நான் அமெரிக்கா வந்த புதிதில், ஈஸ்ட்டர் திருநாள் நெருங்கி கொண்டு இருந்த பொழுது, ஆலயத்தில் பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொண்டோம். அந்த சமயம் கடைகளுக்கோ அல்லது ஷாப்பிங் மால் (mall ) சென்ற பொழுது, ஈஸ்ட்டர்க்கு பொருத்தமான இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள் வெளியே இல்லாமல், எங்கு பார்த்தாலும் முயல் , கூடை நிறைய வண்ண நிற முட்டைகளை வைத்து இருப்பது போல படங்களும் chocolates மற்றும் அலங்காரங்களும் ஈஸ்டர் வாழ்த்துக்களும் இருந்தன. ஆண் முயல் - பெண் முயல் போன்று costumes அணிந்து கொண்டவர்களும் தென்பட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் வரை, ஈஸ்டர் என்பது கிறிஸ்தவ திருநாளாகவும், ஈஸ்டர் கொண்டாட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புமே காரணமாக கேட்டு பழகியவளுக்கு , இது புது மாதிரியாக இருந்துச்சு.
பொதுவாக உலக நாடுகளின் பார்வையில், அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடாகவே காணப்படுகிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள், கிறிஸ்தவர்கள் தான் என்பது உண்மையே.
ஆனால், ACLU என்ற ஒரு க்ரூப் பெரிய அளவில் வந்த உடன், எல்லா மதங்களின் (கிறிஸ்தவ மார்க்கம் உட்பட) திருவிழாக்களும் கொஞ்சம் பின் வாங்கி அவரவரின் ஆலயங்களிலும் ஆலயம் சார்ந்த இடங்களிலும் கோவில்களிலும் வீடுகளிலும் என்ற அளவுக்கு குறுக்கப் பட்டு விட்டன. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முன் உரிமை கொடுத்து சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வில் பொது இடங்களில், குறிப்பாக அரசாங்க பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான குறியீடுகளோ வழிபாடுகளோ இருக்க கூடாது என்று சட்டப் பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு ACLU முன்னேறி வந்து இருக்கின்றது.
Majority ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட, இங்கு minority ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம். தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள், அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம்.
ACLU பற்றிய விவரங்களுக்கு:
இது ஒரு புறம் இருக்க, ஜெர்மனியில், கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பாக வசந்த காலத்தை கொண்டாடும் விதத்தில், செழுமை மற்றும் கருவுறுதிறன்க்கென்று இருந்த தேவதையான (Goddess of Fertility) Eostre என்பவருக்காக கொண்டாட்டங்கள் நடந்து இருக்கின்றன.
வசந்த காலத்தில் தான், நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் என்பதால், முட்டை வளமையின் சின்னமாக கருதப்பட்டு வந்து இருக்கிறது. முயல் இனம், குறுகிய நாட்களிலேயே பலுகி பெறுவதற்கு பேர் வாங்கியது. அதனால் கருவுறுதிறன் சின்னமாக கருத்தப்பட்டு வந்து இருக்கிறது. வசந்த கால திருவிழாக்களில் (Spring Festival) இந்த சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யமென்ன? இதன் பாதிப்பில், பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம்.
Easter treats: White Chocolate and Regular Chocolate bunnies and eggs:
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் சிலர், அமெரிக்க வந்து செட்டில் ஆன பொழுது, தங்களுடன் தங்கள் பாராம்பரிய பழக்க வழக்கங்களையும் கதைகளையும் சேர்த்து அமெரிக்கா கொண்டு வந்து பரப்பி இருக்கிறார்கள்.
ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளில், பின்னர் missionaries வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பிய பொழுது, வசந்த காலத்தை ஒட்டி வந்த ஈஸ்ட்டர் திருவிழாவோடு இந்த கதைகளும் ஒட்டி புது வடிவம் பெற்று விட்டன. இத பார்றா!!!
கிறிஸ்தவ விழாக்களை வெளிப்படையாக பெரிய அளவில் கொண்டாட முறுமுறுத்த ACLU போன்ற அமைப்புகள் கூட, வசந்த காலத்துக்கென்று இருக்கும் - எந்த வித மதங்களின் சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ - அதன் அடையாளங்களாக வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை.
1970 s இல் இருந்து, அமெரிக்காவில் வியாபார நோக்கு (commercialism) எல்லாவற்றிலும் தலையிட ஆரம்பித்த பின், முயல் , முட்டை போடும் கதைகள் வியாபார திறன் சாயம் பூசப்பட்டு புது உரு பெற்று - ஜெர்மானிய பூர்வீகத்தை தொலைத்து - வீறு கொண்டு வந்து இன்று வரை உலா வந்து கொண்டு இருக்கிறது.
வரும் ஞாயிறு, ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம். தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும். ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக ஆங்கே ஆங்கே அவர்களுக்காக வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ, பூங்காக்களிலோ இப்படி விளையாட்டுக்கள் நடக்கும். அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம்.
கீழ் உள்ள படத்தில், ஒபமா ஒரு சிறு குழந்தைக்கு முட்டை வேட்டையில் உதவுகிறார்:
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் என்று ஒரே வரியில் இந்தியாவில் கொண்டாடிவிட்டு வந்த எனக்கு - இப்படி ஜெர்மானிய பாரம்பரியம் - நாத்திக பாதிப்பு - வசந்த காலம் - குழந்தைகள் விளையாட்டு எல்லாம் கலந்து கட்டிய வித்தியாசமான கிறிஸ்தவ திருவிழாவை கொண்டாடுவது மலைப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
(கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கூட, கிறிஸ்துமஸ் தாத்தா என்று நம்ம ஊரில் அழைக்கப்படும் Santa Claus க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமெரிக்காவில் கொண்டாடப் பட்டு வருவது, தனி கதை. )
கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும் ஒரு நாட்டில், இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து) மற்றும் வீடுகளில் தவிர பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல மறைக்கப்பட்டு (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
படங்கள்: கூகுள் அக்காவுக்கு நன்றிகள்.