Showing posts with label நண்பர்கள் கலாட்டா. Show all posts
Showing posts with label நண்பர்கள் கலாட்டா. Show all posts

Saturday, October 22, 2011

அமெரிக்காவிலும் தீபாவளி திருநாள்



"தல" தீபாவளி பட்சணங்கள்:

திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின், அம்மா வீட்டில் கொண்டாட முடியாமல் வரும் தல தீபாவளியை மறப்பது பலருக்கு கடினமான வேலைதான்.

புது உடைகள் தயாராக இருக்கும். ஏதோ ஒரு தமிழ் சங்கமோ இந்திய சங்கமோ கலை நிகழ்ச்சிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும். குறிப்பாக, குழந்தை செல்வம் பெற்றவர்க்கு தீபாவளி நேரம் கோலாகலம் தான். குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு, ஊரு நினைப்பும், உறவினர்களின் பிரிவும் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்.

திருமணம் ஆகி அமெரிக்கா வந்த புதிதில், எனக்கு அமைந்த முதல் நட்பு வட்டம் - ஆந்திராவில் இருந்து வந்த புஷ்பா ; பெங்காலி பெண், மௌஷ்மி என்று சிறியதாக இருந்தது. மூவரும் முதல் தீபாவளி கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்த நேரம். ஊர் நினைவுகள் மனதில் பாரமாக அழுத்த ஒரு உற்சாகம் இல்லாமல் இருந்தோம். புஷ்பா ஒரு நாள், எங்களை அழைத்து, " முதல் தீபாவளிக்கு என்று ஸ்பெஷல் ஆக ஏதாவது செய்வோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதற்கு பதிலாக , நாமே பலகாரங்கள் எல்லாம் சேர்ந்து செய்தால் என்ன? நிச்சயமாக தீபாவளி களைகட்டிவிடும்," என்று பட்டாசாய் ஆங்கிலத்தில் படபடத்தாள்.

அந்த நேரம், எங்கள் மூவரில் புஷ்பாதான் கொஞ்சமாவது சமைக்கத் தெரிந்தவள். நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள். மௌஷ்மியோ எனக்கும் ஒரு படி மேல். living room (வரவேற்பு அறை) க்கும் கிச்சனுக்கும் (அடுக்களைக்கும்) வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிந்தாலே போதும் என்று திருமணம் செய்து கொண்டவள்.

அப்பொழுதெல்லாம் , தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)


மௌஷ்மி வீட்டுக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது வந்தது. புஷ்பாவிடம் கேட்டு தோசை செய்யப் பழகி விட்டதாக சொல்லி, என்னை அழைத்து இருந்தாள். அவளது சமையல் லேப் (lab)  நான் வெள்ளெலி. அடை, ஊத்தப்பம், சப்பாத்தி சேர்ந்த 3-in-1 ஐட்டம் ஒன்று முதலில் வந்தது. அதுதான் தோசையாம். தொட்டுக் கொள்ள பருப்பு ரசம் வந்தது. "சாம்பார் வைக்கவில்லையா?" என்றேன். "அதுதானே இது!" என்று அந்த ரசத்தை கை காட்டினாள். கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

"எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."

இப்படி இரண்டு கில்லாடி அடியாட்களை வைத்து கொண்டு, கிச்சனில்  சமையல் அடாவடிக்கு தயார் ஆகி விட்ட புஷ்பாவை இப்பொழுது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

"This Friday morning, come to my place. I asked my mom how to make " sweet laddus". Lets try it." மீண்டும் புஷ்பாவின் நுனி நாக்கு ஆங்கில அழைப்பு.

மௌஷ்மியும் நானும், "நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்.....நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்....... நாங்களும் சமையல் ரவுடிகள் தான்" என்று அவள் வீட்டுக்கு சென்றோம். புஷ்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்கள் சமையல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். அணுகுண்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு கூட இப்படி நுணுக்கமாக குறிப்பெடுக்கும் இரண்டு assistants கிடைத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடலை மாவை பக்குவமாக கலந்து வைத்தாள். சீனிபாகை தயார் செய்தாள். கண்ணு கரண்டியை எடுத்து பூந்திக்கு தயார் ஆனபோது, மௌஷ்மி ஒரு சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம். "புஷ்பா, எல்லாம் சரி. இந்த கடலை மாவில் எப்பொழுதுதான் lettuce சேர்க்கப் போறே?"

(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )

"lettuce???" புஷ்பா அதிர்ந்தாள்.
"நீதானே ..... ஸ்வீட் lettuce செய்யப்போவதாக சொல்லி போன் பண்ணியே," மௌஷ்மி வெள்ளந்தியாக ஆக பதிலளித்தாள்.
புஷ்பா, ஸ்வீட் laddus என்று ஸ்டைல் ஆக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது, மௌஷ்மிக்கு போனில் ஸ்வீட் lettuce என்று கேட்டு இருக்கிறது. ஆந்திராவில் அப்படி ஒரு தீபாவளி ஸ்வீட் ரொம்ப பாப்புலர் போல என்று நினைத்து வந்து இருக்கிறாள். அவள் விஷயத்தை சொல்லவும், நானும் புஷ்பாவும் புரையேறி கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.

அந்த சந்தோஷ சிரிப்பினாலோ என்னவோ, அன்னைக்கு லட்டுக்களில் இனிப்பு அதிகமாகி இருந்தது.

நான், முதலில் உளுந்து வடை செய்தபோது, உளுந்து போண்டாவாக வந்து கொண்டு இருந்தது. பின், உளுந்து அமீபாவாக shape மாறியது. நண்பர்கள் கையில் இருப்பது உளுந்து வடைதான் என்று நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது.

இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்.

இந்த தீபாவளி நேரத்தில், சமையல் ஆர்வ கோளாறு கொண்ட புது மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் - உள்ளே தள்ளியதை வெளியே துப்பவும் முடியாமல் - திருதிரு விழிகளுடன் வரும் புதிதாய் திருமணம் ஆன நண்பர்களுக்கு மறக்காமல் இனிய "தல(விதி) தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்ல மறக்காதீங்க. காரணம், முதல் தீபாவளி உள்ளவரை, சமையல் அலம்பல்கள் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்......



மற்ற அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: நன்றி கூகிள்வதி . ( இல்லை, ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ள ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)


(பின் குறிப்பு: அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )

Sunday, January 16, 2011

நல்லா படிச்சீங்களா?

தமிழ்மண 2010 விருதுகளை  வென்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,   எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிக்கிறேன்ங்க! 


எனது கல்லூரி தோழி உமாவை, நான் சென்ற முறை திருச்சி சென்ற பொழுது, சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்பொழுது உமா, பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தாள்.
" நல்லா படிக்கிறியா?"
இப்படி ஒரு மெகா புளித்து போன  கேள்வி கேட்ட வாய்க்கு, அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர்  தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும்.   செய்யல..... நல்ல பொண்ணு!

"நல்லா படிக்கிறேன். கிளாஸ்ல first .  நீங்க என் அம்மா கிளாஸ் மேட் தானே?  எங்க அம்மா எப்படி படிப்பாங்க?", என்று கேட்டாளே பார்க்கலாம்.
"உங்கள் அம்மாவும் கிளாஸ் first ஆகத்தான் இருந்தாங்க," என்று உண்மையைத்தான் சொன்னேன்.
இருந்தாலும், நம்பாத மாதிரி ஒரு லுக் விட்டாள்.
"அம்மாவோட friend ல. அப்படித்தான் சொல்வீங்க."

நல்ல வேளை,  "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை.  ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! 

அவர்கள் வீட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபொழுது....  மனதில்  "flashback....." ஓடாமல் இருக்குமா?

நான் படித்த கான்வென்ட்டில் டென்த் வரை, இங்கிலீஷ் மீடியம் ஒரே ஒரு  செக் ஷன் மட்டும் தான். அதனால்,  என்னுடன் முதல் வகுப்பில் இருந்து டென்த் வரை படித்தவர்கள் - ஒரு சிலரை தவிர - மற்றவர்கள்  மாறவே இல்லை. அதே குரூப் தான்.

நிஜமாவே  தங்கள் படிப்பில், கருமமே  கண்ணாய் இருந்தவர்கள் - புத்தகத்தை படிச்சு - தவளையை கிழிக்கிற  first குரூப் எல்லாம் எடுத்துட்டு - நான் டாக்டர் ஆகப் போறேன் - engineer ஆகப் போறேன் - குப்பை கொட்டுனாலும், அதை கம்ப்யூட்டர்ல தான் கொட்டப் போறேன் -   என்று  + 1   இல் தான்  பிரிந்து சென்றார்கள். 

மற்றவர்கள்,  புத்தகத்தை படிச்சுட்டு அதையே கிழிக்கிற (பிட்டுக்குதான், ஹி  ஹி ஹி ஹி ..... )   குரூப்ஸ்  தேடி பார்த்து எடுத்து படித்தோம்.  அப்புறம்,  ஆர்ட்ஸ் காலேஜ் கூட சேர்ந்து ஒரே படையாக - வேறு வேறு டிகிரி வாங்க சென்றோம்.  மதிய உணவு நேரம்,  பலர்  பெரும்பாலும் சந்தித்து கொள்வோம்.

இதில்,   B.Com சேர்ந்த நானும் இன்னொரு தோழியும்  - B.A. History சேர்ந்த ஒருத்தியை சும்மா கலாய்த்து கொண்டே இருப்போம்.
ஒரு நாளு  அவளும் "பொறுத்தது போதும்.  பொங்கி எழு, மனோகரி!" மாதிரி பொங்கப் பானையாய் பொங்கிட்டா!

"படிக்கிறது Bachelor of Commerce தானே?  Bachelor of C(k)ombus (கொம்புஸ்) இல்லையே....  என்னமா அலட்டிக்கிறீங்க ...... நான் B.A. முடிச்சிட்டு,  அடுத்து உங்களுக்காகவே லா காலேஜ்ல  சேர்ந்துட்டு லாயர் ஆகிட்டு  - உங்க  மேல மான நஷ்டம் - மனக் கஷ்டம்னு எல்லாம் சொல்லி - நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டு - நீங்க வேலை பார்க்க போற பேங்க்லேயே,  நீங்க கொள்ளை அடிச்சாத்தான் அதை கட்ட முடியும்ங்கற நிலைமைக்கு உங்களைத் தள்ளி - உங்களுக்கு எதிரா நானே வாதாடி,  உங்களை ஒரு வழி பண்றேன்," என்று சொல்லிவிட்டு, தன் முன்னால் இருந்த புத்தக கட்டின் மேல  சத்தியம் செய்தாள்.

ஐயோ...... விளையாட்டுக்கு என்றாலும், இப்படி படிக்கிற புக் மேல சத்தியம் பண்ணிட்டாளே என்று  எட்டி பார்த்தோம்.  "Women's Era" பத்திரிகை ஒன்று அவளது History course books மேல இருந்தது.  அட்டைப் படத்தில்,  ஏதோ ஒரு  பொண்ணு சிரித்து கொண்டு இருந்தாள்.  அய்யோ.... பாவம்.... யார் பெத்த பொண்ணோ?


அருகில் இருந்த  B.Com. கிளாஸ் மேட் தோழி , "சரி, விடுமா.  எனக்கு  Reserve Bank Governor வேலை கொடுத்துட்டு , என் signature காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி   பேசாதே.   நானே அகப்பை (கரண்டி)  பிடிக்கப் போற  கைக்கு, Accountancy எதுக்குன்னு  உள்ளூர புலம்பிக்கிட்டு இருக்கேன். நீ வேற மிரட்டாதே."


அன்று சிரிப்போசை அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.....  இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.   இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ...... அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட,  இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள்.   History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள்,   Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள்.   அதற்குள், படிக்கும் போது மட்டும் என்ன அலப்பறை பண்றோம் என்று சிரித்து கொண்டேன்.

மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை.  அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... 

இந்த நினைப்பு ஒரு பக்கம் திடீர்னு வந்தப்போ,   ஒரு நண்பரின் பர்த்டே  பார்ட்டிக்கு போக வேண்டியது வந்தது .  வந்து இருந்த எல்லோருமே, ஆந்த்ராவில் இருந்து அமெரிக்காவுல  மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க வந்தவர்கள்.  அதில் ஒருவன்,  பயங்கர பாலையா காரு fan .........

அவன் வீட்டில் இருந்து வரும் போதே, நல்லா "தண்ணி"  அடிச்சிட்டு  வந்தாச்சு .... சிறிது நேரத்தில்,   தன்னையே பாலையாவாக நினைத்து தெலுங்கில் ஆக்ரோஷமாக வசனம் பேச ஆரம்பித்து விட்டான்.  எனக்கோ, தெலுங்கு - ஹிந்தி எல்லாமே ஒண்ணுதான்..... விளங்காத போது, அது என்ன பாஷையாக இருந்தால் என்ன?  இருந்தாலும், அவனது பாலையா சேட்டைகளை கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பாலையா, விரலைத் தூக்க - ஒரு காட்சியில் ட்ரைன் ஒன்று பின்னோக்கி செல்லும்.  அந்த காட்சியை வைத்து மற்றவர்கள்,  அவனை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு எல்லோர் மேலும் கோபம் அதிகமாகியது.  திட்ட ஆரம்பித்தான்..... மற்றவர்கள் முகத்தை பார்த்தேன்.  அவங்க  லுக் விட்ட விதம்  சரியா இல்லை.....  தெலுங்கு புரியாமல் இருந்ததை பாக்கியமாக கருதினேன்.  என்ன சொல்லி திட்டி இருப்பான்  என்று புரியாமலே புரிந்த மாதிரி இருந்துச்சு.....

அடுத்த பில்டிங்கில்  இருந்த  அவனது  வீட்டுக்கு (apartment) அழைத்து சென்று விட,  இரண்டு பேர்  முனைந்தார்கள்.

பார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான்.  வீர வசனம் பேசினான் -  "இருக்கா?  இல்லையா?"  என்பதற்கே ஸ்பெஷல் பொங்கல் திருநாள் பட்டிமன்றம்,  டிவியில  நடத்தி முடிவெடுக்க வேண்டி  இருந்த தன் மீசையை தட்டி விட்டு கொண்டான் - தன் தொடையை தட்டி கொண்டு, ஒத்தை விரலை தூக்கி விட்டு என்னவென்னவோ சொல்லி விட்டு,  அப்படியே ஒரு விரலை நீட்டிக்கொண்டு நின்றான்.



என்ன ஆச்சு என்று கேட்ட போது,   கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒருவர்  " இல்லை,  அவனை கிண்டல் செய்ததற்கு, அவனது கோபத்தை தூண்டி விட்டுட்டோமாம்.    இப்போ, அங்கே நின்னுக்கிட்டு இருக்கிற நம்ம கிஷோர்  ஓட காரு பின்னோக்கி  போகுமாம்.  சபதம் போடுறான்.  அந்த கார்,  அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும்,  நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"
 
டைம் பார்த்தோம்.  இரவு மணி, ஒன்று.  குளிர் - zero டிகிரிக்கும் கீழே.....  நீட்டிய விரலை மடக்காமல்,  நிற்கிறான் .... நிற்கிறான்..... சிலையாட்டம் நிற்கிறான் ......  அப்படியே  கடுங்குளிர்ல விறைச்சு போய்த்தான் நின்னானோ என்னவோ......

வேறு வழி இல்லாமல்,  அவன் அசந்த  சமயம்  கிஷோர்,  தன் காரில் ஏறி,  கார் ஸ்டார்ட் செய்து காரை reverse செய்து "பின்னுக்கு" போகச் செய்தான்.  பாலையா ரசிகருக்கு பரம சந்தோஷம்.... மீண்டும் ஒற்றை விரல் தூக்கி, எங்கள் அனைவருக்கும் ஒரு வார்னிங்..... பின், ஒரு வெற்றி புன்னகை.... சந்தோஷமாக தன் வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் போவதையே சிறிது நேரம்,  வெறித்து பார்த்து கொண்டு இருந்த எங்களின் சிரிப்போசை அடங்கவும் ரொம்ப நேரம் ஆச்சு......

இன்னும் சில வருடங்களில்,  இவனும் பெரிய வேலையில் இருக்கலாம்.   இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?

Tuesday, December 14, 2010

கேள்வி நேரம் (தொடர் பதிவு)

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தப்போ,  நம்ம "Tasty Appetite -  Jay" 
- ஒரு  தொடர்  பதிவு  கேள்வி நேரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்காங்க.  இந்த கேள்விகள் எல்லாம், சமையல் ராணிகளின் கோட்டைக்குள்ளே  சுத்திக்கிட்டு இருந்து இருக்குப்பா.  Jay - ஒரு வம்பு பண்ணலாம்னு நினைச்சு,   இதுல என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க....  நல்லா இருங்க, மக்கா!

வெட்டி பேச்சில் வந்த  "சமையல் அட்டூழியம்"  என்ற பதிவை   பார்த்த பிறகு, மக்கள் பெருவெள்ளத்தின் கோரிக்கை:  "தயவு செய்து சமையல் குறிப்பு எதுவும் நீங்க போட்டுராதீங்க,"  என்று.  இன்னைக்கு வரைக்கும், சத்தியத்தை காப்பாத்திட்டு வாரேன்.  ரைட்டு!

வெயிட் அ மினுடே போர் ௫ மினுட்ஸ்.  ஏதாவது புரிஞ்சுதா?  Jay Madam அனுப்பிய  கேள்வி எல்லாம் ஆங்கிலத்தில் இருந்துச்சா -   அதை அப்படியே டைப் பண்ணா,  சரி வரல. .  இருங்க ..... முழி  பேத்துருவோம் .... சாரி ... மொழி பெயர்த்து விடுவோம்.

1.  உங்களுக்குப் பிடித்த  உணவு வகை (cuisine -  உதாரணம்: சைனீஸ்?  மெக்சிகன்? இடாலியன்? தாய்? இந்தியன்?) 
அல்லது உணவு ஐட்டம்  எது?
மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள்  அல்லது   நாலு கால் + சின்ன வால்   (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்)  அல்லது  காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ  "மீன்"!)  வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும்   ஓகே தான்.   இல்லைங்க,  அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா   என்று எல்லாம் நான்  பார்க்கிறது இல்லை. 


2.  If you could have any four people, from any where in place, over for dinner, who would they be?
 சிறப்பு விருந்தில்,  கூட இருக்க விரும்பும் நான்கு பேர் .......
1.  என் தட்டில் இருப்பதை "தட்டி" கொண்டு போகாதவர்.
2.   நன் சாப்பிடும் போது, என்னை அழ - கோபப்பட - எரிச்சல் பட வைக்காதவர்.  அதாவது, என் தட்டில் துப்பி வைக்காதவர்.
3 .  உப்புக்கு பதில் சீனியையோ - சீனிக்குப் பதில் உப்பையோ கலந்து வைக்காதவர்.
4 . மிக முக்கியமாக,   நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து  பில் பே (pay)  பண்ணக் கூடியவர்.
இந்த நான்கையும் செய்யக் கூடிய நான்கு பேர்தான்.......

3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்? 
(What made you to  decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட,  ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......


4 .  புதிய வாசகர்களுக்கு, உங்கள் ப்லாக்கை எப்படி விவரித்து சொல்வீர்கள்?
(How would you describe your blog  site to new readers?)
நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.

5.  நீங்கள் இந்த உலகத்தில் இருந்து அழித்து விட நினைக்கும் ஒரு உணவு பொருள் எது?
(If you could just banish any one food, from the earth, what would it be? )
Tofu போட்டு சமைத்த பாம்பு கறி.   இரண்டுமே உவ்வே..........

6.   உங்களுக்கென  இருக்க விரும்பும் ஒரு சூப்பர் பவர் எது?
( What’s the one super power that you wish you had?)
 சூப்பர்  Sonic வேகத்தில், எல்லா இடத்துக்கும்  பறந்து போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும் இல்லை.... ம்ம்ம்ம்........இப்போதைக்கு,  சூப்பர் பவர் மட்டும் இல்லை,  வெறும் பவர் டிடர்ஜென்ட் சோப்பு  கூட என் கையில் இல்லையே...... அவ்வ்வ்வ்.......


Jay , என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல.  ஆனால், நீங்களா யாராவது வந்து மாட்டிக்கிட்டீங்கனா கொண்டாட்டம் தான்..... ஸ்டார்ட்டுங்க! 

Sunday, October 31, 2010

ஜாலி பட்டாசு!

 எல்லா புகழும் இறைவனுக்கே!!!
கர்த்தரின்   சித்தமும் ஆசிரும்  இல்லாது,   நான் இந்த பதிவுலகில் இல்லை.

என்னை பதிவுலகில், வெட்டி பேச்சு பேச வைத்த எனது கணவர், சாலமன்க்காகவும்  - என்னை பதிவுலகுக்கு இழுத்து வந்த எனது நெருங்கிய தோழி,    அம்முவுக்காகவும்  ஒரு ஆயிரம் வாலா!

பதிவர்களில், எனக்கு முதல் கமென்ட் போட்டு ஹா...ஹா.... ஹாசிர்வதித்த  கோமா மேடம்க்காக வடை பாயாசம்!
  http://haasya-rasam.blogspot.com/2010/10/blog-post_18.html


அன்றைய தமிழிஷ் - இன்றைய இன்ட்லி ஜோதியில் நான் ஐக்கியம் ஆக முழுமுதல் காரணம் ஆன "பார்த்ததும் படித்ததும்"  ஜெட்லி சரவணாக்காக நொறுக்  - சாரி, முறுக்கு - சீடை!
http://nee-kelen.blogspot.com/2010/09/blog-post_20.html

பதிவுகள் எழுத வந்த சில நாட்களிலேயே,   என் தந்தையின் மறைவினால்  -  ஊருக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில்,  வாடி இருந்தவளுக்கு - முதல்  விருது ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தி, மேலும் பதிவுகள் எழுத வைத்த அட்டகாசமான ஜலீலா அக்காவுக்காக  லட்டு, ஜாங்கிரி!  
http://allinalljaleela.blogspot.com/2010/10/chicken-biriyani.html

எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்தும் - பின்னூட்டம் இட்டும் - வோட்டுகள் போட்டும் - பரிந்துரை செய்தும் - தங்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும்   வாண வேடிக்கை!!!

 தங்கள் மாறாத தோழமையினால்,  தூய அன்பில் என்னை நெகிழ வைக்கும்  சகல பதிவர்களுக்கும் பூங்கொத்தும் மத்தாப்புக்களும்!!! 

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 


இந்த நூறாவது பதிவு மூலமாக   அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவு எழுத வந்து ஓராண்டு  நிறைவு பெறுகிறது.


சிறப்பு கண்ணோட்டம்:
(மீள் பதிவு  போடாமல் எப்படியோ நூறை தொட்டு விட்டேன்.  இப்போ சேர்த்து வைத்து,   சில highlights மட்டும்:  (ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... தீபாவளி ஸ்பெஷல் - நூறாவது பதிவு ஸ்பெஷல் - ஓராண்டு ஸ்பெஷல் ஷோ - என்று இருக்கட்டுமே!)


பில்ட் அப் எல்லாம் போதும்.  அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசிட்ட என்று கேட்காதீங்க.  அந்த கேள்வியை என்னை நானே கேட்டு இருக்கேனே!
டீ கடை பெஞ்சு
  http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_17.html
  
ஏன் என்னை பாத்து கேட்டாங்க?
 "சித்ரா, நீங்க தமிழ் மொழியை  இன்னும் மறக்கலையா?"
"நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?"

  திருநெல்வேலி நக்கல்: 
"துவையல் ஏன் ரொம்ப குறைவா  இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining டேபிள்க்கு  வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."

"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கறியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் ஒரு வாலும் முளைக்கவா போகுது?"

Fashion டிப்ஸ்:
பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன?  இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார்/சுடிதார்  செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

அறிவு கொழுந்தும் நானும்:
சென்னையில் ஒரு அறிவு ஜீவி:   சித்ரா, உன் மகன்  என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello,  அறிவு கொழுந்தே,  நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன்.  ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட  அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா?  நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)

முதன் முதலாக பலருடைய பாராட்டுதல்களை, எனக்கு பெற்று  தந்த  பதிவு: 
  
நான் ரொம்ப ரசித்து எழுதிய பதிவுகளில் ஒன்று: 

எனது செல்ல மகளின் பார்வையில் தமிழ் சினிமா: 

சரவெடிகள்:  

முதன் முதலாக "யூத்புல் விகடன்" - குட் ப்லாக்ஸ் கூட்டத்தில என்னையும் சேர்த்துக்கிட்டது: 
"பதின்ம வயதினிலே ....!!!"

அதிக followers பெற்று தந்த பதிவு:
ஆண் பேச நினைப்பதெல்லாம் .......
  
இப்படியே போனா ....... பதிவு நீண்டு கிட்டே போய் - அடுத்து பொங்கல் திருவிழாவே வந்திடும் போல. 
அதனால்,  இத்துடன் இன்றைய ஷோவை  - மன்னிக்கவும் - பதிவை முடிச்சிக்கிறேன்.

"வாழ்க்கை பாதையில்,  முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான்,  நம் உணர்வுகளை  அலங்கரிக்கும்."  தத்துவம் # 10645

எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
  




Wednesday, October 13, 2010

நான் பாசாயிட்டேன்.....

தமிழ் இரண்டாம் தாள்:

 மீண்டும் ஒரு தொடர்பதிவு அழைப்பு கட்டுரை:
http://ambikajothi.blogspot.com/2010/08/blog-post_17.html
சொல்லத்தான் நினைத்து அழைத்தவர்:  அம்பிகாஜோதி
தொடர்பதிவு தலைப்பு:   "என் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள்"
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் ----  Essay/composition)

முன்னுரை :
நான் படித்தது,  Girls only பள்ளி.    கட்டுப்பாட்டுடன் உள்ள  ஒரு கான்வென்ட்.   ஆனால்,  எனக்கும் என் தோழிகளுக்கும்  - நாங்கள் பட்டாம் பூச்சிகளாய் சந்தோஷமாக சிறகடித்த நந்தவனம்.    சில ஆசிரியைகளுக்கு, நான்  செல்லப் பிள்ளை - எனது சுட்டித்தனம் அவர்களுக்கு மிகவும் பிடித்து சிரிப்பார்கள்.   பல முறை  என்னிடமே,  " உன் கிட்ட பேசினால் டென்ஷன் ஓடியே போய்டும்," என்பார்கள்.  ஆனால்,  இந்த "புரிதல்" எல்லாருக்கும் இருந்ததில்லை.   ஹி,ஹி,ஹி,ஹி...... ஏனென்றால்,  மற்றவர்கள்  எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு - ஸ்ட்ரிக்ட்டு - ஸ்ட்ரிக்ட்டு!  அந்த  ஸ்ட்ரிக்ட்டு  ஆசிரியைகளின்   வகுப்பில்,  நான்  பெஞ்ச் மேல  உட்கார்ந்து இருந்த நாட்களை விட பெஞ்ச் மேல நின்று கொண்டிருந்த நாட்கள் அதிகம்.  அப்பொழுதுதான், விஷயங்களை எல்லாம் ஒரு "Bird's view" வில் பார்க்க பழகி கொண்டேனோ?  ஹா,ஹா,ஹா,ஹா.... இருக்கலாம்.  

 முன்னோட்டம்:  
நான் ஒன்பதவாது படிக்கும் போது (?!),    ஆசிரியை பாடம் நடத்தி கொண்டு இருந்த பொழுது,  இன்னொரு தோழியுடன் சேர்ந்து  "பொட்டு வெடி" வெடித்த 'தீவிரவாத' குற்றத்துக்காக,  எங்களை  assembly கிரௌண்ட்ல,  தேசியகொடிக் கம்பத்தின் கீழ் ஒரு மணி நேரம் முழங்கால் போட வைத்ததும்,  நாங்கள் மாறி விட்டோம் - ஆம் -  பொட்டு வெடியில் இருந்து,   உடைந்து போன பலூன் துண்டுகளில் bubble  செய்து பாப் பண்ணுவது  போன்ற  - decent  கட்சிக்கு மாறி விட்டோம்.  பின்னே - எங்களை காட்டி கொடுத்த - எங்கள் விரல்களில் இருந்த "பொட்டு வெடி" (cap வெடி) வாசனையை குற்றமா சொல்ல முடியும்?  

தொடர்பதிவு மேட்டர்:  
  பள்ளி ஆண்டு விழா நேரங்களில் பட்டையை கிளப்பி விடுவோமே!  அதில் குறிப்பிட்ட ஒரு  ஆண்டு விழா  -  மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.   எனது தோழிகளுள்  ஒருத்தி, இன்னும் ஐந்து மாணவிகளுடன் சேர்ந்து ஏதோ ஒரு பாடலுக்கு குரூப் டான்ஸ் ஆடுவது என்று முடிவு செய்தாள்  - மூன்று பேர் - தாவணி அணிந்து  பவித்ர பெண்கள்  லுக் - மூன்று பேர் - ஜீன்ஸ் - டி ஷர்ட் போட்டு கூல் guys லுக் என்று முடிவு எடுத்து கொண்டார்கள்.  பத்து நாட்களில் practice செய்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு. 

ஏதாவது  ஒரு காரணத்தால்,  ஒவ்வொரு நாளும் இவர்களது practice session தள்ளிப் போய் கொண்டே இருந்தது.  என் தோழி, சளைக்காமல்  எப்படியாவது சமாளித்து விடுவோம் என்று மற்றவர்களை உற்சாகப் படுத்தி கொண்டே இருந்தாள்.  Rehearsal நாளும், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன் வந்தது.  மேடையில் ஆசிரியைகள் ஆடி காட்டச் சொன்னார்கள்.  சொதப்பி விடுவார்கள் என்று புரிந்து கொண்ட தோழி, அவர்களிடம் போய்  பேசி பேசி - எப்படியோ தனது நடனக் குழுவை எஸ்கேப் ஆக வைத்து விட்டாள்.  சமத்து பொண்ணு.  என் தோழி ஆச்சே!

 எல்லோரும், அவர் அவர் நிகழ்ச்சிக்கு அணிய வேண்டிய உடைகளை எடுத்து வரவும், நிகழ்ச்சி  அன்று மதியம் கிளாஸ்க்கு போகாமல், ' ஸ்பெஷல் permission '   வாங்கி மூன்று மணி நேரம் பயிற்சி  செய்வது என்று முடிவு செய்து மற்றவர்களிடம் சொல்லி அனுப்பினாள்.  மறுநாள்  வந்து பார்த்தால், இவளை தவிர மற்ற ஐவரையும் காணோம்.  ஐந்து லீவ் லெட்டர்ஸ் வந்து டீச்சர் மேஜையில் இருந்தன.  எல்லாமே, "As I am suffering from fever ....." என்று தான் இருந்தன. 

அவளுக்கு செம கோபம். இப்படி கவுத்துட்டாங்களே என்று.   என்னிடம் வந்து விஷயத்தை சொன்னாள். எப்படியாவது,  அன்று மாலையில் ஆடி - நல்ல பெயர் வாங்கி,  அவர்களை கடுப்படிக்க  வேண்டும் என்று முடிவோடு - இல்லை, வெறியோடு  இருந்தாள்.    கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல -  குரூப் டான்ஸ் ஐடியா தேய்ந்து டூயட் ஆனது.

அப்படி இப்படி பேசி,  என்னை மேடையில் ஏற்றுவது என்று - அவர்களை பழி வாங்கும் எண்ணமாக என்னை "பலி " வாங்க கேட்டாள்.  என்ன இருந்தாலும், என்னோடு சேர்ந்து வகுப்பில் நல்லது (லூட்டி) , கெட்டது (punishment) எல்லாவற்றிலும் பங்கு போட்டவள் ஆயிற்றே - நம்ம நல்ல மனசு , சரி சொல்ல வைத்தது.  ஆனால், ஒரு நிபந்தனையுடன்.  நான் பவித்ர பெண் லுக்  தான். அதில் மாற்றம் இல்லை.  அவளுக்கென   கொண்டு வந்து இருந்த தாவணி செட் -  என் கைக்கு மாறியது.  இப்பொழுது, அவளுக்கு ஒரு ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட்க்கு வழி பண்ண வேண்டும்.  ஹாஸ்டல் வாழ்  தோழி ஒருத்தி , ஜீன்ஸ் கொடுத்து உதவினாள்.  

ஆனால்,  கூல் guy லுக் கொடுக்க வேண்டிய டி-ஷர்ட் அங்கே எப்படி இருக்கும்?   (நாங்க எல்லாம் நல்லவங்க!)  எல்லாம் girlie shirts.  டி ஷர்ட் வேட்டையில் இருந்த நேரத்தில், எங்கள்  so called practice நேரம் கரைந்து கொண்டு இருந்தது.  பள்ளி நேரம் முடியும் வரை,  பள்ளிக்கு வெளியே போக முடியாது.  பாவம், நாங்க!   நிகழ்ச்சிகள்  ஆரம்பிக்க சிறிது நேரம்  இருந்த போது,    பாரத நாட்டியம் ஆட இருந்த ஒரு சீனியர்  மாணவிக்கு,  மல்லிகை பூ சூடி அலங்கரித்து கொள்ள தேவைப்பட்ட   பூவுடன்,   அவங்க தம்பி  வந்து இருந்தாப்புல.   என் தோழியை விட  
இரண்டு /மூணு  இன்ச் தான்  உயரமாய்  இருந்தாப்புல.  மாணவிகள் மட்டும் உள்ள பள்ளிக்கு வருவதால்  அசத்தலாக ,   பயபுள்ள கூல் டி-ஷர்ட்ல -   வந்து இருந்தாப்புல.  ஹையா.......   இருவரும் முதலில் ஒரு ஹலோ சொன்னோம்.  பின், நிலைமையை சொன்னோம்.  நெளிந்தான்.  "ஷர்ட் கழட்டி கொடுத்து விட்டு, நான்  வெறும் பனியனுடன் எப்படி girls-only பள்ளியில் இருப்பேன்," என்ற நியாயமான கேள்வியை கேட்டாப்புல.  

"கொடுக்காவிட்டால், நிலைமை அதை விட அவனுக்கு மோசமாகி விடும், " என்று சும்மா புருடா விட்டோம்.   "அப்படி என்ன செய்வீங்க?" என்று திருப்பி கேட்குற அளவுக்கு வேலை செய்யாமல், அன்னைக்கு அவன் மூளையும், "As I am suffering from fever ...." என்று  லீவ் லெட்டர் கொடுத்து இருந்தாப்புல போல.  கேட்டு இருந்தால், ஒண்ணும் இல்லை - நாங்க சும்மா வெத்து வேட்டு தான் என்று தெரிந்து போய் இருக்கும்.   அன்னைக்கு அவன் யோசிக்கும் திறனை அடகு வைத்து விட்டு வந்ததால ....... எங்களுக்கு சாதகமா போச்சு..... டி-ஷர்ட் என் தோழியின் கைக்கு வந்தது.  பனியனுடன் ,  அந்த பாரி வள்ளல் ,   பள்ளியை விட்டு  சட் என  மறைந்து விட்டாப்புல.  முல்லைக்கு தேர் கொடுத்தான், அந்த  பாரி வள்ளல்.  அக்காவுக்கு மல்லிகைப்பூ கொடுக்க வந்து டி-ஷர்ட்  துறந்தான், இந்த பாரி.   ப்ச்.

எங்கள் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்தது.  ஒரு முறை கூட,  பயிற்சி எதுவும் செய்யவில்லை. அவள் ஒரு பக்கமாக இருந்து கையை காலை தூக்கி ஆடுவாள் - ஏதோ ரஜினி ஸ்டெப் மாதிரி போடுவாள் - நான் இன்னொரு பக்கமாக இருந்து தையா தையா என்று ஆட்டம் என்ற பெயரில் குதிப்பேன்.   திடீர் என்று,  அது solo டான்ஸ் அல்ல,    டூயட் பாட்டு  என்று நினைவுக்கு வரும். ஓடி வந்து, stage க்கு நடுவில் நின்று கொண்டு, இருவர் கைகளையும்  பிடித்து கொண்டு ஏதோ ஒருவரை ஒருவர் சுற்றி " ஆடி" கொள்வோம்.  

பாடல் சரியாக கூட கேட்கவில்லை.  ஒரே அலறல் - இரைச்சல்  சத்தம் தான் -  ஸ்பீக்கர் problem என்று அப்புறம் சொன்னார்கள்.  எனக்கு கேட்டதெல்லாம்,    தோழி  ஆடி கொண்டே - லீவ் லெட்டர் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து போன சுந்தரிகளுக்கு கொடுத்த "அர்ச்சனைகள்"   தான்.  அவளின் "வசைபாட்டுக்குத்" தான்,  சத்தம் போட்டு சிரித்து கொண்டே ஆடிக் கொண்டு  இருந்தேன்.   ஒரு வழியாக மேடையை விட்டு இறங்கினால் - கீழே மாணவிகள் எல்லாம் "once-more" கேட்டு கொண்டு இருந்தார்கள்.  அவள் கோபத்திலும், நான் சிரிப்பிலும்  மேடை மீது ஏறி  மனம் போன போக்கில் ஆட்டம் போட்டது,  audience க்கு ஒரு சூப்பர் ஷோவாக மாறி இருந்து இருக்கிறது.   ஆளை விடுங்கம்மா என்று நாங்கள் அப்பீட்டு ஆகி விட்டோம்.  

மறு நாள், பள்ளிக்குள் நுழைந்தால்,  எங்கள் ஜூனியர்ஸ் சிலர் எங்களுக்கு "fans" ஆகி இருந்தார்கள்.  பலத்த வரவேற்பு.  வகுப்பில்,  அந்த ஐந்து மகாராணிகளும்,  தோழியை  பார்த்து ஞே என்று  விழித்தார்கள்.  மற்றவர்கள் ஏற்கனவே எங்கள் "ஆட்டத்தை" பற்றி சொல்லி  பில்ட் - அப் கொடுத்து விட்டு இருந்தார்கள்.    தோழி,  அவர்களிடம் போய், ஒரு "ருத்ர தாண்டவம்" ஆடினாளே - ஆஹா...... சூப்பர் performance.   அது பொட்டு வெடி அல்ல, சர வெடி.   தூள்! 

பிரச்சனை ஒன்றுதான்.    அதை அந்த ஐந்து பேர்களும் சமாளித்த விதம் வேறு - நாங்கள் அதை சமாளித்த விதம் வேறு - அவ்வளவுதான்! 
  

தெளிவுரை: 
Going back to the class studies,  அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியல - வகுப்பில் பேசாமல் ஒரு இடத்தில் அவ்வளவு நேரம் தேமே என்று சும்மா உட்கார்ந்து கொண்டு - கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்க எனக்கு பிடித்ததில்லை.   துருதுருனு இருக்கும்.   வீட்டில் அமைதி புறாக்களாக  இருக்கும் நானும் எனது தோழிகளும்,  வகுப்பு ஆரம்பிக்கவும்,  வால் முளைக்காத வானரங்களாக மாறி விடுவோம்.  எல்லாமே சின்ன புள்ளைக வேடிக்கை  விளையாட்டுக்கள்தான்.  ஆனால், வகுப்பிலோ பள்ளிக்கு வெளியிலோ எந்த வம்பு தும்புக்கும் போனது  இல்லை - ரவுடித்தனம்  செய்ததும்  இல்லை.  எல்லார் வீடுகளிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!  ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்டு! 


ஒவ்வொரு ஆண்டு விழாவும் இப்படி ஏதாவது காமெடி நடக்கும்.   கலாட்டாவை  சொல்லிட்டு, கருத்து சொல்லலைனா, அது "வெட்டி பேச்சு"  பதிவாக இருக்காதே.
 
கருத்துரை:
அமெரிக்கா வந்த பின், ஒரு அமெரிக்க ஸ்கூல் டீச்சர் - Mrs.Vickie  என்பவரிடம் இதை பற்றி சொல்லிய பொழுதுதான், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மாணவர்களில், இரண்டு விதமாம் - Verbal Thinkers and Visual Thinkers. 

Verbal Thinkers:  http://www.youtube.com/watch?v=TaIBHYgKZn4
பெரும்பாலும்,  மாணவர்கள் இந்த பிரிவினை சார்ந்தவர்கள்தான்  என்ற ஆய்வின் படி,   கல்வித்திட்டத்தில்,  கல்வி முறை அமுல் படுத்தப்பட்டுள்ளது.  Reading and Talking - பாடங்களை வாசித்தலும் - பின்  விளக்கமாக வார்த்தைகளில் சொல்லி கொடுத்தலும் - இத்தகைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்குமாம்.

Visual Thinkers :  http://www.youtube.com/watch?v=bOmUM0PgIao
 இந்த மாணவர்களுக்கு காட்சி/காணல் முறையே (exploring and explaining with visual aids)  கவனத்தை சிதற விடாமல் வைத்து இருக்க செய்யுமாம்.  அந்த வீடியோ பார்த்தால், புரியும்.    Verbal Teaching Methods, இவர்களுக்கு ஒத்து வராதாம்.  எளிதில் distract ஆகி விட்டு - கவனம் சிதறி,  Hyperactive ஆக வகுப்பு அறைகளில்   இருப்பார்களாம்.  உண்மையில்,  Verbal Thinkers மாணவர்களை விட இவர்கள் புத்திசாலிகளாம்.     இவர்களுக்கு ஏற்ற கல்வி முறை இருந்தால்,    இவர்கள் பெரிய அளவில் சாதிக்க பிறந்தவர்களாம்.

Mrs.Vickie  இன்  "ஆய்வு அறிக்கை" படி,    நான் இரண்டாம் வகையை சார்ந்த மாணவியாக  இருந்து இருக்கிறேனாம்.    அதனால் தான்,  அத்தனை ஆட்டம் போட்டும்,   ஒரு வாட்டி கூட பெயில் ஆகாமல்,   நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி வந்து இருக்கேனாம்.  நம்புங்க .... நம்புங்க .... இல்லைனா...... இல்லைனா .......
"இல்லைனா, என்ன செய்வ?"  என்று கேட்காதீங்க.... அப்புறம் ஏதாவது பில்ட்-அப் பதில் தான் தர வேண்டியது வரும். சும்மா.... ........ஹா,ஹா,ஹா,ஹா.... என்ன, போனா போகுதுன்னு  நம்பிட்டீங்களா?  ஓகே.... ஓகே....    நன்றிங்கோ.     எனக்கு ஏற்ற முறை படி,  கற்று தந்து இருந்தால்,  நானும் சாதித்து இருப்பேனாம்   - சே...... வடை, பாயாசம்,  அப்பளம் எல்லாம் போச்சே!    சரி, சரி, ரொம்ப சிரிக்காதீங்க - புரை ஏறிக்கப் போகுது.

முடிவுரை:
மக்களே, உங்கள் பிள்ளைகளுக்காவது , அவர்களுக்கு எந்த முறையில் படிப்பது எளிது  என்று தெரிந்து கொண்டு, அதன் படி கல்வி கற்று கொள்ள வீட்டிலாவது நீங்கள் கொஞ்சம் உதவி செய்யுங்கள்.  Visual Thinkers க்கு tuition எல்லாம் வேலைக்கு ஆவுறதில்லை.   எல்லோரையும் ஒரே   அச்சில் ஊற்றி,  ஒரே மாதிரி வடிவங்களாக  வார்த்து  எடுத்து வைக்க முடியாது.  


  

Sunday, October 10, 2010

" நண்பன்டா....... அப்படித்தான் சொல்லிக்கணும்"

சில நாட்கள் முன்,  எங்கள் நண்பர்கள் கூட்ட சந்திப்பு:

அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்து கதம்ப  மாலைகள்: (ஆமாம், எங்களுக்கு ரொம்ப முக்கியம் என்று யார் கேக்குறது? நாங்க எப்படியும் சொல்வோம்ல.)
முதல் வெட்டு:
"எங்க டிபார்ட்மென்ட்ல தான்,  சில வருஷங்களுக்கு முன் மிஸ் ராஜஸ்தான் ஆக வந்த பொண்ணு மாஸ்டர்ஸ் டிகிரிக்கு படிக்க வந்து இருக்கிறாள்."

"யாருடா அது?  அந்த மொக்கை பிகர் - மிஸ் ராஜஸ்தான் ஆக இருந்துச்சா?  போட்டி நடந்த அன்னைக்கு மற்ற ராஜாஸ்தான் பொண்ணுங்க எல்லாம் ஒட்டகப் பால் கறக்க போய்ட்டாங்க  என்று நினைக்கிறேன்."

"இதோ பார்ரா - இந்த மிஸ்டர் தமிழ்நாடு  கண்டுபிடிச்சு சொல்லிட்டார்!"

 இரண்டாம் வெட்டு:
"ஏண்டா - ரஜினி பட முதல் ஷோவுக்கு $30  கொடுத்து பார்த்து இருக்கியே.  அவர் பொண்ணு கல்யாணத்துக்கு உன்னையெல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிட்டார் தெரியுமா?"

" டேய், நானாவது  $30 மட்டும் கொடுத்து ஜாலியா ரஜினி படம் பார்த்தேன்.  உன் கல்யாணத்துக்கு, லாயல் கஸ்டமர் ஆக  எத்தனை லட்சம் செலவழிச்சு போத்திஸ்ல ஜவுளி வாங்கின.  அதுக்கு போத்திஸ் கடை  ஓனர்,  தன் வீட்டு கல்யாணத்துக்கு உன்னை அழைச்சாரா?  உனக்கு ஒரு நியாயம் - எனக்கு ஒரு நியாயமா?"

 மூன்றாம் வெட்டு: 
"ம்ம்..... தனிமையில இனிமை காண முடியுமா?"

"ஏண்டா,  பெருமூச்சு விட்டு புலம்புற?"

"  அழகான பொண்ணுங்க, என்னை கண்டுக்க மாட்டேங்குறாங்க.  அழகா இல்லைனா, நான் கண்டுக்க மாட்டேங்குறேன்.  அதான், என்ன பண்றதுன்னு தெரியல."

"ஒண்ணு மட்டும் தெரியுது.  உன் மூஞ்சை நீ கண்ணாடியில ஒழுங்கா  பார்த்து இருக்கியோ இல்லையோ -  நான்  உன் மூஞ்சை நல்லா பாத்து இருக்கிறேன்டா.   உனக்கு இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்லை."

நான்காம் வெட்டு:
"என்னடா, ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தியே.  அவள், உன்  லவ்க்கு சரி சொல்லிட்டாளா?"

"நீ வேற எரிச்சலை கிளப்பாத...... அவள் எதிர்பார்க்கிற ஆளு நான் இல்லைன்னு சொல்லிட்டா."

"உனக்கு என்னடா குறைச்சல்?    ஆண்களின் அடையாளம் ஆன வைகிங் (Viking) பனியன் - ஜட்டிகள் - அத்தனை வச்சிருக்கியே."

"டேய், உனக்கு என் கையாலதான் சாவு!"

ஐந்தாம் வெட்டு: 
"என்னடா, புது மாப்பிள்ளை!  உன் மனைவி வகை வகையாய் தினமும் சமைத்து தந்து அசத்துறாங்கனு கேள்விப்பட்டேன். எங்களையெல்லாம் எப்போ சாப்பிடக் கூப்பிட போற?"

"அவளோட அம்மாக்கிட்ட பருப்பு, ரசம், சாம்பார் வைக்கிறது எப்படினு படிக்காம - எங்கேயோ போய் காசு கொடுத்து - cheese stuffed capsicum,  buttered vegetable pasta,  baked mushroom filled  tomatoes, toasted bread masala  - அது இதுனு பேரைக் கேட்டாலே  அஜீரணம் வர மாதிரி உள்ள ஐட்டங்களா படிச்சிட்டு வந்து படுத்துறா... நானே உன் வீட்டுக்கு  வந்து, நல்லா சாப்பிடலாமானு  யோசிச்சிக்கிட்டு இருக்கேன். "

அருவா வெட்டு:  (எனக்குத்தான்)
"சித்ரா, நான் நிறைய ப்லாக்ஸ் வாசிப்பேன்.  ஆண் பதிவர்கள் நிறைய பேர் -  முதலாளித்துவம், சமத்துவம்,  இறைவன் இருக்கிறார்/இல்லை,  முதல் காதல்,  நூறாவது காதல், கள்ள காதல்,  ஜொள்ளியது,  பொய் சொல்லியது,  தண்ணி அடிச்சது, தம் அடிச்சது, பிட் அடிச்சது,  18 + , 28 - ,    மொக்கை போட்டது, குறட்டை போட்டது, சமுதாயத்தில நடக்கிற  நியாயம், அநியாயம்  - அப்படி இப்படின்னு நிறைய டாபிக்ல தைரியமா எழுதுறாங்க..... பெண் பதிவர்கள்ல அப்படி எழுதுறவங்க,  ஒண்ணு ரெண்டு  பேர் தேறினால பெரிய விஷயம்.   நீங்கள் எல்லாம்  எதுக்கு இப்படி  பம்முறீங்க?"

" இது என்ன கேள்வி?   நான் சித்ரா ப்லாக் கூட படிச்சது இல்ல.  ஆனாலும் எனக்கே காரணம் தெரியுதே.  நம்ம  ஊரில இன்னும், ' இந்த அநியாயத்தை தட்டி கேக்க ஒரு ஆண் இல்லையா?' என்றுதானே எதிர்பார்க்கிறாங்க.  'தட்டி கேக்க ஒரு பொண்ணு இல்லையா?', என்று கேக்குற அளவுக்கு நிலைமை வரட்டும். அப்புறம் பாருங்க,  சித்ரா  ப்லாக்ல  என்னமா   பொங்குறாங்கனு!"

சித்ரா:   "எதுக்குப்பா?  குஷ்பூ தங்கை போஸ்ட்க்கு ஆள் தேவைன்னு கேட்டாங்களா என்ன?  முதலில்,  உங்களை எல்லாம்  தட்டி கேட்க "யாருமே" இல்லையா?"

ம்ம்ம்.... இவர்களும் என் நண்பர்கள் தான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....

Sunday, August 22, 2010

எனக்கே எனக்கா?


 சில சமயம்,  நண்பர்களுடன் சீரியஸ் ஆக  பேசி கொண்டு இருக்கும் போது கூட ,  intention இல்லாமலே,  ஏனோ காமெடி டைம் ஆகி விடுகிறது.

எனக்குதான்  BLOGGOTOPICTIS  நோய் தாக்கி விட்டதா? ( (எல்லா விஷயங்களையும்  Bird's eye view மாதிரி Blogger's eye  கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் நோய்)
இல்லை,  வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், இருக்கும் கவலைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும்  தெரியவில்லை.  ம்ம்ம்ம்ம்ம்.........

எங்கள் தோழி,  தேன்மொழியை நாங்கள் தேனா என்று அழைப்போம்.  ஒரு சமயம்,  மற்றொரு நண்பருடன் பேச,  தொலைபேசியில் அழைத்து இருந்தார்.
"ஹலோ"
"ஹலோ! நான் தேனா பேசுறேன்."
"ஹலோ,  நீங்கள் தேனா (honey) பேசுங்க. இல்லை, பாலா (milk)  பேசுங்க. முதலில் யார்னு பேரை சொல்லிட்டு பேசுங்க."

..... இன்னொரு சம்பவத்தையும் நான் கண்டிப்பாக சொல்லணும். 

எங்கள் நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது.  வேறு மாநிலத்தில் இருக்கும் அவர்களை, ஒரு லீவில் பார்க்க சென்ற போது, குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. நாங்கள் சென்று இருந்த வேளையில்,   அவர்களை காண வேறு ஒரு நண்பரும்,  தன் மனைவியுடன்  வந்து இருந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி, சில நாட்கள் முன் தான் அமெரிக்கா வந்து இருந்தார்கள்.  
நானும்,  அந்த புது பெண்ணும்,  குழந்தையுடன் உள் அறையில் இருந்த நண்பரின் மனைவியை காண உள்ளே சென்றோம்.

நான்:  "எப்படி இருக்கீங்க?"
தோழி: "இப்போ, பரவாயில்லை, சித்ரா."
நான்:  "ரொம்ப கஷ்டமாக இருந்ததா?"
தோழி:  " ஆமாம்,  வலி தாங்க முடியாம இருந்தது. "
நான்:  " அப்படித்தான் இருக்கும்ப்பா... இது ஈஸினு யாரும் சொல்லலியே."
தோழி:  "அதாங்க..... சேர்த்தே இரண்டையும் எடுத்துடுங்க என்று டாக்டர் கிட்ட சொன்னேன். கேட்க மாட்டேனுட்டார். இப்போ, நான் கொஞ்சம் recover ஆகி இருக்கும் நேரம்,   திரும்ப  அடுத்ததுக்கும் போகணும்."
புது பொண்ணு:  "அப்படியா? எப்போ?"
தோழி:   "அடுத்த வாரம்,  டாக்டர்  வர சொல்லி இருக்கிறார்."
புது பொண்ணு:  "இந்தியாவுல இப்படி எல்லாம் விட மாட்டாங்க..... என்ன அமெரிக்காவோ?  ஒரு குழந்தை  பிறந்து, ஒரு மாதம் ஆகி போச்சு...... இன்னும் இரண்டாவதை  டெலிவர் பண்ணலைனா என்ன அர்த்தம்?  டெலிவரி date முடிஞ்சும் இப்படி இருக்கிறது, குழந்தைக்கு நல்லது இல்லை.  உங்களுக்கு பாருங்க, மறுபடியும் வலி, வேதனை...... எல்லாம்."
தோழி:  "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா?  சரியா போச்சு.  நான் போன வாரம் பிடிங்குன பல் பத்தி சொல்றேன். இன்னொரு பல்லை, அடுத்த வாரம் எடுக்கப் போறாங்க.... டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
நான்:  "நியாயமான கேள்வி. அவரவர் வலி  அவரவர்க்கு."

எனக்கே எனக்கா? இப்படி நண்பர்கள், எனக்கே எனக்கா?   ...........
இன்னும் எத்தனை பேர், இப்படி உலகத்துல கடவுள் படைத்து விட்டிருக்காரோ? அதில் எத்தனை பேர் , எனக்கு நண்பர்களாகப் போகிறவர்கள் என்றும் எழுதி இருக்கிறதோ?   ம்ம்ம்ம்ம்ம்ம்........
தம்பட்டம் தாயம்மா:  "எப்படி சித்ரா, வழக்கம் போல......  புலம்புற மாதிரியே,  நல்லா பெருமை அடிச்சிக்குற?
நீ நடத்தும்மா!"

Sunday, August 15, 2010

சோகம் என்றாலும் சிரிப்பு

கடந்த சில நாட்களாக பயணங்கள் ........ இன்ன பிற வேலைகள்......
பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை.  மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.  ஆனால், நிறைய விஷயங்கள் உண்டு. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். 

  "இடுக்கண் வருங்கால், நகுக...." என்ற வள்ளுவர் வாக்கு, எந்த அளவுக்கு நடைமுறைக்கு உதவும் என்று யோசித்தது உண்டு.  வாழ்க்கையில்,  சில சமயங்களில்  அதை கடைப்பிடித்த போது,  உண்மையில் சூழ்நிலையின் இறுக்கம் குறையத்தான் செய்கிறது.   தாமும்  உறுதியாய் நின்று,  மற்றவர்களின் மேல் தங்களின்  கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க  ,    நகைச்சுவை உணர்வு  நன் மருந்தாக  அமைந்து விடுகிறதே!


சவுண்டு பார்ட்டி: 

ஒரு கட்டிடத்தில் இருந்து 15 அடிகள் கால் தவறி  கீழே விழுந்து விட்ட ஒரு தோழியின் தந்தையை (தமிழ் நாட்டில் இருந்து  அமெரிக்கா  வந்தவர்)  காண,  ஒரு மருத்துவமனையின் Surgical ICU வுக்குள் நுழைந்தோம்.  முதுகு தண்டில்,  எலும்புகள் சில பகுதிகளில்  நொறுங்கி விட்டதால்,  இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்து இருந்தது.  முதல் surgery மட்டுமே ,  பத்து மணி நேரங்களுக்கு மேலாக நடந்தது.   வலியின் மிகுதியில் சத்தம் கொடுத்துக் கொண்டு  இருந்தவரை  பார்க்கும் போது, பாவமாக இருந்தது.
ஆதரவுடன் கரம் பற்றி, "அங்கிள், ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டேன்.
 அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து,  "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்,"  என அந்த நேரத்திலேயும்  அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது, அவருடன்  சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.


முயற்சி திருவினையாக்கும்: 

ஒரு நண்பரின் மனைவி, கடலை மாவில் ஏதோ இனிப்பு செய்து (முயற்சி செய்து!!!!) கொண்டு இருந்தார்.  அவரிடம்,  "என்ன ஸ்வீட் செய்யப் போறீங்க?" என்று நான் கேட்டதும்,
எந்த வித பதட்டமும் இல்லாமல்,  "சித்ரா, நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை.... கூழ் மாதிரி வந்தா,  பேசன் (besan = கடலை மாவு) கீர் ;  இளக்கமாக வந்தால், பேசன்  பர்பி;  கட்டியாகிப் போச்சுனா, மைசூர் பாக்.  அதையும் மீறி, கல்லு மாதிரி  ஆகி விட்டது என்றால்,  இருக்கவே இருக்கு எங்கள் வீட்டுக் குப்பை கூடை.  எந்த ஸ்டேஜ்ல வரப் போவுது தெரியாம கிண்டிக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுங்க."
(கடைசியில்,  மைசூர் பாக்குக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட ஒரு புது பக்குவம் வந்தது என்பது வேற விஷயம்! எண்ணிப் பார்த்துட்டேன். என் பற்களின் எண்ணிக்கை குறையவில்லை.  தப்பிச்சேன்டா, சாமி! அந்த இனிப்புக்கு, நாங்க வைத்திருக்கிற பெயர்:  "கல்"லூர்  பாக் )


"பால்" சோறு:

 பார்டிக்காக உணவு தயாரித்து கொண்டு இருந்த தோழிக்கு உதவியாக அவளது அம்மாவும் நானும் இருந்தோம். அப்பொழுது அங்கே தன் குழந்தைக்கு சோறு ஊட்ட வந்த இன்னொரு தோழி,  சூடான சாதம் எடுத்து தட்டில் போட்டு விட்டு,  fridge உள்ளே இருந்த கிண்ணத்தில் இருந்ததை எடுத்து சாதத்தில் ஊற்றிய பின் தான்,  தான் எடுத்தது தயிர் இல்லை,  மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள்.  அப்பொழுது தோழியின் அம்மா, " என்னம்மா இது?  தோசை மாவுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கே?" என்று கேட்டார்கள்.    இவள்  முகம் கோணாமல் - சளைக்காமல் - சட்டென்று, " ஆன்ட்டி,  நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. வித்தியாசம் தெரியல," என்று பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.

சுவாசத்தில் கலப்பாயே: 

என் அமெரிக்க தோழி ஒருத்திக்கு  கொஞ்சம் depression .  ஒரு
change of place க்காக எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது,   Jaya Max இல் சில பாடல்களை, அவளுடன்  சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்.   தொடர்ந்து வந்த மூன்று பாடல்களில்,   ஹீரோ ஆசையுடன் முத்தமிட நெருங்குவதும், ஹீரோயின் மேடம் முகத்தை திருப்பி கொண்டு விலகி விடுவதுமான வழக்கமான சீன்கள்.  அதை கவனித்த தோழி, "ஹீரோக்கள்  முத்தமிட வரும் முன் , வாய் துர்நாற்றத்துக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.  ஹீரோயின்கள்   சகிக்க முடியாமல் எப்படி டீசன்ட் ஆக  விலகி விலகி போகிறார்கள்," என்று சொன்ன பிறகு தான், ஒரே விஷயம், அடுத்தவர் பார்வையில் -  வேறு அர்த்தத்தில் -  எப்படி எல்லாம் தெரிகிறது  என்று நினைத்து சிரித்தேன். அவளுடைய depression நேரத்தில், எப்படி பேசுவது - எதை பற்றி பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் அது வரை இருந்த இரண்டு பேரும்,  அதன் பின் பல விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. 


காதல் அணுக்கள் - neutron- electron: 

நண்பர் ஒருவர்,  ஒரு மாதமாக  சரியாக சாப்பிடாமல் - தூங்காமல் - இரவு பகல் - சனி ஞாயிறு - என்று ஒரு  Human Health  research project இல் மூழ்கி, அவரது லேப் வேலையே  (lab work ) கதி என்று இருந்தார்.  அதன் பின்னும்  அவர் எதிர்பார்த்து இருந்த ரிசல்ட் வராததால், வெறுத்து போய்விட்டார். மீண்டும்  இப்படி வொர்க் செய்ய  வேண்டுமே என்ற எரிச்சல் வேறு.
வீட்டுக்கு வந்ததும்,  மிகவும் ஆதரவாக அவர் மனைவி, " நீங்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டு, சோபாவில் ரிலாக்ஸ் செய்ங்க.   நான் காபி கொண்டு வரேன்," என்றார்.
அந்நேரம்,   நமீதா பாடல் ஒன்று தமிழ் சேனலில் ...... கோபமும் எரிச்சலுமாய் வந்து எங்களோடு  உட்கார்ந்தவர், நமீதாவை பார்த்து விட்டு சத்தம் போட்டு சிரித்தார்.
"செல்களை (cells)  மொத்தமாக பார்த்தால், ரிலாக்ஸ் ஆகிறது.  அதே,   ஒற்றை ஒற்றை செல்லாய் பார்த்து cell research செய்து fail ஆகிவிட்டால்,  stress அதிகம் ஆகி விடுகிறது," என்று சொல்லி சிரித்தார்.


"Laughing faces do not mean that there is absence of sorrow;  but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare. 
 A great sense of humor can make the dull moments, brighter.  


Sunday, June 13, 2010

மியாமி பீச் "அழகி" ல்

Miami Beach ...................


  ஒவ்வொருத்தருக்கும்,  ஒவ்வொரு சம்பவம்,  ஒரு இடத்தை பற்றி மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.  நீங்க ஒரு இடத்தை சுற்றி  பார்க்க  போகும்போது ஏதாவது நடக்கணும். (Newton மட்டும்தான் விதி வச்சுக்கணுமா?)

Chitra's law # 1: நல்லதாக இருந்தால் பெரு மகிழ்ச்சி. "நாங்க அங்க போனோம்.  நல்லா enjoy பண்ணினோம். திரும்பி இப்படி எப்படா போவோம்னு இருக்கு " என்கிறோம்.  so, every good sambavam brings an actual positive reaction to that place.

Chitra's law # 2:  அதே இடத்தில் பிடிக்காதது வேண்டாதது நடந்திருந்தால் "அந்த இடத்துக்கு இனி யார் போவா? அப்படி அங்க என்ன இருக்கு?" என்கிறோம். so, every negative sambavam brings a bad reaction to that place.

அதாகப்பட்டது,  மேட்டர் இடத்தில் இல்லை.  ஒரு இடத்தை விட அந்த இடத்தில் நடப்பவை, அனுபவித்தவை  தான்,  நம் உணர்வுகளை தொடுகிறது...... மனதில் நிற்கிறது.

Miami இல் இருக்கும் சில beach களில் Crandon Beach ஒன்று   ................
என் கணவருக்கும் நண்பர்களுக்கும் rule # 1 apply ஆக்கிய  அதே வேளையில் எனக்கு rule # 2  apply ஆக்கிய  இடம்.

ஒரு சமயம், என் பிறந்த நாளை,  நண்பர்களுடன் Crandon பீச்சில்  போய் கொண்டாட  என் கணவர் பிளான் செய்து வைத்து இருந்தார்.  எல்லோரும் போனோம். நீச்சல் தெரியாத என்னையும் கடலில் ஆட்டம் போட தள்ளி விட்டார்கள். இவர்கள் என் நண்பர்களா,  இல்லை எதிரிகளா - பிறந்த நாள் அதுவுமா என்னை கொல்ல பாக்குராங்களேனு கத்தினேன். எங்கள் நண்பர், Paul,  "திருநெல்வேலிய தேடுது தேடுதுன்னு சாலமனை  படுத்துறீங்களே, அப்படியே direction பாத்து போனா, தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் வரும். அங்கே இருந்து ஒரு மணி நேரம்தான்" என்று பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா,  பரலோகத்துக்கு வழி சொன்னார்.

தாமிரபரணி  கரையை விட Crandon கடற்கரை அருகில் இருந்ததால் தண்ணீரை விட்டு வெளியே கரைக்கு  வந்தேன். ஒரு beach-walk போகலாம் என்று தோன்ற,  சாலமனை  தேடினேன். சற்று தள்ளி 2 pieces swim-suit அணிந்த சுந்தரிகள் குளித்து ஆட்டம் போட்டு கொண்டிருந்ததற்கு அருகில்,  எங்கள் நண்பர்கள் ரெண்டு பேர்களோடு  சேர்ந்து  கொண்டு கடல் நீரில் throw-ball ஆடுவதாக இருந்தார். இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா,  ஜொள்ளு கடலா  என்று  தெரியாது பாருங்கள்.

பிறந்த நாள் எனக்கு -   கொண்டாட்டம்  அவருக்கு!


என் தோழி,  லிண்டாவுடன் வாக் போய் விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நானும் லிண்டாவும் திரும்பி வந்து பார்த்தால்,  எங்கள் மக்காவை காணோம். அவர்கள் எல்லோரும் Beach volley-ball விளையாட போயிருக்கலாம் என்று லிண்டா சொன்னாள்.  அங்கும் இல்லை.  இவர்களை தேடிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது,  கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன் - நான் பார்க்கும் காட்சி நிஜம்தானா?

அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் சாலமன் பாதி ஏறியபடி - மரத்தை தழுவியபடி - உட்கார்ந்தது போல் தொங்கி கொண்டு இருந்தார். மரத்தின் கீழே,  இவர் விழுந்தாலும் பரவாயில்லை, மரம் விழுந்து விடக் கூடாது  என்பது போல் மரத்தை தாங்கி பிடித்தபடி, Paul உடன்  மற்ற  நண்பர்களும் நின்று கொண்டு இருந்தார்கள். நான் கத்தியபடி ஓடி வந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லாத்தானே எல்லோரும் தண்ணீரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். பின்னே எப்படி மரம் ஏற  வேண்டி வந்தது? நான் நிஜமாகவே கடல் பயணத்தை ஆரம்பித்து விட்டேனா என்று மரத்தில் இருந்து பார்க்கிறாரா? ஒன்றும் புரியாமல் பயந்து கத்தியபடி ஓடி வந்தேன்.

"Paul, Paul, என்னாச்சு? ஏன் இவர், இப்படி பாதி மரம் ஏறியிருக்கிறார்?" என்று கேட்டு கொண்டே வந்தேன்.
Paul, எனக்கு பதில் சொல்லாமல் வேறு எங்கோ மற்றவர்களுடன்  பார்த்து கொண்டிருந்தார். லிண்டா என் தோள் பிடித்து அமைதி படுத்தினாள்.
Paul  மெல்ல திரும்பி,  என்னை பார்த்து, "ஒண்ணும் இல்லை, சித்ரா. volley-ball விளையாடி கொண்டிருந்தோம். பந்து தென்னை மரம் மேலே மாட்டி கொண்டது. எப்படி எடுப்பது என்று தெரியவில்லை.  உங்க ஆளு, மரம் ஏறி பந்து எடுக்க முயற்சி பண்ணுவதாக சொன்னாங்க. ஆனால்  பாதி மரத்துக்கு மேல் ஏற முடியவில்லை. அதான்."


நான் லிண்டாவை பார்த்து உதவிக்கு police or fire-engine service  கூப்பிடும்படி சொன்னேன்.
மேலிருந்து சத்தம்:  "வேண்டாம்.   நானே மெல்ல  இறங்கிடுவேன்."
Paul ஏக்கத்துடன், "solomon got the best seat in town.  அங்க பாருங்க. கூட்டத்தில் எங்களுக்கு சரியா தெரிய மாட்டேங்குது.  அவருக்கு  பிரச்சினை இல்லை."
"என்ன கூட்டம்? என்ன பிரச்சினை?" என்றேன் பதட்டத்துடன்.

லிண்டா விரல் காட்டிய திசையில், ஒரு topless model அழகி,  ஒரு calendar photo-shoot  ஒன்றுக்காக  பல போஸ் களில் சிரித்து கொண்டு இருந்தது அரை குறையாக கூட்டம் நடுவில் தெரிந்தது. முதலில் பயத்தில் கத்தியவள் இப்பொழுது கோபத்தில் கத்தினேன். வேறு என்ன செய்ய?  மரம் ஏறியா உதைக்க முடியும்?

இன்று வரை, என் ஆளு  தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும்,  பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார். பனை மரத்தின் அடியில் குடித்தது பால்தானாம் - கள் இல்லையாம்.   "நம்பிட்டேன்."

There is never a dull moment in our happily married life.  :-)



Sunday, April 18, 2010

நேனே சந்திரமுகி

இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.  எதை பற்றி எழுதலாம் என்று  யோசித்து கொண்டிருந்த வேளையில்,  "ரா, ரா, ......" என்ற சந்திரமுகி பாடல் கேட்க நேரிட்டது.
திடீரென்று  (வழக்கம் போல தான்)  அப்படியே மாவு கிரைண்டர் சுத்தி, நாங்கள் "சந்திரமுகி" பார்த்த விதம் கண் முன் பொங்கியது - சாரி  - வந்தது.

Dallas, Texas  இல்  ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான்  சந்திரமுகி படம் பார்க்க போனோம்.
 
"லக....லக.....லக......"  ஒன்று:

தியேட்டர் நெருங்கிய பொழுதுதான்,  படம் ஆரம்பிக்கவும் தூவ,  ரெடி ஆக வாங்கி வைத்து இருந்த paper confetti எல்லாம், நண்பர் தன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டார் என்று தெரிந்தது.  அசராத மற்றொரு  நண்பர்,  தியேட்டர் lobby க்கு வந்ததும், அங்கு வைக்கப் பட்டு இருந்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு உள்ள  பிட் நோட்டீஸ் அத்தனையும் எடுத்து வந்து  நண்பர்களிடம் கொடுத்து,  பொறுமையாக கிழித்து confetti  மற்றும் பேப்பர் ராக்கெட்ஸ்  விட, செய்து வைக்கும் படி சொன்னார். நாங்கள் தயார் ஆனோம்.
தியேட்டர் மேனேஜர்  ஒன்றும் புரியாமல், வெளியில் வைக்கும் நோட்டீஸ் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் காலி ஆகிறதே என்று மூன்றாவது முறையும் வைத்து விட்டு திரும்பியவர், நண்பர் பாய்ந்து சென்று அத்தனையும் எடுப்பதை பார்த்து விட்டு, எச்சரிக்கை செய்து விட்டு சென்றார்.

"லக....லக.....லக....."  இரண்டு:

 எங்கள் குழுவில் மொத்தம் 16 நண்பர்கள் இருந்தோம்.    எல்லோரும் சேர்ந்து அமர்ந்தோம்.   என் பக்கத்தில் ஒரே ஒரு சீட் தான் காலியாக இருந்தது.

 படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த போது,   குடும்பத்துடன் வந்த ஒரு ரசிகர்,  சேர்ந்து  உட்கார இடம் கிடைக்காமல்,  தானும்  தன் மனைவியும் , கை குழந்தையுடன் வேறு  வரிசையில்  உட்கார ஏற்பாடு செய்து  விட்டு, என்னருகில் இருந்த இருக்கையில், அவரின் அம்மாவை   உட்கார வைத்து விட்டு சென்றார். அத்துடன்,  தியேட்டர் houseful ஆனது.

  அந்த ஆன்ட்டியை  (Aunty )   கண்டதும், தனியாக உட்கார்ந்து இருக்கிறாரே  என்று  பேச்சு கொடுத்தேன்.   அவரும்  உடனே,  நெடு நாள் பழக்கம் போல தன் ஊர் கதை, வீட்டு கதை எல்லாம் என்னிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
நண்பர் கூட்டம்,  படம் ஆரம்பிக்கும் முன்னே விசில் சத்தத்தை ஆரம்பிக்க,  ஆன்ட்டி முகம் சுளித்தார்.  பேப்பர் ராக்கெட்ஸ் பறக்க ஆரம்பித்தன. சத்தம் கூடவே,  மேனேஜர்  ஓடி வந்து, நண்பர்களுக்கு  இரண்டாவது எச்சரிக்கை செய்தார். பேசி பார்த்ததில், மேனேஜர்  வேலைக்கு புதிது என்று தெரிந்து விட்டது. நான் ஒரு பக்கமும், அந்த பக்கம் எங்கள் தோழியும் ஒன்றும் தெரியாதது போல, நண்பர்களுக்கு  அரணாய் அமைதியாக  அமர்ந்து இருந்தோம்.

"லக...லக....லக...."   மூன்று:

எங்கள் நண்பர், ஷங்கர் ஒரு gallon தண்ணீர் கேன் (3  3/4 liters கொள்ளளவு கொண்ட பெரிய பிளாஸ்டிக்  can)  ஒன்று உள்ளே கொண்டு வந்து உட்கார்ந்தார். நண்பர்கள் ரஜினி பாடல்களை பாடி, விசில் அடித்து ஆட்டம் போட, தானும் தன்னை மறந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். ஆட்டத்தின் உச்சியில், தண்ணீர் கேன் கையில் எடுத்து சுழற்றி சுழற்றி ஆடியவர், கை தவறி விட, சுற்றிய வேகத்தில் அத்தனை பெரிய கேன் - தண்ணீருடன்- வேகம் எடுத்து பறந்தது. சற்று தள்ளி,   concrete தரையில் பட்டு , ஒரு வெடி சத்தத்துடன் சிதறி கொட்டியது. அந்த பக்கம் இருந்தவர்கள் தலைகள் தப்பியது, ஒரு ஆச்சர்யம்!

உள்ளே உட்கார்ந்திருந்த பலர், ஏதோ bomb வெடித்து விட்டது என்று பதறி அலற, மேனேஜர் மீண்டும் உள்ளே ஓடி வந்து பார்த்தால், எங்கள் கூட்டம் .............. 
திட்டினார் - திட்டினார் - திட்டினார் -  எங்களில் யாருக்கும் ஹிந்தி தெரியாததால் ஒன்றும் புரியவில்லை. புரிந்து இருந்தால்:
"no bad words ...... no ..... no..... mummy எல்லாம் திட்டாத...... நோ...... ஒன்லி பூஸ்ட்....... மை பாமிலி, டோட்டல்  damage ...... ஒய் ப்ளட்? சேம் ப்ளட்......." என்று  "வடிவாக"  நாங்களும் பதில் பேசி இருந்து இருப்போம். 
மற்றுமொரு நல்ல செய்தி:    யாரும் bomb என்று  பயந்து போய், போலிசை  போன் செய்து  கூப்பிடவில்லை.  தப்பித்தோம். 


ரஜினி படம் பார்க்கும் போது, இதெல்லாம் சகஜமப்பா என்று, எதுவுமே நடக்காதது போல அந்த ஆன்ட்டியை    திரும்பி பார்த்தேன்.  அவரின்  பொன்மொழிகள்:  "பாத்தியாமா? இதுகளெல்லாம் அவங்க அம்மா, அப்பா, அமெரிக்காவுக்கு எவ்வளவு பெருமையா அனுப்பி வைத்து இருப்பாங்க. இங்கே பாரு. நம்மூரு லோ கிளாஸ் (???) ஆளுங்க மாதிரி எப்படி ஆட்டம் போடுதுங்க.  எல்லாம் மேற்படிப்பு படிச்சு பெரிய பெரிய வேலைக்கு போறதுங்க.  அமெரிக்காவில அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி ஆடுதுங்க," என்று தன் பங்குக்கு எனக்கு புரிகிற மாதிரி  தமிழில் கொட்டித்  தீர்த்தார். அவ்வ்வ்வ்......
  
நான் திரும்பி, என் நண்பர்களை பார்த்தேன். ஒருவர், குழந்தை நல மருத்துவத்தில் (Pediatrics) மேல் படிப்பு படிக்க வந்தவர் ; மற்றொருவர் - IT project ஒன்றின் டீம் மேனேஜர் ; இரண்டு நண்பர்கள் - Ph.D. டிகிரி வாங்க வந்தவர்கள்;  ஒருவர் - Food Technology யில் research  செய்பவர்;   மற்றொரு நண்பர் - புற்று நோய் செல்லில் (cancer cells) research செய்பவர் - என்று பட்டியல் நீண்டது. எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதியாக நம்பி கொண்டிருந்த அந்த ஆன்ட்டியிடம்   இந்த விவரங்களை சொல்லாமல், சிரித்தேன். 


படம் ஆரம்பம் ஆனது.  தியேட்டரில் பெரும்பாலோர்  கத்தினார்கள். அந்த ஆன்ட்டியின்    புலம்பல் தொடர ஆரம்பித்தது.  படம் ஆரம்பிக்கும் வரை, பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்த எனக்கு, இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.  எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி  விடை பெற்று கொண்டு போக, உள்ளிருந்த ரஜினி ரசிகை வெளியே வந்து விட்டாள். எனது umpire விசிலை எடுத்துக் கைக்குள் வைத்து கொண்டேன். ரஜினியின் ஷூ அறிமுகம்........ அந்த ஆன்ட்டி, ஏதோ சொல்லி புலம்ப மீண்டும்  என் பக்கம் திரும்ப, முதல் ஆளாக என் விசில் தனியாக தியேட்டர் அதிர அடித்தேன். என்னை தொடர்ந்து நண்பர்கள் விசில்கள்...............தியேட்டரில் மற்ற ரஜினி ரசிகர்களின் விசில்கள்................ "லக லக லக ......" பேயாடி விட்டது, அவர் முகத்தில். 

எனக்கு என்னவோ ஓரிரு முறை,  அந்த ஆன்ட்டி   மேலே நோக்கி சாமியிடம், "நல்ல வேளை, அப்பனே  - இப்படி ஒரு பெண்ணை எனக்கு மருமகளாக  தரவில்லை," என்று சொல்லி நன்றி கூறுவது போல தெரிந்தது. படம் முடியும் வரை,  எதேச்சையாக   அவர் பக்கம் திரும்பும் போதெல்லாம் அவர் என்னை பார்த்த பார்வைகள் ....... நானே "சந்திரமுகி" என முறைத்து கொண்டே இருந்தார்.  "லக லக லக ......" என்று ஒரு முறை, அவரின் பக்கமாகவும் சந்தடி சாக்கில் கத்தினேன்.

எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால்  என்ன?   அது கலையாகட்டும் -  விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும்.  அவரவர்  படிக்கும் போதும், வேலை பார்க்கும் போதும் அதோடு ஒன்றி கவனத்துடன்  இருக்கிறோம். மற்ற நேரங்களில், நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு,  வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை  அவிழ்த்து விட்டால் என்ன?    "தண்ணி" அடித்து விட்டோ இல்லாமலோ ஆடும் dirty dancing பற்றி நான் சொல்லவில்லை.

பொழுது போக்கும் நேரங்களில் கூட,  ஒரு சீரியஸ் ஆசாமியாகவோ, ஒரு critic ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.    எப்பொழுதும் விளையாட்டுத்தனமாக  இருந்தால், பொறுப்பு இல்லாத ஆள் என்று சொல்லலாம். ஆனால், எப்பொழுதும் ஒரு உம்மணா மூஞ்சியாக uptight ஆக  இருந்தால்தான் sophisticated people என்று ஏற்றுக் கொள்ள கூடியது என்று ஏன் நினைக்க  வேண்டும்?  சரி, சரி.... நாங்கள் கொஞ்சம் (தான்)  ஓவரா அன்று ஆட்டம் போட்டு விட்டோம். அந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஒரு புன்னைகையுடன் எல்லாவற்றையும் ரசிக்கலாமே. அந்த ஆன்ட்டி  கூட, எங்களை சகித்து கொண்டு சிரித்து இருந்தால், எவ்வளவு கல கல வென்று படத்தை ரசித்து இருந்து இருப்பார்கள்?  

சந்தோஷமாக  ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில்  - தலை கால் புரியாமல்தான் ஆடக்  கூடாது.  



Monday, February 15, 2010

சமையல் "அட்டூழியம்"

எனது முந்தைய பதிவுகளில் ஒன்று  - சமையல் கலை -
http://konjamvettipechu.blogspot.com/2009/10/samayal-kalai.html


அதில் குறிப்பிட்டிருந்த  பிரியாணி ரெசிபி கதை  வேண்டும் என்று, அதை படித்த சிலர் கேட்டு,  ரொம்ப ஆர்வமா தொல்லை  பண்ணிட்டாங்க.  கவனிக்க: பிரியாணி  ரெசிபி அல்ல - ரெசிபி கதை வேண்டும் என்று.

சரி, அந்த ரெசிபி சொந்தக்காரர்,  "சமையல் அட்டூழியங்கள்"  நாயகன் ஆன, மாண்புமிகு தினேஷ் அவர்களிடம் அனுமதி கேட்டேன்.

அவரின் அனுமதி பதில்: (நிஜமா, இப்படித்தான் அவர்  இ-மெயிலில்  சம்மதம் அனுப்பி இருந்தார்.)

"ஆட்டு தலையில தண்ணிய தெளிச்சாச்சு. அது தலைய ஆட்டாமய இருக்கும். பிரியாணிக்கு ஆடு ரெடி........!" 

 வெட் கிரைண்டர் அப்படியே சுத்துனா - எத்தனை  நாள்தான் கொசுவத்தி  சுருளையே சுத்திக்கிட்டு இருக்கிறது.
மேலும், இது சமையல் சம்பந்த பட்ட பதிவு வேற ------------------------

நாங்கள்  Texas இல் இருந்த நேரம், ஒரு நாள் தினேஷுக்கு,  நண்பர்களுக்கு தன் கையால சமைச்சு போடணும்னு,  எங்க கிரகம் - நேரம் -  சரியில்லாத நேரத்துல தோணிடுச்சு.   மற்ற  நண்பர்கள்  எட்டு  பேருக்கும்,  மாலை ஆறு மணிக்கு போன் பண்ணி, "இன்னைக்கு நான் சிக்கன் பிரியாணி பண்றேன். சித்ரா வீட்டுக்கு கொண்டு வந்துடுறேன்.  எல்லோரும் அங்கே ஒரு ஒம்பது மணிக்கு, டின்னருக்கு  வந்துருங்க" என்று சொல்லியாச்சு.

எனக்கும்  போன் பண்ணி,  "சித்ரா,   இன்னைக்கு  நீங்க சமைக்க வேண்டாம். நான் சிக்கன் பிரியாணி செஞ்சு கொண்டு வரேன்" என்ற பில்ட்-அப் வேற.
ஒவ்வொருத்தராக எட்டரை மணியில் இருந்து வர ஆரம்பித்தார்கள்.  ஆனால் வர வேண்டியவங்க  வர ஒம்பது அரை ஆயிட்டு.
பிரியாணி செய்து கொண்டு வர இவ்வளவு நேரமானு கேக்கணும்னு தோணுச்சு. கேள்வி கேட்டா மட்டும் போதுமா? பதில்னு ஒண்ணு இருக்கணும்ல.

தினேஷ் உடன், நண்பர் ஸ்ரீநாத். அவர் கையில் ஒரு  பெரிய குக்கர்.  விட்டா, சிக்கன் என்ன, ஒரு முழு ஆட்டையே  உள்ளே வச்சு பிரியாணி பண்ணிடலாம். அப்படி ஒரு சைஸ்.

எல்லோரும் ஆசையாய் பார்க்க,  ஸ்ரீநாத் ஏதோ Burj Khalifa வுக்கு திறப்பு விழா துபாயில நடத்துற மாதிரி பதவிசா குக்கர் மூடியை திறந்து வைத்தார். தினேஷ், என்னை சிறப்பு விருந்தினர் மாதிரி, "சித்ரா, முதலில் நீங்க. அப்புறம் நாங்க" என்று சொல்லி தட்டை என் கையில் கொடுத்தார். ( என்னை அன்று முதல் பலி கொடுத்ததுக்கு, தினேஷ் --- இன்று இந்த பதிவில் -  உங்க இமேஜ், டோட்டல் டேமேஜ் பழி(லி)  வாங்கல்.)

பக்கத்தில போனா, பிரியாணி வாசனை மிஸ்ஸிங்.  கரண்டியை உள்ளே விட்டா, சிக்கன் பீஸ் மிஸ்ஸிங்.
இங்கே  பசி,  விஷயம் தெரியாம  இமய மலையின் உச்சத்தில் கொடி நாட்டிக்கிட்டு  இருக்கு.
 குக்கருக்குள் எட்டி பாத்தேன்.  பிரியாணியை,  என்றிலிருந்து இப்படி களி மாதிரி கிண்ட ஆரம்பிச்சாங்கன்னு  தெரியலையே?

"தினேஷ்,  பிரியாணி அரிசி  மாதிரியே தெரியலையே?"
"சித்ரா, என் ரூம் மேட் கிட்டே கேட்டேன். நாம வெறும் பச்சரிசி மட்டும் தான் வாங்குனோம். பிரியாணி அரிசி இல்லைன்னு சொல்லிட்டான். ஆறு அரை மணிக்கு மேல,  இந்தியன் ஸ்டோர்ஸ், அவ்வளவு தூரம் எங்கே போறது? அதான்."

சித்ரா:       "பிரியாணி மசாலா அரைச்சி போட்டீங்களா, இல்ல ரெடிமேட் மிக்ஸ் ஆ?"
தினேஷ்:    " பிரியாணி மசாலா அரைச்சி போட என்ன வேணும்னு யாருக்கு தெரியும்? ரெடி மேட் மிக்ஸ் இருக்குனு தான்   ஆரம்பிச்சேன்.  எல்லாம் அடுப்புல வச்சுக்கிட்டு தேடி பாத்தா, இல்ல."
                   "அப்புறம், என்ன மசாலா போட்டீங்க?"
                    " பாட்டிலில் மஞ்சளா ஒரு ஒரு பொடி இருந்தது."
சுதாகர்:        "டேய், அது மஞ்சள் தூள் டா."
தினேஷ்:       "அது கறி மசால் இல்லையா? சித்ரா, அப்போ மசாலா ஏதும் போடல."

சித்ரா:         " நெய் சாதம் மாதிரி பண்ணி இருக்கலாம்ல."
தினேஷ்:      "நெய் வாங்குறது இல்ல. பட்டர் ஸ்டிக்ஸ் தான்."
சித்ரா:        "அதை உருக்கி போட்டுற வேண்டியதுதானே."
ஸ்ரீநாத்:       "சித்ரா,  மத்தியானம் உருளை கிழங்கு வச்சு என்னமோ பண்றேன்னு,   இருந்த ரெண்டு ஸ்டிக் பட்டர் ஐயும் பாத்திரத்துல போட்டு உருளை கிழங்கை அதில் சறுக்கி விளையாட விட்டு ரோஸ்ட் பண்ணி வச்சான்.  உருளை வறுவல்னு நினைச்சா,  நெய் வறுவலில்,  கொஞ்சம் உருளை இருந்தது.   அப்புறம், பிரியாணிக்கு குக்கர் அடுப்புல வச்ச பிறகு, எண்ணெய் ஊத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்."

மது:          "டேய்,  எல்லாம் சரி. சிக்கன் பீஸ் எங்கேடா?"
தினேஷ்:    "நம்ம சுதாகர் கிட்டே சொல்லி நேத்தே சிக்கன் வாங்கி fridge இல் வச்சிடுனு சொன்னேன்."
சித்ரா:         "அப்புறம்?"
தினேஷ்:      "வாங்கிட்டு வந்தவன், fridge இல் வைக்காமல்,  மறந்து போய் கார்லேயே வச்சுட்டான். சம்மர் ஹீட்.  இந்த வெயிலில், நேத்து மதியத்துல இருந்து கார்லேயே இருந்த சிக்கன், இன்னைக்கு சாயந்திரம் போய் எடுத்து பாத்தா, நாத்தம் தாங்கலை. குப்பையில் போட்டுட்டோம். அதுக்குள்ள கடுகு வெடிச்சிட்டு. எல்லோரும், பசியோட வெயிட் பண்ணுவீங்க. இனிமே கடையிலே போய் வாங்கிக்கிட்டு வந்து வச்சா நேரம் ஆயிடுமேன்னு , சிக்கன் போடல."

சித்ரா:        "எப்படி, தினேஷ்?  அப்புறமும் சிக்கன் பிரியாணினு  சொல்லி குக்கர் திறந்து வச்சீங்க?"
தினேஷ்:       "போன வாட்டி பண்ணேன், சித்ரா. நல்லா வந்தது.
சித்ரா:          "நான் நம்பிட்டேன்."
தினேஷ்:        "இந்த வாட்டிதான்  சொதப்பிடுச்சு."
சாலமன்:       "சொதப்பல் என்பது ஒரு சாதாரண வார்த்தைனு நினைச்சேன்." 
மது:              "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட  பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"
சித்ரா:         " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே,  சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல.    அடுத்த வாட்டி,  சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."

தினேஷ், "I am your best friend, yaar" என்று சொல்வது கேட்கிறது.

எங்கள் நட்பு இரும்பு சங்கிலியால்  பிணைக்கப் பட்டது.  இன்றும், தினேஷ் எங்கள் நெருங்கிய நண்பர். அவருக்கு, இன்னும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
தளபதி படத்தில்  "காட்டு குயிலு" பாடலில் வரும்:
"என் நண்பன் போட்ட சோறு,   நிதமும் தின்னேன் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்."
எங்களுக்காக:
"என் நண்பன் போட்ட சோறு,  அதையும் தின்னோம் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவோம்." என்று பாட்டு பாடும் வானம்பாடி பறவைகள்,  நாங்கள்.

  தினேஷ், இப்பொழுது சென்னையில் வாசம். தினேஷின் அம்மா,  நாங்கள்  ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும், மட்டன் அல்லது சிக்கன்  பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து தந்து, பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.

Monday, December 21, 2009

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.........

(என் முந்தைய பதிவு: http://konjamvettipechu.blogspot.com/2009/10/thirunelveli-halwa.html -
கிட்ட தட்ட ரெண்டாம் பாகம், இது என்று வைத்து கொள்ளலாம். - ஒ, நீங்க பத்தாம் பாகம்னு  வச்சுக்க போறீங்களா? ஒ.கே. உங்க இஷ்டம்.)


- நிச்சயமா கடவுள் சீரியஸ் சாமி  கிடையாது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த சில நபர்களை பற்றி நினைக்கும் போது, இந்த  காமெடி characters உருவாக்கிய கடவுள்  ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று மனதில் எண்ணி கொள்வேன். சினிமா  காமெடி மாதிரி , நிஜ வாழ்க்கையில் நடந்தா என்ன பண்ணுவீங்க?  

காட்சி 1 - காமெடி 1

கந்தசாமி படத்தில், ஒரு காட்சியில், ஸ்ரேயா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம், பதில் கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பார். ஸ்ரேயாவுக்கு அது எரிச்சலை தரும்.

காலேஜ் படிக்கும் போது, என் தோழர், தினேஷுக்கு தேவன் என்று ஒரு அறை தோழர் - அதாங்க, காலேஜ் ரூம் மேட் - இருந்தார். அறை தோழர் - கவுண்டமணிக்கு செந்தில் "அறை" (உதை) தோழர். விவஸ்த்தை இல்லாமல், வயசு வித்தியாசம் இல்லாமல், வடிவேலு பலரின் "அறை" (அடி) தோழர். நிஜ வாழ்க்கையில், அருவாள், போலீஸ், அது இதுன்னு பிரச்சினை இல்லைனு வைங்க, நிச்சயமா தினேஷுக்கு தேவன்தான் "அறை" தோழரா இருந்திருப்பார்.

தேவன் ஒரு நல்ல மனுஷன்தான். ஆனால் கேள்வி என்ற ஆயுதத்தை, தன் நாக்கில் வைத்து கொண்டு சில சமயம் போட்டு தள்ளி விடுவார். ஒரு சமயம், அவர் கேள்வி தொல்லை தாங்க முடியாமல், தினேஷ் தேவனிடம், "நீ கொஞ்ச நேரம் கேள்வி எதுவும் கேட்காம இருக்கியா?" என்று கேட்டு கொண்டதுக்கு கூட தேவன் சளைக்காமல், "எதற்கு?" என்று கேட்டார்.

காட்சி  2 - காமெடி  2:

கருணாஸ், பொல்லாதவன்  படத்தில் தனுஷ், சந்தானம் மற்றும் சில நண்பர்களிடம், "ஏய் நீ கேளேன், மச்சான் நீ கேளேன் ....." என்று ஆரம்பிப்பார். அந்த காமெடி பீசை பாக்கும் போது, எங்கள் தோழர் ராமநாதனை  நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களது அரட்டை நேரத்தில், அவரும் உட்க்கார்ந்து கேட்டு கொண்டு சிரிப்பார். திடீரென்று, தானும் ஜாலியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றி விடும் போல.....
இப்படித்தான், நீ கேளேன் - நீ கேளேன் - என்று ஆரம்பம் ஆகிவிடும். "ஆஆஆ" எங்களிடம் - "ரம்பம்" அவரிடம்.
இப்போ பஞ்ச் லைன் வரும், இப்போ ஜோக் வரும் என்று நாம் காத்து கொண்டிருக்க, அவர் மட்டும் ஏதோ சொல்லிவிட்டு, பெரிதாக சிரித்து கொண்டு இருப்பார். தன் "கடிக்கு" அவரே சிரிப்பார். அவர் மட்டும் சிரிப்பார். நாங்கள் நெளிவோம். முழிப்போம்.

காட்சி 3 - காமெடி  3:

மன்னன் படத்தில் கவுண்டமணியின் அறிமுக காட்சியில், ரஜினி அவரிடம், "என்ன படிச்சிருக்க?" என்று கேட்பார். அதற்கு கவுண்டமணி, "எந்த வேலையும் செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்" என்பார்.

ரோகன் என்பவரை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தோம். எங்கே வேலை செய்யுறீங்க என்று கேட்டதற்கு, "நான் US க்கு மேல் படிப்புக்கு வந்தேன். சுமாரா போச்சு. இப்போ வேலைக்கு    interviews  அட்டென்ட் பண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ இங்கேயே green card வாங்கி settle ஆன doctor பொண்ணு இல்ல dentist பொண்ணு தேடி பாத்தேன். ஒண்ணும் செட் ஆகலை. நர்சு பொண்ணு கூட கிடைக்கலை.  ஏன் என்றே தெரியவில்லை. இப்போ ஒரு hospital  attendant , green card application போட்டு காத்திருக்கும்  நம்மூரு  பொண்ணு அமைஞ்சுடிச்சு. அவ சம்பளமே இப்போதைக்கு போதும். அப்புறம் மெல்ல நானும் வேலை தேடிக்குவேன்."
என்ன கொடுமை சார், இது?

காட்சி 4 - காமெடி  4:


கிரி படத்தில், எக்கச்சக்க உதை வாங்கி திரும்பி வந்த வடிவேலுவை  பாத்து, "இவ்வளவு அடிக்கிற வரை சும்மாவா  இருந்தீங்க?" என்று கேட்டதற்கு, வடிவேலு விளக்கம் சொல்லி விட்டு, " அவன் என்னை பாத்து ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டான்." என்பார்.

கல்யாண சுந்தரம் என்ற மனிதரை, நான் மறக்க முடியாது.
"இந்த பர்கர் நல்லா இருக்குமா?"
"எப்படி சார் சொல்ல முடியும்? எனக்கு பிடிக்கும். நீங்க சாப்பிட்டு பாத்தாதான் உங்களுக்கு தெரியும்."
"கரெக்ட். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு taste. இதுக்குதான், ஒவ்வொரு சாப்பாட்டு பொருளுக்கும், 'SWAD' (ஸ்வாத்) என்ற கணக்கில், ஒன்றிலிருந்து பத்துக்குள் நம்பர் கொடுக்க வேண்டும். அவர் அவருக்கு எந்த நம்பர் ஸ்வாத் உள்ள உணவு பொருட்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த SWAD நம்பருடைய  எந்த உணவு பொருளையும் தயக்கமின்றி ருசி பாக்கலாம். இப்ப நான் எதுக்கு $7  செலவு செய்ய வேண்டும்?" என்று பேசி கொண்டே .......................என்னை,  அமெரிக்காவில் ஆட்டோ இல்லாமலே கூட்டிட்டு போய் கொத்து கறி பண்ணிட்டார். ஸ்வாத் என்றால் ஹிந்தியில் ருசிக்கு பொருந்தும் என்று ஹிந்தி tuition வேறு.
அதுதான், நான் அவருடன் கடைசியாக பேசியது. அலறி அடித்து ஓடியவள், அவர் இருக்கும் திசை இன்று வரை போனதில்லை.........................இவர் என்னிடம், இப்படி சொன்னதை  என் நண்பர்களிடம் சொல்லிய போது, "எப்படி சித்ரா, அந்த ஆளு உங்களை  இந்த அளவு "அறுக்குறதுக்கு" விட்டீங்க?" என்றார்கள்.
"அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க.....

காமெடி காட்சிகளை  தொடர்ந்து பார்க்கிறேன் - சிரிக்கிறேன் - திரையிலும் நேரிலும்.

Tuesday, November 24, 2009

யோசிக்காம சொல்லிட்ட, சரி. இப்பவாவது சொன்னதை யோசி.





சில  சமயம் யாராவது சில கேள்விகள் கேட்கும்போதோ பதில் சொல்லும்போதோ, "எப்படி, இவங்களால மட்டும், எப்படி?" என்று உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?  

எனக்கு 9th and 10th classes க்கு science teacher ஆக Mrs.மேரி கமலம் என்பவர் இருந்தார். அடிக்கடி மாணவிகளிடம் கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர். அவர் கேள்வி கேட்கும்போதே நான் நெருப்பு கோழி மாதிரி தலையை எதிலாவது புதைத்து கொள்ள வகை தேடுவேன். அவர்  கண்களை  பாக்க நேர்ந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல அந்த மாணவி தான் எழும்ப வேண்டும். எழும்பியவள் சரியான பதிலை சொல்ல தவறினால்,  கண்டித்துவிட்டு உட்கார சொல்லும்போது எப்பொழுதும், "sit down, don't show your stupidity in the class" ("உட்கார். உன் முட்டாள்தனத்தை வகுப்பில் காட்டதே") என்பார். அந்த டீச்சரின் punch dialogue ஆக நாங்கள் அதை கருதி நாங்களும் சில சமயம் தோழிகள் நடுவில் விளையாட்டாக சொல்லி சிரிப்போம்.

ஆனால் இன்றும்  நான் சொல்ல வேண்டியது வரும் என்று நினைக்கவில்லை. சிலரின் கேள்விகள் அல்லது பதில்களை கேட்கும்போது என்னை அறியாமல் மனம், Mrs.மேரி கமலம் டீச்சரின் வசனத்தை copyright பற்றி கவலை படாது சொல்லி பார்த்து கொள்கிறது. "Sit down, don't show your stupidity." (உட்கார். உன் முட்டாள்தனத்தை காட்டாதே")

சித்ரா (மதுரையில்):    என்ன ரோடு ரொம்ப மோசமா இருக்கு? ஆட்டோ போகும்போது ரொம்ப குலுங்கி கஷ்டமா இருக்கு.
அறிவு ஜீவி:   என்ன பண்றதுங்க? மூணு மாசம் முந்திதான் ரோடு போட்டான். கவெர்மெண்டு நல்லது செஞ்சாலும் இந்த மழைக்கு பொறுக்கலை. விடாம பெஞ்சு குண்டும் குழியுமா ஆகி விட்டது.
(hello, அறிவு கொழுந்தே, வெயில் மழை எல்லாம் தாங்கிற மாதிரி போடறதுக்கு பேருதான் ரோடு. இவன் போட்ட ரோடு லச்சணத்தை பத்தி பேசாம........ இதுக்குன்னு மழை பெய்யும் போதெல்லாம் ரோடுக்கு  குடையா பிடிக்க முடியும்?)

சாத்தூரில் எங்கள் சொந்தக்கார பெண் ஒருவர் காலில் சூடான எண்ணை கொட்டி விட டாக்டரிடம் போய் treatment எடுத்துகொண்டார். எரிச்சல் வலி போக tablets உம்  காயத்தில் போட ஒரு ointment உம் டாக்டர் கொடுத்து இருந்தார்.  ரெண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அவரை வேறு விஷயமாக பார்க்க வந்த ஒரு பெண், காலில் இவரது காயத்தை பார்த்து விட்டு -
அறிவு ஜீவி:  டாக்டர்ட்ட போனீங்களா?
சொந்தக்கார பெண்: ஆமாம், வலிக்கு மருந்தும் காயத்திற்கு தைலமும் தந்தார்.
அறிவு ஜீவி:  ஊசி ஏதும் போட்டுக்கலையா?
சொந்தக்கார பெண்: வேண்டாம்னுட்டார்.
அறிவு ஜீவி: எங்க டாக்டர் கிட்ட போங்க. ஒரு ஊசி போட சொல்லுங்க. ஒரே ஊசிதான். உடனே சரியா போயிடும்.
(hello, அறிவு கொழுந்தே, MBBS MD எல்லாம் முடிச்சிட்டு ஒருத்தர் பல்லாங்குழி விளையாடவா போர்டு மாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஒரு மாய ஊசி போடுங்கனு இவரே treatment சொல்லி டாக்டர் செய்றதுக்கு அவர் ஏன் medical college போயிருந்து இருக்கணும்? இந்த பெண்ணிடம் ஒரு tuition class போயிருந்தாலே  போதுமே.)

Texas இல் ஒரு Indian Students' Association orientation meeting போது:     நீங்க உங்க இந்தியன் நண்பர்கள்  மட்டும் இருக்கும் போது உங்க மொழியில பேசிக் கொள்ளலாம். ஆனால் department or class இல் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்க சொந்த மொழியில் உங்கள் இந்தியன் நண்பர்களுடன் பேசாமல் Englishil பேசுவது நல்ல பண்பு.
அறிவு ஜீவி:  அவங்க மட்டும் அவங்க தாய் மொழியில் பேசும்போது நான் ஏன் என் தாய் மொழியில் பேசக் கூடாது.
(hello, அறிவு கொழுந்தே, பண்புக்கும் வீம்புக்கும் வித்தியாசம் தெரியாதவனே, உனக்கு ஆங்கிலம் தெரியலை என்றால் வேறு விவகாரம். Social ethics தெரியலைனா?)

அறிவு ஜீவி (இந்தியாவில் இருந்து முதல் முறையாக இங்க வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி):  சித்ரா, நீங்க தயிர் எங்க வாங்கினீங்க?
சித்ரா:  grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா:  well, American store தான்.  அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.
அறிவு ஜீவி:  கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)

சென்னையில் ஒரு அறிவு ஜீவி:   சித்ரா, உன் மகன்  என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட  அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா?  நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)

இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இவங்க இப்படி பேசறதுக்கு காரணம்:
Ignorance or Innocence or stupidity?
அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா?