Tuesday, January 26, 2010

காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?


2003 - "அவள் என் காதலை எப்படியும் புரிந்து கொண்டு ஏற்று கொள்வாள்."
2004 - "அவள் என்னை காதலிக்கிறாள். எனக்கு அது போதும்."
2005 - "அவள் பெற்றோர் சம்மததுக்காக காத்திருக்கிறோம்."
2006 - "காதலித்தவளையே எல்லோரின் ஆசிர்வாதங்களுடன் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்."
2008 - "என்னவள், என் மகன், என் வேலை னு சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருக்கு."
2009 - "காதலிக்கும் போது, அப்படி இப்படி னு சொல்லுங்க. இப்போ, எல்லா வேலையையும் என் ஒருத்தி தலை மேல தூக்கி போட்டுட்டு, நீங்க ஹாய்யா உக்கார்ந்து டிவி பார்த்து கிட்டு இருங்க. இவர் என் பின்னால லோ லோ னு சுத்துனப்போ இப்படிதான் எதையும் கண்டுக்காம இருக்க போறேன்னு சொல்லி இருந்தா, இவர் இருந்த பக்கம்  திரும்பி பார்த்திருக்க மாட்டேன். "

எங்கள் நண்பர் ஒருவரின் காதல் புளி ரசம் சொட்டும் கல்யாண வாழ்க்கை நல்லா புரிஞ்சிருக்குமே......

என்னவோ தெரியலை, மக்கா. கல்யாணத்துக்கு முன்னால் காதல் கத்திரிக்காய் னு கூவுரவங்க நிறைய பேர், கல்யாணம் ஆன பின்னால, கிலோ என்ன விலைனு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க ......

இருக்கிற வேலை வெட்டி, அம்மா அப்பா, பொறுப்பு பருப்பு  எல்லாத்தையும் துடப்பை கட்டை மாதிரி கதவுக்கு பின்னால வச்சுட்டு, ஒருத்தர் பின்னால ஒருத்தர், ஒருத்தர் கனவுல ஒருத்தர் சுத்தி சுத்தி டூயட் பாட வேண்டியது. கல்யாணத்துக்கு அப்புறம், அது துடைப்ப கட்டை இல்லை, அதான் குத்து விளக்கு என்று மண்டைக்குள்ள மணி அடிக்க, பொண்டாட்டி ஆன காதலி -  கனவு கன்னி ரோல் போய்,  டி வி சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்கு ஆகி போறா. ஐயோ பாவம்!

நான் காலேஜ் படிக்கும் போது, ஒருத்தன் ஒரு தாளில், அழகா படம் வரைஞ்சு:

"மாதத்துக்கு ஒரு அமாவாசை  - உன்னை
காணாத  நாள் எல்லாம் எனக்கு அமாவாசை தானே."

என்று எழுதி என்கிட்டே கொடுத்தான்.
இந்த கிறுக்கலையும் அதை எழுதிய கிறுக்கனையும் பாத்தேன்.

காதுக்குள்ளே நோ மூசிக் - மண்டைக்கு மேல நோ பல்பு - உடம்புக்குள்ள நோ மின்சாரம் - மனசுக்குல நோ சிலிர்ப்பு - அட போடா போக்கத்தவனே, என்று அந்த தாளை அவன்கிட்டே திருப்பி கொடுத்துட்டு திரும்பி பாக்காம  போயிட்டேன். இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில்.  ஆனால், தன் நிலவை சரியாக  பாக்காமல், இன்னும் மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு,  வேறு நிலவுகளுக்கு ராக்கெட் விட்டு கொண்டிருக்கிறதா சொல்லிக்கிறாங்க.   நான் தப்பிச்சேன்டா, சாமி.

என் தோழிகளில் சிலர், கல்யாணத்துக்கு முன்னால, கற்பனை காதலனையோ  கணவனையோ நினைத்து காதல் கவிதை எழுதி வைப்பாங்க  - காலேஜ் படிக்கிறப்போ. நமக்கு காதல் படங்கள், காதல் கவிதை எல்லாம் அபத்தம் என்று நினைச்ச டைம். பிரக்டிகலா இல்லைன்னு ஒரு நினைப்புதான். கிண்டல் பண்ணுவேன்.
"நீ காதலிக்கும் போது உனக்கு புரியும்" என்று திட்டுவாங்க. அப்போ சாபம் கொடுக்கிற மாதிரி வாழ்த்துனாங்க போல.

முந்தைய கவிதையாயினி ஒருத்தியை சமீபத்தில்  சந்திச்சப்போ, உன் latest கவிதை சொல்லுனு கேட்டாக்க, அதையெல்லாம் எழுத ஏதுடி மூடு, நேரம்னு  சொல்றா. அட பாவி! பாலா இருந்தப்போவே கடைஞ்சு வெண்ணை எடுக்க அலைஞ்சவங்க  ....... இப்போ தயிர் பானையே போட்டு உடைக்கிறாங்களே.

ஒரு சமயம், என்  நண்பர்கள்  ரவுண்டு-அப் சந்திப்பில், ஒருத்தர் உணர்ச்சி வசப்பட்டு, இந்த க்ரூப்புல யாரவது காதலிச்சிருக்கீங்களா? இருந்தா, என் வலி உங்களுக்கு புரியும், என்றார். நம்ம சொக்காரவங்க, "ஆமாடா" என்று சொன்ன பேரு எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்துக்கு முன்னால டாவு அடிச்சா பேரா  இருந்துச்சு.
தன் பொண்டாட்டியை காதலிச்சு கல்யாணம் பண்ணுனவன் கூட அர்த்தம் (??!!) உள்ள, இல்லா சிரிப்பை சிரிக்குராக.
நான் மட்டும் தான், "காதலிச்சி இன்னும் முடிக்கலை" என்று சாலமன் ஐ நினைச்சி சொன்னா, வேற்று க்ரஹத்து ஜந்து ஒண்ணு, UFO crash ஆகி இவங்க முன்னால நின்னு, "கியாங் சியாங்கி கி கி கூய்ந்ச்சி..." னு பேசுராப்புல முறைச்சி பாத்தாங்க.

நீ கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கலனாலும் ஒண்ணும் குடி முழுகி போகாது மக்கா, ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் காதல்  நெருப்பு தணலின் சூடு குறையாம கட்டிக்கிட்டவகுள ரசிச்சி காதலிங்க. அவ ஆழி மாதிரி
ஆயிட்டா, அப்படி ஆயிட்டா இப்படி ஆயிட்டானு புலம்பாதீங்க. அழகு, உருவம், பருவம் பாத்து வரது, லவ் (love) இல்ல மக்கா,  அதுக்கு பேரு லஸ்ட் (lust) .

 கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல.   அதான் - அதான் - அதேதான் - கணவன் மனையின் ஆத்மார்த்தமான காதல் உணர்வுகள்.  இதில், ஒரு கை ஓசை கூடாது.

நான் போன பதிவில் போட்ட, "முத்தம் போதாதே" கவிதைக்கு என்ன குறைச்சல்? ரெண்டு புள்ளைங்களை பெத்த புறகும் இப்படி காதல் தோய தோய புருஷனை நினைச்சி கவிதை எழுதினேன். unpublished comments  சிலவற்றில், "உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி, இப்படி எழுதுறதுக்கு" என்று சொன்னாப்புல. எவனையோ காதலிக்குறேன் என்று நினைச்சி கல்யாணத்துக்கு முன்னாலே கவிதையில்   சொன்னா ஓகேவாம்.. கட்டி இருக்கிறவனை  காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம். நல்லாத்தான் ஓட்டுறாங்க. அதுலேயும் ஒருத்தர்: "சித்ரா, கவிதை படிச்சிக்கிட்டே வந்தேன். கடைசியில் நல்ல twist. உங்க கணவருக்குள்ள கவிதைன்னு." அடங்கொப்புரானே! பின்ன நான் யாரை நினைச்சி அவ்வளவு அனுபவிச்சு ரசிச்சு  எழுதினேன்னு நினைச்சாவுக? இது வில்லங்க பேச்சுடா, டோய்.

காதல், ஒரு பக்க கதையா? வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணியும், ஒரு நிமிஷம் நினைவலையில் வந்து வந்து போக.
காதல், சிறுகதையா? கல்யாணத்தில் முடிந்து விட.
காதல், தொடர்கதையா? வேற ஆள கல்யாணம் ஆன பின்னும், அதையே நினைச்சி தொடர்ந்து உருக.
காதல், மர்ம கதையா? கள்ள  காதலாகவும் உருவெடுக்க.
காதல் -  கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல  வரணும்.  கன்னி தீவு சிந்துபாத்  கதை மாதிரி............. நீளணும்.........!



Sunday, January 24, 2010

முத்தம் போதாதே ........


இதய துடிப்பின் தாளத்தில்,
இதழ் மீட்டும் ராகத்தில் - உன்
 மூச்சு காற்றையும் உள் இழுத்து
மூங்கில் குழலாய் நான், இசைக்கின்றேன் -
முத்த கடலின் அன்பு அலைகளில்,
மூழ்கி மூழ்கி ஆசைமொழியில் இசைகின்றேன் - உன்
ஒற்றை பார்வை தரும் சிலிர்ப்பில் - இசைஞானி நான்.

மேல் இதழ் - பெண்ணின் இனிமையிலும்
கீழ் இதழ் - அவளின் நாணலிலும்
இணைந்தும் இணையாமலும் வேண்டாம் என்று சிணுங்க -
மேல் இதழ் - ஆணின் வலிமையிலும்
கீழ் இதழ் - அவனின் காமத்திலும்
சேர்ந்தும் சேராமலும் வேண்டும் என்று நெருங்க -
முத்த யுத்தத்தில் வென்றது, காதல் தர்மம்.

ஈர மருதாணி இவளின் கரங்களில்  -
இரு கலைகள்  சங்கமித்த பின்,
இரவின் கருமை  விடியலில் கரைய
சிவந்திருந்தவைகளில்
இவளின் கரங்களும்தான்.

காதல் நாயகனை வேட்கையில் தள்ளி
காம ராட்சசன் வேங்கையென பாய
இடையில் இவளின் மென்மை இரையாகி
இளமை காட்டில் - இனிய  வேட்டை.

அன்பு கணவருக்கு:  ஆயிரம் முத்தங்களுடன், திருமண நாள் தின வாழ்த்துக்கள்!


Wednesday, January 20, 2010

பல தமிழ் சினிமாக்களில் என்னத்த "காட்டுறாங்க?"



இங்கே,   ஒவ்வொரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் rating உண்டு.
அந்த அந்த நிகழ்ச்சிக்கு தனி தனி rating...... எந்த எந்த rating உரிய நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கிறதோ அதற்கு ஏத்த மாதிரி, தனி தனி சேனல். வசதி பண்ணி கொடுத்துருக்காங்க. பிறகு, விடிய விடிய டிஸ்னி சேனல் பாத்துட்டு, "என்னது, மின்னி மௌசு ரெக்கார்டு டான்சு, கடைசி வரை ஆடலனு",  சில "ஜொள்னா" பார்ட்டி அப்புறம் புலம்ப கூடாது பாருங்க.

TV viewers உக்கு , நிகழ்ச்சிகளின் theme, content, scenes, violence, உபயோகப் படுத்தும் வார்த்தைகள் (language usage) போன்று சில அம்சங்களை வைத்து rating கொடுத்து,  "இந்த அம்சங்கள் இந்த படங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் இருக்கு. தொட்டாசிணுங்கி உனக்கு பிடிக்கிலைனாலும் சரி,  உன் புள்ள குட்டி வம்சத்துக்கு ஆகாதுனாலும் சரி - சேனலை மாத்து. இந்த கருமாந்தரத்தை தான் எப்ப போடுவாங்கன்னு  பாக்க உக்கார்ந்துருக்கேன் என்பவர்களே , என்சாய் மக்கா என்சாய்..." அப்படிங்கறாங்க.

Y - for all ages
Y7 - for ages 7 and up
PG - Parental guidance
PG 13 - for children under age 13, parental guidance is needed to watch the program.
Y14 - for ages 14 and up
TV R - Restricted audiences only.
TV MA - for matured audiences only

survey சொல்லுதுங்க:  எட்டு ஒம்பது வயசு வரையிலாவது  பெருவாரியான சின்ன புள்ளைங்க  எல்லாம் அமெரிக்காவிலே ஒழுங்கா அவங்க வயசுக்கு ஏத்த நிகழ்ச்சிகள் தான் டிவில பாக்குறாங்களாம். சர்தாங்க.

எங்க வீட்டில், M TV போன்ற சேனல் எல்லாம் பொண்ணுக்கு பத்து வயதுக்கு மேல தான் என்று ரூல் போட்டாச்சு. அவ வகுப்பில் மொத்தமே ஒம்பது பேர்தான். எல்லோருக்கும் வீட்டில் அந்த ரூல் போல. இது வரை, "அவள் மட்டும் பாக்குறா..... இவன் மட்டும் பாக்குறான்" என்று சொல்லி பாக்கணும்னு கேக்கலை. ஆனால்..........
என் மகள்,  US டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், அவள் வயதுக்கு உரியதுதானா என்று மெனக்கெடும் என் ரேடார் மூளை, தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது ஏனோ கும்மி அடிக்க போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ?

கொடுமை கொடுமைன்னு தமிழ் படம் பாக்க போனா, அங்கேயும் ரெண்டு கொடுமை அவுத்து போட்டுட்டு (அட, தலை முடியைதாங்க, நீங்க வேற.....) ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்!

தமிழ் படம் interest வந்துச்சுனா, நம்ம மாதந்தோறும் கப்பங் கட்டி  அழுவுற இருபத்து அஞ்சு டாலர் பழுத்துருமே என்று  அவளை - ஐந்து வயது  செல்லத்தை, சன் டிவி யில் ஒரு தமிழ் படம் பாக்க என்னுடன் உக்கார வச்சுட்டேன்.

"உனக்கு எதுவும் புரியலைனா என்ட்ட கேளு. நான் explain பண்றேன். நீ பேசுற தமிழ் மாதிரியே தான் இருக்கும். சில சமயம், சீரியஸா அல்லது லோக்கல் டச் ஓட பேசும்போது உனக்கு புரியாம போச்சுனா சொல்லு. உனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கேளு."
"சரிம்மா."

என்னுடைய கடைசி அஞ்சு வார்த்தைகள் என்னை பந்தாட போவுது னு தெரியாம சொல்லிட்டேன்.
1,2,3 ............. டிங் டிங் டிங் .......... மூவி ஸ்டார்ட்ஸ் : டைம்: மதியம் 2:45 மணி.

"அம்மா, இப்படித்தான் நீங்க ஷாப்பிங் போகும் போது பயந்து கிட்டே போவீங்களா?"
"இல்லமா, இது சினிமா. நிஜத்தில் இப்படி எல்லாம் அதிகம் நடக்காது."
"அம்மா, யார் இவன்? எதுக்கு தாத்தா மாதிரி ஆளை எல்லாம் இவன் அடிக்கிறான்?"
"இவன் bad guy. அப்படிதான் அடிப்பான்."
" யாரையும் அடிக்க கூடாதுன்னு இந்தியாவில் சொல்லி தர மாட்டாங்களா?"
"இவன் bad guy மா. யார் பேச்சும் கேக்க மாட்டான்."

டன் டன் டன் டன் .......டான்.............. டன டன டன் டன் டன் .......... டான்.
hero entry:

"இவன் யார் மா? இவனும் ஷாப்பிங் பண்றவங்களை, ஷாப் வச்சுருக்கிரவங்களை அடிக்க போறானா?"
"இல்லமா. படத்தை பாரு."
" இவனும் அடுத்தவனை அடிக்குறான், அம்மா. ஒரு தாத்தாவை அந்த ஆளு அடிச்சதுக்கு, அவன் கூட வந்த people எல்லாரையும் அடிக்கிறான்."
" இவன் நல்லவங்களை அடிக்க மாட்டான். only bad guys."
" so, he is a good bad guy."
"good bad guy?"
"yes. bad guy னா, நல்லவங்களை அடிக்குறான். good bad guy னா, கெட்டவங்களை அடிக்குறான். என்ன ஆனாலும், அடிக்குறது தப்புன்னு நீங்கதானே நான், அலீசை அடிச்சப்போ சொன்னீங்க."

(இந்த பொறுப்புள்ள அம்மாவின் பருப்பு ரொம்பவே நேரம் கெட்ட நேரத்துல வேகுது.)
"ஆமாம்.......... good bad guy னே வச்சுக்க."

சண்டை முடிஞ்சு item song: அடிதடி முடிஞ்சு அதிரடி நடனம்: கும்மாங் குத்து முடிஞ்சு டப்பாங்  குத்து.

"அம்மா, இந்த பொண்ணு good bad guy ஓட girl friend ஆ?"
"இல்ல. சும்மா டான்ஸ் ஆடுவா. அப்புறம் போய்டுவா."

ஒரு தோழியின் அப்பா சொன்ன வில்லங்க கமெண்ட் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது: முந்தி எல்லாம், வில்லன் முன்னாலே தான் ஆடுறதுக்கு இப்படி பொண்ணு ஒண்ணு வரும். காபரே டான்ஸ் னு பாப்போம். இப்போ ஹீரோ வுக்கு தான் அந்த மச்சம். அடுத்து யாருக்கு அந்த அதிர்ஷ்டமோ?

- வெட்டி பேச்சின் ஆருடம்: சன் pictures போற வேகத்துக்கு, அவங்க தயாரிப்பில் வர  படங்களை பாக்க போறவங்களுக்கு தியேட்டரில் நேரில் வந்து, ஒரு அம்மணி அப்படி ஆடிட்டு போக வழி பண்ணிடுவாங்க. இப்போவே சன் டிவி இல் ராஜா யாரு ராணி ஆறு நிகழ்ச்சியில் முன்னோட்டம் விட்டு பாத்துட்டாங்க.

"நான் போன வாட்டி தாத்தா பாட்டி பாக்க ஊருக்கு போனப்போ இப்படி யாரும் dress பண்ணி பாக்கலை."
"நானும் பாக்கலை."
"இவ ஷாப்பிங் பண்ணவே இந்த டிரஸ் லதான் வந்தாளா?"
"தெரியலை. சும்மா வந்து, டான்ஸ் ஆடிட்டு போயிருவா."
" பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு டிரஸ் சின்னதா போனப்புறம், அவங்க அம்மா பெரிய சைஸ் டிரஸ் வாங்கி தரலை."
"இல்ல, அவ டான்ஸ் ஆட மட்டும் அப்படி டிரஸ் போட்டு இருக்கா...."

தன் ஷர்ட் ஐ தூக்கி லேசாக மேலே சுருட்டி வைத்து கொண்டு, sofa மேல் ஏறி குதித்தாள்.

"sofa மேல ஏறி குதிக்காத. ஷர்ட் ஐ இழுத்து விடு. அசிங்கமா வயித்தை எல்லாம் காட்ட கூடாது."
"அம்மா, இந்தியாவில் எல்லா அம்மாவும் தன் பொண்ணு கிட்ட இப்படி சொல்ல மாட்டாங்கனு நினைக்கிறேன். பாருங்க, அந்த பொண்ணுக்கு அவங்க அம்மா அப்படி சொல்லலை."
"சரி விடு. இந்தியாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. என் பொண்ணு செய்ய கூடாது. எங்கே இருந்தாலும் சரி. புரிஞ்சுதா?"
"ஓகே. Whatever!"

அட கண்றாவியே, படம் இன்னும் கதை (??) பக்கம் எட்டி கூட பாக்கல. அதுக்குள்ளேயே இப்படி, இங்கே நம்ம கதை கந்தல் ஆகுதே!
alert............... ஓய்ங்.........ஓய்ங்........... ஓய்ங்............. சைரன் சத்தம் உள்ளுக்குள் கேக்குதே.......
TV remote எடுத்து gun மாதிரி தற்காப்புக்கு  ரெடியா வச்சுக்கிட்டேன்.

"அம்மா, இந்த good bad guy, நிஜமா good guy தான். பாருங்க, அந்த பொண்ணு ஹிப், டம்மி, பெல்லி பட்டன் எல்லாம் தெரியுதுன்னு தன் கையை வச்சு மூட பாக்குறார்."

Attack............Charge............... TV remote gun shoot: change the channel:
click. click. click.

"Wonder Pets.... Wonder Pets....... TV Rating Y" tv show க்கு மாறுது எங்கள் நிகழ்ச்சி.
சுபம். டைம்: மதியம் 3 மணி.

பின்குறிப்பு:
இப்போ தமிழ் படம், sun tv, நான் மட்டும் ஏதோ திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன். நமக்கு பதினெட்டு வயசுக்கு மேல ஆனதில் இந்த சலுகை பாருங்க. ஹி,ஹி,ஹி.....



Sunday, January 17, 2010

வெற்றியின் ரகசியம்?



ஒரு man - hero வாக இருந்தான். 
அடுத்த கட்டமாக, ஒரு பிரமாண்டமான வளர்ச்சி நிலை.
உலகை காக்கும் பொறுப்பில், முதல் நாள் காலடி எடுத்து வந்தான்.
வழியில் ஒருவரை சந்தித்தான்.
ஹீரோ விடம் பேசியவன், "உங்களிடம் இருக்கும் அபாரமான திறமைகளும், அமானுஷ்ய சக்திகள் மட்டும் உங்களின் வெற்றிக்கு காரணம் ஆகி விடும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.
உயிரை பணயம் வைத்து ஆரம்பிக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு கேள்வி ஹீரோவின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது. பலசாலியின் பலவீன மனம் முந்தி கொண்டு கேட்டது:
"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்."
"எல்லாம் சரி. ஆனால் வாஸ்து  படி, உங்கள் ஜட்டி தப்பான இடத்தில் இருக்கிறது. அதை pant உக்கு வெளியில் போட்டீர்கள் என்றால்............."
"நான் வெற்றி பெற வேண்டும். எதையும் செய்வேன். திறமைகள் சக்திகள் எல்லாம் அப்புறம்தான்."
செய்தான்..........
அவனின் அமானுஷ்ய திறமைகளும் சக்தியும் man, superman ஆக செய்தது.
ஆனால், தன் அறிவுரைதான் அவரின்  வெற்றியின் ரகசியம் என்று வாஸ்து படி உடையை மாற்ற சொன்னவர்,  வெளியில் சொல்ல ஆரம்பிக்க    ..............

வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அபத்தங்கள்தான்  அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.
எங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், யார் சொல்லியும் கேளாமல், வாஸ்து ஜோசியரை நம்பி, நன்கு நடைபெற்று கொண்டிருந்த தன் வியாபாரம் மேலும் விருத்தி ஆக தன் வீட்டை முழுதும் மாற்றி கட்டினார். குளியறை இருந்த இடத்தில் வரவேற்பு அறையும், வரவேற்பு அறை இருந்த இடத்தில் அடுக்களையும், படுக்கை அறை இருந்த இடத்தில் குளியல் அறையும், அடுக்களை இருந்த இடத்தில் மாடிப்படிகளும், முன் பக்கம் இருந்த வீட்டு வாசலை வேறு பக்கம் நோக்கியும் மாற்றி நிறைய செலவு செய்து கட்டிய மூன்று வருடங்களுக்குள், இன்று அந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்கு வரும் நிலைக்கு வந்து விட்டார். வியாபாரம், படு மோசமான நிலையில் இருக்கிறது. என்ன கொடுமை சார், இது?


பின்குறிப்பு:


ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?



Sunday, January 10, 2010

கண்ணா... Happy Birthday, Kanna!

சாலமன் ........... கண்ணா என்று நான் அன்பாய் அழைப்பவர்................என் ஆருயிர் கணவர் ............ ஜனவரி 12, பிறந்த நாள் கொண்டாடுபவர்.
 HAPPY BIRTHDAY,  கண்ணா!

"சாலமன்  பாவம்" என்றும், "சாலமனுக்கு  கண்டம் திருநெல்வேலியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கு. தெரியாமா போய் மாட்டிகிட்டார் " என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சிலர்.. ................

நம்பினா நம்புங்க ........ பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம், கல்யாணத்துக்கு முன் சரியான கட்டுப்பெட்டி சித்திரமாக தான் இருந்தது. (எனக்கே இதை இப்போ நம்ப முடியலை. நீங்க நம்பவா போறீங்க?)

அம்மாவின் கரிசனையுள்ள கண்டிப்புக்கும் ஊராரின் பொல்லாப்புக்கும் மதிப்பு கொடுத்து, பயம் கலந்த அடக்க சுந்தரியாக வளர்ந்தேன்.  (யாரது அங்கே? "அப்போ அடக்கம் கிலோ ஒரு ரூவாக்கு கிடச்சுதோ என்னவோனு கேட்டது?"  அப்படியெல்லாம் கேக்கப்படாது......)

ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசிட்டாலே, உலகம் பூரா நம்ம விஷயம் நாறி போச்சுன்னு நினைச்ச கூட்டத்தில் இருந்தவ நான்.  (அவங்க மனதில் இருக்கும் துர்நாற்றம் அவங்க வாயில் வீசுது. அது நம்ம கவலை இல்லன்னு ஒதுக்கிட்டு  போக இப்போ புரியுது.)

அந்த பக்கம் மதுரை, இந்த பக்கம் கன்னியாகுமரி, ஒரு பக்கம் தூத்துக்குடி, மறு பக்கம் குற்றாலம்  - தாண்டாத "உலக" வரைபடத்துக்குள் இருந்தேன். (இப்போ profile photo பின்னால் இருக்கும் மேப் என்ன சொல்லுது என்று யாரும் தலையை சொரிய வேண்டாம். இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரம்  சாலமன் உடன்  பார்த்து பேசி பழகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். திருமணத்துக்கு முன் தினம் தான்,  ஹலோ சொன்னதோடு சரி. (அதனால்தான் கல்யாணம் நடந்ததோ? நியாமான கேள்வி.)

கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள்,  Eric Clapton பற்றியும் Martin Scorsese பற்றியும் இன்டர்நேஷனல் அரசியல் பற்றியும் சாலமன் பேச ஆரம்பித்தார். ரஜினியையும் தமிழ் நாட்டு அரசியலையும் நம்மூரு மசாலா பட டைரெக்டர்களையும்   தாண்டி பார்த்திராத நான், அமைதியாய் இருந்தேன்.
தெளிந்த நீரோடையாய் சலனமின்றி என் முகம் - அறியாமையில் .
தமிழ் படத்தில் வருமே: முக்கிய கதா பாத்திரத்தின் முகத்தில் எரி மலை வெடிக்கும், கடல் கொந்தளிக்கும். அப்படி அவர் முகம், அதிர்ச்சியில் - அப்படித்தான் எனக்கு தோன்றியது.
ஒரு ஆப்ப சோப்பையை கட்டிகிட்டோமேனு  அவர் உள்ளுக்குள்ள feel பண்ற மாதிரி இருந்துச்சு.  அழுகுணி நடிகை மாதிரி அழ தோணுச்சி.
(டொயெங் டொயெங் ..... வீணை மூசிக் கேட்டுச்சு. சோக பாட்டு  டைம்.)

ஆனால் அவர், ஒரு புன்முறுவலுடன், என்னை பாத்து - ஆமாங்க, இந்த அசடை பாத்து:
"I love you" என்று சொல்லிவிட்டு நெத்தியில் முத்தம் இட்டார்.
ரொம்பவும் பொறுமையாக, "எனக்கு தெரிந்ததை பிடிச்சதை சொல்றதை விட, உனக்கு பிடிச்சதை சொல்லு. கேக்குறேன்." என்றார். இப்போ நிஜமாவே என் கண்ணில் தண்ணீர்.
(ஸ்டாப் த  டொயெங் டொயெங் வீணை மூசிக். இது,  டூயட் டைம் .... டூயட் டைம்..... டூயட் டைம்......)

கொஞ்சம் கொஞ்சமாக என் ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்டு, என் குறுகிய உலகத்தின் எல்லை கோடுகளை பெரிதாக்கினார். அடடா, உலகம்னா பாளையங்கோட்டையில் எனக்கு  தெரிந்த நாலு தெருக்கள் மட்டும் இல்ல, தமிழ் சினிமா உலகம் மட்டும் அல்ல, அதையும் தாண்டி  ரசிக்க தெரிஞ்சுக்க இவ்வளவு விஷயங்கள் இருக்கானு ஆச்சர்யப்பட்டேன்.

அவருக்கு, நான் இதயம் என்றால், நண்பர்களும் புத்தகங்களும் இரண்டு கண்கள் என்பதை சில நாட்களிலேயே புரிந்து கொண்டேன். (என் மூளை அப்போ அப்போ  வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சிரும் போல.....நல்ல வேளை - நான் அவர் மூளை இல்லை.)

 தன் நண்பர்களை அறிமுகப் படுத்தி வைத்தார். ஒரு இள வயது ஆண் மகனை பார்த்து புன்னகைத்தாலே, அது காதல்தான் - ஒரு ஆணுடன் தோழமையாய் பழகுவதால், ஒரு பெண் தனக்கு இன்னலை தான் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து கொள்கிறாள் என்ற நான் அப்போ வச்சிருந்த  இலக்கணங்கள் படி, ஆண்களிடம்  என்ன பேசுவது, எப்படி பழகுவது, எல்லை கோட்டை எங்கு வரைவது, என்று சுத்தமாக புரியாமல், அரண்டு போய் ஒளிந்து கொள்வேன்.  (இதான் girls only school - girls only college மட்டும் போய்  (படிச்சி?!) வந்ததில் உள்ள பாதிப்போ?  சும்மா சொல்லிக்க வேண்டியதுதான்.)

அப்படியும் மீறி பேச வர வேண்டிய வேளையில், மூச்சுக்கு மூச்சு அண்ணா  போட்டு கொள்வேன். தங்கச்சி செண்டிமெண்ட் எத்தனை படத்தில் வொர்க் அவுட் ஆகியிருக்கு. தங்கச்சி என்ற போர்வையில் பாதுகாப்பு வளையம். ("Do not cross the line" என்று எழுதி ஒரு போர்டு மாட்டியிருக்கலாமோ?)
நோட் டு செல்வா அண்ணா:
செல்வா அண்ணா, உங்களை நான்  பாசமலர் மற்றும் கிழக்கு சீமையிலே  பாசத்துல தான் அண்ணான்னு இன்னும் கூப்பிடுறேன்.  கிண்டல் ஆரம்பிச்சுடாதீங்க.

நண்பர்களை நண்பர்களாக பார்க்காமல் அண்ணன்களாக பார்ப்பது என் மனதின் பயங்களை காட்டியது.

எனக்குள் ஒரு மிருகம் தூங்கி கிட்டு இருப்பதாக நம்பி அதை எழுப்பி  விஸ்வரூபம் எடுக்க பெரும் பாடு பட்டார், சாலமன். இந்த  அவிஞ்ச  முட்டையை  பெரிய ஆம்லட் ஆக்க பாக்குராறேனு   தோணிச்சி.  எனக்குள்ளேயே  ஒளிந்து கொண்டிருந்த என்னை தேடி, எனக்கே அடையாளம் காட்டி கொடுத்தார். புதிய பிறவியாக நான் -------------- (ஐ.... இந்த இடைவேளைக்கு அப்புறம் வர சாட்டை ராணி ரோல்  நல்லா தான் இருக்கு.)

உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்; புரிஞ்சாத்தான் தோழி, கதைக்கு ஆகும் என்று தெரிஞ்சிகிட்டேன்.
I came out of my shell.

நட்பின் உன்னதமே, "ப(இ)ச்சை" உணர்வுகளையும் தாண்டி உயர்ந்த இடத்தில் இருப்பது - நம் மனதும் எண்ணமும் தூய்மையாய் இருந்தால் போதும்.
வேண்டா நட்பிடம் விலகி நிற்பதில் தப்பில்லை.
நட்பு ஆணிடம் ஒரு விதம் பெண்ணிடம் ஒரு விதம் என்று பிரிந்து திரிந்து வருவதில்லை - A good friend is a good friend, always. மற்றவர்கள் தெரிந்தவர்கள் - வெறும் acquaintances.
வாழ்க்கையில் உற்சாகமாக நாம் இருக்க, வாழ்க்கை கலகலக்க நண்பர்கள் வருகிறார்கள் -
ஆதாயம் இருந்து வருவது நட்பே அல்ல . நெருங்கிய நண்பர் என்றால்  உதவி என்பது கேக்காமலே வரும்.

அவர் நண்பர்களில் சிலர், அவரை விட எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். புதிய நண்பர்களையும், ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் கடவுள் தந்தார். பெருமித சிரிப்புடன் , "I have created a monster" என்று ஒரு நாள், சாலமன்  சொன்னார்.

ஒரு முறை, எனது இ-மெயில் id யை எப்படியோ நடராஜ் என்பவர் கைக்கு கிடைக்க,  தொடர்ந்து மின்-அஞ்சல்கள் அனுப்பி, "தொல்லை" கொடுக்க ஆரம்பித்தார். என்னை சிட்டு என்று குறிப்பிட்டு, தன்னை நட்டு என்று நான் குறிப்பிடும் படியும் எழுதி தள்ளுவார். என்ன என்னவோ "கிறுக்கி" தள்ளியிருப்பார். நானும் பதில் அனுப்பாமல், delete செய்தாலும், நிறுத்தவில்லை. நான் சாலமன் இடம் புலம்ப, " என்னை விட எவ்வளவு அழகாக ரசிச்சு கடிதம் எழுதுறான். உனக்கு போர் அடிக்குதுனு சொன்னியே. பதில் எழுது. உனக்கு வேடிக்கையா டைம் பாஸ் ஆகும். வேணா முதல் பதிலுக்கு நானும் உதவி செய்யவா?" என்று  சளைக்காமல் கிண்டல் செய்தார். அவரை முறைத்து கொண்டே, "Spam" என்று நடராஜாவின்  மெயில் id யை ரிப்போர்ட்  செய்த பின், அந்த தொல்லை விட்டது. நான் எதை பற்றியும் யாரை பற்றியும் மனம் விட்டு பேச முடியும், என் தோழர் கண்ணாவிடம்.

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா வந்த புதிதில்,  அடுத்தாத்து அம்புஜங்கள் சிலர் (வேற யாருங்க, நம்ம இந்திய பெண்மணிகள் சிலர்தான் - எல்லோரையும் குறை சொல்ல மாட்டேன். சிலரே சிலர்தான்.) , என்னை பற்றி தவறாக பேசுவது என் காதுக்கு வந்த போது, என்னை புரிந்திருக்க வேண்டிய தோழிகள் சிலரே இப்படி பேசுகிறார்களே   என்று வருத்தப்பட்டேன். "குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் பேச்சுக்கு நீ ஏன் வருத்தப் பட வேண்டும்?      I trust your love for me. நீ அவங்க பேசுறதை பத்தி  கவலை படாதே. சந்தோஷமா இரு." என்றார்.    போங்கடி நீங்களும் உங்க நட்பும் என்று ஊதி தள்ளி விட்டேன். அவர், அப்படி என்னை சரியாக direct பண்ணாமல் இருந்திருந்தால், எத்தனை நல்ல நண்பர்களை, இந்த உள்ளூர வயித்தெரிச்சல் கோஷ்டிகளுக்காக,  நான் இழந்திருப்பேன்.

2006 - 2007 இல், Blog concept, வந்த புதிது.  எனக்கு blogging  என்றால் என்ன என்றும் தெரியவில்லை, புரியவில்லை. அதனால் interest உம் இல்லை. இருந்தும் என் பெயரில், அவரே ஜனவரி 2007 இல், blog create செய்து வைத்தார். கிட்ட தட்ட மூன்று வருடங்கள் கழித்து (சரி, சரி, ரெண்டே முக்கால் வருடங்கள்) 2009 October இறுதியில், நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்கும் வரை, என் மீதும் என் வெட்டி பேச்சு திறமை  மீதும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். blog உலகில் எனக்கு புதிய நண்பர்கள் கிடைக்க, என்னை விட அதிக சந்தோஷத்தில் இருக்கிறார், என் ஆருயிர் நண்பர், சாலமன்.

பின் குறிப்பு:

என் நண்பருக்குள் இருக்கும் என்  கணவர் சாலமன்: இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றா? நம்ம கணவர் அலாரம் அடிக்குதே.....ஓ. ..... இந்த மாதம் நம்ம திருமண நாளும் வருது.  ......... gift ..... gift ......
எனக்குள் இருக்கும் அவரின் மனைவி: இப்படி இப்படி நீங்க ரியாக்ட் பண்ணிதான் மொத்த அனுதாப ஓட்டும் உங்களுக்கு கிடைக்குது. கண்ணாஆஆஆஆஆஆஆ  .................



Thursday, January 7, 2010

சவாலே சமாளி.




இன்னைக்கு நான், "The Economist" Jan.2nd to 8th issue படிச்சிட்டு இருந்தேன். அட, நம்புங்க.

அதில் ஒரு கட்டுரையில் என் கவனத்தை ஈர்த்த வரிகள்: "If the empowerment of women was one of the great changes of the past 50 years, dealing with its social consequences will be one of the great challenges of the next 50"
"கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிக பெரிய மாறுதல்களில் ஒன்று பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தது என்றால், அதனால் ஏற்படும் சமுதாய பின்விளைவுகளை எதிர்கொள்ளுதல், அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் வரும் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்."

வீட்டில், தாய் தந்தை இருவரும் வேலைகளுக்கு போய் விடுவதால், சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 வெஸ்டேர்ன் கல்ச்சர் என்று ஏளனமாக பாக்கப்படும் நாட்டில் இந்த மாதிரி கரிசனம்........ பெண்களுக்கு வந்த இந்த மாற்றத்தால் குழந்தை வளர்ப்பு எப்படி பாதிக்கப் பட்டிருக்கு என்றும் அதை மேலும் பாதிக்க படா வண்ணமும் பெண்கள் தொடர்ந்து வீட்டுக்கு வெளியில் சாதிக்க உதவும் வகையில் எப்படி சமுதாயம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கட்டுரை கருத்து தெரிவிக்கிறது.

கொசுறு செய்திகள்:

அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் பெண்களை விட அதிக ஆண்களே வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்ப பட்டிருக்கிறார்கள்.
சில  அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.
பல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.

இந்த சலுகைகள் அந்த பாதிப்பை நல்ல வழியில் திசை திருப்பும் என்று நம்புகிறார்கள்.

படிச்சிட்டு, இது சீரியஸ் மேட்டர். இதை வச்சு காமெடி கீமெடி பண்ணா tragedy ஆயிடும்னு விட்டுட்டேன்.
 இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.
இந்தியாவிலும் எந்த மாதிரி போய்கிட்டு இருக்கு என்று தெரிஞ்சுக்கணும்.
பின்னூட்டத்தில், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

Monday, January 4, 2010

New Year சரவெடிகள்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
தெரிவிக்க நினைத்து மறந்த அனைவருக்கும், வாழ்த்துக்கள்.
தெரிவிக்க, நினைக்க கூட மறந்தவருக்கும் வாழ்த்துக்கள். (போன போகுது, விடுங்க. அடுத்த வருஷம் மறக்காதீங்க.)

2010 அருமையாக நண்பர்கள் பட்டாளத்துடன் இனிதே ஆரம்பம் ஆயிட்டு. சுமார் ரெண்டு வருடங்கள் கழித்து ஒரு "Get together" ............ பலர், வீடுகள் வாங்கி செட்டில் ஆகி விட்டிருந்தார்கள். சில நண்பர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. சிலருக்கு, குழந்தைகள் என்று குடும்பம் பெருகி இருந்தது.

எங்கள் நண்பர் கூட்டத்தில் - அடித்த கொட்டத்தில் - வெடித்த சரவெடிகள் சில:

சரவெடி #1:
" முடி (hairline) தலையில் மேல ஏறிகிட்டே போகுதுன்னு கவலை பட்டீங்களே?"
"முன்னாடி மேல மெதுவா ஏறி, இப்போ பின்னாடி சல்லுனு  இறங்க ஆரம்பிச்சுட்டு. என்ன செய்ய?"

சரவெடி #2:

"ஐயா சைஸ் ஐ பார்த்தால், உங்க மனைவி நல்லா சமைப்பாங்க போல தெரியுது."
"காயமே இது பொய்யடா, வெறும் காற்று அடைத்த பையடா......"

சரவெடி #3:
"சார், ஒரு  car companyil மெக்கானிக் ஆக இருக்கார்."
" மிசிகன்  Auto companyil புது கான்செப்ட் (New concept car) டிசைன் பண்ணும் engineering teamil பெரிய போஸ்டில் இருக்கேன்."
"அந்த "ஆல் இன் ஆல் அழகுராஜா" வேலையை அப்படியும் சொல்லலாம்."

சரவெடி #4:
"அண்ணன் கூட விளையாட போறியா?"
"ஒரு மாத வித்தியாசத்துக்கு எல்லாம் அண்ணனா? அவன் பெரியவன் ஆனதும், ஏம்மா என் potential டாவு எல்லாரையும் என் தங்கை ஆக்கி வச்சுருக்கேன்னு கோபப்படப் போறான்."

சரவெடி #5:

"என் மனைவி, தினமும் காலையில் ஒரு அரை மணி நேரமாவது பூஜை பண்ணுவா. நல்ல கணவர் அமையணும்னு பதினாறு வயதில் இந்த பழக்கத்தை ஆரம்பிச்சிருக்கா."
"அவ்வளவு பூஜை பண்ணியும் நீதான் கணவர்னா, பூஜை பண்ணலைனா, அவங்க நிலைமை இன்னும் மோசம் ஆயிருக்கும்."
"இன்னும் ஏன் தொடர்ந்து பண்ணுறாங்க? என் கணவரை நல்லவரா மாத்து சாமின்னு இருக்குமோ?"
"பூஜை விஷயத்தை ஏண்டா சொன்னேன்னு இருக்கு?"

சரவெடி #6:

புபேஷ், தன் மனைவியிடம்: "சாலமன் ஐ எனக்கு பதினொரு வருஷமா நல்லா தெரியும். எனக்கு ரொம்ப friendu னு சொல்லி இருக்கேன்ல."
சாலமன்: "ஆமாங்க. புபேஷ் ரொம்ப நல்லவங்க. அதுக்கு மேல என்னவெல்லாம் சொல்லணும், என்னவெல்லாம் சொல்ல கூடாதுன்னு இன்னும் புபேஷ் என்னிடம் சொல்லவில்லை. அதுக்கு அப்புறம், நீங்க என்ன கேள்வி வேண்டுமானாலும் என்ட்ட கேளுங்க. நாம பேசலாம்."
புபேஷ்: "இந்த "total damage introduction" உக்கு நான் சும்மாவே இருந்துருக்கலாம்.

சரவெடி #7:

"எப்படி சாலமன், ஏழு எட்டு மணி நேரம் டிரைவ் பண்ணி சித்ராவை கூட்டிட்டு போய் ரஜினி படம் தியேட்டரில் பாக்குறீங்க?"
"எனக்கு ரஜினி படம் பிடிக்காது. ஆனால், சித்ராவை பிடிக்கும். நான் தியேட்டரில் படம் பாக்கலைனா ரஜினி கோவிச்சுக்க மாட்டார். ஆனால் சித்ரா கூட ஒரே வீட்டில் அதுக்கு அப்புறம் நான்  இருக்கணுமே. அதான்."

சரவெடி #8:
"டேய், எப்பவும் உன்னை  பீர் பாட்டிலும் கையுமாத்தான் பாத்திருக்கேன். இப்போதான், பால் பாட்டிலும் கையுமா பாக்குறேன்."
"பழசை எல்லாம் நினைவு படுத்தாத. நான் இப்போ உக்கார்ந்து புலம்ப முடியாது. என் மகளை கவனிக்கணும்."


சரவெடி #9:
"பையன் உங்களை மாதிரியே இருந்தாலும் நல்லா, அழகா இருக்கான்."


சரவெடி #10:
"ஊரில் பொண்ணு பாத்தாச்சா?"
"இன்னும் பாத்துகிட்டு இருக்காங்க. போன வாட்டி, ஒரு பொண்ணு போட்டோ அனுப்புனாங்க. என் மூஞ்சு எனக்கு தெரியும். அந்த பொண்ண வேறு நான் கட்டி இருந்தா, எங்களுக்கு பொறக்க போற குழந்தை, புறந்த உடனேயே, hospitalai விட்டு மரத்துக்கு மரம் தாவி எங்களுக்கு முன்னாடி வீடு வந்து சேர்ந்திரும். அதான் வேண்டாமுனுட்டேன்."


HAPPY NEW YEAR 2010 !