவ்ஸ் - முழங்கை ஸ்லீவ்ஸ் -  முழுக்கை ஸ்லீவ்ஸ் -  வழுக்கை ஸ்லீவ்ஸ் - சுருக்கு வைச்சு - சுருக்குனு இல்லாம -  சாக்கு துணியில - மீன் புடிக்கிற நெட்டுலனு தச்சு போட்டுக்கிட்டு வாயில நுழையாத பேரையோ வட நாட்டுக்காரன் ஏதோ உளறிட்டு போன பேரையோ வச்சீங்கனா அதான் அடுத்த தீபாவளி fashion ஆயிடும். ஹிட் ஆச்சுனா எனக்கும் ஒரு 10% share கொடுக்க மறக்காதீங்க.

அப்போ உன்ட்ட என்ன சல்வார் ஸ்டைல் இருக்குன்னு கேக்குறீங்களா?
 - பில்லொகவெரில்லி -  pillowcoverilli தான்.

நான் ஊரில் ஷாப்பிங் போகும்போதே, என் தோழி கீதா: "சித்ரா, நீ RmKV Pothys போனீனா selections உனக்கு ஏத்த மாதிரி   நிறையா இருக்காது. பேசாம உனக்கு புடிச்ச மாதிரி fabric materials வாங்கி தச்சிரலாம்."
அப்பவே எனக்கு warning சிக்னல் அடிக்கிராள்னு புரிஞ்சிருக்கணும். ஆசை யாரை விட்டது?
உன் sizekku இதெல்லாம் over. கடையில கூட கிடையாதுன்னு சொல்லாமல் சொல்லியும் துணி வாங்க போனேன்.
நிறையா கல்லு பாசி ஊசி குண்டுமணி குந்தன்மணி கவுண்டமணி வைத்தெல்லாம் வாங்கினேன்.

ஒரு வழியா எனக்கு அளவு எடுக்கிற அளவுக்கு measuring tape வைத்துள்ள tailorai கண்டு புடிச்சு தைக்க கொடுக்க போனேன். Tailor ஐயாவுக்கு நான் எதுக்கு வந்திருக்கேன்னு புரியலை. என்னையும் பார்த்தார். என் துணியையும் ..... sorry, fabric materials ஐயும் பார்த்தார். ஏதோ நான் கன்னியாகுமரி கடை தெருவில் இருந்து souvenir shoppil அள்ளிட்டு வந்த பாசி துணி மூட்டை மாதிரி அவருக்கு தோணியிருக்கு.
"நான் curtain தைக்கிறது இல்லை."
"curtain இல்லைங்க. சல்வார்."
"துணி இவ்வளுவு இருக்கு. 2 சல்வார் ஒரே மாதிரியா?"
"இல்லங்க  இது எனக்கு தான். சல்வார் ஒன்னு லேட்டஸ்ட் மாடல் or பெயரில் தச்சு கொடுங்க."
மேலும் கீழும் பார்த்தார். off seasonil வர customerai ஏன் விடுவானேன்?
"சரிங்க. 3 வாரம் கழிச்சு வாங்க."

ஆமா, சல்வார் தைக்க மூணு வாரம் எதற்கு? அவர் சிரித்து முடிக்க இரண்டரை வாரம். சல்வார் தைக்க மூணு நாட்கள். சரிதான். நல்ல  வேளை. தையல் கூலி இரண்டு மடங்காக கேட்கவில்லை. எனக்கு சந்தோஷம்.

மூணு வாரம் கழித்து, தைத்து வந்த சல்வாரை வீட்டில் போட்டு பார்த்தேன். என்னவோ  pattern என்னவோ  design னு போட்டுட்டு பாத்தா தலையணைக்கு உறை தச்சு போட்ட மாதிரி தான் இருக்கு. பம்முனு.....கும்முன்னு......
tailor ஐயா என்ன பண்ணுவார் பாவம்.

Aishwarya Rai size உள்ளவருகளுத்தான் அனார்கலியும் தெனாலியும் என்று latest fashion கவலை. என்னை போல் உள்ளவர்க்கு ஒரே மாடல் - ஒரே ஸ்டைல்: pillowcoverili தான்.  out of fashion தொல்லை இல்லை. உலைக்கிக்கு பட்டு குஞ்சம்............. அட இது கூட நல்லாத்தான்  இருக்கு!

Solomonin comment: "உன்னால் இந்த சல்வாருக்கு அழகா? இல்லை, இந்த சல்வாரால் உனக்கு அழகா?"
இரண்டும் இல்லை, கண்ணா. இந்த சல்வாரால் தலையணைக்கு அழகு..................!!!!!!

Wednesday, October 28, 2009

திருமண photo

திருமண நாளில் தம்பதியை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்து பெரியதாய் enlarge பண்ணி நல்ல frame போட்டு ஹாலில் முக்கிய இடத்தில் மாட்டி வைத்தால் அருமையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு என்பதுதான் கேள்வி.
அநேகமாக பொண்ணு அமைதி புன்னைகையிலும்  மாப்பிள்ளை அதிகார புன்சிரிப்பிலும் இருக்கும் போட்டோ அந்த photo ஒன்றாக தானிருக்கும்.   ஹா, ஹா, ஹா,.....


மனிதன் நாள்தோறும் குணத்தில் மனதில் மாறுகிறானோ என்னவோ ஆனால் உருவத்தில் மாறிக் கொண்டுதான் இருக்கிறான். அதற்கு இந்த photokkal சாட்சி. சிலர் இதற்கு விதி விலக்காக இருந்தாலும் பலருக்கு இதுதான் இயற்கையின் நியதி. சில சமயம் அந்த photovil உள்ளவர்களும் நாம் நேரில் பார்ப்பவர்களும் ஒரே ஆட்கள்தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


நான்  சிவாஜியும் K.R.விஜயாவும் இணைந்து நடித்த சில  படங்கள் பார்த்து இருக்கிறேன். கே டி.வி. classic matinee எதற்கு இருக்கிறது?  அவர்கள் இருவரும் நடித்து வந்த படங்களில் என் all-time favorite movie, "திரிசூலம்" தான். அட ...அட.... என்ன ஒரு entertainment ..... movieyil இருவரும் முதலில் இளஞ்ஜோடி.  பின் 25 வருடங்கள் கழித்து பார்த்தால் அணிலை தடவி நன்றி தெரிவித்து விட்டு ராமர் K.R.விஜயாவின் தலையையும் தடவி நன்றி சொல்லியிருப்பார் போல. அணிலுக்கு முதுகில் விழுந்த கோடு மாதிரி இப்ப இவர் தலையில் வெள்ளை கோடு இருக்கும். அம்மாவுக்கு வயசு ஆச்சாம்.  ஐயாவுக்கு தாடி வந்து (disguiseil கதை படி இருக்கிறார்) அதே போல் சில வெள்ளை கோடுகள், யாரோ வெத்திலைக்கு சுண்ணாம்பு தடவிட்டு இவர் தலையில் இங்கே அங்கேன்னு விரலை தடவி துடைச்ச மாதிரி இருக்கும். இது ஐயாவுக்கு வயசு ஆச்சாம். மத்தப்படி ஒரு changeum குறுப்பிடும்படி இருக்காது. சிவாஜி character, Himalaya Hair loss creamai ஒரு வயதில் இருந்தே use பண்ணியிருக்கும் போல. ஒரு முடிகூட கொட்டி இருக்காது. விஜயா character, சுமதி, முதல் சீன் இருந்தே முதிர் கன்னியாக இருப்பாதல் இப்ப ஒண்ணும் மாறலை.


நான் என் கணவரை முதலில் பார்த்ததும் அவர் தலை முடியும் கண்களும் மூக்கும் என்னை மயக்கி கனவுலகில் டூயட் பாட வைத்தன. "காதலில் விழுந்தேன்" படத்தில் வரும் ஒரு பாட்டை போல, "உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே....." ஆனால் திருமண வாழ்க்கை என்னை இப்போ practical personaa மாத்திருக்கு. அப்படி பாடிக்கிட்டு இருந்தா இந்நேரம் நான் ரொம்ப தாங்க முடியாம ICU வில் அட்மிட் ஆகி அங்கிருந்துதான் "blog"க வேண்டும் - புலம்ப வேண்டும். இப்போ அவர் தலைமுடி புல்வெளி தரையில் உதய சூரியன் ஐய்க்கியமானது போல இருக்கும்போதும் என்னால் காதலிக்க முடிகிறது.


பெரும்பாலான ஆண்கள், "இரண்டு மனம் வேண்டும். இறைவனை கேட்பேன். கட்டிக்கிட்ட உருவத்தை மறக்க ஒன்று; இப்ப இருக்க உருவத்தை சகிக்க ஒன்று....." என்று மனதிக்குள் மனைவி குறித்து  பாடிக்கொண்டு இருக்கலாம். என் கணவரும்   "நீதானா அந்த குயில்???" என்று கேட்டு பாடும் அளவுக்கு நான் உருவத்தில் மாறி விட்டேன். முதலில், "உன் இடுப்பு மடிப்பில் என்னை மடிப்பாயா?" அப்புறம், "அப்படி மடிச்சிராத. மூச்சு முட்டி செத்துருவேன்."


அதுக்காக உனக்கும் கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆயிட்டா என்று கேக்காதிங்க. அதுக்கு முன்னாலேயே, ரெண்டு பிள்ளைகள் பெத்ததற்கே இந்த நிலைமை. அப்போ, இன்னும் எப்படியோ?


அந்த திருமண photo இப்ப நம்மை, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று புலம்ப வைக்க நடு வீட்டில் இல்லை. ஆனால் திருமண வாழ்வின் உன்னதத்தை சொல்ல இருக்கிறது. இரண்டு  strangers ஒன்று சேர அந்த உருவம்,  பருவம் தேவை பட்டது. ஆனால், இப்ப looks போன பிறகும் முன்பை விட அதிகம் விட்டு கொடுத்து இன்னும் நேசித்து சகித்து  சேர்ந்து வாழும்போது புது அர்த்தம் தருவதை அந்த photo நினைவுபடுத்துகிறது. "உன் அழகை மட்டும் இல்லை, அதிலும் ஆழமாய் உன்னை உனக்காக நேசிக்கிறேன்" என்கிறது. அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்.  என் கணவர் வேறு விளக்கம் தரலாம்.


 Going back to the movie, "திரிசூலம்": "சுமதி, உன்னால் இந்த குங்குமத்திற்கு அழகா? இந்த குங்குமத்தால் உனக்கு அழகா?" என்று ஒரு classic வசனம் வரும். அதை வைத்து, " உன்னால் இந்த சல்வாருக்கு அழகா இந்த சல்வாரால் உனக்கு அழகா?" என்று இப்போது கலாய்க்கும் அளவுக்கு solomon வந்து விட்டார். 

Tuesday, October 27, 2009

திருநெல்வேலி அல்வா....halwa

கோயம்புத்தூர் குசும்பு....... மதுரை லந்து.......சென்னை லொள்ளு.......திருநெல்வேலி நக்கல்......

"என்னலே, மண்டை இடிக்கி. தைலம் தாவே."
"ஏ புள்ள, பசிக்கி. எப்ப சோத்தக் கண்ணுல காட்ட போறே?"
"மாப்பிள்ளை, என்ன இங்குட்டும் அங்குட்டும் லாந்திக்கிட்டு இருக்க. ஒரு இடத்தில இருந்தா என்ன?"
"தாயீ, வராட ஆழி மாதிரி. திம்சுகட்டை சும்மா திங்கு திங்கு னு ஆடும்."
"நான் வரது தெரியாம பஸ்சு வருதானு ஆன்னு பாத்துட்டு நிக்கா."

இந்த வட்டார பேச்சு நெல்லை கிராமங்களில் மட்டும் இல்லை, டவுன் பக்கத்திலும் சாதாரணமாக கேட்கலாம்.

பின்வருபவை எல்லாம் நான் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டிலும் கடை தெருவிலும் நண்பர்கள் வீட்டிலும் பேருந்து நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் கேட்டு என் மனதில் இன்னும் நின்று அப்போ அப்போ வந்து கிச்சு கிச்சு மூட்டி என்னை சிரிக்க வைக்கும் நக்கல் பேச்சுக்கள்:

"ஏண்டா மாப்புள்ளை, மப்பும் மந்தாருமாய் ஒரு பொண்ணு போக கூடாதே. பின்னாலேயே போறீயே."
"டேய், அது என் மாமா பெண்ணுதான்லே. சும்மா கிடையும்."
"தாமிரபரணி ஆத்துல தண்ணி கரை நிறையா ஓடினாலும், நாய் நக்கிதான் குடிக்குமாம். அப்ப கைய புடிச்சு கூட்டிட்டு போறதை விட்டுட்டு ....."

"செவ்வாய் தோஷம் உள்ள என் பொண்ணுக்கு ஒரு வழியா அமஞ்சி வந்திட்டு. என்ன ஒண்ணு. மாப்பிள்ளை பையனுக்கு வயசு 39 ஆம்."
"அப்ப மாப்பிள்ளை பையன்னு சொல்லாதே. பையர்னு சொல்லு."

"எப்ப பாத்தாலும் தேடி வந்து அஞ்ச கொடு பத்தக் குடுன்னு படுத்துரீய."
"மொத்தமா ஏதாவது குடு. அப்ப நீ என்னை தேடி வந்து படுத்தாம இருக்கியான்னு பாக்கிறேன்."

"கல்லறைக்கு போறதுக்கு ஊர்வலம் ஆரம்பிச்சாச்சு."
"ஆமா, வண்டி ஏதாவது ஏற்பாடா? இல்ல நடந்துதான் எல்லோரும் வரணுமா?"
"போய் சேந்த சித்திக்கு மட்டும்தான் வண்டி. மத்தவங்களுக்கு நடராஜா service தான்."

"துவையல் ஏன் ரொம்ப குறைவா  இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining tableukku வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."


"சொர்ணா மாமியாரையும் நாத்தனாரையும் ஏத்திக்கிட்டு ஆட்டோ எங்கே போகுது?"
"ஆட்டோ இப்ப எங்கே போகுதுன்னு தெரியாது. ஆனா இவங்க ஏறி இறங்கினா  நிச்சயமா பட்டறைக்கு (workshop) போகும்."


"ஏலே, சட்டப் பையிலே காசு கொஞ்சம் வச்சிக்கடா. உன் அத்தை பொண்ணு மூணு பேரும் கல்யாணத்தன்னைக்கு முதலிரவுக்கு போக விடாம மறிப்பாளுக. காசு கொடுத்தாதான் விடுவாளுக."
"சும்மா இரும்மா. நான் வேண்டான்னு சொன்னேனா? மூணையும் சேத்து கூட்டிட்டே  உள்ளே போயிறேன்."

"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கரியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் வாலும் முளைக்கவா போகுது?"