Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, April 27, 2010

முகம் ஒன்று -


கவிதை வகை:
சிந்து - நொண்டி சிந்து - கவிதை - புது கவிதை -  ஹைக்கூ -  வசன கவிதை - என்ட்டர் கவிதை -  கவுஜ - ..........

இதிலும் பல வகை:  வாசித்த உடனே -  புரிகிற கவிதை - புரிகிற மாதிரி இருக்கிற கவிதை - புரிகிற மாதிரி நடிக்க வைக்கும் கவிதை - "ஒண்ணும் புரியல" கவிதை ..............

பதிவர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் ஒன்றை கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும் என்று என்னை சிலர், "மிரட்டி விட" ,  இதில் எந்த வகையில் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே, என் முதல் பதில் "மிரட்டல்"  முயற்சி:
முத்தம் போதாதே


அப்புறம், சென்ற வாரம் என் தோழி ஒருத்தியின் அழைப்பின் பேரில், மீண்டும் ஒரு "மிரட்டல்" நடவடிக்கை.
முகப்புத்தகத்தில்  (Facebook) :  இங்கு   பல முகங்களில் ஒரு முகமாக இருப்பது, "கவிதை முகம்":

அதில் பங்கு பெற்ற எனது கவிதை, இதோ:


முகம் ஒன்று  - 
ஒரே முகம் -
மலர் என்றது, காதல் கொண்ட அகம் -
தளிர் என்றது, சேயாய் கொண்ட அகம் -
கடுகு என்றது, வெறுப்பு கொண்ட அகம் -
குரங்கு என்றது, தோழமை கொண்ட அகம் -
அழகி என்றது, அன்பு கொண்ட அகம் -
ஆழி என்றது, அறிவு கொண்ட அகம் -
அம்சம் என்றது, வெற்றி கொண்ட அகம் -
ஆர்வம் என்றது, காமம் கொண்ட அகம் -
அந்நியன் என்றது, அறியாமை கொண்ட அகம் -
தெய்வம் என்றது, தாழ்மை கொண்ட அகம்.
என் ஒரே முகம் -
பிறரின் அகங்கள், (மனங்கள்)
கண்டு கொண்ட வகைகளில்,
எனக்கு, பல முகப் பிம்பங்கள்.
என் ஒரே முகம் -
தெரிவது -
என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?

Sunday, January 24, 2010

முத்தம் போதாதே ........


இதய துடிப்பின் தாளத்தில்,
இதழ் மீட்டும் ராகத்தில் - உன்
 மூச்சு காற்றையும் உள் இழுத்து
மூங்கில் குழலாய் நான், இசைக்கின்றேன் -
முத்த கடலின் அன்பு அலைகளில்,
மூழ்கி மூழ்கி ஆசைமொழியில் இசைகின்றேன் - உன்
ஒற்றை பார்வை தரும் சிலிர்ப்பில் - இசைஞானி நான்.

மேல் இதழ் - பெண்ணின் இனிமையிலும்
கீழ் இதழ் - அவளின் நாணலிலும்
இணைந்தும் இணையாமலும் வேண்டாம் என்று சிணுங்க -
மேல் இதழ் - ஆணின் வலிமையிலும்
கீழ் இதழ் - அவனின் காமத்திலும்
சேர்ந்தும் சேராமலும் வேண்டும் என்று நெருங்க -
முத்த யுத்தத்தில் வென்றது, காதல் தர்மம்.

ஈர மருதாணி இவளின் கரங்களில்  -
இரு கலைகள்  சங்கமித்த பின்,
இரவின் கருமை  விடியலில் கரைய
சிவந்திருந்தவைகளில்
இவளின் கரங்களும்தான்.

காதல் நாயகனை வேட்கையில் தள்ளி
காம ராட்சசன் வேங்கையென பாய
இடையில் இவளின் மென்மை இரையாகி
இளமை காட்டில் - இனிய  வேட்டை.

அன்பு கணவருக்கு:  ஆயிரம் முத்தங்களுடன், திருமண நாள் தின வாழ்த்துக்கள்!


Thursday, December 17, 2009

குழந்தை கால நட்பு


முதல்   நட்பு




நிலா நிலா ஓடி வா என்றால்

நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
எழுதும் குச்சியை பொம்மை ஆக்குவதோ
எதுவும் இல்லாமல் ஊசி ஆக்குவதோ
என்ற கவலை மட்டும் இருந்த பருவம்.
கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்.
அழ வைக்காமல் இருந்தாலே -
நட்பு என்று புரிந்தும் புரியா பருவம்.
ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு  தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.
பால் வடியும் முகத்துடன் என் அருகில்  இருந்த
பால்ய தோழி, இன்று இருக்கும் -
இடமோ உருவமோ பருவமோ முகமோ  நானறியேன் -
வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.
நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்.