Wednesday, April 28, 2010

சும்மா, சும்மா, சும்மா.....



"ஹலோ! "
"ஹலோ!"
"சித்ராவா?  பிஸியா இருக்கீங்களா? சும்மா இருக்கீங்களா?"
" இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து,  சும்மா வந்து உட்கார்ந்தேன். என்ன விஷயம்?"

"சும்மா தான் கூப்பிட்டேன். இன்று எனக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லை. சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கோமே -  சும்மா, யாரையாவது கூப்பிட்டு, சும்மா பேசலாமேன்னு, சும்மா தோணுச்சு. "

"நானும் சும்மாதானே  இருப்பேன்  என்று நினைச்சிட்டீங்க."
 "சும்மா சொன்னேன்.  சும்மா கோபப்படாதீங்க. உங்களை கூப்பிட்டு பேசி நாளாச்சு. சும்மா, அப்படி இப்படினு பிஸியா நாள் எல்லாம் - சும்மா ஜெட் வேகத்துல பறக்குது."

"சும்மா.  இதுக்கெல்லாம், சும்மா கோபம் வருமா?"
" நீங்க, சும்மா விளையாடுறீங்கனு தெரியும். "

"உங்க வீட்டுக்காரங்க  ஆபீஸ் போயாச்சா?"
"அவருக்கு என்ன?   சும்மா லீவ் போட்டு, நம்ம பக்கத்துல இருந்து,  சும்மா  கவனிக்க முடியுமா?  வேலைக்கு போயாச்சு.  ஆனால், ஒரு வாட்டியாவது, சும்மா ஒரு போன் பண்ணி, சும்மாவாச்சும் நான் எப்படி இருக்கேன் என்று சும்மா கேட்டு இருக்கலாம்."

"அவர் ஆபீஸ்ல் சும்மா இருந்தா, சும்மா கூப்பிடாம இருப்பாரா?"
"தெரியுது.  ஆனாலும் அவரை  சும்மா தேடுது. "

"ரொம்ப கஷ்டமா இருக்கா?"
"இல்ல. சும்மா வெறும் காய்ச்சல்தான்.  இப்போதான் ஊருக்கு போன் செய்து, என் அம்மாவிடம்  சும்மா பேசினேன்."
"அம்மா, எப்படி இருக்காங்க?"
"சும்மா, அதை இதை நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டே இருக்காங்க."

"உங்க தாத்தா, எப்படி இருக்காங்க?"
"எப்போ பார்த்தாலும் சும்மா தலை வலிக்குது கால் வலிக்குது அப்படிங்கறார். டாக்டர்,  தாத்தாவுக்கு  ஒண்ணும் இல்ல. வயசாச்சுல. சும்மா அப்படிதான் வலிக்கும்னுட்டார்."

"உங்க அப்பா, எப்படி இருக்காங்க?"
"retirement க்கு அப்புறம், சும்மா அங்கே இங்கே போய்ட்டு வந்து டைம் பாஸ் பண்றார்."

"உங்க தங்கை?"
"படிச்சு முடிச்சிட்டாள். சும்மாதான் இருக்கிறாள்.  சும்மா இருக்கிறதுக்கு, சும்மா ஒரு கம்ப்யூட்டர் course ஏதாவது படிக்கலாமேன்னு - சும்மா போய்க்கிட்டு இருக்கா."
"ஓ. "

"நீங்க அடுத்த மாதம், ஒரு weekend சும்மா இருந்தீங்கனா, சும்மா இந்த பக்கம் - எங்க வீட்டுக்கு,  சும்மா வாங்களேன்."
"எதுவும் விசேஷமா?"
"இல்லை. சும்மாதான். சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சும்மா விசிட் பண்ணா நல்லா இருக்கும்."
"பார்க்கலாம்."

"சும்மா வாங்க.  அப்புறம் சும்மாதான்  சொன்னேன் என்று  வராமா இருக்காதீங்க."
"அப்புறம் போன் பண்றேன்."
"கண்டிப்பா வரணும்.  வந்தா, சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்."
"சும்மா இருந்தா, சொல்றேன்."
"சும்மா சொல்லாதீங்க. வாங்க."

" ஹா,ஹா,ஹா,ஹா.... நான் இப்போ வெளியே போகணும். நான் போனை வைக்கிறேன். நீங்க சும்மாவே இருங்க."
"மனுஷிக்கு காய்ச்சல்னா, சும்மா சும்மா போன் பண்ணி,  சும்மா பேசி,  சும்மா தொந்தரவு படுத்திக்கிட்டு ....... கொஞ்சம் சும்மா இருக்க மாட்டாளா,  என்று நினைச்சிட்டீங்களா?"
 "இல்ல.  நல்லா  ரெஸ்ட் எடுங்க."


அப்புறம், சும்மா இருக்கும் போது,  சும்மா யோசித்து பார்த்தேன்.  அப்பொழுதுதான் புரிந்தது - அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும்,  வேதனைகளும்,  ஆதங்கங்களும், கவலைகளும்,  ஆசைகளும்.
இது  முதலிலேயே தெரியாம போச்சே...... தெரிந்து இருந்தால், சும்மா பேசிக்கிட்டு இருக்காமல்,  ஆதரவாக சும்மா கூட கொஞ்ச நேரம்  பேசி இருந்திருப்பேனே........

சும்மா.........  சும்மா ஒரு வார்த்தைதான் -  ஒன்றும்  இல்லாத வார்த்தை.  ஆனாலும் - சும்மாவுக்கு, எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில். ............

பி.கு.:
 சும்மா - ஒரு வார்த்தை - இங்கிலீஷ்ல எத்தனை வார்த்தைகளை, சும்மா கையாளுது தெரியுமா?
 Idle
Just like that
for no reason
not doing much
not really
for free
not really meaning it
often
unintentional
untrue
goofy
(please, let me know, if there is more......)  - சும்மாதான்......... பரிசு எல்லாம் இல்லை.
ஹிந்தி மொழியில்: சும்மா என்பதற்கு முத்தம் என்று பொருளாம். சர்தாங்க. 

அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர்,
 தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
 நன்றி.
 - யூத்ஃபுல் விகடன்

 எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, April 27, 2010

முகம் ஒன்று -


கவிதை வகை:
சிந்து - நொண்டி சிந்து - கவிதை - புது கவிதை -  ஹைக்கூ -  வசன கவிதை - என்ட்டர் கவிதை -  கவுஜ - ..........

இதிலும் பல வகை:  வாசித்த உடனே -  புரிகிற கவிதை - புரிகிற மாதிரி இருக்கிற கவிதை - புரிகிற மாதிரி நடிக்க வைக்கும் கவிதை - "ஒண்ணும் புரியல" கவிதை ..............

பதிவர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் ஒன்றை கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும் என்று என்னை சிலர், "மிரட்டி விட" ,  இதில் எந்த வகையில் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே, என் முதல் பதில் "மிரட்டல்"  முயற்சி:
முத்தம் போதாதே


அப்புறம், சென்ற வாரம் என் தோழி ஒருத்தியின் அழைப்பின் பேரில், மீண்டும் ஒரு "மிரட்டல்" நடவடிக்கை.
முகப்புத்தகத்தில்  (Facebook) :  இங்கு   பல முகங்களில் ஒரு முகமாக இருப்பது, "கவிதை முகம்":

அதில் பங்கு பெற்ற எனது கவிதை, இதோ:


முகம் ஒன்று  - 
ஒரே முகம் -
மலர் என்றது, காதல் கொண்ட அகம் -
தளிர் என்றது, சேயாய் கொண்ட அகம் -
கடுகு என்றது, வெறுப்பு கொண்ட அகம் -
குரங்கு என்றது, தோழமை கொண்ட அகம் -
அழகி என்றது, அன்பு கொண்ட அகம் -
ஆழி என்றது, அறிவு கொண்ட அகம் -
அம்சம் என்றது, வெற்றி கொண்ட அகம் -
ஆர்வம் என்றது, காமம் கொண்ட அகம் -
அந்நியன் என்றது, அறியாமை கொண்ட அகம் -
தெய்வம் என்றது, தாழ்மை கொண்ட அகம்.
என் ஒரே முகம் -
பிறரின் அகங்கள், (மனங்கள்)
கண்டு கொண்ட வகைகளில்,
எனக்கு, பல முகப் பிம்பங்கள்.
என் ஒரே முகம் -
தெரிவது -
என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?

Sunday, April 25, 2010

ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை.

சில Indian Associations,  அமெரிக்காவுக்கு  புதிதாக  வரும் இந்தியர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளன.  ஆரம்ப நிலை உதவி செய்யும் சில நண்பர்கள், சில சமயம் என்னையும் உடன் அழைத்து போனது உண்டு.   இங்கு வரும் அனைவரும், எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லை.  அதில்  தவறும் இல்லை.

சித்ராவாகிய நான், இப்பொழுது சொல்லப் போவதெல்லாம்  உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்காக ரூம் போட்டு யோசிக்கவில்லை:

நோ ரூம் சர்வீஸ்: # 1

புதிய அறிமுகம்:    சித்ரா, நீங்க தயிர் எங்கே  வாங்கி வந்தீங்க?
சித்ரா:                  பக்கத்தில் உள்ள grocery store ல தான்.
அவள்:                   இந்தியன் கடையா? அமெரிக்கன் கடையா?
சித்ரா:                 American store தான்.  
அவள்:                  நான் அங்கே தயிர் தேடினேன். கிடைக்கவில்லை. 
சித்ரா:                  அந்த கடையிலேயே யாரிடமாவது கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்களே? 
அவள்:                  கேட்கலாம்னு  நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners  ஆக             இருந்தாங்க.    இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
சித்ரா:                              ??????????

நோ ரூம் சர்வீஸ்:  # 2:

சனி, ஞாயிற்று கிழமைகளில்,  பெரும் பாலான  அமெரிக்கன் Grocery stores,  பல உணவு பதார்த்தங்களை taste செய்து, பிடித்து இருந்தால் நாம் வாங்கும் விதமாக, நிறைய samples எடுத்து தருவார்கள்.  புதியவர்  ஒருவரையும் அழைத்து கொண்டு ஒரு கடைக்கு போய் இருந்தோம். samples பற்றி விளக்கி நாங்கள் சொல்வதற்குள்,  "இதெல்லாம் நான் சென்னையிலேயே பார்த்திருக்கேன்.  அங்கேயும் இப்படிதான் samples தருவாங்க.  இதில் நிறைய ஐட்டம்ஸ், இப்போ சென்னையிலேயே கிடைக்குது," என்று சொல்லி கொண்டே,  samples வைக்கப் பட்டிருந்த மேஜை அருகே சென்று, ஒரு சின்ன கப் எடுத்து "மடக்" என்று குடித்து விட்டார்.  அருகில் நின்ற நாங்கள், சிரிப்பை அடக்கி கொண்டிருந்த வேளையில் - அந்த மேஜை அருகே நின்று samples எடுத்து வைத்து கொண்டிருந்த கடை ஆள் ஒருவர், மெதுவாக:
"sir,  you just drank the water from the cup, in which I  washed these spoons that I used  to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன்,  கடையை விட்டு வெளியேறி விட்டார்.

நோ ரூம் சர்வீஸ்:  # 3:

 எங்கள் நண்பர் வாடகைக்கு எடுத்து இருந்த  வீட்டில்,  அவரையும் சேர்த்து நான்கு இந்தியர்கள் தங்கி இருந்தனர். அதிலே ஒருவர், இந்தியாவில் இருந்து வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது.
ஒரு நாள், வீட்டு கதவு தட்டப் படும் ஓசை கேட்டு, புதியவர்  கதவை திறந்து பார்த்தார். வெளியில் ஒரு  white அமெரிக்கன் நின்று கொண்டு இருந்தார். 
" Is Jefferson  home?" 
"Jefferson?  Who is Jefferson?"
"He is my  friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"

.......  நிறைய கதை சொல்லிக்கிட்டே போகலாம். அப்போ அப்போ மாவு கிரைண்டர் சுத்தும் போது எடுத்து விடுறேன்.

அப்புராணியாய் இந்தியாவில் இருந்து வந்த சிலர்,   எல்லாம் பழகி கொண்ட பின்,   இந்தியாவில் இருந்து புதிதாக வரும்  சிலரிடம் காட்டும் பிலிம் இருக்கே................... (நிச்சயமாக, நான் அவள் இல்லை. நம்புங்க.)
அட, அட, அடடா........   அப்படியே  வடிவேலு சார், துபாய் போயிட்டு வந்து பார்த்திபன் சார்  கிட்டேயும் மற்றவர்கள் கிட்டேயும் காட்டுற  பிலிம் விட ரெண்டு ரீல் கூடுதலாக  இருக்கும்.   என்னவோ பிறந்து வளர்ந்தது முதல்  ஒவ்வொரு நாளும் இந்தியாவில்  சாப்பிட்டு விட்டு, அமெரிக்கா வந்துதான்  கை கழுவிட்டு போனது மாதிரி "படம்" காட்டுவாங்க.
"இது கூட தெரியாதா?" என்ற சலிப்பு வேறு.

ஈகோ மற்றும் attitude problem காட்டும்  "படம்":

டைட்டில் ரீல்:   "இதெல்லாம் எனக்கு  இந்தியாவிலேயே அத்துப்படி.  அங்கேயே நான் தினமும் ஜப்பான்  வாட்ச்ல டைம் பாத்து,  லண்டன் சோப்பு  போட்டு  முகம் கழுவி,  டாலர் நோட்லதான் முகம் துடைத்து,  சிங்கப்பூர் பவுடர் போட்டு, துபாய் சென்ட் மணக்கத்தான் வந்து பழக்கம்."
காமெடி ரீல்:  "நோ ரூம் சர்வீஸ் #  ஜோக் ஏதாவது  நடக்கும் ....."
இரண்டாம் பாதி ரீல்:  புதிய இந்திய வரவை கண்டு:   "இது கூட தெரியாம, இவனெல்லாம் எதுக்கு அமெரிக்கா வரணும்? What is this? ஒரே  stupid of the idiot of the nonsense of the washbasin of the India வாக  இருக்கு?"  
கிளைமாக்ஸ் ரீல்:  - நானோ வேறு நண்பரோ  அருகில் இருந்தால், கொடுக்கும் "பஞ்ச்":   "நீங்கள் வந்த புதிதில் நடந்த  காமெடி  கதை எடுத்து விடவா?"   - சில சமயம்,  கன்ட்ரோல் இல்லாமல் ஓவரா போகும் போது, நாங்கள் "flash-back" வார்னிங் இல்லாமலே,  அதை போட வேண்டியது வந்து விடும்.
கடைசி ரீல்:   பிலிம் பார்ட்டி,  "கப்-சிப்"  The End.

முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே.  நண்பர்களுக்குள்  என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது?  தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு  பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன?  

Speak American: A Survival Guide to the Language and Culture of the U.S.A.

Wednesday, April 21, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு


எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவுக்கு சைவகொத்து பரோட்டா அவர்கள் கூப்பிட்டு இருக்காக......
 
விதிகள்: 
(பல  தமிழ் படங்கள் பார்த்துட்டு விதியை நொந்துருக்கேன். )

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே  
(சே, ரஷ்ய படங்கள்,  பிரெஞ்சு படங்கள், ஜப்பானிய படங்கள் எல்லாம் ஜஸ்ட் missed ஆச்சு)
 
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டு  டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
(ஜக்குபாய் படம் எல்லாம் தமிழ் படங்கள் லிஸ்ட்ல சேரணும் என்று எப்படியெல்லாம் ரூல்ஸ் போடுறாங்கப்பா..)
 
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
(கந்தசாமியில் ஷ்ரேயா , மத்த ஹீரோயினி அக்காஸ்,  ரசிகா அக்கா, மமைத்கான் அக்கா வெல்லாம் - என்ன அழகா "twinkle twinkle little star " பாட்டுக்கு ஒவ்வொரு படத்திலேயும்  சின்ன பாப்பாவா  ஆடுறாங்க......)

VCD மற்றும் DVD தீஞ்சு போகும் அளவு பார்த்த இந்த ரஜினி படங்களை லிஸ்ட்டில் இருந்து எடுத்துட்டு  பத்து படங்கள் எழுதுறதுன்னு முடிவு பண்ணினேன்.  ரஜினி நடித்த படங்கள் பெயரில் வந்த போலிகளை கண்டு ஏமாறுவதில்லை.

முள்ளும் மலரும்,  தில்லு முல்லு,   சிவாஜி ,   பாட்ஷா,  வீரா ,  படையப்பா,
அண்ணாமலை,   அவள் அப்படித்தான்,    நெற்றிக்கண் ,  கழுகு, ராணுவ வீரன்,
நினைத்தாலே இனிக்கும் ,  பொல்லாதவன்,   தீ,  தம்பிக்கு எந்த ஊரு
எங்கேயோ கேட்ட குரல்,   தனிக் காட்டு ராஜா,  மூன்று முகம் ,   மன்னன் , 
நல்லவனுக்கு நல்லவன்   தர்மதுரை ,  படிக்காதவன் , மாப்பிள்ளை ,   தளபதி.

1. உலகம் சுற்றும் வாலிபன்: 
 2.  Mask of Zorro - தமிழ் டப்பிங் செய்யப்பட்டது.
ஆமாம், தமிழ் படங்கள் என்ற விதியில் டப் செய்யப்பட்டு வரும் ஆங்கில பெருங்காய டப்பா படங்கள் சேருமா? 
 இல்லை, நாட்டு சரக்கு தான் என்று தமிழ் டப்பிங்கில் வரும் தேமே ஹிந்தி படங்களும் கலர்புல் தெலுங்கு படங்களும் சேருமா? 
இல்லை,  லாஜிக் மீறுவது என்று ஆச்சு. இதுல "made in china" ரேஞ்சுல மீறுவோமே என்று தமிழ் டப்பிங்கில் வரும் Kung Fu chinese படங்களும் சேருமா? 

தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா. 
சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா. 

எந்த பத்து படங்களை தேர்வு செய்யலாம் என்று யோசித்து (??!!) கொண்டிருந்த போது,  Fast Food Joint ஒன்று செல்ல வேண்டியது இருந்தது. அங்கும் படங்கள் ஞாபகம்....... junk food பாத்தா என்று கேட்கப்படாது .....
  
அப்போ,  எங்களுக்கு பரிச்சயம் இல்லாத  ஒரு இந்தியர் உள்ளே வந்தார். ஆளு ஊருக்கு - சாரி, நாட்டுக்கு புதுசு போல. உணவு ஆர்டர் செய்ய அவ்வளவு யோசித்து முடிவு எடுத்த பின், (அவரையும் யாரோ தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க போல......)  கவுன்ட்டர் பக்கம் நெருங்கி, தயக்கத்துடன்: 

நம்ம ஆளு:  "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு:  "For here or to go?"
நம்ம ஆளு:           "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு:   "O.K.  Now,  what do you want me to do with your cheeseburger combo meal?"

அப்பொழுதுதான், நம்ம ஆளுக்கு கவுன்ட்டர் ஆளு, தன்னை பற்றி விசாரிக்க "for here or to go?" என்று கேட்கவில்லை.  சீஸ் பர்கரை தான் அங்கேயே வைத்து சாப்பிட போகிறாரா  இல்லை,  pack செய்து எடுத்துக் கொண்டு போக போகிறாரா  என்று தெரிந்து கொள்ள, "for  here or to go?" என்று கேட்டு இருக்கிறார் என்று விளங்கி, அசடு வழிய........... 
  
படங்களின் லிஸ்ட் போடுவதை அப்படியே விட்டு விட்டு,  "இது நம்ம ஆளுக்கு" ஒரு ஹலோ சொல்ல கிளம்பினேன்.  ............  வர்ட்டா.......!



Sunday, April 18, 2010

நேனே சந்திரமுகி

இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.  எதை பற்றி எழுதலாம் என்று  யோசித்து கொண்டிருந்த வேளையில்,  "ரா, ரா, ......" என்ற சந்திரமுகி பாடல் கேட்க நேரிட்டது.
திடீரென்று  (வழக்கம் போல தான்)  அப்படியே மாவு கிரைண்டர் சுத்தி, நாங்கள் "சந்திரமுகி" பார்த்த விதம் கண் முன் பொங்கியது - சாரி  - வந்தது.

Dallas, Texas  இல்  ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான்  சந்திரமுகி படம் பார்க்க போனோம்.
 
"லக....லக.....லக......"  ஒன்று:

தியேட்டர் நெருங்கிய பொழுதுதான்,  படம் ஆரம்பிக்கவும் தூவ,  ரெடி ஆக வாங்கி வைத்து இருந்த paper confetti எல்லாம், நண்பர் தன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டார் என்று தெரிந்தது.  அசராத மற்றொரு  நண்பர்,  தியேட்டர் lobby க்கு வந்ததும், அங்கு வைக்கப் பட்டு இருந்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு உள்ள  பிட் நோட்டீஸ் அத்தனையும் எடுத்து வந்து  நண்பர்களிடம் கொடுத்து,  பொறுமையாக கிழித்து confetti  மற்றும் பேப்பர் ராக்கெட்ஸ்  விட, செய்து வைக்கும் படி சொன்னார். நாங்கள் தயார் ஆனோம்.
தியேட்டர் மேனேஜர்  ஒன்றும் புரியாமல், வெளியில் வைக்கும் நோட்டீஸ் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் காலி ஆகிறதே என்று மூன்றாவது முறையும் வைத்து விட்டு திரும்பியவர், நண்பர் பாய்ந்து சென்று அத்தனையும் எடுப்பதை பார்த்து விட்டு, எச்சரிக்கை செய்து விட்டு சென்றார்.

"லக....லக.....லக....."  இரண்டு:

 எங்கள் குழுவில் மொத்தம் 16 நண்பர்கள் இருந்தோம்.    எல்லோரும் சேர்ந்து அமர்ந்தோம்.   என் பக்கத்தில் ஒரே ஒரு சீட் தான் காலியாக இருந்தது.

 படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த போது,   குடும்பத்துடன் வந்த ஒரு ரசிகர்,  சேர்ந்து  உட்கார இடம் கிடைக்காமல்,  தானும்  தன் மனைவியும் , கை குழந்தையுடன் வேறு  வரிசையில்  உட்கார ஏற்பாடு செய்து  விட்டு, என்னருகில் இருந்த இருக்கையில், அவரின் அம்மாவை   உட்கார வைத்து விட்டு சென்றார். அத்துடன்,  தியேட்டர் houseful ஆனது.

  அந்த ஆன்ட்டியை  (Aunty )   கண்டதும், தனியாக உட்கார்ந்து இருக்கிறாரே  என்று  பேச்சு கொடுத்தேன்.   அவரும்  உடனே,  நெடு நாள் பழக்கம் போல தன் ஊர் கதை, வீட்டு கதை எல்லாம் என்னிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
நண்பர் கூட்டம்,  படம் ஆரம்பிக்கும் முன்னே விசில் சத்தத்தை ஆரம்பிக்க,  ஆன்ட்டி முகம் சுளித்தார்.  பேப்பர் ராக்கெட்ஸ் பறக்க ஆரம்பித்தன. சத்தம் கூடவே,  மேனேஜர்  ஓடி வந்து, நண்பர்களுக்கு  இரண்டாவது எச்சரிக்கை செய்தார். பேசி பார்த்ததில், மேனேஜர்  வேலைக்கு புதிது என்று தெரிந்து விட்டது. நான் ஒரு பக்கமும், அந்த பக்கம் எங்கள் தோழியும் ஒன்றும் தெரியாதது போல, நண்பர்களுக்கு  அரணாய் அமைதியாக  அமர்ந்து இருந்தோம்.

"லக...லக....லக...."   மூன்று:

எங்கள் நண்பர், ஷங்கர் ஒரு gallon தண்ணீர் கேன் (3  3/4 liters கொள்ளளவு கொண்ட பெரிய பிளாஸ்டிக்  can)  ஒன்று உள்ளே கொண்டு வந்து உட்கார்ந்தார். நண்பர்கள் ரஜினி பாடல்களை பாடி, விசில் அடித்து ஆட்டம் போட, தானும் தன்னை மறந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். ஆட்டத்தின் உச்சியில், தண்ணீர் கேன் கையில் எடுத்து சுழற்றி சுழற்றி ஆடியவர், கை தவறி விட, சுற்றிய வேகத்தில் அத்தனை பெரிய கேன் - தண்ணீருடன்- வேகம் எடுத்து பறந்தது. சற்று தள்ளி,   concrete தரையில் பட்டு , ஒரு வெடி சத்தத்துடன் சிதறி கொட்டியது. அந்த பக்கம் இருந்தவர்கள் தலைகள் தப்பியது, ஒரு ஆச்சர்யம்!

உள்ளே உட்கார்ந்திருந்த பலர், ஏதோ bomb வெடித்து விட்டது என்று பதறி அலற, மேனேஜர் மீண்டும் உள்ளே ஓடி வந்து பார்த்தால், எங்கள் கூட்டம் .............. 
திட்டினார் - திட்டினார் - திட்டினார் -  எங்களில் யாருக்கும் ஹிந்தி தெரியாததால் ஒன்றும் புரியவில்லை. புரிந்து இருந்தால்:
"no bad words ...... no ..... no..... mummy எல்லாம் திட்டாத...... நோ...... ஒன்லி பூஸ்ட்....... மை பாமிலி, டோட்டல்  damage ...... ஒய் ப்ளட்? சேம் ப்ளட்......." என்று  "வடிவாக"  நாங்களும் பதில் பேசி இருந்து இருப்போம். 
மற்றுமொரு நல்ல செய்தி:    யாரும் bomb என்று  பயந்து போய், போலிசை  போன் செய்து  கூப்பிடவில்லை.  தப்பித்தோம். 


ரஜினி படம் பார்க்கும் போது, இதெல்லாம் சகஜமப்பா என்று, எதுவுமே நடக்காதது போல அந்த ஆன்ட்டியை    திரும்பி பார்த்தேன்.  அவரின்  பொன்மொழிகள்:  "பாத்தியாமா? இதுகளெல்லாம் அவங்க அம்மா, அப்பா, அமெரிக்காவுக்கு எவ்வளவு பெருமையா அனுப்பி வைத்து இருப்பாங்க. இங்கே பாரு. நம்மூரு லோ கிளாஸ் (???) ஆளுங்க மாதிரி எப்படி ஆட்டம் போடுதுங்க.  எல்லாம் மேற்படிப்பு படிச்சு பெரிய பெரிய வேலைக்கு போறதுங்க.  அமெரிக்காவில அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி ஆடுதுங்க," என்று தன் பங்குக்கு எனக்கு புரிகிற மாதிரி  தமிழில் கொட்டித்  தீர்த்தார். அவ்வ்வ்வ்......
  
நான் திரும்பி, என் நண்பர்களை பார்த்தேன். ஒருவர், குழந்தை நல மருத்துவத்தில் (Pediatrics) மேல் படிப்பு படிக்க வந்தவர் ; மற்றொருவர் - IT project ஒன்றின் டீம் மேனேஜர் ; இரண்டு நண்பர்கள் - Ph.D. டிகிரி வாங்க வந்தவர்கள்;  ஒருவர் - Food Technology யில் research  செய்பவர்;   மற்றொரு நண்பர் - புற்று நோய் செல்லில் (cancer cells) research செய்பவர் - என்று பட்டியல் நீண்டது. எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதியாக நம்பி கொண்டிருந்த அந்த ஆன்ட்டியிடம்   இந்த விவரங்களை சொல்லாமல், சிரித்தேன். 


படம் ஆரம்பம் ஆனது.  தியேட்டரில் பெரும்பாலோர்  கத்தினார்கள். அந்த ஆன்ட்டியின்    புலம்பல் தொடர ஆரம்பித்தது.  படம் ஆரம்பிக்கும் வரை, பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்த எனக்கு, இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.  எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி  விடை பெற்று கொண்டு போக, உள்ளிருந்த ரஜினி ரசிகை வெளியே வந்து விட்டாள். எனது umpire விசிலை எடுத்துக் கைக்குள் வைத்து கொண்டேன். ரஜினியின் ஷூ அறிமுகம்........ அந்த ஆன்ட்டி, ஏதோ சொல்லி புலம்ப மீண்டும்  என் பக்கம் திரும்ப, முதல் ஆளாக என் விசில் தனியாக தியேட்டர் அதிர அடித்தேன். என்னை தொடர்ந்து நண்பர்கள் விசில்கள்...............தியேட்டரில் மற்ற ரஜினி ரசிகர்களின் விசில்கள்................ "லக லக லக ......" பேயாடி விட்டது, அவர் முகத்தில். 

எனக்கு என்னவோ ஓரிரு முறை,  அந்த ஆன்ட்டி   மேலே நோக்கி சாமியிடம், "நல்ல வேளை, அப்பனே  - இப்படி ஒரு பெண்ணை எனக்கு மருமகளாக  தரவில்லை," என்று சொல்லி நன்றி கூறுவது போல தெரிந்தது. படம் முடியும் வரை,  எதேச்சையாக   அவர் பக்கம் திரும்பும் போதெல்லாம் அவர் என்னை பார்த்த பார்வைகள் ....... நானே "சந்திரமுகி" என முறைத்து கொண்டே இருந்தார்.  "லக லக லக ......" என்று ஒரு முறை, அவரின் பக்கமாகவும் சந்தடி சாக்கில் கத்தினேன்.

எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால்  என்ன?   அது கலையாகட்டும் -  விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும்.  அவரவர்  படிக்கும் போதும், வேலை பார்க்கும் போதும் அதோடு ஒன்றி கவனத்துடன்  இருக்கிறோம். மற்ற நேரங்களில், நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு,  வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை  அவிழ்த்து விட்டால் என்ன?    "தண்ணி" அடித்து விட்டோ இல்லாமலோ ஆடும் dirty dancing பற்றி நான் சொல்லவில்லை.

பொழுது போக்கும் நேரங்களில் கூட,  ஒரு சீரியஸ் ஆசாமியாகவோ, ஒரு critic ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.    எப்பொழுதும் விளையாட்டுத்தனமாக  இருந்தால், பொறுப்பு இல்லாத ஆள் என்று சொல்லலாம். ஆனால், எப்பொழுதும் ஒரு உம்மணா மூஞ்சியாக uptight ஆக  இருந்தால்தான் sophisticated people என்று ஏற்றுக் கொள்ள கூடியது என்று ஏன் நினைக்க  வேண்டும்?  சரி, சரி.... நாங்கள் கொஞ்சம் (தான்)  ஓவரா அன்று ஆட்டம் போட்டு விட்டோம். அந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஒரு புன்னைகையுடன் எல்லாவற்றையும் ரசிக்கலாமே. அந்த ஆன்ட்டி  கூட, எங்களை சகித்து கொண்டு சிரித்து இருந்தால், எவ்வளவு கல கல வென்று படத்தை ரசித்து இருந்து இருப்பார்கள்?  

சந்தோஷமாக  ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில்  - தலை கால் புரியாமல்தான் ஆடக்  கூடாது.  



Tuesday, April 13, 2010

கதை கதையாம் காரணமாம்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 சிநேகிதன் அக்பர்,  சின்ன வயசுல கேட்ட கதையை சொல்ல சொல்லி தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கார். அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.  (அவரிடமே இருந்து சுட்ட வரிகள்)
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html 

நான் பலரிடம் "விட்ட" கதைகளை விட்டு தள்ளுங்க. அந்த கதை எல்லாம் இப்போ வேணாம்!  உண்மையிலுமே, கதை சொல்ல போறேன்.   கதை வேண்டாம் என்று இருக்கிறவங்க,  இங்கேயே ....  s டைம்  இதுதான்  ...........
 
 பல கதை புத்தகங்கள் படித்து இருந்தாலும், பலரிடம் கதை கேட்டு இருந்தாலும், என் தந்தையிடம் கேட்ட கருத்துள்ள கதைகளில், என்னை மெருகேற்றி கொள்ளும் அம்சங்களும்  அமைந்து இருந்ததால், அவற்றை மறக்க முடியாது.
அவற்றில் ஒன்று: 

அன்பே கடவுள்: 

மார்டின் என்பவன், தினமும் ஜெபங்கள் செய்வதிலும் ஞாயிறு தவறாமல் ஆலயம் செல்வதிலும், ஜெப கூட்டங்களுக்கு  தவறாமல் செல்வதிலும் இருந்தான். நாட்கள் ஆக ஆக, எப்படியும் ஒரு நாளாவது இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை, பேராசையாய் வளர்ந்து கொண்டு வந்தது.
ஒரு நீண்ட ஜெபத்துக்குப் பின்,  தன்னை சந்திக்க இறைவன் எப்படியும் வர வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து விட்டு சென்றான்.

அன்று இரவு கனவில்,  ஒரு பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் நடுவில் இருந்து வந்த குரலில்: "நாளை நீ, என்னை காண்பாய்."

சந்தோஷத்துடன்,  மதிய விருந்து தயாரித்தான்.  இறைவனுக்கு பரிசாக கொடுக்க, ஒரு பெரிய சால்வை/போர்வை பரிசாக வாங்கி வந்து வைத்தான்.

மாலை நான்கு மணி ஆனது. இறைவன் வரவில்லை.

ஒரு வயதானவர், காலை நொண்டி கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். முதலில், அவருக்கு உணவு மறுத்து விட்டு உள்ளே சென்று விட்டான், மார்டின்.
மீண்டும் அந்த முதியவரின் குரல் கேட்டு, மனது கேட்காமல், உள்ளே இருந்த உணவில், தன் பங்கை எடுத்து முதியவருக்கு கொடுத்து உண்ணக் கொடுத்தான்.  முதியவர், சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

மாலை மணி ஐந்து ஆனது. இறைவன் வரவில்லை.

வெளியில் கடைத்தெரு வரை சென்று , இறைவன் வருகிறாரா என்று பார்த்தான். மெல்லிய மழைச்சாரலில், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்ணையும், குளிரில் வாடி கொண்டு இருந்த  அவளது கைக்குழந்தையும் கண்டான்.   கண்டும் காணாதது போல அவர்களை கடந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, மனதில் ஒரு நெருடல்.  இறைவனுக்கு வாங்கி வைத்து இருந்த அந்த சால்வையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான். அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  பால் வாங்க கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினான்.

மாலை ஏழு மணி ஆனது.   இறைவன் வரவில்லை.

அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. அவருடன் அவரது 14  வயது பேரன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, மார்டினை உதவிக்கு அழைத்தான்.
தான் அங்கு உதவ சென்று இருந்த நேரம், இறைவன் வந்து விட்டால்............... தயங்கிய மார்டின், சிறுவனின் முகம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டு, அவனுடன் சென்றான். பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு,  அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து விட்டு,  வேலைக்கு சென்று இருந்த அவரின் மகனுக்கும் தகவல் அனுப்பி விட்டு, அவர் வரும் வரை காத்து இருந்தான்.  பாட்டி, நன்றாக இருப்பதை அறிந்து கொண்டு,  இரவு, வீட்டுக்கு வந்தான்.

இரவு பத்து மணி ஆனது. இறைவன்   வரவில்லை.

இறைவன் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இறைவன் இல்லையோ? தன்னை ஏமாற்றி விட்டாரோ? என்ற குழப்பங்களுடன், பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்தான்.

மத்தேயு 25:  " பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்;
                       தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்;
                       அன்னியனாய் இருந்தேன், என்னை சேர்த்து கொண்டீர்கள்;
                      உடை இல்லாதிருந்தேன், எனக்கு உடை தந்தீர்கள்;
                      நோயுற்று இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
                      காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள் ....................
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்."

இரவு பத்தரை மணி ஆனது. இறைவன் வந்து விட்டு சென்றதை புரிந்து கொண்டான்.

நான் புரிந்து கொண்டது:   கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச்   செய்தால் -  மனித நேயத்துடன்  நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.

ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. 
 
             

Wednesday, April 7, 2010

"cell"லாதே யாரும் கேட்டால்!

 கடந்த ஒரு வருடத்தில்,  எனக்கென்று வாங்கி கொடுக்கப்பட்ட  நான்காவது செல் போன் மீண்டும் பணால்........ யாராவது திருடி இருந்தால், சப்பை மேட்டர் என்று தள்ளி இருக்கலாம். ஆனால்...... வீட்டுக்குள்ளேயே....... என்ன ஆச்சு? எங்கே போச்சு? யாம் அறியோம்  பராபரமே!   தொலைந்து போய் விட்டது. சரி, சரி...... "கொசு வலை" தத்துவம் நினைவு படுத்தி விட்டீர்கள். நான் தொலைத்து விட்டேன்.  

இரண்டு வாரங்களாக வீட்டில் தேடி பார்க்கிறேன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.  அடிக்கடி, காணாமல் போகும் ஒற்றை sock(s),  பேனா, பென்சில்,  ஷாப்பிங் லிஸ்ட்,  சாவி கொத்து,  நண்பர்களின் முகவரிகள் அடங்கிய டைரி , இன்னும் பிற ஐட்டம்ஸ்  கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று சென்று விட்டதோ  என்னவோ?


என் முந்தைய செல் போன்  என்ன ஆச்சு என்று ஆர்வம் தாங்கமால் கேட்கும் அன்பர்களுக்கு: 
மாவு கிரைண்டர்   சுத்துது:  (வெட்டி பேச்சில், வழக்கமாக வரும் flashback தான். வேற என்ன?)
ஒரு நாள் குளிருக்கு இதமாக, சூடாக மசாலா டீ குடித்து கொண்டே,   என் தோழர்  பூபாவிடம்  செல்லில் பேசிக்கொண்டு இருந்தேன். பூபா  என் மொக்கை கடியை, நண்பர் என்ற முறையில் பொறுத்து கொண்டாலும், அந்த sleek ஆன செல் போன் தாங்க முடியாது, என் கையில் இருந்து வழுக்கி , அடுத்த கையில் பிடித்து கொண்டிருந்த  டீ கப்புக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. அருமை நண்பரிடம் விஷயத்தை சொல்ல,  land line போன் எடுத்து கூப்பிட்டேன்.

நான் பதட்டத்துடன் சொல்லியதை பொறுமையுடன் கேட்ட நண்பர்: 
                                     "சித்ரா, cell  battery யை கழற்றி உடனே dry பண்ணுங்க."
நான் துடுக்காக பேசுவதாக நினைத்து கொண்டு: 
                                    "உடனேனா,  எப்படி?  microwave oven க்குள் தான் வைக்கணும்."
பூபா சளைக்காமல்:   "வைங்க. ஆனால்,  சரியாக ஏழாவது நொடியில்  வெளியே எடுத்துடுங்க."
நான்:                         "அது என்ன ஏழு வினாடிகள் கணக்கு?"
பூபா:                   "எனக்கும் ஒரு வாட்டி,  செல் போன்ல  தண்ணி பட்டுருச்சு. microwave oven க்குள் பத்து வினாடிகள்  வைத்து on பண்ணி விட்டேன்.  சரியாக  எட்டாவது நொடியில்  டப்புன்னு ஒரு சத்தத்தோட செல் போன்  வெடிச்சு தீ பொறிவந்து விட்டது. அவ்வளவுதான்.  என் செல் போன் கதை முடிஞ்சது." 

இந்த அனுபவத்தை கேட்டதும்,  மைக்ரோவேவ் பக்கம் திரும்பாமல்,  என் பார்வை துணி காய வைக்கும் டிரையர் பக்கம் ஒரு நொடி போகாமல் இல்லை.  செல் போன் எடுத்து ஒரு முறை பார்த்தேன். எந்த emergency care செய்தும் காப்பாற்ற முடியாதபடி, கதை முடிந்து இருந்தது. 
 

"ஆமாம், இப்பொழுது மறுபடியும் புது போன் தொலைச்சிட்டியே. வீட்டுக்காரர் என்ன சொன்னார்," என்று ஆர்வத்துடன் நீங்கள் கேட்டீர்கள் என்றால் - கேட்கணும் - கேட்பீங்க........
இரண்டு நாட்களாக  வீடு பூரா இண்டு இடுக்கு விடாமால் தேடிய போது, கிடைத்தது என் செல் போன் அல்ல. என் கணவர், ஒன்றரை வருடங்களுக்கு முன் தொலைத்த ipod.  ipod தொலைத்த விஷயத்தை, அது வரை  என்கிட்டே மனுஷன் சொல்லவே இல்லை.   ஆக,  அவர் கப்சிப்.   என்ன பொருத்தம்? ஜாடி கேத்த மூடி நாங்கள் தான்.

கிடைக்கும் -  அடுத்து வேற எதையாவது தொலைத்து விட்டு தேடும் போது, நிச்சயம் இந்த செல் போன் கிடைக்கும். ஆனால்,  அப்பொழுது தேடப்படும் அந்த பொருள் கிடைக்காது. அதற்கு, நான் வேற எதையாவது தொலைக்க வேண்டும். 
வாழ்க்கை தத்துவம் # 9,327.  இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ?