Sunday, December 19, 2010

விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?

 கிறிஸ்துமஸ் சீசன் ........  எங்கே பார்த்தாலும் அலங்காரங்களும் .....  அழகு விளக்குகளும்....பரிசு மழையும் விருந்துகளும்....... வேட்டும் வெட்டும் தான்....

எல்லாம் ஜாலியாகத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம்,  சர்ச்ல நடந்த ஒரு விருந்துக்கு, ஒரு அமெரிக்க தோழி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.  மேலும், அந்த விருந்து - ஒரு fund raiser என்பதால், நன்கொடைக்கு குறைந்தது இருபது டாலர்கள் ஆவது கொடுக்க ரெடி ஆக வரச் சொன்னாள். ....... சூப்பர் விருந்துதான்........ கேக்ஸ் .... ஐஸ் கிரீம்னு கொடிகட்டி பறக்கும்னு ஓகேனுட்டேன்......  ஏதோ கல்யாணத்துல பேருக்கு மொய் எழுதிட்டு, மொக்கிட்டு வர மாதிரி ...... ஹி, ஹி, ஹி , ......

 வாசலில் வைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது.  அந்த நம்பர் குறித்து வைத்து இருக்கும் டேபிள் - chair - இல் அமர்ந்து கொள்ள சொன்னார்கள்.  விருந்துக்கு டோக்கன்???  ம்ம்ம்ம்.....

உள்ளே நுழைந்து பார்த்தால்,  15  பேருக்கு மட்டும் ஒரு பெரிய வட்ட மேஜை.... அழகான விரிப்புகள்,  கோல்ட் ரிம் போட்ட தட்டுக்கள்,  விலை உயர்ந்த நாப்கின்ஸ்,  கோல்ட் plated fork , ஸ்பூன் என்று  ரிச் லுக்கில் அமர்க்களப் பட்டது.

அடுத்து  சின்ன மேஜைகள்.  அதில், சாதாரண தட்டுக்கள்,  காகித நாப்கின்ஸ்,  பிளாஸ்டிக் போர்க், ஸ்பூன் என்று ரொம்ப சிம்பிள் ஆக இருந்தது.  35 பேர்கள், அங்கே உட்காரும் வண்ணம்  மிடில் கிளாஸ் லுக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அடுத்து  தரையில்,   பத்து பத்து பேராக -  ஐந்து குழுக்களாக -  அமர்ந்து சாப்பிடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தரை விரிப்பு கூட கிடையாது. மண் கிண்ணங்கள் வைக்கப் பட்டு இருந்தது.  தண்ணீருக்கு சின்ன குவளைகள். அவ்வளவுதான்.

எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் குழப்பமும்...... ஏன் இந்த பாராபட்சம்?  அதிகமாக நன்கொடை வழங்குவோருக்கு  என்று பிரித்து வைத்து இருப்பார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன் நம்பர் படிதான் விருந்துக்கு அமர சொன்னார்கள்.  அமைதியாக அமர்ந்தோம். எனக்கும் தோழிக்கும்   சாதாரண நடுத்தர மக்களின்  இருக்கைகள் கிடைத்து இருந்தன.  பெரிய மேஜையை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாலும்,  மண் கிண்ணத்தை விட இதுவே தேவலாம் என்று தோன்றியது.  தப்பு ....தப்பு.... தப்பு.... அப்படி நினைக்கிறது தப்பு.... என்று மைன்ட் வாய்ஸ் சொன்னாலும்,  ம்ஹூம்......

உணவு பரிமாறப்பட்டது..... அலங்கார மேஜைக்கு - கோழி - விலை உயர்ந்த Filet Mignon என்று எல்லாமே மணம் கமழ கமழ கொண்டு வைத்தார்கள்.  எல்லாமே உயர்ந்த ரக பானங்கள் - உணவு பதார்த்தங்கள்.


எங்கள் மேஜைக்கு,  ஆளுக்கு இரண்டு பிரட் டோஸ்ட் - கொஞ்சம் வெண்ணையுடன், மற்றும்  சிறிது வெள்ளை சாதம் அதற்கு ஏற்றார் போல ராஜ்மா மாதிரி வழவழ கொழகொழனு  பீன்ஸ் வகை ஒன்று இருந்தது.  (எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிட்னி பீன்ஸ்.......ஐயே..... போன பதிவில், நான் சொல்லி இருந்ததை கேட்டு விட்டு, யாரோ என் சாப்பாட்டு மேல கண்ணு, காது,  மூக்கு, கை, கால் எல்லாம் வச்சுட்டாங்கபா!)  சுத்தமான தண்ணீரும் தரப்பட்டது.

கீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க.......  அந்த கிண்ணத்தில், வெறும்   வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது.  அதுவும் ஏதோ ஒரு வயசு குழந்தைக்கு இருக்கும் அளவுதான்.   தண்ணீரும் கொஞ்சமே!


எல்லோருமே சாப்பிட சங்கோஜப்பட்டு கொண்டு இருந்தார்கள்...... குறிப்பாக,  அலங்கார மேஜைகாரர்கள்.......  அவர்களால், எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி சாப்பிடவும் முடியவில்லை - வேஸ்ட் பண்ணவும் தோன்றவில்லை. நெளிந்தார்கள்.   அனைவரும் அமைதியுடன் கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முனைந்தோம்.  சாப்பிட முடிந்ததற்கும் அதிகமாய் உணவு வகை - ஒரு பக்கம் ;   ஏதோ ஒன்றை வயிறு நிறைய சாப்பிடும் படி  ஒரு பக்கம் ;  கால் வாயிற்றுக் கூட சாப்பிட வழியில்லாமல்,  மற்றவர்கள் ஒரு பக்கம் ............

விருந்துக்கு ஏற்பாடு செய்த குழு,  முன்னால் வந்தது.  அவர்கள் தெரிவித்த அறிக்கையில்,
" இன்றைய விருந்து உங்களுக்கு வித்தியாசமாக இருந்து இருக்கும். இதற்கு பெயர் - Hunger Banquet.
இந்த பாகுபாடு கண்டு, உங்களுக்குள் பல எண்ணங்கள் தோன்றி இருக்கலாம்.  நாங்கள் நூறு விருந்தினர்களை அழைத்தோம்.

அலங்கார மேஜையில் 15 பேருக்கு - அடுத்த மேசைகளில் 35 பேருக்கு - கீழே 50 பேருக்கு என்று இடம் ஒதுக்கினோம்.
உலகில்,   இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் -  பிடித்ததோ இல்லையோ,  ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள்  - சரியான  உணவு  இல்லாமல்  - கொடிய  பசியில்  வாடி  கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த ஏற்ற தாழ்வு - முரண்பாடுகளை உங்களுக்கு விளக்குவதே எங்கள் நோக்கம்.

பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்.
அறுவடை கால ஆசிர்வாதங்களை  பிறருடன்  பகிர்ந்து கொள்ள, 
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் விருந்து உண்ணலாம். 
கிடைப்பதை சந்தோஷமாக - இறைவனுக்கு நன்றி சொல்லி,   உண்ணுங்கள் . 
இது கூட கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறவர்களை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பசி மட்டும் நீங்க போதுமானது இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருக்காதீர்கள். 
மற்றவர் பசி நீக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவ மறக்காதீர்கள்.
எக்காலத்திலும் உணவையோ உணவு பொருட்களையோ விரயம் ஆக்காதீர்கள்.

இன்று நாங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பசியில் மரித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு உணவு வழங்க நன்கொடை வசூலித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் இயன்றதை தாருங்கள், " என்று பேசி முடித்தனர்.

எல்லோர் விழிகளிலும் கண்ணீர்.   தங்கள் உணவை , மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணத்தான் தோன்றியதே தவிர, கிடைத்த வரை லாபம் என்ற மனப்பாங்கு யாரிடமும் இருக்கவில்லை.   எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன்.  அவை ஏற்படுத்தாத பாதிப்பை,  அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.
இந்த நல்ல மெசேஜ் தான்,  எனது புத்தாண்டு மெசேஜ் ஆகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொண்டாட்ட நேரங்களிலும்,   அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்  புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
Merry Christmas and Happy New Year!

ஒரு அறிக்கை:

 அன்புள்ள தந்தை குலமே - தாய் குலமே ............ உங்கள் பொன்னான வாக்குகளை - இலவச  பிளாஸ்டிக் குடம் - இலவச டிவி - இலவச வாஷிங் மஷீன் - பிரியாணி பொட்டலம் - எதுவும் கொடுக்காமல், தமிழ்மண தேர்தலில்  கூசாமல்  மூன்று "தொகுதிகளில்" நிற்கும் எனக்கு -  வோட்டு போட சொல்லி கேட்கிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது..... இருந்தும்,  அன்பால் சேர்ந்த கூட்டம், கொஞ்சம் அசந்து இருக்கிற நேரத்தில் கேட்டால், வோட்டு போட்டுருவாங்களேனு கேட்டுப்புட்டேன்.

பெண்பதிவர்கள் தொகுதி (பதின்ம வயதினிலே)  - நகைச்சுவை தொகுதி  (சமையல் அட்டூழியம்) -  பயண கட்டுரை தொகுதி  (அமெரிக்காவில் ரங்குஸ்கி)

வெற்றி பெற்றால் - எனக்கு கொண்டாட்டம் - தோல்வி என்றால் அந்த சோகத்தை, எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். 


முக்கிய அறிவிப்பு:

 கிறிஸ்துமஸ் லீவு விட்டாச்சு..... நம்ம ப்லாக்குக்கும் சேர்த்துதான்..... அதனால்,  ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.  உங்கள் பதிவுகளிலும் - பின்னூட்டங்களில்  - அதுவரை சந்திக்க இயலாது என்று  பீலிங்க்ஸ் உடன் அறிவித்து  கொள்கிறேன்.  மக்காஸ், அதற்குள்  என்னை மறந்து விடாதீங்க....  மீண்டும் ஜனவரி ஐந்தாம் தேதி அன்று - புது பொலிவுடன் - புத்தாண்டில் சிறப்புடன் சந்திப்போம்.

Tuesday, December 14, 2010

கேள்வி நேரம் (தொடர் பதிவு)

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தப்போ,  நம்ம "Tasty Appetite -  Jay" 
- ஒரு  தொடர்  பதிவு  கேள்வி நேரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்காங்க.  இந்த கேள்விகள் எல்லாம், சமையல் ராணிகளின் கோட்டைக்குள்ளே  சுத்திக்கிட்டு இருந்து இருக்குப்பா.  Jay - ஒரு வம்பு பண்ணலாம்னு நினைச்சு,   இதுல என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க....  நல்லா இருங்க, மக்கா!

வெட்டி பேச்சில் வந்த  "சமையல் அட்டூழியம்"  என்ற பதிவை   பார்த்த பிறகு, மக்கள் பெருவெள்ளத்தின் கோரிக்கை:  "தயவு செய்து சமையல் குறிப்பு எதுவும் நீங்க போட்டுராதீங்க,"  என்று.  இன்னைக்கு வரைக்கும், சத்தியத்தை காப்பாத்திட்டு வாரேன்.  ரைட்டு!

வெயிட் அ மினுடே போர் ௫ மினுட்ஸ்.  ஏதாவது புரிஞ்சுதா?  Jay Madam அனுப்பிய  கேள்வி எல்லாம் ஆங்கிலத்தில் இருந்துச்சா -   அதை அப்படியே டைப் பண்ணா,  சரி வரல. .  இருங்க ..... முழி  பேத்துருவோம் .... சாரி ... மொழி பெயர்த்து விடுவோம்.

1.  உங்களுக்குப் பிடித்த  உணவு வகை (cuisine -  உதாரணம்: சைனீஸ்?  மெக்சிகன்? இடாலியன்? தாய்? இந்தியன்?) 
அல்லது உணவு ஐட்டம்  எது?
மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள்  அல்லது   நாலு கால் + சின்ன வால்   (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்)  அல்லது  காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ  "மீன்"!)  வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும்   ஓகே தான்.   இல்லைங்க,  அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா   என்று எல்லாம் நான்  பார்க்கிறது இல்லை. 


2.  If you could have any four people, from any where in place, over for dinner, who would they be?
 சிறப்பு விருந்தில்,  கூட இருக்க விரும்பும் நான்கு பேர் .......
1.  என் தட்டில் இருப்பதை "தட்டி" கொண்டு போகாதவர்.
2.   நன் சாப்பிடும் போது, என்னை அழ - கோபப்பட - எரிச்சல் பட வைக்காதவர்.  அதாவது, என் தட்டில் துப்பி வைக்காதவர்.
3 .  உப்புக்கு பதில் சீனியையோ - சீனிக்குப் பதில் உப்பையோ கலந்து வைக்காதவர்.
4 . மிக முக்கியமாக,   நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து  பில் பே (pay)  பண்ணக் கூடியவர்.
இந்த நான்கையும் செய்யக் கூடிய நான்கு பேர்தான்.......

3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்? 
(What made you to  decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட,  ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......


4 .  புதிய வாசகர்களுக்கு, உங்கள் ப்லாக்கை எப்படி விவரித்து சொல்வீர்கள்?
(How would you describe your blog  site to new readers?)
நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.

5.  நீங்கள் இந்த உலகத்தில் இருந்து அழித்து விட நினைக்கும் ஒரு உணவு பொருள் எது?
(If you could just banish any one food, from the earth, what would it be? )
Tofu போட்டு சமைத்த பாம்பு கறி.   இரண்டுமே உவ்வே..........

6.   உங்களுக்கென  இருக்க விரும்பும் ஒரு சூப்பர் பவர் எது?
( What’s the one super power that you wish you had?)
 சூப்பர்  Sonic வேகத்தில், எல்லா இடத்துக்கும்  பறந்து போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும் இல்லை.... ம்ம்ம்ம்........இப்போதைக்கு,  சூப்பர் பவர் மட்டும் இல்லை,  வெறும் பவர் டிடர்ஜென்ட் சோப்பு  கூட என் கையில் இல்லையே...... அவ்வ்வ்வ்.......


Jay , என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல.  ஆனால், நீங்களா யாராவது வந்து மாட்டிக்கிட்டீங்கனா கொண்டாட்டம் தான்..... ஸ்டார்ட்டுங்க! 

Sunday, December 12, 2010

அப்பாவுடன் அரட்டை நேரம்

எங்களின் முதல் அமெரிக்க பயணத்துக்கு முன், என் அப்பாவிடம் ஒரு நாள் வழக்கம் போல  பேசி கொண்டு இருந்தது,  இன்று நினைவுக்கு வந்தது.

"அப்பா,  காந்தி தாத்தாகிட்ட அவங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி, வெளிநாடு போகப் போற என்கிட்டே சத்தியம் எதுவும் வாங்கலியா அப்பா?"
"ஏலே,  நீ இந்திய மண்ணை விட்டு தானே போற?  இந்திய அடையாளத்தை விட்டு  விட்டா போற?  சத்தியம்லாம் எதுக்குல?"
"ஆனாலும்,  என் மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை, அப்பா."
"உங்க  அம்மாவும் நானும் வளர்த்ததுல, எங்களையே குத்தம் கண்டுபிடிக்க சொல்றீயால?"

"இல்லைப்பா. அறிவுரைனு......"
"ஆமால. நான் பத்து வாட்டி அமெரிக்கா போயிட்டு வந்துட்டேன் -  உனக்கு அறிவுரை சொல்றதுக்கு.  இங்கே இருக்கிறதை வச்சுக்கிட்டு, அங்கே இருக்கிறதுக்கு  என்னத்தல சொல்ல?  நீ அங்கே எப்படி எப்படி நடந்துக்கணும்னு கடவுள் புத்தி தருவாரு."

 "சித்ராமா, வருஷத்துக்கு ஒரு முறையாவது வர முடியுமாலே?"
"தெரியலப்பா.  போய் பார்த்த பின் தான் சொல்ல முடியும்.   அமெரிக்காவுக்கு போறதற்கே  வருஷத்துக்கு ஒரு வாட்டி வான்னு சொல்றீங்களே. எத்தனை தமிழ் படம் பார்க்கிறீங்க.  சின்ன வயசுல ஒரு பொண்ணு,  "கை வீசம்மா கை வீசு" ஸ்டைல்ல அப்படியே டாட்டா காட்டிட்டு ட்ரைன்ல கிளம்பி, இந்தா இருக்கிற  சென்னைக்கு படிக்க போனா  அப்புறம், காலேஜ் முடிச்சு வர வரைக்கும் ஊர் பக்கமே  எட்டி பார்க்காம - வராம இருப்பாளே. அவள் குடும்பத்து மக்களுக்கே அவ எப்படி இருப்பான்னு தெரியாம வளர்ந்து, ஹீரோயின் ஆக வந்து நிப்பாளே!"

(இந்த படம் பாருங்க... இதில் ட்ரைன் எங்கே இருக்குதுனே தெரியல. அவ எப்படி இடம் பிடிச்சு, அதில் ஏறி வர முடியும்? அதான், வரலியோ?

"ஆமாலே,  அவ படிக்கிற ஸ்கூல்ல லீவு கூட கிடையாது. போனவ என்ன ஆனா என்று யாரும் கவலை பட்டதாவே தெரியாதுல."
"அதானே,  அதையும் படம்னு - கதைனு - பார்த்தோம்ல - அதை சொல்லணும்."

"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா..... சென்னைக்கு போயிட்டே அரையும் குறையுமாத்தான் டிரஸ் பண்ணிட்டு வருவாளுக.  அமெரிக்கா போய்ட்டுனா?    கிராமத்துல நாட்டமை குடும்பம் அப்படி ஒரு கௌரவம் - கலாச்சாரம் பார்க்கும். பொண்ணு மட்டும் - கயித்த அத்துதான் கழுதை - எடுத்துதான் ஓட்டம்னு  -  பாஞ்சிக்கிட்டு இருக்கும்."
 "ஹா, ஹா, ஹா, ஹா, ஹா.....  மக்களை முட்டாளா ஆக்குறதுக்குன்னே கதை எழுதுவாங்க போல, அப்பா."


"என் நண்பர் ஒருத்தர் சொன்னது ஞாபகம் வருதுல.  அமெரிக்காவுல  ஒரு சமயம் ஒரு தமிழ் டாக்டரை ,  பெரிய விருந்துக்கு அழைச்சாங்களாம்.  அவர் மனைவிக்கு கூட போக முடியல.  கணவர் வந்ததும்,  விருந்து பத்தி கேட்டுருக்காப்புல.  எல்லாத்தையும் சொல்லி இருக்காரு.  அப்புறம்,  அவரு மனைவி ஆசையாய்,  வந்த பொண்ணுங்க போட்டு இருந்த  டிரஸ்சு - நகைங்க -  பத்தி கேட்டாளாம்.
அதுக்கு அவரு,  " நான் டின்னெர்க்கு போனப்போவே எல்லோரும் டேபிள் சுத்தி உட்கார்ந்துட்டாங்க.  டேபிள்க்கு மேல,  தெரிஞ்ச அவங்க  தோள் பகுதி எல்லாம்  ஏதும் போட்டு இருந்தாப்புல தெரியல. டேபிள்க்கு கீழே குனிஞ்சு என்ன போட்டு இருந்தாங்க என்று பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அதனால், எனக்கு எதுவும் தெரியாது.  ஒண்ணும் கேட்காத," என்றாராம்."

"ஹா, ஹா, ஹா,......   சரியா போச்சு, அப்பா! குளிச்சிட்டு அப்படியே துண்டை கட்டிக்கிட்டு வந்தாலும் யாருக்கும் தெரியாது போல."
" அவங்க ஊரில தானே அப்படி  இருக்காங்க. இருந்துக்கிட்டு போகட்டும். "

"ஆமாம்,  அப்பா.  இன்னும் கொஞ்ச வருஷத்துல  தமிழ்  பொண்ணுங்க கூட அப்படியெல்லாம் டிரஸ் பண்ணிக்கிட்டு  இங்கேயே சுத்தப் போகுதுங்க."
"இப்போவே அவன் அவன் ஒரு தினுசா ஆகாயத்துல பிறந்து,  லண்டன்ல  வளர்ந்து,  உலகத்தை சுத்திட்டு,  தப்பான ஸ்டாப்ல தமிழ்நாட்டுல  இறங்கிட்ட மாதிரிதாம்ல  நடந்துக்கிறாங்க.  அதுக்காக அவங்களை எல்லாம் நாடா கடத்திட்டோம்? சும்மா இருலே!"

(கீழே படத்தில், அப்பாவின் நினைவஞ்சலி நாளில் (நவம்பர் 28)   நடந்த "ஆதலால் காதல் செய்வீர்!"  புத்தக வெளியீட்டு விழாவில், அப்பா எழுதிய பல புத்தகங்களை கொண்ட  மேடை அலங்காரம். படத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும். அவர்,  பட்டிமன்றங்களுக்கு - வழக்காடு மன்றங்களுக்கு -  நடுவராக இருந்தவரும்  கூட.)
 

இப்படியே எங்கள் பேச்சு கலகலப்பாக நீண்டு கொண்டே போனது.   எங்க அப்பா,  எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும்,  அவரை நாங்கள்  நினைக்காத நாளு இல்லை.  அவரிடம் பேசும் கருத்துக்களை மிஸ்  பண்ணாத நாளும் இல்லை.  ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர்.  அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க,  எடுத்து விடுறேன்.  எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது.   அது ஆசிர்வாதமே!  இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.