Sunday, November 21, 2010

முன்ன பின்ன செத்து இருந்தால் தானே?

எங்கள் சின்ன வயதில், பாக்கியம் என்ற பாட்டி, எங்கள் ஊரில் இருந்ததை மறக்க முடியாது.    வெள்ளந்தி மனம் கொண்டவர்.  சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல், மற்றவர்களிடம் கேட்பார்.  "என்ன பாட்டி, இது கூட தெரியாதா?" என்று யாராவது கேட்டால் போதும் - "தம்பி, முன்ன பின்ன செத்து இருந்தால் தானே,  சுடுகாடு தெரியும்? எனக்கு எப்படி தெரியும்?" என்று சொல்லி பொக்கை வாய் காட்டி சிரிப்பார்.

அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ? அந்த பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமோ? எனக்கு  தெரியாது. ஆனால்,  கடந்த நவம்பர் 12 ந் தேதி மாலை ஐந்து மணியில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள்,  எனக்கு பல அர்த்தங்களை,   கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றன.

அர்ச்சனாவும் அர்ப்பணாவும்  பல கனவுகளுடன்,  மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர்கள்.  இந்த டிசம்பர் மாதத்துடன்,  தங்களது இரண்டரை வருட படிப்பை முடித்து விட்டு,   ஜனவரியில் இருந்து வேலை தேடுவதில் மும்முரமாக இருக்க திட்டம்.

இந்த சூழ்நிலையில்,  எனது நெருங்கிய தோழிகளுள் ஒருத்தியான அர்ப்பணா,  நவம்பர் 12,   ஒரு பெரிய விபத்தில் சிக்கி சில மணி நேரங்களில் எங்களை விட்டு சென்றாள்.  அர்ச்சனா, பின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு - Spinal Cord Injury - ஆகி  paralyzed ஆக மருத்துவமனையில் critical care இல் இருக்கிறாள்.  அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இரட்டை பிறவிகள் - எனக்கு இரட்டை தோழிகள் - அர்ச்சனாவும் அர்ப்பணாவும் 

 விபத்து நடப்பது சகஜம்தான்.   அதில் மரணம் சம்பவிப்பது,  நியூஸ் ஐட்டம் என்று ஆகி விடுகிறது - அது நம் வீட்டிலேயே நடக்கும் வரை.  "முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்?"

எங்கள் ஊரில் இந்தியர்கள், மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்போம். அதிலும் 35 - 40 பேர்கள், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக இங்கு வந்து செல்பவர்கள்.  இந்த சம்பவம் எங்களை, உலுக்கி எடுத்து இருக்கிறது.

நடந்தது நடந்து விட்டது. அழுதோமா - முடித்தோமா - போனாமா என்று இருக்கும் சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது,  தொலைத்து விடுகிறோமோ? 

சிலர் அர்ச்சனாவை கவனித்து கொள்ள - வேறு சிலர்,  அர்ப்பணாவை இந்தியாவுக்கு அனுப்பவதில் உள்ள பேப்பர் வொர்க் செய்ய வேண்டியது இருந்தது.  Indian Embassy ,  இந்த மாதிரி இந்தியர்கள் பரிதவிக்கும் நேரங்களில்,  இன்னும் கொஞ்சம் ஆதரவாக பேசி -  விஷயங்களை நல்லபடியாக விளக்கி -  செய்ய வேண்டிய காரியங்களை, அவர்களது வேலையாக/கடமையாக  மட்டும் நினைக்காமல் (just an official work) ,  கலங்கி போய் இருக்கும் உள்ளங்களுக்கு கரிசனையாக செய்யும் உதவியாக - கொஞ்சம் passion உடன் செய்து இருக்கலாமோ?  Indian Embassy  நிலைமை, எண்ணம் தெரியாமல் எதுவும் நான் சொல்ல கூடாதோ?  

நான் கடந்த வாரத்தில், கொஞ்சம் சிரிக்க மறந்துதான் போனேன்.  அது மட்டும் அல்ல, என் உணர்ச்சிகளையும் ஒதுக்கி வைத்தேன். அர்ப்பணாவுக்காக  அழவா?  அர்ச்சனாவுக்காக கவலைப் படவா?  அழுது கொண்டு இருக்கும், மற்ற இந்திய மாணவர்களை ஆறுதல் படுத்தவா?  அர்ப்பணாவை  "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து  கவனிக்கவா?  உடனே இங்கே கிளம்பி வர துடித்தும், வர முடியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோரின் மன நிலையை நினைத்து கலங்கி நிற்கவா? 

அர்ச்சனாவுக்கு இது வரையில் அர்ப்பணாவின்   மறைவு பற்றி தெரியாது.  பெற்றோர்கள் வந்த பின்,  அவர்களே  நேரம் பார்த்து சொல்லி கொள்ளட்டும் என்று காத்து இருக்கிறோம்.   ஆனால்,  இரட்டை பிறவிகளுக்கே உள்ள அமானுஷ்ய உணர்வு எதையோ அவளுக்கு எச்சரிக்கிறது  என்று நினைக்கிறோம்.  அர்ப்பணா பக்கத்து அறையில்,  இவளை போல்தான் எழுந்து வர முடியாத நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறாள் என்று சொல்லி இருக்கிறோம்.  நம்பாமல்,  போட்டோ வேண்டும் என்றாள்.  எங்கள் தோழி, வினு, அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள்.  அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது? 

மஞ்சள் உடையில்:  அர்ப்பணா - மற்றவர், அர்ச்சனா  - இந்த புகைப்படத்தை,  "தனி மரங்களின்"  இந்த வருட தீபாவளி பார்ட்டி போது,  நவம்பர் ஐந்தாம் தேதி அன்று, நான் எடுத்தேன். 

எல்லாவற்றையும் கடந்து,  என்னை திணற அடித்தது எது தெரியுமா?  ஒரு நொடியில்,  அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர்.  சமீபத்தில் தான், படிப்பு முடித்து விட்டு சிகாகோ ஏரியாவில் வேலையில் சேர்ந்தார். மே மாதம் தான் திருமணம் ஆகி உள்ளது. ஜூலை மாதம் தான், அவர் மனைவி அமெரிக்கா வர முடிந்தது.  தன் மனைவிக்கு  தான் படித்த University யையும் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக Kentucky வந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

மதியம், எங்கள் வீட்டில்,  ஒன்றாக நாங்கள்  சாப்பிட்டதும்,  நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டார்கள். எனக்கு,  இரவு உணவு அனைவருக்கும் சமைக்கவும்,  இன்னும் பிற வேலைகளும் இருந்ததால், வரவில்லை என்று சொல்லி விட்டேன்.  அவர்கள் எங்கள்  வீட்டை விட்டு கிளம்பிய  இரண்டு மணி நேரத்தில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

நிதினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் மனைவிக்கு சில காயங்கள்.  அவற்றிற்கு மருந்து இட்டு, வீட்டில் இருந்தே கவனித்து கொள்ள சொல்லி,  மருத்தவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள்.   அவளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு.

எனது ஆருயிர் தோழியை, என்னை விட்டு பிரிந்து செல்ல வைத்தவன், வேறு யாராவது என்று இருந்து இருந்தால்,  மனதார திட்டி இருப்பேன்.  ஆனால்,  என் கவனிப்பில், என் பொறுப்பில், என் வீட்டில்,  guilty feelings உடன் கண் முன் நிற்கும் போது, என்ன செய்வது?  

இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு  குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள்.  முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே!  ஆனால்,  சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது.  என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல்,  எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட  முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? என் எதிரி என்று யாராவது இருந்தால் கூட,  இப்படி ஒரு மன நிலையில் சிக்க கூடாது என்று வேண்டி கொள்கிறேன்.

மருத்துவமனையில், அர்ச்சனாவை பார்த்து விட்டும் வருத்தப் படுவேன் -  வீட்டில்,  நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன்.  நான் நல்லவளா? கெட்டவளா? 

 பி.கு.:   அர்ப்பணா, நவம்பர் 21 அதிகாலை, இந்திய நேரப்படி , இறுதி சடங்குக்காக ஊருக்கு வந்து விட்டாள்.  அவள் பெற்றோருக்கு விசா கிடைத்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள், அர்ச்சனாவை கவனிக்க வந்து விடுவார்கள்.
நிதின்,  போலீஸ் ரிப்போர்ட்க்காக காத்து கொண்டு இருக்கிறான்.  அவன் மட்டுமே காரணமா? அவனது காரை இடித்த அடுத்த காரை ஓட்டியவருக்கும் பங்கு உண்டா என்று தெரிய வரும்.  லீகல் நடவடிக்கைகள், அதன் பின் எடுக்கப்படும்.

நாளை,  "அர்ப்பணாவுக்கு  அர்ப்பணம்" ......... எழுதலாம் என்று இருக்கிறேன்.

Sunday, November 7, 2010

தனி மரங்களின் தீபாவளி.

இந்தியாவில் இருக்கும் வரை, தீபாவளி குதூகலத்துக்கும்  கலகலப்புக்கும் பஞ்சம் இருந்ததில்லை.... எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் முதலில் வர்ண கோலங்கள் களை கட்டி விடும்.  பக்கத்து வீடுகளில் உள்ள தீபாவளி பட்சணங்கள் எங்கள் வீட்டிலும் அணி வகுத்து வரும்.  பட்டாசுகள்  - இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று பாராது - எல்லோரும் சேர்ந்து வெடிப்போம்.   அப்படியாக இருந்து விட்டு,  அமெரிக்க வந்த பின்  குடும்பத்தை மட்டும் அல்ல, அக்கம் பக்கத்து வீட்டினரையும்  தொலைத்து விட்டு, திருவிழா கூட்டத்தில் காணாமல் போன சிறுமி போல கண்களில் நீருடன் திகைத்து நின்ற முதல் தீபாவளியை மறக்க முடியாது.

அப்பொழுது  என் கணவர் தனது Ph.D. படிப்பில் சேர்ந்து இருந்த நேரம்.  இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்கு வந்து இருந்த  பல மாணவர்களும் தங்கி இருந்த Apartments Complex  அது.  எங்களைத் தவிர,  இன்னும் மூன்று  ஜோடிகள். மற்றவர்கள் எல்லாம் தனிக்காட்டு ராஜாக்கள்.

மறு வாரம் தீபாவளி.... எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது. கனத்த இதயத்துடன்,  தோழிக்கு கால் செய்து பேசினேன். பட்டும் படாமல் பேசினாள். என்னவென்று கேட்டேன். "home- sick. வீட்டை ரொம்ப தேடுது , " என்றாள்.  எனக்கே சந்தோஷம் பஞ்சம் என்று அங்கே பேசினால், அவள் கிட்ட இன்னும் சந்தோஷப் பஞ்சம், ஜிங்கு ஜிங்குனு தலை விரித்து ஆடி கொண்டு இருந்தது. இது வேலைக்கு ஆவுறதில்லை - என்ன சொல்வதென்றும் தெரியவில்லை  - பெருமூச்சுடன் போன் வைத்து விட்டேன்.

அடுத்த நண்பரை அழைத்து பேசினேன். அங்கும் அதே  ரெட் சிக்னல். "போங்கப்பா - இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நான் வரல," என்று போன் வைத்து விட்டேன்.  மூன்றாவது நண்பர், கார்த்திக் அழைத்து பேசினேன்.  போன் எடுத்த உடனேயே,  "சித்ரா, தீபாவளிக்கு என்ன பண்றீங்க?" என்று கேட்டார்.  இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லைதான்...
"கார்த்திக், நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுரவ.  என்கிட்டே போய் இதென்ன கேள்வி?" என்றேன்.
கார்த்திக் சளைக்காமல், "அது எங்களுக்கு தெரியாதா?  உங்களை என்ன - தீபாவளிக்கு ஸ்பெஷல் பூஜை பண்ணலியா என்று கேட்பேன்?  தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்து பண்ணலியா என்று தான் கேட்பேன்.  நீங்கள் எல்லாம் இப்படி அமைதியா இருந்தா, எங்களை மாதிரி தனி மரங்களுக்கு கல்யாணம் ஆகிற வரை தீபாவளியை டிவியில தான் பார்க்கணுமா?" என்றாரே பார்க்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ, என் சோக மனதில் ஒரு பட்டாசு கொளுத்தி போட்டு விட்டார்.  என் கண்களில் ஸ்பார்க் தெரிந்தது.   வாயில் சிரிப்பு மத்தாப்பு...... எத்தனை தீபாவளிக்கு தான் ஊர் நினைவில் சோக கீதம் பாட முடியும்? தொடர்ந்து சில போன் கால்கள்.  இது, அனுதாப பேச்சுக்கு அல்ல.  சரவெடி பிளான்க்கு......


தீபாவளி என் வீட்டில் என்று முடிவு செய்தேன்.  எல்லோரும் பங்கு எடுக்கும் விதமாக, ஆளுக்கு ஒரு ஐட்டம் கொண்டு வரும்  பாட்லக் டின்னெர் (potluck dinner) என்று முடிவு செய்தேன். ஒரு தோழி, தனக்கு லட்டு செய்யத் தெரியும் என்றார்.... ஒருவர்,  முறுக்கு என்றார் - ஒரு நண்பர்,  அவியல் என்றார் - ஒரு நண்பர் - வடை என்றார். இப்படியாக ஒரு நீண்ட மெனு - ஆயிரம் வாலா பட்டாசாக நீண்டது. நானும் என் பங்குக்கு இரண்டு ஐட்டம் செய்து வைத்தேன்.

மள மள வென்று, எங்கள் வீட்டில் தீபாவளி அன்று கூட்டம் சேர ஆரம்பித்தது.  Home-sick என்று சோர்ந்து இருந்த தனி மரங்கள் முகங்களில்,  தீபாவளி தீபங்களின் பிரகாசம்.  தோழமையுடன் ஒவ்வொருவரின் அனுசரணையான வாழ்த்துக்களில்  எங்கள் குடும்பங்களை கண்டோம்.   ஊரில்,  குடும்பத்தினர் போல பழகிய அக்கம்  பக்கம் வீட்டினரின் நட்பு பிடிப்பை கண்டோம்.  சந்தோஷம் வாண வேடிக்கையாக மின்னியது.

சாப்பாட்டுக்கும் கலகலப்பான பேச்சுக்கும் குறைவு இல்லாமல், களை கட்டியது.  அந்த தீபாவளியில் கார்த்திக் எனக்கு கற்று கொடுத்த பாடத்தை இன்று வரை மறந்ததில்லை.   ஒவ்வொரு வருடமும் தீபாவாளி வருகிறது - ஊர் நினைவு வருகிறது - அமெரிக்கா வந்த முதல் வருடத்தில், மனதை அழுத்திய home-sickness நினைவுக்கு வருகிறது.  எங்கள் வீட்டருகே இருக்கும் முதன் முதலாய்  "தனி மரமாய்" இருக்கும்  கல்லூரி மாணவர்கள் முகத்தின் சோகம் புரிகிறது.  என் கணவர் உற்சாகத்துடன் பேசி அழைக்கிறார்.  அவரவருக்கு தெரிந்த உணவு வகைகளை கொண்டு வருகிறார்கள்.

தீபவாளி கொண்டாடப்படும் மதமோ - மதம் சொல்லும் காரணமோ அப்பொழுது அவர்களுக்கு தெரிவதில்லை.   குடும்பமும் பாசமும் - அவர்களை முதன் முதலாக பிரிந்த ஏக்கமும் தான் தெரிகிறது.  தனி மரம் தோப்பாகாது. ஆனால், எல்லோரும் சேர்ந்து வரும் போது ..........  ஆஹா...... !  ஒவ்வொரு வருடமும் தீபாவளி - எங்கள் மனதிலும் - வீட்டிலும். பட பட பட பட............... கல கல கல கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே!



http://www.ladiesspecial.com/IssueDisplay.asp?BookId=33
இந்த மாதம் "லேடீஸ் ஸ்பெஷல்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை, இது.  என்னை கட்டுரை எழுத சொல்லி ஊக்குவித்த தேனம்மை அக்காவுக்கு நன்றி.

படங்கள்:  நன்றி, கூகுள்!

Sunday, October 31, 2010

ஜாலி பட்டாசு!

 எல்லா புகழும் இறைவனுக்கே!!!
கர்த்தரின்   சித்தமும் ஆசிரும்  இல்லாது,   நான் இந்த பதிவுலகில் இல்லை.

என்னை பதிவுலகில், வெட்டி பேச்சு பேச வைத்த எனது கணவர், சாலமன்க்காகவும்  - என்னை பதிவுலகுக்கு இழுத்து வந்த எனது நெருங்கிய தோழி,    அம்முவுக்காகவும்  ஒரு ஆயிரம் வாலா!

பதிவர்களில், எனக்கு முதல் கமென்ட் போட்டு ஹா...ஹா.... ஹாசிர்வதித்த  கோமா மேடம்க்காக வடை பாயாசம்!
  http://haasya-rasam.blogspot.com/2010/10/blog-post_18.html


அன்றைய தமிழிஷ் - இன்றைய இன்ட்லி ஜோதியில் நான் ஐக்கியம் ஆக முழுமுதல் காரணம் ஆன "பார்த்ததும் படித்ததும்"  ஜெட்லி சரவணாக்காக நொறுக்  - சாரி, முறுக்கு - சீடை!
http://nee-kelen.blogspot.com/2010/09/blog-post_20.html

பதிவுகள் எழுத வந்த சில நாட்களிலேயே,   என் தந்தையின் மறைவினால்  -  ஊருக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில்,  வாடி இருந்தவளுக்கு - முதல்  விருது ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தி, மேலும் பதிவுகள் எழுத வைத்த அட்டகாசமான ஜலீலா அக்காவுக்காக  லட்டு, ஜாங்கிரி!  
http://allinalljaleela.blogspot.com/2010/10/chicken-biriyani.html

எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்தும் - பின்னூட்டம் இட்டும் - வோட்டுகள் போட்டும் - பரிந்துரை செய்தும் - தங்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும்   வாண வேடிக்கை!!!

 தங்கள் மாறாத தோழமையினால்,  தூய அன்பில் என்னை நெகிழ வைக்கும்  சகல பதிவர்களுக்கும் பூங்கொத்தும் மத்தாப்புக்களும்!!! 

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 


இந்த நூறாவது பதிவு மூலமாக   அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவு எழுத வந்து ஓராண்டு  நிறைவு பெறுகிறது.


சிறப்பு கண்ணோட்டம்:
(மீள் பதிவு  போடாமல் எப்படியோ நூறை தொட்டு விட்டேன்.  இப்போ சேர்த்து வைத்து,   சில highlights மட்டும்:  (ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... தீபாவளி ஸ்பெஷல் - நூறாவது பதிவு ஸ்பெஷல் - ஓராண்டு ஸ்பெஷல் ஷோ - என்று இருக்கட்டுமே!)


பில்ட் அப் எல்லாம் போதும்.  அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசிட்ட என்று கேட்காதீங்க.  அந்த கேள்வியை என்னை நானே கேட்டு இருக்கேனே!
டீ கடை பெஞ்சு : 
  http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_17.html
  
ஏன் என்னை பாத்து கேட்டாங்க?
 "சித்ரா, நீங்க தமிழ் மொழியை  இன்னும் மறக்கலையா?"
"நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?"

  திருநெல்வேலி நக்கல்: 
"துவையல் ஏன் ரொம்ப குறைவா  இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining டேபிள்க்கு  வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."

"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கறியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் ஒரு வாலும் முளைக்கவா போகுது?"

Fashion டிப்ஸ்:
பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன?  இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார்/சுடிதார்  செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

அறிவு கொழுந்தும் நானும்:
சென்னையில் ஒரு அறிவு ஜீவி:   சித்ரா, உன் மகன்  என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello,  அறிவு கொழுந்தே,  நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன்.  ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட  அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா?  நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)

முதன் முதலாக பலருடைய பாராட்டுதல்களை, எனக்கு பெற்று  தந்த  பதிவு: 
  
நான் ரொம்ப ரசித்து எழுதிய பதிவுகளில் ஒன்று: 

எனது செல்ல மகளின் பார்வையில் தமிழ் சினிமா: 

சரவெடிகள்:  

முதன் முதலாக "யூத்புல் விகடன்" - குட் ப்லாக்ஸ் கூட்டத்தில என்னையும் சேர்த்துக்கிட்டது: 
"பதின்ம வயதினிலே ....!!!"

அதிக followers பெற்று தந்த பதிவு:
ஆண் பேச நினைப்பதெல்லாம் .......
  
இப்படியே போனா ....... பதிவு நீண்டு கிட்டே போய் - அடுத்து பொங்கல் திருவிழாவே வந்திடும் போல. 
அதனால்,  இத்துடன் இன்றைய ஷோவை  - மன்னிக்கவும் - பதிவை முடிச்சிக்கிறேன்.

"வாழ்க்கை பாதையில்,  முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான்,  நம் உணர்வுகளை  அலங்கரிக்கும்."  தத்துவம் # 10645

எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!