Tuesday, September 21, 2010

தம்பட்டம் அல்ல.....தன்னிலை விளக்கம்.

வணக்கம்.

நேற்று, ஒரு தோழியின் அம்மாவுடன் போன்ல பேசி கொண்டு இருந்தேன்.... தனது மகளின் பிரசவ கால உதவிக்காக வந்து இருக்கிறார்.  Ultrasound Exam ல் ஏற்கனவே பார்த்து,  பிறக்க போவது பெண் பிள்ளைதான் என்று தெரிந்து கொண்டார்கள்.  அவர்களுடன் பேசி கொண்டு இருந்த சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

தோழியின் அம்மா:   என் மகள் எனது பேச்சு கேட்கவே மாட்டேங்குறா.....  பொண்ணு பிறந்து ரெண்டு மூன்று வருடங்களில், சென்னை வந்து செட்டில் ஆகி விடுங்கள் என்று சொல்கிறேன்.  அமெரிக்காவில பெண் பிள்ளைகள் வளர்வது குறித்து எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது.   நீயே சொல்லும்மா..... உனக்கும் ஒரு பொண்ணு இருக்கே, பயமாக இல்லையா? 

 நான்:  "இல்லை...  கடவுள் மேல பாரத்தை  போட்டுட்டு நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்கிறேன்.  நான் சொல்ற விஷயங்களுக்கு பலன் இருக்கா,  இல்லை அது எல்லாம் வெட்டி பேச்சா என்று அவளின் டீன் ஏஜ்ல தான் எனக்கு தெரியும்.  இந்த ரிஸ்க், எந்த நாட்டில் இருந்தாலும் "அலைபாயுமே".....  இதில் ஆண் குழந்தை என்ன? பெண் குழந்தை என்ன?  என் மகளை இந்தியாவிலேயும், என்  மகனை அமெரிக்காவிலும் வளர்க்க,  என்னால் எப்படி முடியும்? 

தோழியின் அம்மா:   Bore அடிக்கும் போது,   அப்போ அப்போ உன் ப்லாக்  படிப்பேன்..... (நல்ல வேளை ....அப்போ அப்போ உன் ப்லாக் படிச்சிட்டு bored ஆக பீல் பண்ணுவேன்  என்று அவங்க சொல்லல........ தப்பிச்சேன்!)   அமெரிக்காவை  பற்றி நிறைய எழுதுறியே.  எப்படி தெரியும்? 

நான்:  "என் கணவரின் வேலை நிமித்தமாக அமெரிக்காவின்  பல நகரங்களிலும் ஊர்களிலும் இருக்கும்  வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.... என் நட்பு வட்டத்தை தமிழ் மக்கள் மட்டும்  இருக்கும் வட்டத்துக்குள்  குறுக்கிக் கொள்ளாமல்,  எல்லா நாட்டினருடனும் பேசி பழகுவேன்.  பல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்கிறேன்.  மேலும்,  நான் volunteer ஆக மருத்துவமனையிலும் கோயிலில் உள்ள சில குழுக்களிலும் இருந்து வருகிறேன்.  . இந்த சமயங்களில்,   ஏழை - பணக்காரர் -   குழந்தைகள் -  வயோதிகர் - அமெரிக்கர் - அமெரிக்கர் அல்லாதோர்  போன்ற பலருடன் பேசி அவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்து வருகிறது..  அமெரிக்கா என்றால் இப்படித்தான் - இந்தியா என்றால் அப்படித்தான் என்று prejudiced ஆக இருந்த நான், என்னை மாற்றி இருக்கிறேன்..... எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது......  நிறை குறைகள் எங்கும் உண்டு.  இதில் ஒரு நாட்டை உயர்த்தியோ ஒரு நாட்டை தாழ்த்துவதால், என்ன பயன்?   நாட்டுக்கு நாடு வாசப்படி .....சாரி, வீட்டுக்கு வீடு வாசப்படி........

தோழியின் அம்மா:  ..... என் பொண்ணு சொன்னா...... உங்களுக்கு ரோடு ட்ரிப் பிடிக்கும் என்று......

நான்:  "ஆமாம்....   நியூ யார்க் - டிஸ்னி வேர்ல்ட் - நயாகரா மாதிரி முக்கிய இடங்களுக்கு செல்ல அவ்வளவாக விருப்பம் இல்லை.....  அந்த மாதிரி இடங்களை, "family tour packages" என்று அழைப்போம்.....  மற்ற குடும்பத்தினர் அல்லது நண்பர் குழுவுடன் சுற்றி பார்க்கவே வைத்து இருக்கிறோம்.  ஒவ்வொரு வருடமும்,  இரண்டு வாரங்கள் பெரிதாக எந்த பிளான்  எதுவும்  இல்லாமல்  காரில் குடும்பத்துடன் பயணிப்போம்.   வழியில் வரும் சின்ன சின்ன ஊர்கள் - லோக்கல் உணவு விடுதிகள் - அந்த ஊருக்கு என்று இருக்கும் பெருமை உள்ள இடங்கள் என்று செல்வோம்.   லோக்கல் restaurants போகும் போது, அங்கே இருக்கும் waiter / சர்வர்  உடனும் பக்கத்து டேபிள் ஆட்களிடமும் பேசி பார்த்தாலே, நிறைய விஷயங்கள் - கருத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  ஆர்வத்துடன் பேசுவார்கள்.  இந்தியாவை பற்றியும் நிறைய கேள்வி கேட்பார்கள்.  அவர்களிடம், நமது நாட்டை பற்றி பெருமையுடன் பேச பிடிக்கும்.  பெரும்பாலான இடங்களில் நல்ல வரவேற்பு இருக்கும்.   சில மிக சிறிய ஊர்களில், அவர்கள் பார்த்த முதல் அமெரிக்கர் அல்லாத ஆட்கள் நாங்களாக தான் இருந்து இருப்போம்.   எங்களை,  ஏதோ வேற்று கிரகத்து ஆட்கள்,  வழி  தவறிப் போய் planet மாறி,  அந்த ஊரில் வந்து இறங்கி விட்டது போல சந்தேகத்துடன் குறுகுறு வென பார்த்து கொண்டே இருப்பார்கள். பேசவே மாட்டார்கள்..... அந்த மாதிரி இடங்களில், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவோம். எல்லாமே ஒரு அனுபவம்தான்.

தோழியின் அம்மா:  உங்கள் ரோடு ட்ரிப்ல,  உன்னால் மறக்க முடியாத இடங்கள்  என்ன?

நான்:    "நிறைய மாநிலங்களுக்கு இன்னும் போனதே இல்லை.  சென்ற வரையில்,

 "New Mexico மாநிலத்தில் உள்ள Elephant Butte மற்றும்  
                                                      Truth or Consequences,
Michigan  மாநிலத்தில் உள்ள Paradise என்ற ஊர் மற்றும் Hell,  Saline,  
Arizona மாநிலத்தில் உள்ள Tuscon என்ற நகருக்கு  அருகில் உள்ள Biosphere 2 (http://www.b2science.org/)  - 
மற்றும்  Globe,
California  மாநிலத்தில் உள்ள Julian என்ற ஊர் மற்றும் Big Sur,
Colorado மாநிலத்தில் உள்ள Climax, 
Florida மாநிலத்தில் உள்ள Okahumpka மற்றும்  Yeehaw Junction,
Illinois மாநிலத்தில் உள்ள Normal,
Indiana மாநிலத்தில் உள்ள Santa Claus,  Turkey Run,
Kansas மாநிலத்தில் உள்ள Buttermilk,
Kentucky மாநிலத்தில் உள்ள Breeding மற்றும் Hazard, Ready,
Louisiana மாநிலத்தில் உள்ள Pumpkin Center,
Maryland மாநிலத்தில் உள்ள Boring,
Minnesota மாநிலத்தில் உள்ள Bombay மற்றும் Outing,
Mississippi மாநிலத்தில் உள்ள Askew,
Missouri மாநிலத்தில் உள்ள Enough மற்றும் Licking,  Success,
New Jersey மாநிலத்தில் உள்ள Hopatcong,
New York மாநிலத்தில் உள்ள Flushing,  Buffalo,
North Carolina மாநிலத்தில் உள்ள Welcome,
Ohio மாநிலத்தில் உள்ள Chagrin Falls,
Oklahoma மாநிலத்தில் உள்ள Kremlin மற்றும் Straight,
Pennsylvania மாநிலத்தில் உள்ள Intercourse,
South Carolina மாநிலத்தில் உள்ள Ninety Six,
Tennessee மாநிலத்தில் உள்ள Disco மற்றும் Nameless,
West Virginia மாநிலத்தில் உள்ள Paw Paw ,  
Texas மாநிலத்தில் உள்ள Sweetwater ,  Post,   Lubbock (லபக்),  Comfort,   Best,  Ding Dong,  Cash,  Earth,  Echo, Friendship,  Happy,  Humble,  Spur,  Uncertain .........  இப்படி ........

 (நம்பினால் நம்புங்க..... இதெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் -  இதில் கொசுறு செய்தி, நாங்கள் லபக் என்ற ஊரில் தான் ஐந்து வருடங்கள் போல இருந்தோம்..... நண்பர்கள், செல்லமாக என் கணவரை: "லார்ட் லபக்தாஸ்"  என்று  அப்பொழுது அழைத்தது உண்டு.  ஹா,ஹா,ஹா,ஹா..... ) 

தோழியின் அம்மா:  இந்த பெயர்களை கேட்டாலே சிரிப்புதான் வருகிறது...... இந்தியாவிலும் இப்படி சுற்றி பார்த்து இருக்கிறாயா?

நான்:  " இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு அதிகம் போனது இல்லை.... மொழி பிரச்சினைதான்.   லோக்கல் மக்களோடு பழக தடையாய் இருக்கும்.   தமிழ் நாட்டில், மதுரைக்கு தெற்கே உள்ள ஊர்களுக்கு,  இப்படி ட்ரிப் அடித்து இருக்கிறோம்..... இந்தியாவுக்கு வர குறைந்த நாட்களே விடுமுறை கிடைப்பதால் - உறவினர்களுடன் அதிகம் நேரம் செலவிட பிடிக்கும். இருந்தும்,  ஒன்றிரண்டு நாட்களாவது  இப்படி பயணம் செய்வோம்.  இன்னும் மண்ணின் குணம், உணவு முறை  மாறாமல் இருக்கும் மக்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். "

தோழியின் அம்மா:   அமெரிக்கா கலாச்சாரம் பற்றி, நீ என்ன நினைக்கிற?

நான்:  "எதுங்க அமெரிக்க கலாச்சாரம்?  அமெரிக்காவில் Las Vegas - New Orleans - Miami போன்ற பெரிய நகரங்களில்  ஓவர்லோட் ஆன விஷயங்கள் நிறைய இருக்கும்.  ஆனால் அது மட்டுமே அமெரிக்கா இல்லை..... சின்ன ஊர்களில் - கிராமங்களில் - நிறைய conservatives இருக்கிறார்கள் - குடும்பம் - கோவில் - குழந்தைகள் என்பதே அவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது.......  நான் முதலில், இந்தியாவில் இருந்து Miami க்கு தான் வந்தேன்.  "அமெரிக்கா என்றாலே எல்லோரும் அவுத்து போட்டுட்டு ஆடுறது...... யார் கூடனாலும் கையை பிடிச்சுக்கிட்டு ஓடுறது ........ " இதுதான் வாழ்க்கையா என்று  அந்த காட்சிகளே கண் முன் தெரிந்தது.....  ஐயே ஐயே  என்று புலம்பி கொள்வேன் - திட்டி கொள்வேன். 

என்னை தோழமையுடன் வரவேற்ற ஒரு தமிழ்  குடும்பத்துடன்,  கடுமையாக இந்த கலாச்சாரத்தை சாடி பேசிக் கொண்டு இருந்தபொழுது...... அந்த  குடும்ப தலைவி பொறுமையுடன் எனக்கு சொல்லிய அறிவுரையை நான் மறக்க மாட்டேன்.
"சித்ரா,  நான் சொல்வதை தப்பாக எடுத்து கொள்ளாதே.     இந்த காட்சிகள் மட்டும் உனக்கு  தெரிகிறது என்றால், அதை தாண்டி நீ பார்க்கவில்லை என்று தெரிகிறது.....  எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த  நாட்டின் வரலாறு தெரியாமல் -   மக்களின் பூர்வீகம்,  பழக்க வழக்கங்கள்,  மனப்பக்குவம், சூழ்நிலை,  எதிர்பார்ப்புகள், கோட்பாடுகள்,  தெரியாமல் -  எப்படி நம்மூரு  கலாச்சார அளவுகோலை கொண்டு  குறை சொல்ல முடியும்?  இந்தியாவோ அமெரிக்காவோ  - எந்த ஊரில் - எந்த நாட்டில் இருக்கிறோமோ - அந்த நாட்டின் மண்ணின் வாசனையை தெரிந்து கொள்ள வேண்டும்  -    அந்நாட்டு மக்களின் சுதந்தரத்தை  மதிக்க கற்று கொள்ள வேண்டும் .  வேண்டாததை ஒதுக்கி வைக்க  தெரிய வேண்டும்.   பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது.  பிறந்து வீட்டு பேரையும்  பெருமையையும் மறக்க கூடாது.  புகுந்த வீட்டிலும்  நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு,  பேர் எடுக்க வேண்டும்.   - நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும்.....  நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே......  இரண்டு நாடுகளிலும்  ஆதங்கம் இருக்கலாம் -  அதிருப்தி இருக்கக் கூடாது;  ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது.    நல்ல முடிவு எடுத்தால்தான், இங்கே இருக்கும் போதும் பயம் இல்லாமல் இருக்க முடியும் - இந்தியா போகும் சமயங்களிலும் பயணங்கள் இனிதாக இருக்கும்.  "

அதன் பின் ஒரு புரிதல் ஏற்பட்டு, எனக்கு இரண்டு நாடுகளும் பிடிக்கிறது....."

தோழியின் அம்மா:  என்னை narrow minded ஆளுன்னு சொல்லாமல் சொல்றே......

நான்:  "அப்படி நான் சொல்வதாக நீங்கள் எடுத்து கொண்டால் ......... நான் ஒன்றும் செய்ய முடியாது....... நீங்கள் பெரியவங்க........

தோழியின் அம்மா:  ஹா,  ஹா, ஹா, ஹா, ........ உண்மையில் நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்.... ரொம்ப குழம்பி போய் இருந்தேன்..... உன்னிடம் பேசிய பிறகு, கொஞ்சம் தெளிவு கிடைத்து இருக்கிறது.....

 "அதிலும்  கொஞ்சம் தானா?  அவ்வ்வ்வ்....... "


Sunday, September 19, 2010

போலீஸ் ...... போலீஸ் .... போலீஸ்.....

வணக்கம்.   எனது முந்தைய இடுகை:  கவர்னர்னா கொம்பா முளைச்சு இருக்குது?   வாசித்து விட்டு சிலர், உணவு பரிமாறிய அந்த பெண்ணுக்கு வேலை போகாமல் இருந்தது குறித்து பின்னூட்டம் இட்டு இருந்தார்கள்.
இங்கு  சட்டம் ஒழுங்கு முறை,  கடமையை செய்வதற்காக  ஒத்துழைக்குமே தவிர, தடை செய்வதற்காக  அல்ல.

  அமெரிக்காவில்,  போலீஸ் துறைதான்  டிராபிக் பொறுப்பையும் பார்த்துக் கொள்கிறது.  (தனியாக டிராபிக் போலீஸ் என்று கிடையாது)    சாலை விதிகளை மீறும் போது, ஓட்டுனர்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பவோ, அபராதம் கட்ட சொல்லி "fine"  டிக்கெட் கொடுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு.  மாட்டிக் கொண்டவர்கள் யாராக  இருந்தாலும்,    போலீஸ் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களே.  "எனக்கு அவரைத் தெரியும், இவரையும் தெரியும்," என்று பெருமை பேசுவது,  போலீஸ் (cop )காரர்களின் எரிச்சலைத் தான் சம்பாதித்துக் கொள்ள வைக்கும்.   தங்களை மறைமுகமாக மிரட்டுவதாகவே  கருதுகின்றனர்.

பெரும்பாலான ஊர்களில்,  போலீஸ்க்கும் அவரது வேலைக்கும் பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கும் வகையில் - போலீஸ்  யாராவது செல்வந்தர் வீட்டினரையோ   அல்லது அரசியல்வாதிகளின் வீட்டினரையோ  தவறு செய்யும்போது நடவடிக்கை எடுத்ததற்காக, அந்த போலீஸ் தண்டிக்கப்படாமல் இருக்கும்படி சட்டம் உள்ளது.  நடவடிக்கை எடுத்த போலீஸ்க்கு மேலிடத்தில் இருந்து suspension,  transfer or dismissal பிரச்சினை இல்லை.  அதனால் எதை பற்றியும் - யாரைப்  பற்றியும் கவலைப்படாமல் கடமையை செய்ய முடிகிறது.

நிலைமை தலைகீழ்:   
  புஷ் ஜனாதிபதியாக இருந்தபொழுது, அவரின் மகள் ஜென்னா,  21 வயது ஆகும் முன்னே மதுபானம் வைத்து இருந்த குற்றத்துக்காக போலீஸ் துறையினரால் தண்டிக்கப்பட்டார்.
"Jenna W. Bush, one of President Bush's 19-year-old twin daughters, was cited for alcohol possession by a minor Friday morning, the Austin Police Department said."

மேலும், போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை அந்த இடத்திலேயே கைது செய்வர்.  வெறும் அபராத தொகையோடு போய் இருக்க வேண்டியது,  அரெஸ்ட் வரை கொண்டு வரத்தான் லஞ்சம் "உதவி" இருக்கும்.
Fanning என்ற போலீஸ் கூறியுள்ளதை பாருங்கள்:   "Never try to buy off a cop.  In those instances where they've offered me a bribe," Fanning said,  "I loved making those arrests."
http://finance.yahoo.com/family-home/article/110666/what-not-to-say-when-pulled-over-by-a-cop

நேற்று,  நாங்கள் ஒரு கடைக்கு சென்ற பொழுது,  அங்கே வாசலில் ஒரு போலீஸ் நின்று கொண்டு யாரிடமோ பேசி கொண்டு இருந்தார். என் குழந்தைகள் அவரை பார்த்து விட்டு உள்ளே போகாமல்  தயக்கத்துடன் நிற்க,  அவர் புன்னகைத்து விட்டு,  அவர்களுக்கு ஹலோ சொன்னார்.  பிறகு, ஒரு கோமாளி படம் போட்ட ஸ்டிக்கர் ஒன்றை அவர்களுக்கு கொடுத்தார்.  நான் எதற்கு என்று கேட்ட பொழுது,  "குழந்தைகள் போலீஸ் கண்டு பயப்படக் கூடாது.  பின்னால் எதுவும் தேவைப் பட்டால், அவரை அணுகி உதவி கேட்கும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும்.  நான் அவர்களின் நண்பன் தான் என்று காட்டவே அப்படி செய்தேன்," என்றார்.  (பாசக்கார பயபுள்ள!)

விதிவிலக்குக்கு உள்ளானோர் இல்லாமல் இல்லை.....  அப்படிப்பட்ட போலீஸ் பிடிபட்டால்,  தண்டனையில் இருந்தும் தப்ப முடியாது.  சரி....சரி...... இனி, இங்கு நடந்த சில வேடிக்கையான  கைதாகிய சம்பவங்கள்  பற்றி பார்ப்போமா?   சீரியஸ் ஆக வேலை செய்து கொண்டு இருக்கும் போலீஸ்க்கு,   இந்த காமெடி பீஸ்கள் மூலம் சிரியஸ் டைம்க்கு பஞ்சம் இல்லை.
நான் "நம்பிட்டேன்":  

Melvin Jesse Blain, 31,  கடந்த வாரம் North Charleston என்ற ஊரில் உள்ள Wachovia வங்கி கிளைக்கு கொள்ளையடிக்க சென்று,  அங்கு இருந்த கிளார்க்கிடம்  ஒரு துண்டு பேப்பர் நீட்டினார்.   அதில்,  தனக்கு உடனடியாக $30,000 பணத்தை $100 நோட்டுக்களாக எடுத்து தரும் படி மிரட்டி எழுதி இருந்தார்.  அந்த பெண்ணும் பயப்படாமல் சீரியஸ் ஆக முகத்தை வைத்து கொண்டு,  "சாரி. என்னிடம் இப்பொழுது அவ்வளவு பணம் cash ஆக இல்லையே," எனவும்,  மெல்வின் அதை நம்பிவிட்டான்.  அந்த பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு,  (மரியாதை தெரிஞ்ச பயபுள்ள) ,  வங்கியை விட்டு வெளியேறி நடக்கவும், அந்த பெண் போலீஸ்க்கு போன் செய்து விட்டாள்.  உடனே வந்த போலீஸ்,  வெளியே நடந்து கொண்டு இருந்தவனை வங்கியை கொள்ளையடிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்தது.


முகமும் முகவரியும்: 

மேரிலன்ட் (Maryland) மாநிலத்தில் உள்ள Bowie என்ற ஊரில்,   கொள்ளையடிக்க வந்தவன் ஒரு துண்டு சீட்டில் தனக்கு வேண்டிய பணத்தை எழுதி, அந்த அளவு பணத்தை சத்தமில்லாமல் தன்னிடம் தந்து விடுமாறு கிளார்க்கிடம்  சொன்னான்.  அவரும் கொடுத்து விட, சந்தோஷமாக பணத்துடன் நேராக தன் வீட்டுக்கு சென்றான்.  ஆனால் வீட்டுக்குள் நுழையும் முன் போலீஸ் அவனை சுற்றி வளைத்து பிடித்தது. அவனுக்கோ ஆச்சர்யம்!  தன் வீடு எப்படி போலீஸ்க்கு தெரிந்தது என்று......  அவன் கொடுத்த துண்டு சீட்டில் தான் மேட்டர் இருந்தது.  அவன் தனது கொள்ளை மிரட்டலை எழுத உபயோகித்து இருந்தது:    அவன் முகவரி மற்றும் விவரங்களுடன் இருந்த பேங்க் deposit ஸ்லிப்பின் பின்னால்.  ( "புத்திசாலி" பயபுள்ள!)

தர்ம அடி: 

இந்த சம்பவம் நாங்கள் மயாமியில் குடி இருந்த பொழுது நடந்தது.  பாக்கிஸ்தானியர் ஒருவரின் குடும்பத்தினரால் "Miami Subs"  என்ற உணவக கிளை  நடத்தப்பட்டது.   ஒரு நாள், கடையை திறந்து உள்ளே எல்லாம் ஆயத்தப் படுத்தி கொண்டு இருந்த பொழுது, இருவர் கொள்ளையடிக்க வந்தனர்.  ஒருவன், வாசலிலேயே காவலுக்கு நிற்க - கைத் துப்பாக்கி வைத்து இருந்த இன்னொருவன் கடைக்குள் நுழைந்தான்.   உள்ளே நின்று கொண்டு இருந்த கடை உரிமையாளரை மிரட்டி, பணம் கேட்டு இருக்கிறான்.  தன் பின்னால்,  அடுத்த அறையில் இருந்து வந்து கொண்டு இருந்த உரிமையாளரின் தம்பியை அவன் கவனிக்கவில்லை.  தம்பி நிலைமையை புரிந்து கொண்டு,  துப்பாக்கி வைத்து இருந்தவனின் பின் பக்கமாக பாய்ந்து அவன் தலையில் அடித்து விட்டு, துப்பாக்கியை பிடுங்கி  விட்டான். இவனது கூக்குரலை கேட்ட காவலுக்கு நின்று கொண்டு இருந்தவனோ, பயத்தில் ஓடி விட்டான்.  (துப்பாக்கி இருந்தவனுக்கே இந்த நிலைமையா என்று நினைத்தானோ என்னவோ?  பயந்தாங்குள்ளி பயபுள்ள!)

  உள்ளே அகப்பட்டு கொண்டவனுக்கு, அண்ணனும் தம்பியும் மாறி மாறி தர்ம அடி கொடுக்க - வலி தாளாமல், கொள்ளை அடிக்க வந்தவன்,  முழங்கால் படியிட்டு இருவரிடமும், "தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" என்று கேட்ட பின் தான்,   அடிப்பதை நிறுத்தி விட்டு,  அவனை கட்டி போட்டு விட்டு போலீஸ்க்கு போன் கால் போட்டு இருக்கின்றனர். சில நிமிடங்களில் போலீஸ் வந்ததும்,  அவர்களை கண்டு ரொம்ப சந்தோஷப் பட்டது கொள்ளை அடிக்க வந்தவன்தான்.   "போலீஸ்சில் கூட என்னை அடிக்க மாட்டார்கள். இவர்கள் என்னை பதம் பார்த்து விட்டார்களே," என்றபடி நிம்மதியாக போலீஸ் காரில் ஏறி கொண்டான்.  Miami Herald Newspaper ல இந்த நியூஸ் வந்த பொழுது, அதை படித்து விட்டு, ஒரே சிரிப்புதான்.

நடந்து செல்வதற்கு பதில், சில போலீஸ் உபயோகப் படுத்தும் Segway என்ற வாகனம்:   


அவ்வப்பொழுது,  இப்படி செய்திகளையும் தொடந்து எழுதுகிறேன்.......

Wednesday, September 15, 2010

கவர்னர்னா கொம்பா முளைச்சு இருக்குது?

இன்று பெருசா காமெடி எல்லாம் இல்லைங்க.....  பிடிக்காதவங்க,  "அபௌட் டர்ன்,"  ப்ளீஸ்.  இல்லை, அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசப்  போறா என்று ஒரு ஆர்வத்துல இருக்கிறவங்க மேற்கொண்டு  வாசிங்க.

நாங்கள் வழக்கமாக செல்லும் ஆலயத்தில்,  ஒரு விழா.  அங்கே Buffet style dinner இருந்தது.   நாங்களும் மற்றவர்களுடன் வரிசையாக நின்று கொண்டு இருந்தோம்.  நீண்ட வரிசையில்,   மிகவும் பின்னால்தான் நாங்கள் நின்று கொண்டு இருக்க, எதேச்சையாகத் திரும்பி பார்த்தேன்.  எங்கள் பின்னால்,  எங்கள்  'பங்கு கோயில் தந்தை'  (Parish Priest) மற்றும்  Diocese Bishop இரண்டு பேரும்  உணவுக்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.  அவர்களது humility பார்த்து அசந்து விட்டு, ஊரு பழக்கத்திற்கு மரியாதையுடன், "Father, why don't you sit down?  We can bring some food and serve you, " என்று சொன்னதும் ஆச்சர்யமுடன் பார்த்தார்கள்.  "Thank you.  We are fine. we will serve  ourselves,"  என்று சொல்லிவிட்டு எங்களுடன் மிகவும் சாதரணாமாக உரையாட ஆரம்பித்தார்கள்.

அடுத்த அதிசயமாக, நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு,  dessert (இனிப்பு)  சாப்பிட ஆரம்பித்த வேளையில், எங்களுக்கு முன்பே சாப்பிட்டு முடித்து விட்டிருந்த   Parish Priest,   ஒவ்வொரு டேபிள் ஆக சென்று சாப்பிட்டு முடித்தவர்களின் தட்டுக்களை எடுக்க ஆரம்பித்து விட்டார்.   ஒரு பெரிய basin உள்  எல்லாவற்றையும்  வைத்து எடுத்துக் கொண்டு போய்,  கழுவும் இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து கொண்டு இருந்தார்.

எந்த வித மரியாதையும்,  சேவையையும் எதிர் பார்க்காமல், தன் பங்கு கோயிலின் வேலைகளை முடிந்த அளவு தானே செய்து கொண்டு இருந்தவரை பாராட்டி விட்டு பேச்சு கொடுத்தோம்.  தன்னடக்கத்துடன் சிரித்துக் கொண்டு,  எங்களிடம்  சொல்லிய விஷயங்கள், எங்களை ஆச்சர்யப் பட வைத்தன.

"எந்த ஒரு பதவியும் -  அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான்.  அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு,  அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல்,  பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான்  பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும்.  நீங்கள் இந்தியாவில் இருந்து வந்து இருப்பதால், இங்கு நடந்த ஒரு கதை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சொல்கிறேன்.

கிறிஸ்டியன் ஹெர்டர்  (Christian Herter)  என்பவர்,  Massachusetts மாநிலத்தில் கவர்னர் ஆக இருந்து விட்டு,  இரண்டாம் முறையாகவும் அந்த பதவிக்காக தேர்தலில் நின்றார்.   காலையில் இருந்து சாப்பிடாமல்,  தேர்தல் விஷயமாக அங்கும் இங்கும் வேலை நிமித்தம் அலைந்து கொண்டு இருந்தவர்,   மதியம் மிகுந்த பசியுடன்,  ஒரு ஆலயத்தில் நடந்து கொண்டு இருந்த Barbecue உணவுக்கு வந்தார்.  வரிசையில் நின்று,  தன் முறை வரும் வரை காத்து இருந்தவர்,  மற்ற சைடு டிஷ் வாங்கி கொண்டு,   தன் தட்டை கோழி பரிமாறி கொண்டு இருந்த பெண்ணிடம் நீட்டினார்.  Barbecue chicken piece ல் ஒரு துண்டு மட்டும்  வைத்து விட்டு, அடுத்தவருக்கு பரிமாற அந்த பெண் முனைந்தார்.  

மிகுந்த பசியுடன் இருந்த கவர்னர்,  " Excuse me.  எனக்கு இன்னொரு துண்டு சிக்கன் தர முடியுமா?" என்று கேட்டார்.
 அந்த பெண்ணும், " மன்னிக்கவும்.  ஒரு ஆளுக்கு ஒரு சிக்கன் பீஸ் தான் தர வேண்டும் என்று எனக்கு உத்தரவு இருக்கிறது," என்றாள்.
 
பொதுவாக எளிமை விரும்பியான கவர்னர்,   பசியினால்  தனது பதவியின்  பலத்தை பார்க்க முடிவெடுத்தார்.
"நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா?  நான் தான் இந்த மாநிலத்தின் கவர்னர்."
அந்த பெண்ணும் விடாமல்,  " நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா?  இந்த கோழி ரோஸ்ட்டை  சரியாக பரிமாற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள பெண்.  இப்பொழுது அடுத்தவர்க்கு வழி விடுங்க, " என்றார்.
("Do you know who I am?   I am the lady in charge of the chicken to be served. Now move along, mister!")

கவர்னர் ஆக இருந்தாலும்,   அந்த இடத்தில் அவருக்கு அதிகாரமோ சலுகையோ இல்லை. அந்த பெண்ணின் பொறுப்புக்கும் கட்டளைக்கும் கட்டுப்பட்டவர் தான் கவர்னர் என்பதை புரிந்து கொண்டவர்,  தனக்கு கொடுக்கப்பட்ட உணவுடன் மறு பேச்சு பேசாமல் சென்றார்.

அவரவர் தங்கள் பணியில், தங்களுக்கு கொடுத்து இருக்கும் கடமைகளை தாழ்மையுள்ள மனசாட்சியுடன் செவ்வன செய்ய வேண்டும்.   இதில் ஆணவம்  எதற்கு?  பதவி தரும் மரியாதையில் மயங்கியவர்கள்,  பதவி போன பின், மன உளைச்சல்க்கு தான் ஆளாக வேண்டும்," என்று சொல்லி முடிக்கவும்,   எனக்கு தலை சுற்றி கீழே விழாத குறை.

என்னங்க...... ஒரு பந்தா செய்யத் தெரியாத அரசியல்வாதியா?    நிஜமா -  இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுத்து,   பெரிய மாலை போட்டு,  பொன்னாடை போர்த்தி,  தங்க கேடயம் கொடுத்து,  ஜால்ரா அடித்து - சே, ச்சே,  தப்பு ....தப்பு...... வாழ்த்தி பேசி,   முதலிடம் முன்னுரிமை கொடுத்து,  காலில் விழுந்து,  தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, .............   ஓ!

ஆமா, நம்மூரில் அரசியல் வாதிகளுக்கு இம்பூட்டும் பண்றாங்களே, இது தனிப்பட்டவரின் மனிதாபிமானத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பதவி செல்வாக்குக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை,  அவரின் பண பலத்துக்கு கொடுக்கிற மரியாதையா?  இல்லை, இத்தனையும் பண்ணலைனா,  வூட்டுக்கு ஆட்டோ வருமே, அந்த பயத்துல பண்ற மரியாதையா?   இல்லை, இப்படி பண்ணா, நமக்கும்  சந்தடி சாக்குல கொஞ்சம் ஏதாவது பலன் கிடைக்குமே என்று நினைத்து கொடுக்கிற மரியாதையா?    ம்ம்ம்ம்ம்ம்.........  என்னவோ போங்க...... அந்த காலத்துல இருந்து அரசனை துதி பாடி..... துதி பாடி............................. ஜனநாயக நாட்டிலேயும் ஜால்ரா அடிக்கிறதே  புளப்பா போச்சு!

 இந்த மாதிரி, நம்ம ஊரிலேயும் இருந்த நல்ல அரசியல்வாதிகள் பத்தி - நடந்த சம்பவங்கள் பற்றி மக்கள் மறந்து போகாம இருக்க நிறைய எழுதுங்கப்பா ..... இல்லைனா, இப்போதைக்கு:
"கடமை (குடும்பத்துக்கு மட்டும்)
கண்ணியம் (அப்படினா கிலோ என்ன விலை?)
கட்டுப்பாடு (ஹா, ஹா, ஹா, ஹா, ..... செம.....)"
என்று சொல்றவங்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு, மக்கள்  நொந்து நூடுல்ஸ் ஆகித்தான் இருப்பாங்க....
என்ன என்னவோ கொள்கை, கோட்பாடு, தேர்தல் அறிக்கைகள் கொடுத்தாலும்,  எந்த அரசியல்வாதியும் சொல்ல வருவது என்னவென்றால்,  " நான் காமெடி பீஸ் ஆவதை தடுக்க, மக்களை காமெடி பீஸ் ஆக்கிடுவேன்." 
  
ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம,  ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப  வச்சுட்டாங்களே!



Sunday, September 12, 2010

ரோட்டு மேல முட்டை போடு டோய்!

FM Radio station மாதிரி,  வெட்டி பேச்சுக்கும் சிலர் நேயர் விருப்பம் டாபிக் அனுப்ப ஆரம்பிச்சாட்டங்கப்பா.
(என்னா பில்ட் அப்பு....... ஒரே அப்பு..... அப்பீட்டு!)
 அமெரிக்காவில வேடிக்கையாக எதுவுமே நடக்காதா? வித்தியாசமான நிகழ்வுகளை அவ்வப்போது எழுதுங்களேன் என்று,  நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன  பாட்டியின்  மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி  கேட்டு இருந்தார். இத்தனை நெருங்கிய சொந்தம் கேட்கும்போது, மாட்டேன் என்று சொல்ல நமது இளகிய மனம் மறுத்து விட்டது.  அவ்வப்பொழுது,  அமெரிக்காவில் இருக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் - ஊர்கள் - festivals பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

எல்லோரும் டூர் பஸ்ல ஏறியாச்சா?  குட்!
 போலாம், ரைட்!

இன்று நாம் போற ஊரு பேரு, அரிசோனா (Arizona)  மாநிலத்தில் உள்ள ஓட்மன் (Oatman) என்ற ஊரு.
சிறுமலை அடிவாரத்தில் அமைந்த இந்த ஊரில், எந்த பெரிய கட்டடமும் இல்லை.  ஊரின், கடைவீதியை கீழே  உள்ள படத்தில் காணலாம்.  நம்புங்க, மக்கா..... இதுவும் அமெரிக்காதான்!


ஊரு பெருமை: 

Mining (சுரங்க வேலை) செய்து கொண்டிருந்த காரணத்துக்காக,  நூறு வருடங்களுக்கு முன்னர், இந்த சிற்றூர் உருவானது. 1915 ஆம் ஆண்டில்,  இரண்டு miners (சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள்), குகைக்குள் $10 million மதிப்புள்ள தங்க சுரங்கம்  கண்டு பிடித்த பின், அந்த ஊரின் மக்கள்தொகை   3500 ஆக இருந்தது. (அவ்வளவுதானா? அவ்வளவுதான்!)  1921 ஆம் ஆண்டில், ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டு பலர் தங்கள் கடைகளையும் வீடுகளையும் இழந்தனர். 1925 ஆண்டில்,  பலருக்கு வேலை தந்து கொண்டு இருந்த முக்கியமான mining company, United Eastern mines  ,  பல்வேறு காரணங்களுக்காக மூடி விட நேர்ந்தது. அதனால், பலர் தங்கள் வேலையை இழந்தனர்.  இப்பொழுது, இந்த ஊரின்  மக்கள் தொகை 159 பேர் மட்டுமே.  (அவ்வளவுதானா? அவ்வளவுதான்!)

அங்கு கண்டுப்பிடிக்கப்பட்ட தங்க சுரங்கத்தில், ஒரு ஆண்டுக்கு சுமார் 40,000  0z (ounce) வரை தங்கம் எடுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு, அந்த சுரங்கம் மூடப்பட்டது. இன்னும், அதில் தங்கம் இருப்பதாகவும், அந்த சுரங்கத்தை பிற்கால தேவைகளுக்காக பத்திரப்படுத்தி மூடி விட்டதாகவும் சொல்கிறார்கள். 

இன்னும் பழமை மாறாமல், அப்படியே ஊரை வைத்து இருக்கிறார்கள்.  அதற்கு இந்த சிறு குன்றுக்கு அடியில் இருக்கும் இந்த  பெட்ரோல் பங்க் சாட்சி. (சார், பஸ் பத்து நிமிஷம் இங்கே நிற்கும். போய்,  காபி - டீ குடிக்கிறவங்க குடிச்சிட்டு வாங்க!)
 ஊரை சுத்தி காட்டுறோம்.  அங்கே இருக்கிற திருவிழா காட்டலைனா எப்பூடி?
அமெரிக்காவிலேயே, கோடைகாலத்தில் அதிக சூடாகும் இடம்,  California மாநிலத்தில் உள்ள Volcano Springs என்ற இடம்.  1902  ஆம் வருடம்,  ஜூன் மாதத்தில் சுமார்  54 டிகிரி (129 degree F)  சென்றதாக பதிவு ஆகி உள்ளது.  ஓட்மன், அந்த அளவுக்கு சூடாகாத இடம்.  இருந்தாலும்,  ஒவ்வொரு வருடமும், அதிகபட்சமாக ஜூலை 4 ல் வரும் அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி சுமார் 41 டிகிரி (106 degree F) செல்லும்.  (சரி, அதுக்கு என்ன இப்போ? அப்படின்னு நீங்க கேக்குறீங்க.  அதுலதான் மேட்டர் இருக்குதுங்க.)


அங்கே என்ன போஸ்டர்?  அதாங்க, ஊரு விசேஷத்துக்கு கூப்பிடுறாங்க!
உச்சி வெயில் மண்டையை புளக்கிற நேரத்துல,  ரோட்ல அப்படியே முட்டையை உடைச்சு ஊத்தி பொரிச்சு தரணுமாம்.  வேணும்னா, லென்சு மாதிரி சின்ன solar கருவி துணையுடன் சூடு பிடிக்க வைக்கலாம்.  யாரு, சீக்கிரமா பொரிச்சு தராங்களோ அவங்க தான் வின்னர்.  (தமிழ் பட ஹீரோக்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி.)

 ஆமா,  இப்படி ரோட்ல முட்டையை பொரிச்சா, யார் சாப்பிடுறது? என்ற உங்கள் ஆர்வமான கேள்விக்கு பதில் கேட்க ரெடியா? 
அமெரிக்காவிலேயே இந்த ஊரில் மட்டும்தான்  சுதந்தரமாக  சுற்றித் திரியும் கழுதைகள் தான்.  நம்புங்க, மக்கா!


சுரங்க வேலை நடந்து கொண்டிருந்தப்போ,  பொதி சுமக்க கழுதைகளை அந்த காலத்தில் உபயோகப் படுத்தி இருக்காங்க.  அப்புறம்,  நொடிஞ்சு ஊரை விட்டு விட்டு, மக்கள் போனப்போ கழுதைகளை பக்கத்தில் இருந்த சின்ன மலைப்பக்கம் விட்டு விட்டு போய்ட்டாங்கப்பா.  அதுங்க அங்கேயே குட்டி போட்டு, இனம் பெருகி இப்போ wild animals ஆ சுத்தி கிட்டு இருக்குங்க. ஆனாலும், ரொம்ப விவரமான கழுதைங்க.  தினமும் காலையில் மலையில் இருந்து இறங்கி, ஊருக்குள்ள சாப்பிட வந்துரும்.   உங்களை மாதிரி டூரிஸ்ட்களை சுத்தி நின்னு மாமூலுக்கு மொச்சி எடுத்துரும்.  ஊரு கடைகளில் ஒரு பிசினஸ் ஆக கழுதைக்கு கொடுக்கிற மாதிரி உணவு விக்கிறாங்க.... அதை மக்கள் வாங்கி, கழுதைகளுக்கு சந்தோஷமாக கப்பம் கட்டுறாங்க.  ஜூலை மாதத்தில் மட்டும், ரோட்ல போட்ட முட்டை வேற போனஸ்.  பாருங்க, எப்படி  கொழு கொழுன்னு இருக்குதுன்னு!

சரி, டூர் முடிஞ்சுருச்சு.....  எல்லோரும் தங்கள் தங்கள் உடமைகளை மட்டும் எடுத்துக்கிட்டு இறங்குங்க.

டொன் போஸ்கோ நிறுவனம் வெளியிடும்  சிறுவர்களுக்கான மாத பத்திரிகை: "அரும்பு"
இதில்,  "Less traveled roads in America"  பற்றி மாதம்தோறும் எழுதி வருகிறேன்.  அந்த விஷயங்களைப்  பதிவாகவும் போடலாமே என்ற சகோதர  நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில்,  நீங்கள் வாசிக்கத் தக்கதாக tinkering வேலை பார்த்து இங்கே தந்து இருக்கிறேன்.   அப்போ அப்போ,  வெட்டி பேச்சில் இப்படி டூர் அடிக்கலாமா என்று  உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்ல மறக்காதீர்கள்!
நன்றி!

Tuesday, September 7, 2010

என்ன சொல்றாங்க என்றே தெரியலப்பா.....

  டொடொயிங்..... டோடிங்...... டொடொயிங்......



வணக்கம்.  செய்திகள் வாசிப்பது,  தம்பட்டம் தாயம்மா:

தலைப்பு செய்திகள்:   லாஜிக்கே இல்லாத லாஜிக் செய்திகளுக்கு இந்தியாவின் பிரதம மந்திரியின் அறிக்கைகள் என்றும் குறைவு வைத்ததில்லை. 

 
 தானிய கிடங்குகளில்,  தானியங்கள் கெட்டுப் போகுமுன்  அதை ஏழைகளுக்கு இலவசமாக  வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்  பரிந்துரைத்து உள்ளது.  வறுமை கோட்டின் கீழே இருக்கும்   37 % மக்களுக்கு உணவை அப்படி வழங்குவது சாத்தியப்படாது என்று பிரதமர் தாழ்மையுடன் தெரிவித்து உள்ளார்.  ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் வண்ணம் செய்து இருக்கிறோம்.  அதுவே போதுமானது.  மேலும், இலவச தானியங்கள் கிடைக்கும் படி செய்து விட்டால்,   மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு, அதிகம் விவசாயம் செய்ய ஒரு உந்துதல் இல்லாமல் போய் விடும்.  பிறகு,  உணவே இல்லாது போய்விடும். அப்படி போன பின்,  இலவசமாக வழங்க உணவு இருக்காது என்று கூறி உள்ளார்.  

http://economictimes.indiatimes.com/news/economy/agriculture/Distributing-free-foodgrain-not-practical-PM/articleshow/6506073.cms

இதுல இருக்கிற லாஜிக் யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க..... நானும் தெளிஞ்சிக்கிறேன்.  சாரி, தெரிஞ்சுக்கிறேன். உணவு தானியங்கள் கெட்டு போனாலும் பரவாயில்லையா?    ஓ!   ஒருவேளை பிரதமர், இப்பொழுதுதான் ரஜினியின் "சிவாஜி" படம் பார்த்து இருப்பாரோ?   எல்லோருமே - குறிப்பாக ஏழைகள் - இலவச தானியம், இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி பெற்றுகொண்டால்,  ஒரு incentive இல்லாமல்,  சோம்பேறிகளாய் ஆகிவிட்டு, வேலை செய்யாமல் - விவசாயம் பார்க்காமல் - அப்புறம் நாட்டுல எல்லோருக்கும் சோத்துக்கு வழி ஏது?   விவசாயிகளை பட்டினி போட்டாதான் ஒழுங்கா வேலை செய்வாங்க என்பது போல இருக்குதே...... இந்த சுப்ரீம் கோர்ட் வேற ........ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம..... என்னவோ போங்க..... எல்லாமே அந்த "காசிமேடு" ஆதிக்கே வெளிச்சம்! 


வெட்டி பேச்சு சித்ரா:  தாயம்மா, டேக் இட் ஈஸி...... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி டென்ஷன் ஆகுற?  எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கிறது. உனக்கு லாஜிக் இடிக்குது...... பிரதமருக்கு பிரக்டிகல் மேட்டர் இடிக்குது....உனக்கு நான் புரிய வைக்கிறேன், பாரு.
ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு  தன்கிட்ட இருக்கிற குறைகள்தான்  பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம்.  எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை  ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது?  நீங்களே பாருங்க.......!!!   


 தம்பட்டம் தாயம்மா:   ஆஹா.... நான் என்ன சொல்ல வந்தேன்..... நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கிற? ஏன் இப்படி?
வெட்டி  பேச்சு சித்ரா:  அப்படித்தான்.   நான் இந்தியன் ஆச்சே! 





Thursday, September 2, 2010

ஆஸ்கார் விருது மட்டும் தான் விருதா?

நம்மூரிலும்  ஒரு சிறந்த   performance க்கு பாராட்டாக,  "இது ஆஸ்கார் விருது"க்கு உரிய நடிப்பு - நடிகர் - என்று சொல்கிறார்கள்.  அதே வேளையில்,  வெளிநாடுகளில் - குறிப்பாக - அமெரிக்காவில் இருக்கும் மற்ற சில "சிறப்பு" விருதுகள் புறக்கணிக்கப்பட்டு வருவது வெட்டி பேச்சின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.  ஏன்? நம்மூரிலும் இந்த விருதுகள் கொடுக்கும் அளவுக்கு "திறமைசாலிகள்" இல்லையா?

உறுதிமொழி:  இது வேடிக்கை பேச்சு அல்ல.  உண்மையிலேயே, இத்தகைய விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்றன.

1.  The Razzies :  The Golden Raspberry Awards:
 யார்  யாருக்கு  கிடைக்கும் :   மிகவும் மோசமான முறையில் சினிமாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு - நடிக நடிகைகள் - டைரக்டர் - தயாரிப்பாளர் - என்று பட்டியல் நீள்கிறது.

பரிந்துரைக்க காரணம்:  சினிமாவில் சிறந்த சேவைக்கு மட்டும் விருதுகளும் மரியாதையும் கொடுத்து  உற்சாகப்படுத்துவதை   போல,  நேர் மாறாக தங்கள் "திறமை(குறைவு)களை" வெளிப்படுத்துபவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்.

விருதின் பெயர் காரணம்:  1981 ஆம் ஆண்டு,   ஹாலிவுட் திரையுலக புள்ளிகளில் ஒருவரான ஜான் வில்சன் என்பவர், ஆஸ்கார் விருது வழங்கிய நேரம், தான் ஏற்பாடு செய்து இருந்த பார்டியில் அந்த வருடத்தின் worst films and performance குறித்து பேசி,  அதற்கு உரியவர்களை தேர்ந்து எடுக்க சொல்லித் தன் விருந்தினர்களை விளையாட்டாக கேட்டு கொண்டார்.  அந்த ஐடியா, "சூப்பர் ஹிட்" ஆகி விட்டது.  இன்று 650 ஆட்கள் கொண்ட நடுவர் குழு, உண்மையிலேயே வோட்டு எடுத்து முடிவு செய்து விருது வழங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வருடமும், இந்த விருது, ஆஸ்கார் விருது வழங்கப்படும் நாளுக்கு முன் தினம் ஒரு பெரிய விழாவில் வைத்து வழங்கப் படுகிறது.
இந்த விருதுகளை, பெரும்பாலும் பலர் புறக்கணித்து  மறுத்தாலும், அதையும் சந்தோஷமாக ,  தங்களின் திறனை  improve செய்து கொள்ள உந்தும் விருதாக கருதி, நேரில் சென்று வாங்கி கொண்டு நன்றி சொல்லும் அளவுக்கு உள்ள Sportive உள்ளம் கொண்டவர்களும் உண்டு.

குறிப்பிடத்தக்கவர்கள்:  2004 ஆம் ஆண்டு Hale Barry என்ற நடிகை,  இந்த விருதை  நேரில் வந்து   வாங்கி கொண்டு,  தனது  மோசமான நடிப்பு திறமையையும்  நன்கு வெளிக்கொண்டு வந்த அந்த பட டைரக்டர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொள்வதாக சொல்லிய போது, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.  இவர் 2002 ஆம் ஆண்டுதான் "Monster's Ball" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


2.  The Ig Nobel Prize: 


யார் யாருக்கு கிடைக்கும்:  அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தங்களது வித்தியாசமான கற்பனைத் திறனை - காரணத்தை - பயன்படுத்தி கொள்பவர்.  (அதாவது, இதையும் போய் ஆராய்ச்சி பண்ண,  ரூம் போட்டு யோசித்தார்களா! என்று மற்றவரை அயர வைப்பவர்கள். )

பரிந்துரைக்க காரணம்:  தங்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி கொள்ளாமல்,  தனக்கு வந்த அசாதாரண ஐடியாவை துணிந்து ஆராய்ச்சி செய்ய முன்வந்தவர்களை அடையாளம் கண்டு "கௌரவிப்பது".

விருதின் பெயர் காரணம்:  Ignoble என்ற ஆங்கில வார்த்தையை ஆதாரமாக கொண்டது.  (தமிழ் அர்த்தம்: யோக்கியதை அற்ற ..... தரமற்ற....)  ....... இப்போ புரிந்து இருக்குமே!
"Annals of Improbable Research "  என்ற பத்திரிகை, வருடா வருடம் விருதுக்கு உரியவர்களை தேர்ந்து எடுத்து "அகௌரவப்" படுத்துகிறது. அவ்வ்வ்வ்.......
1995 இல்,  பிரிட்டிஷ் அரசாங்கம் மூலமாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் யாருக்கும் இது கொடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு இது பிரபலமானது.

குறிப்படத்தக்கவர்கள்:  Bra ஒன்றையே அவசர கால நேரத்தில்,  பெண்கள் Gas mask ஆகவும் உபயோகித்துக் கொள்ளும் விதத்தில் கண்டு பிடித்தவர்.
மாட்டுச் சாணத்தில் இருந்து வனில்லா (vanilla) flavoring எடுக்க முயன்றவர்.

3.  The Darwin Awards:
யார் யாருக்கு கிடைக்கும்:   இதை வாங்க முதலில்,  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்,  அந்த வருடம் இறந்திருக்க வேண்டும்.  இறந்தவருக்கு எதற்கு விருது என்றா கேட்கிறீங்க?
பரிந்துரைக்க காரணம்:   "அவர் எப்படி இறந்தார்?" என்பதை பொறுத்தது.  இருப்பதிலேயே மிகவும் முட்டாள்த்தனமான தனது  செயலால் - காரணத்தால் -  ஒருவர் இறந்து இருக்க வேண்டும்.  (the most idiotic way of death)

 அப்படி இறந்த காரணங்களை பரிசீலித்து, அவரின்  முட்டாள்த்தனத்தையும் "கௌரவிக்கும் வகையில்" ,  posthumous ஆக இந்த விருதுக்கு,  அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
விருதின் பெயர் காரணம்:     Mr.Charles Darwin அவர்களின்,  "Survival of the fittest" படி,  ஒரு குழு விளையாட்டாக 80 களில் ஆரம்பித்த விருது இது.   "To honor the unfortunate people who “do a service to humanity by removing themselves from the gene pool."

 குறிப்படத்தக்கவர்கள்:   பெட்ரோல் tank ஒன்றில்,  போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக,  tank உள் இருட்டாக இருக்கிறதே என்று, கையில் இருந்த சிகரட்டு லைட்டர் கொண்டு பற்ற வைத்து உள்ளே எட்டி பார்த்த ஒருவர்,  tank வெடித்து சிதறி, அதே இடத்தில் உயிர் இழந்தார்.
24 வது மாடியில் இருக்கும் தனது அலுவலக ஜன்னல்  கண்ணாடி, எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று காண்பதற்காக முழு வேகத்துடன் ஓடி வந்து அந்த கண்ணாடியில் மோதிய ஒரு வக்கீல்,  கண்ணாடி உடைந்து  அவ்வளவு உயரத்தில் இருந்து .............. (கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்க!)

பதிவுலக மக்களாகிய  எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பதிவர்களே - பதிவுகளை தவறாமல் வாசிக்கும் வாசகர்களே!  அலை கடல் என திரண்டு வாரீர்!  இந்த மூன்று விருதுகளுக்கும்,  தமிழ்நாட்டில்  மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!!  (எங்கே போய் கூறணுமா?  மக்கா...... எனது கமென்ட்ஸ் ஏரியாலதான் ...... ஹையோ..... ஹையோ....!)