நான் பதிவு எழுத வந்த ஒன்னேகால் வருடத்தில், ஒண்ணு ரெண்டு தான் அரசியல் குறித்த பதிவுகள் எழுதி இருக்கேன். முதலும் முக்கியமான ஆன பதிவு : நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்க:
மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை
அந்த பதிவை எழுதியபின், எனக்கு என்ன கலங்கிச்சோ தெரியல ...அரசியல் பதிவுகள் பக்கமே அவ்வளவாக போகல.... சரி, இந்த வருஷம் வோட்டு தான் போட முடியல .... வக்கணையாக பேசி, இன்னொரு அரசியல் பதிவு இன்று புதுசா போடலாமேன்னு முடிவு பண்ணி ஒரு காமெடி பதிவு எழுத நினைச்சேன். அப்புறம், அங்கே அரசியல் (மு)தலைகள் எல்லாம் மக்களை வச்சு காமெடி பண்ணி, அவங்க பொட்டியை நிரப்புறாங்களே , அது வச்சு காமெடி பண்ணாம ஒழுங்கா எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன்.
போன வருஷம், நவம்பர் மாதம் நாங்க இப்போ இருக்கிற ஊரில Mayor election நடந்துச்சு. போட்டியிட்ட வேட்பாளர்கள் எல்லோரும் தனி ஆளாக, அவரவர் கொள்கைகளை தெளிவாக பிரிண்ட் செய்து, பிட் நோட்டீஸ் கையில வச்சுக்கிட்டு, ஒவ்வொரு வீடாக வந்து ஹலோ சொல்லி பேசி கொடுத்துட்டு போனாங்க.... தனிமரமாக வந்த வேட்பாளர்களை பார்த்து, எனக்கு ஒண்ணுமே புரியல. அவங்க கூட கோஷம் போட ஆள் இல்லை ..... கழுத்தை சுத்தி கட்சி கொடி நிறத்துல துண்டு இல்லை.... மைக் இல்லை ..... கலகலப்பு இல்லை...... களேபரம் இல்லை..... என்னங்கடா தேர்தல் பிரச்சாரம் இது என்று நினைச்சிக்கிட்டேன்.
அதில், Bill Wells என்று ஒரு வேட்பாளர் வந்துட்டு போனதும், எங்க பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி வந்து, "உங்களுக்கு இவரைத் தெரியுமா? இவர் ரொம்ப நல்ல மனுஷன். இவர் முன்பு பள்ளிக்கூட பிரின்சிபால் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். ரொம்ப நல்ல பெயர் எடுத்தவர். இவர் குடும்பமும் நல்ல முன் மாதிரியான குடும்பம் என்று பெயர் வாங்கி உள்ளது. அவர் மனைவி, நிறைய பொது நல சேவைகளில் ஆர்வமாக முன்னின்று பணி செய்பவர். இவர் தான் Mayor ஆக வர வேண்டும் என்று நிறைய பேர் பேசிக்கிறாங்க, " என்று சொல்லி விட்டு சென்றார்.
Mayor Bill Wells:
தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிச்சாங்க.... இப்போ எங்க ஊருக்கு Bill Wells தான் மற்றவர்களை விட அதிக வாக்குகள் பெற்று ஜெயிச்சு Mayor ஆக இருக்கிறார்.
அப்போதான் பக்கத்து வீட்டு பொண்ணு சொன்னது நியாபகத்துக்கு வந்துச்சு... ஒரு வேட்பாளர் ஜெயிக்க அவர் மட்டும் அல்ல, அவர் குடும்பமே நல்ல நம்பகமான குடும்பம் என்று பெயர் வாங்கி இருக்க வேண்டியது இருக்குது.
அதே மாதிரி, கற்பு கிற்பு என்று அதிகம் அலட்டி கொள்ளாத அமெரிக்க நாட்டில், கிளின்டன் (Clinton) ஜனாதிபதியாக இருந்தப்போ மோனிகா கூட அப்படி இப்படி இருந்துட்டார் என்று விஷயம் வெளியில் வந்தவுடன், மீடியா முதல் மக்கள் வரை, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டி குடைஞ்சு எடுத்தாங்க.
"அட, மோனிகாவுக்கு ஒரு "முடிவு" கட்டிட்டு - அவள் இருந்த இருக்கிற இடத்துல புல்லு முளைக்கிறதுக்கு வழி பண்ணாம - என்னது ஒரு அமெரிக்க ஜனாதிபதி இப்படி திருதிருனு மாட்டிக்கிட்டு முழிக்கிறாருனு," எங்க நெருங்கிய தோழியோட மாமானார் சொன்னாப்போ, நாங்க சிரிச்சு இருக்கோம்.
பக்கத்து வீட்டு அமெரிக்க பெண்மணி கிட்ட ஒரு நாள் ஆர்வம் தாங்காம கிளின்டன் விவகாரம் எதுக்கு பெரிய விஷயமாச்சு என்று கேட்டுட்டேன். திருமணம் ஆனப்புறம், ஒரு affair வந்து - டைவர்ஸ் ஆகி - வேற கல்யாணம் செய்துக்கிறது சகஜம் தானே. மேலும், இங்கே நம்ம ஊரு மாதிரி சமூதாயத்துக்கு பயந்து வாழறவங்க கிடையாது. சுய விருப்பு வெறுப்பு படி தான் முடிவு எடுத்து இருப்பாங்க... அது அவங்க உரிமை என்று மத்தவங்க தலையிட மாட்டாங்க... அப்புறம், கிளின்டன்க்கு மட்டும் என்ன தனி பஞ்சாயத்து என்று வெட்டி பேச்சு பேசியே பழக்கப்பட்டதால கேட்டுட்டேன்.
Bill Clinton:
அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க: " மக்கள் எல்லோரும் தங்கள் நலவாழ்வை நல்லபடியாக பார்த்துக்கத்தானே, நம்பி ஒரு ஆளை தெரிந்தெடுத்து நாட்டை ஆள பொறுப்பாக நியமிக்கிறோம். ஜனநாயக ஆட்சியில், முதலில் அவர் மக்கள் பிரதிநிதி. எங்களை சர்வாதிகரத்துடன் ஆள வந்தவர் அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வந்தவர். சமூதாயம் எப்படி இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்லவராக இருந்து - மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையாக இருக்க வேண்டும். மோனிகா விஷயத்தில், கிளின்டன் பொய் சொன்னது பிடிக்கவில்லை. உண்மையை ஒத்துக்கொண்டு அவர் , மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் பொய் சொல்லி மறைக்கப் பார்த்தார். அதனால் அவமானப்பட்டார். அதன் பின், அவர் தவறு செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டார். அரசியல் தலைவர்களும் மனிதர்கள் தான். தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், மக்கள் தான் புரிய வைக்க வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ளவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது என்னை பாதிக்காத வரை. ஆனால், அரசியல் தலைவர்கள் எங்களுக்காக வந்தவர்கள். அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை, அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்."
அப்போதான் எனக்கு நிறைய சந்தேகங்கள் சரமாரியாக வந்துச்சு....
இந்தியாவில் ....சரி வேணாம் விடுங்க....
தமிழ்நாட்டில், சராசரி மனிதரிடம் சமூதாயத்துக்கு பயந்து வாழும் எண்ணம் இருக்கும் அளவுக்கு, அரசியல் தலைவர்களிடம் இருக்கிறதா?
கற்பு ... ஒருவனுக்கு ஒருத்தி .... என்ற தனித்துவ கலாச்சாரம் எல்லாம் கட்டி காப்பாத்துகிறவர் தான் ஆள வேண்டும் என்ற தகுதியுடன் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களா?
மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் அரசியல் தலைவர்கள் வருகிறார்களா? இல்லை, மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த மாதிரி, வாரிசு ஆட்சி தான் ஏற்றது என்ற மன நிலையில் இருக்கிறார்களா?
சமூதாயத்துக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்களா?
தலைவன் தவறு செய்தால், அதை திருத்தும் எண்ணத்துடன் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திரம் உள்ளதா? இல்லை சர்வாதிகார நிலமைதானா?
இன்னும் நிறைய டவுட்டு மாறி மாறி வந்துச்சு... அதை எல்லாம் பதிவுல சொன்னா, ஆட்டோ சுமோ எல்லாம் பிளேன்ல ஏறி எங்க வீடு தேடி வரும். எனக்கு எதற்கு வம்பு? நான் கேக்கலப்பா ...நான் ஒண்ணும் கேக்கல.... ஹையா...... நானும் தமிழ் பொண்ணு தான்...... அப்படியே நீதி நியாயம் தர்மம் என்று பேசாமல், வாயை நானே பொத்திக்கிட்டு, கம்முனு வேற வேலை பார்க்க போறேன் பாருங்க.....
ஒரு முறை, காந்தி தீவிரமாக சுதந்திர போராட்டத்தில இறங்கினப்போ, ரவீந்தரநாத் தாகூர் (அவர் யாருன்னு யாராவது கேட்பீங்களே .... அவர் தாம்ப்பா, தேசிய கீதம் எழுதிய மகான்) காந்தி கிட்ட வந்து சொன்னாராம்: " இந்திய மக்கள், இது வரை மன்னராட்சியில் பிறகு வெள்ளையர் ஆட்சியில் என்று மட்டுமே இருந்து பழகியவர்கள். இரண்டிலுமே ஆட்சி செய்கிறவர்களுக்கு அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி என்றால் என்ன சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அதன் பின், சுதந்திர இந்தியாவை அவர்கள் கையில் கொடுங்கள்."
அதற்கு காந்தி: " முதலில் வெள்ளையரை வெளியேற்றுவோம். பிறகு, மக்களை தயார் செய்வோம்"
மக்களை அவர் தயார் செய்வதற்குள், அவரே எதிர்பார்க்காத கலவர நிலையை நாடு சந்திக்க..... பிறகு என்ன நடந்தது என்று வரலாறு சொல்லுமே.
அப்படியும் இப்படியுமா இத்தனை வருடங்கள் சுதந்திரம் வாங்கி ஓடி போயாச்சு. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வைக்கும் முதல் படி - பாடம் எப்பொழுது நடக்கும்? தாகூரின் கனவு எப்பொழுது நினைவு ஆகும்?
அடுத்த வாரம், எல்லோரும் முடிந்த அளவு முயற்சி செய்து வோட்டு போடுங்க. A/C ரூம் ல இருந்துக்கிட்டு - என்னை மாதிரி வெளிநாட்டில் இருந்துக்கிட்டு கரிசனத்துடன் பதிவு போட்டு கிழிக்கிறதை விட, வெய்யிலில் வரிசையில் காத்து நின்று வோட்டு போடுவதால் மாற்றங்கள் வரும்.
இந்த கட்சி விட்டா அந்த கட்சி ... இந்த இலவசம் விட்டா அந்த இலவசம் என்று இருக்காமல், தனிப்பட்ட வேட்பாளரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, "நான் வோட்டு போடுகிறவர் என் பிரதிநிதி - நான் மதிக்கும் கலாச்சாரத்தின் பிரதிநிதி - என் கொள்கைகளின் பிரதிநிதி" என்று உணர்ந்து வாக்களியுங்கள். வடிவேலு பேச்சையும் சிங்கமுத்து பேச்சையும் கேட்பதை விட உங்கள் மனசாட்சியின் பேச்சை கேட்டு முடிவெடுத்தால் நல்லா இருக்குமே.....
எங்க அப்பா இருக்கும் வரை, இப்படித்தான் தேர்ந்தெடுத்து வோட்டு போடுவார். ஒரு முறை, அவர் வோட்டு போட்டு வந்த ஆளுக்கு, தேர்தல் முடிவுகளில் விழுந்த வாக்குகள் மொத்தம் : 61
அந்த நல்ல மனிதரை நம்பி வாக்களித்தவர்கள் அறுபது பேர் தான். அதில் எத்தனை பேரு அந்த வேட்பாளரின் குடும்பத்து உறவினர்களோ? நிச்சயமாக யார் யாரு தனக்கு வோட்டு போட்டாங்க என்று அடையாளம் கண்டு பிடித்து நன்றி சொல்லி இருப்பார். ஆனால் இன்று வரை, யார் அந்த 61 வது ஆள் என்று தலையை பிச்சிக்கிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.
இந்த நிலைமை, நம்மூரு அரசியல் நிலவரத்தின் சிரியஸ் விஷயமா இல்லை சீரியஸ் விஷயமா?