Monday, February 28, 2011

வேகம் - வேகம் - போகும் - போகும் - மேஜிக் ஜர்னி


 1947 ல - இந்தியா சுதந்திரம் வாங்கிச்சு.  (அப்போ அப்போ இதையும் ஞாபகத்தில் வச்சுக்க வேண்டியது இருக்கிறது... நம்ம நாடு ஜனநாயக நாடுங்கறது எத்தனை பேருக்கு மறந்து போச்சுன்னு தெரியல...இல்லை, மறக்க வச்சுட்டாங்களா என்றும் தெரியல. )
சரி, மேட்டர்க்கு வாரேன். 


நம்ம நாடு "வெள்ளையனே வெளியேறு!" என்று புரட்சி செய்து விடுதலை வாங்கிய அந்த பொன்னான வருடத்தில தான், அமெரிக்காவுல ஒரு அபூர்வமான விஷயம் நடந்துச்சுன்னு சிலர் நம்புறாங்க.... 
குறிப்பாக,  நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன ஊரு - ராஸ்வெல் (Roswell) -  சுமார் 45,000 மக்கள் மட்டுமே வாழும் அந்த ஊரில் கண்டிப்பாக நம்புறாங்க...  


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு பக்கம் பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்குறப்போ,  இந்த ஊரு மக்கள்,  வேற்று கிரகத்துல மக்கள் (aliens) இருக்காங்க இல்லையா என்று இன்னொரு பஞ்சாயத்து,  அந்த வருஷம்தான் ஆரம்பிச்சு வச்சாங்க. 


ராஸ்வெல் ஊருக்கு 75 மைல்களுக்குத் தள்ளி,  பறக்கும் தட்டு (UFO)  ஒன்று சொயிங்னு வந்து இறங்கிச்சுனு (crash landing)  அந்த ஊர் மக்கள் சொல்றாங்க.  அதை பத்தி, அந்த ஊரில் பக்கத்துல ஆராய்ச்சிக்காக - மற்றும் ட்ரைனிங்க்காக - டென்ட் போட்டு இருந்த Roswell Army Air Field ல போய் சொல்ல,   அவங்கதான் அதை பத்தி விசாரணை நடத்துனதாக சொல்றாங்க... 


ஆனால்,  1941 - 1967 வரை, அங்கே இருந்த Air Force Base ஆட்கள், அந்த விஷயங்களை மூடி மறைச்சுட்டதாகவும் சொல்றாங்க.. அந்த தட்டில் இருந்து கீழே விழுந்த வேற்றுகிரகவாசியையும்,  எங்கோ ஒரு இடத்தில் ஆராய்ச்சிக்காக ஒளித்து வைத்து இருப்பதாகவும் சொல்றாங்க.

மத்தவங்களோ, "அதெல்லாம் இல்லைப்பா,  Air Force ஆளுங்க தங்களுடைய புது புது Fighter Air-crafts  எல்லாம், அந்த ஏரியாவில் தான் சோதனைக்கு அனுப்பி பார்ப்பாங்க.... அதில ஒண்ணு தான் தரையில் விழுந்ததை, மக்கள் பார்த்துட்டு UFO னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க, " என்று எதிர் வாதம் பண்றாங்க...  

"நீங்க சொல்றதை சொல்லிக்கிட்டு இருங்க.... நாங்க நம்புறதை நம்பிக்கிட்டு இருக்கோம்"னு  ராஸ்வெல்  மக்கள் வேற்றுகிரக வாசிகள் மேல ஒரு தனி பக்தி, மரியாதை, பாசத்தோட சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க....  






இந்த ஊரில்  இருக்கிற McDonald's Fast Food Restaurant கூட ஒரு UFO வடிவத்தில் அமைக்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவில,   நியூ யார்க் மாதிரி நகரத்தை மட்டும் பார்த்து -  வாய் புளந்துட்டு -  அமெரிக்காகாரன் ராக்கெட் விடுறதை மட்டும் பெரிசுபடுத்தி பார்க்கிறோம்.  ஆனால் இங்கேயும் சின்ன கிராமத்தில,  வேற்று கிரகத்துல இருந்து ராக்கெட் விட்டு, தங்க வீட்டு கொல்லைப்புரத்துல இருந்த மாட்டு கொட்டகைக்கு பக்கத்துல விழுந்துடுச்சுன்னு நம்புற சனங்க  இருக்காங்கப்பா. 

தமிழ்சினிமாபட்டியாய் இருந்தால் என்ன?  அமெரிக்கபட்டியாய் இருந்தால் என்ன?  அந்த அந்த ஊருக்கு ஒரு நம்பிக்கை - நாட்டாமை - சொம்பு - பறக்கும் தட்டு - கொள்ளி வாய் பிசாசு - வேற்றுகிரக வாசினு வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும் போல...

அந்த ஊருக்கு நாங்க போனதை மறக்கவே மாட்டேன்.... முதலில், ஏதோ "ஸ்டார் வார்ஸ்"  (Star Wars)  படத்துக்குள்ள நுழைஞ்சிட்டேனோ என்று பார்த்தேன்...  ஊரு முழுக்க அப்படி ஒரு பில்ட் அப்பு.   

Alien Autopsy Exhibit at the Roswell UFO Museum: 


அங்கே Aliens - UFO க்கு என்று  ஒரு museum கட்டி வச்சுருக்காங்க.... பத்தாதற்கு, வருஷத்திற்கு ஒரு வாட்டி UFO திருவிழா வேறு நடக்குதுங்கோ. ஜூலை மாதம் முதல் வாரம்,  நடக்கும் மூன்று நாள் கொண்டாட்டம் பார்க்க வேடிக்கையாக இருந்துச்சு. 



வேற்றுகிரகவாசிகள் மாதிரி உடை அணிந்து கொண்டு, சிறுவர்களும் பெரியவர்களுமாக வலம் வந்து கொண்டு இருக்கிறதை பார்க்கும் போது, இது அமெரிக்காவா இல்லை,  செவ்வாய் கிரகமா என்பது போல இருந்துச்சு.  அந்த திருவிழா நேரத்து படங்கள் தான், கூகிள்கிரகவாசியின் உதவியோடு பதிவு பூரா விதைச்சு வச்சுருக்கேன்.


பாருங்க :  பூலோக மக்களை மட்டும் அல்ல, வேற்று உலக மக்களையும் வரவேற்கும் பலகை: 

திருவிழாவில் Aliens' Parade , ரொம்ப விசேஷமானது.  இங்கே மாறு வேடப் போட்டி நடத்தி,  சிறப்பாக Aliens மாதிரி உடை அணிந்து வருபவர்களுக்கு பரிசும் உண்டு. குழந்தைகளுக்காக,  மார்வெல் காமிக்ஸ் (Marvel Comics)  ஹீரோக்களின் பவனியும் உண்டு.  Iron Man, Spider Man, Super Man போன்று நிறைய பேர்களின் அணிவகுப்புகளும் உண்டு. 


இதில சுவாரசியமான விஷயம் என்னன்னா,  சில பேரு தாங்கள் (UFO)  பறக்கும் தட்டுக்களை இன்னும் அவ்வப்போது பார்ப்பதாகவும், தங்களை வேற்றுகிரகவாசிகள் (Aliens) பூலோக மனிதர்களை குறித்த ஆராய்ச்சிக்காக கடத்தி சென்று சில நாட்கள் வைத்து விட்டு, திரும்ப வந்து விட்டு விட்டதாகவும் அங்கே வந்து சொற்பொழிவு ஆற்றிய போது,  நான் "ஞே" என்று முழிச்சேன்.   இந்த சிரியஸ் விஷயத்தை, சிரிக்காமல்  சீரியஸ் ஆக   அந்த நாலு பேரும் சொன்னாங்க.  தங்கள் தலையில் ஏதோ chip போல ஒரு electronic device பொருத்தி தங்கள் நடவடிக்கைகளை அந்த Aliens கவனித்து வருவதாக நினைக்கிறாங்களாம்.  கேக்குறவன் கேனையனாய் இருந்தால்,  நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல! 


அந்த அம்மா, வீல்  சேர்ல உட்கார்ந்து கிட்டே அந்த அணிவகுப்புல கலந்துக்கிட்டாங்க.... அவங்க உடம்பை கிழிச்சிக்கிட்டு alien வெளியே வரப்பார்க்குதாம். அவ்வ்வ் ........

 தட்டு...தட்டு.... பறக்கும் தட்டு.... உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.... ஹா, ஹா, ஹா, ஹா, ..... 
  மேலும் ஒரு வித்தியாசமான கருத்து அல்லது செய்தியுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.


Monday, February 21, 2011

டிவி பார்க்குற ரவுசு

சொந்த செலவுல, என்  தமிழ் ஆர்வத்துக்கு  சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி, ஆகி போச்சு.... 
அமெரிக்காவுல இப்போ, விஜய் டிவி - ஜெயா டிவி - கலைஞர் டிவி எல்லாமே டிஷ் நெட்வொர்க்கில் தெரியுதுன்னு சொல்லி, ஒரு ஆர்வ கோளாறுல  நானும் தமிழ் மெகா பாக் ஆர்டர் பண்ணிட்டேன்.  ரெண்டு நாளா,  எங்க வீட்டு குட்டீஸ்கிட்ட - அம்மா மட்டும் தான் டிவி பார்க்கலாம்.... நீங்க ரெண்டு பெரும் விளையாட போங்க - அப்படியே டிவி பார்க்கணும்னா, அம்மா பார்க்கிற ப்ரோக்ராம் தான் பார்க்கணும் - என்று அம்மா பவர் use பண்ணி புது ஆர்டர் தெரியாமல் போட்டுட்டேன் ...  இப்போ "பே" னு முழிக்கிறேன்.



 "நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!"

அப்படின்னு புது தமிழில் என்னை நானே கரைத்துக் கொண்டிருந்த நேரத்துக்கு -  வந்துச்சே,  complete ஸ்டாப்.

 என் எட்டு வயது பொண்ணு,  என்ன மாதிரி அமெரிக்கன் டிவி சேனல் தேர்ந்து எடுக்கிறாள், என்ன மாதிரி அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் பார்க்கிறாள் என்று மிகவும் கவனமாக இருக்கும் நான், தமிழ் டிவி விஷயத்தில் மட்டும்,  மூளையை அடகு வச்சுட்டேன்.  ஆனால், அவள் அப்படி இல்லையே..... நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும்,  எனக்கே திருப்புறா!

இக்கரைக்கு அக்கரை "பச்சை":

 
சினிமா காமெடி சீன்:

"ஏம்மா, இந்த ஆளு அடி வாங்கிகிட்டு இருக்காரு?  அடிக்கிறது தப்பில்லையா?"
"இது காமெடி!"
"ஒரு ஆளை அடிக்கிறதுதான் காமெடியா?"
"இந்த ஆளு அடி வாங்குறதுதான் காமெடி."
"அவர் bad guy யா?"
"இல்லை, அவர்  good  guy ."
"அப்போ,  அவரை அடிக்கிறவங்க bad guys ஆ?"
"இல்லை,  அவங்களும் good guys ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........."

சினிமா பாடல்கள்: 

"அம்மா,  இப்படித்தான் இந்தியாவில எப்போ பார்த்தாலும் guys ,  yucky ட்ரிங்க்ஸ் (டாஸ் மார்க் ஐட்டம்ஸ்)  ரோடுலேயே எடுத்துக்கிட்டு,  பொண்ணுங்களை disturb பண்ணிக்கிட்டே இருப்பாங்களா?" 
"...............????????!!!!!!!........."
 

 "எங்க எழுந்து போற?"
"தம்பியோட விளையாட போறேன். நீங்கதானே அமெரிக்கன் டிவி சேனல்ஸ்ல MTV எல்லாம்  நான் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க.... நீங்க,  இந்தியன் MTV songs பார்த்துக்கிட்டு இருக்கீங்க.... நான் தான் பார்க்க கூடாதே...." 
"..............????????!!!!!!!!!........"

விளம்பரங்கள்: 

"அம்மா, இந்தியாவில லுக் (look ) க்குத்தான் அதிகம் importance  கொடுப்பாங்க போல..."
"அப்படியெல்லாம் இல்லை.... எதற்கு அப்படி சொல்றே?"
 " எப்போ பாரு..... ஷாம்பூ, சோப்பு,  டூத் பேஸ்ட், fairness cream commercials (விளம்பரங்கள்) தான் மாத்தி மாத்தி வந்து கிட்டே இருக்குது." 
"............????????!!!!!!!!......."


டிவி ஹோஸ்ட்:

"அம்மா,  தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."


 ரியாலிட்டி கேம் ஷோ:

" அம்மா,  அவங்களோட talents க்கு challenging (சவாலாக) கேம்ஸ் வைக்காமல்,  எதற்கு அவங்களை silly  யாக  (சின்ன புள்ளத்தனமாக)  காட்டுற மாதிரி கேம்ஸ் கொண்டு வராங்க?"
"..............??????????!!!!!!!!!........" 


ரெண்டு நாளா, தாங்க முடியல என் ரவுசு - புலம்புனாங்க குட்டீஸ் நல்லா. 
எனக்கு வீட்டு ப்ரோப்ளம் - நோ டென்ஷன்.
ஆனால் ஆக்குமே,  குட்டீஸ் அப்பாக்கிட்ட கம்ப்ளைன் - எஸ் டென்ஷன். 
பண்ணிட்டாரே சப்போர்ட், குட்டீஸ்க்காக, என் கணவர். 
ஆக.... கட் ஆயிடுச்சு, என் தமிழ் டிவி  டைம். 
சொல்லிட்டாரே,  குட்டீஸ் முன்னால, நோ தமிழ் டிவி. 

அதுவரை, நான் என்ன பண்றது?  முன்பு ஒரு பதிவில நான் சொல்லி இருந்த மாதிரி: 

எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

கொலை பண்ண உனக்கு பாரதியார் பாட்டுத்தான் கிடச்சுதானு, யாரும் என் கிட்ட கேட்காதீங்க.
"முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்!"


என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ?  நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை - தமிழ் கலாச்சாரம் காப்பு திட்டமும் இல்லை.  தனியார் தொலைக்காட்சி எல்லாம் அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கிறதன் காரணம் மட்டும் புரியுது....  தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க......  ஜூப்பரு!

  
என்ன சொல்ல வர்ற?  ஒண்ணும் புரியல என்று  நினைக்கிறவங்களுக்காக:
எனக்கும் இந்த போஸ்டர்ல இருக்கிற மாதிரி,  தமிழ் டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒண்ணும் புரியல:  (கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.  அதற்கு உங்கள் மம்மி டாடி பர்மிசன் தேவையில்லைங்கோ!"



பி.கு. 
தமிழர் என்பதன் முதல்  அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? 

Tuesday, February 15, 2011

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு, டூயட் பாடலாமா?


 வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.  

Valentine's Day Special ஆதரித்தும் - எதிர்த்தும் தமிழ் நாட்டில் சில விஷயங்கள் நடந்ததை கேள்விப்பட்டேன்....

கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு....  ஆனால், எனக்கு ஒரு டவுட்டு!   அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக  - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே  follow பண்ணிடுறாங்க?

  நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை... அதுவும் இந்த வருடம்,  வார நாளில் (திங்கள்) வந்ததால் - சும்மா கடைகளில் greeting cards - ரோஜா மலர்கள் - heart shaped balloons - chocolates மட்டும் நல்லா sales ஆச்சு ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு.... Valentine's Day ,  சனி - ஞாயிறு வந்தால் மட்டும் கொஞ்சம் களை கட்டும்.... அம்புடுதேன்!

Valentine's Day -   அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல்,  காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... 

சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க....   "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" என்று ஆன பிறகு,    பேரை காப்பாத்திருவோம்ல....  பில்ட் அப்பு! பில்ட் அப்பு!


அமெரிக்காவில், Valentine's Day ஒட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை - (February மாதத்தில் - இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை)   உலக திருமண நாள் ஆக கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில், இது விசேஷம்.  நம்ம ஊரிலும் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன். 
World Marriage Day

http://wmd.wwme.org/purpose-history.html

 பெண்ணின் ரோல் என்னன்னு சொல்றாங்களாம்?
கல்யாணம் வரை - காதலி;
கல்யாணத்திற்கு பின் - மனைவி;
குழந்தைகளுக்கு பின் - தாய் தான்... ஆனால், கணவருக்கு????? 
அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான். 
காதலியாக கவனிக்கப்பட்டு - வர்ணிக்கப்பட்டு;
மனைவியாக கொண்டாடப்பட்டு ;
அப்புறம் அன்னையாக ஆனதும்,  "உன் வழி -  குழந்தைகள்  வழி ... தாண்டாதே" என்று அடக்கி விடப்படுவதால் தான் பல குடும்பங்களில்,  கணவர் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இல்லாமல் போய் விடுகிறது... காதலிச்சு கல்யாணம் செய்தவர்கள் கூட,  கல்யாண வாழ்க்கை கசந்து -   பெரிய சண்டைகள் இல்லை என்றாலும்,  சள்ளு புள்ளு என்று ஒருத்தர் மேல ஒருத்தர் எரிஞ்சு விழுந்துக்கிட்டே -  குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று  நான் சொல்லல,  ஆய்வு (research)  சொல்லுது.

http://www.itwire.com/science-news/health/24374-married-couples-less-happy-with-children
 
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது? என்று வேறு ஒரு ஆய்வு நடத்துனாங்களாம்.  அதில்,  கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல்,  காதலோடு தங்களுக்கென்று   நேரம் ஒதுக்கி,  அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.


இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சொல்லப்படாது.... 

பொதுவாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலைப்பளு அதிகம் இருப்பதால்,  எல்லா கவனமும் அவர்களிடம் மட்டும் சென்று விடுவதால்,  களைப்பு தான் மிஞ்சும்.  மாறி வரும் கால கட்டத்தில்,  அது மன சோர்வைத் தான் கொண்டு வருமாம்.  அவர்கள் உணர்வுகளும் நாள் ஆக ஆக மரத்து போக ஆரம்பிக்குமாம்.  எத்தனை நாளைக்குத்தான் தாக்கு பிடிக்க முடியும்?  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்,  தன் தனித்தன்மையை (special quality) அடையாளம் கண்டு பாராட்டும் அல்லது பாராட்டுகிற மாதிரி பேசும்    இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்குதாம்.  இந்த  பீலிங்க்ஸ் எல்லாமே  வேண்டாத affair  ஆக மாறுவதில்லை.... ஆனால், ஒரு வீக் மொமென்ட்ல மாறவும் செய்யுமாம்.  இது குடும்ப  தலைவிகளுக்கு மட்டும் அல்ல,  குடும்ப தலைவர்களுக்கும் இதே டென்ஷன் - இதே கண்டிஷன்  - இதே மனநிலை - இதே effect தானாம்.   இந்த சூழ்நிலை, அதிகமாக 32 - 52  வயதுக்குள் இருக்கும் தம்பதியினர் மத்தியில்  காணப்படுகிறதாம்.

 இதையெல்லாம் தவிர்க்க,  கணவனும் மனைவியும் தனியாக - மாதத்தில் ஒரு நாளாவது தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டுமாம்.  அது ஒரு புத்துணர்வையும்  - திருமண வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டையும் கொண்டு வருமாம்...  அப்போதான்,  குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதோ - இல்லை வேறு எந்த குடும்ப பிரச்சனைகளும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்காதாம்.  தாயாக தியாக உள்ளத்தோட செய்யும் காரியங்களை விட,  காதல் உள்ளத்தோடு குடும்பத்தில் வேலைகளை செய்யும் போது, உற்சாகமாய் - அழகாய் - புது பொலிவோடு இருக்குமாம்.

காதல் கொண்ட நெஞ்சங்கள் -  எல்லா தடைகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்க எப்படி முடியுதுன்னு எத்தனை தமிழ் படங்கள்ல பார்த்து இருக்கோம்....  அதான்..... தியாக தீபங்களை விட,  காதல் ஜோதிகள் - கஷ்டங்களை ஈஸியாக கையாண்டு கொள்ளுமாம்.  

  
நாங்க போற கத்தோலிக்க ஆலயத்தில்,  அருகில் உள்ள பல்கலைகழகத்தில் உள்ள  Catholic Students' Association   இல் உள்ள மாணவர்கள் - மாணவிகள் - ரொம்ப ஆக்டிவ் ஆக ஆலய காரியங்களில் பங்கு கொள்வாங்க...  அவர்களில்  சிலர்  உலக திருமண நாள் ஒட்டி வந்த வெள்ளிக் கிழமை மாலை,  தங்களின் Valentine's Day weekend mood எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு,   volunteers ஆக வந்து 6 p.m. to 9 p.m. -  சர்ச் ஹால் இல் வைத்து,  எங்கள் ஆலயத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின்  (Registered Members) குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்கள். அந்த நேரத்தில்,   குழந்தைகள் படமும் - பாப் கார்ன் - ஐஸ் கிரீம் - board games - எல்லாம் உண்டு என்று சொல்லி இருந்தாங்க...  அதற்கு அவர்கள் சார்ஜ் எதுவும் வாங்கவில்லை.

சமூதாயத்துக்கு, அக்கறையோட தங்களால் செய்யக்கூடிய பங்கு என்று சொல்லிட்டாங்க....
அதற்காக free சர்வீஸ் என்று மக்களும், "ஹி, ஹி, ஹி,... தேங்க்ஸ் " என்று மட்டும் சொல்லிட்டு போகவில்லை.
""Thank You" greeting cards - வீட்டில் செய்த cookies  அல்லது சின்ன பரிசு - அந்த மாணவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னது, அருமையாக இருந்துச்சு... கல்லூரி  மாணவர்கள் செய்கிற உதவியை, appreciate பண்ணிய விதம் பிடித்து இருந்துச்சு.


குழந்தைகளை அங்கே விட்டு விட்டு,   தனியாக அந்த நேரத்தில்,  Flame of love புதுப்பித்துக் கொள்ள, அந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளும் படி பரிந்துரைக்கப் பட்டது.    வீட்டு வேலைகளை - ஷாப்பிங் வேலைகளை - அந்த நேரத்தில் செய்யாமல்,  டிவி - சினிமா என்று  இங்கே உட்கார்ந்து கிட்டு, அங்கே பே என்று பார்த்துக் கொண்டு இருக்காமல்,  இருவர் மட்டுமே தங்கள் அன்பை- காதலை -  ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் விதமாக அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று சொன்னாங்க...


Restaurant இல் வைத்து dating மாதிரி  ஒரு ஸ்பெஷல் டின்னெர் - அல்லது
ஒரு ஜாலி கார் டிரைவ் - அல்லது
இயற்கையை ரசித்துக் கொண்டு ஒரு வாக் - அல்லது
மனம் விட்டு பேசி,  ஒருவருக்கொருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்று சில வழிமுறைகளும் காதல்  உறவைப் புதிப்பித்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டன.

அமெரிக்காவில்  திருமண தோல்விகள் நிறைய இருப்பதற்கும்,  விவாகரத்து அதிகம் இருப்பதையும்  சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு - அதற்கு என்னவெல்லாம் செய்து அதை மேற்கொள்ளலாம் என்று முயற்சி எடுக்க ஆரம்பித்து இருக்காங்க.... 

அப்புறம்  ஞாயிற்றுக் கிழமை அன்று  பாதிரியார்,  Sunday Mass time ல எல்லாத் தம்பதியினரையும் எழுந்து கொள்ள சொன்னாங்க...
புதுசா கல்யாணம் ஆன ஜோடியில் இருந்து, கல்யாணம் ஆகியே  அறுபத்து இரண்டு  வருடங்கள் ஆன ஜோடி வரை எழுந்து நின்னாச்சு....
கணவரும் மனைவியும்  வலது கரங்களை பிடித்து கொள்ள சொன்னாங்க.....
இருவரும், ஒருத்தரை ஒருத்தர் கண்களை பார்த்து புன்னகைக்க சொன்னாங்க....
அப்புறம் திருமண நாளில் சொல்லிய உறுதி மொழியை (wedding vows)  புதுப்பித்துக் கொடுத்தார்.
அப்புறம், அப்புறம் என்ன..... இங்கே உள்ள வழக்கப்படி  - இச் ..... இச்... கொடுக்க சொன்னாங்க...
எனக்கு அந்த டைம்ல நிஜமாவே வெட்கம் வந்துடுச்சுப்பா.....ஆமாம்ப்பா...
சர்ச்ல அமர்ந்து இருந்த அத்தனை பேரும் கைதட்டி வாழ்த்து சொன்னாங்க... குழந்தைகளும் சேர்த்து.....
புதுசா கல்யாணம் ஆன பீலிங்க்ஸ் தான்.....

 எல்லா வேலையையும், இனி  ஒரு துள்ளலோட செய்ய சொல்லுது ......


இதெல்லாம்,  அமெரிக்காவுக்குத்தான் தேவை..... தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை என்று சொல்லாதீங்க... Self-Denial இல்லாமல், யோசித்து பார்த்தால் -  இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில்  stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது.  இதுவும் விரைவில் தேவைப்படலாம்....


எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை....  இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ? 


 

Sunday, February 6, 2011

குகைக்குப் போனோமே!

தலைப்பை பார்த்து விட்டு,  ஏதோ இமய மலை குகைக்குப் போயிட்டேன்னு நினைக்காதீங்க.....
நியூ மெக்ஸிகோ மாநிலத்தில், லாஸ் அலமோஸ் (Los Alamos)  என்கிற ஊருக்கு பக்கத்தில்  இருக்கிற  Bandelier National Monument ஆக இருக்கிற மலைகுகைப் பத்தி தான் சொன்னேன்பா....


இது முனிவர்கள் இருந்த குகை இல்லைங்க..... அமெரிக்காவின் natives ஆன செவ்விந்தியர்களில் ஒரு பிரிவினர்,  பல வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த  குகைகள்.    அமெரிக்காவில் அவர்களை செவ்விந்தியர்கள்  - Red Indians - என்று தற்பொழுது அழைப்பதில்லை.  native அமெரிக்கர்கள் (Native Americans)  என்றே சொல்றாங்க.....

ஒரு டவுட்டு:  native என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?  தெரிஞ்சா சொல்லுங்க மக்கா....  native place என்பதை சொந்த ஊருனு சொல்லுவோம்.... native அமெரிக்கர்கள் என்று இருப்பதை, எப்படி தமிழில் சொல்ல?  ம்ம்ம்ம்......

 Ancestral Pueblo Indians, New Mexico:




  இந்த குகை வீடுகளில்,  பல அறைகள் இருந்தது, சிறப்பம்சம் தானே! 


  இரவில் மிருகங்கள் கிட்ட இருந்து தங்களை பாது காத்துக் கொள்வதற்கும்,    எதிரிகள் மூலமாக தங்களது பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து எதுவும் வந்து விடாமல் இருப்பதற்கும், இந்த வீடுகள் பயன் பட்டு இருக்கின்றன.

குகையில் இருந்து வெளியே உள்ள view : 

 தொலைவில் இருந்து பார்க்கும் போது, இது பெரிய மலைகள் போலவே இருப்பதால், அங்கு இவர்கள் குடி இருந்தார்கள் என்று யாருக்கும் எளிதாக கண்டு பிடிக்க முடியாமல் இருந்து இருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்த நேரங்கள் மட்டுமே, கீழே இறங்கி வந்து  ஒரே கூட்டமாக சேர்ந்து,  ஒன்றாக கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.


இப்பொழுது,  சுற்றுலா பயணிகள் ஏறி பார்ப்பதற்கு என சில குகை வீடுகளுக்கு மட்டும் ஏணி வைத்து இருக்கிறார்கள்.  அதில் ஏறிப் போய் குகைக்குள்ள  பார்த்த போது ..... பாபாவோ பாஷாவோ தெரியல..... ஆனால்,  குகை மனிதர்கள் வரைந்து வைத்து இருந்த சில drawings  தெரிந்தன.....  கவனிக்க:  paintings என்று நான் சொல்லவில்லை.... அப்புறம், எல்லோரா - அஜந்தா - ரேஞ்சுக்கு நீங்க கற்பனை பண்ணிடாதீங்க....  அந்த காலத்துல,  குகைகளின் உள்பக்க சுவர்கள் தான்,  அவர்களுக்கு  ப்லாக் ஸ்பாட் போல..... ஒரு கூர்மையான ஆயுதம் வைத்து, என்ன என்னவோ வரைந்து வைத்து இருந்தாங்க.... பாதி புரிந்தன. பாதி புரியல....   ஹா,ஹா,ஹா,ஹா.....

குகை வாழ் மனிதர்கள் இருந்த இடத்தில்,  நான் நிற்கிறேன் என்கிற பீலிங்க்ஸ் வந்துச்சு பாருங்க...... அட....அட..... அது சொன்னா புரியாது..... காதல் வந்த நெஞ்சம் மாதிரி, அப்படியே உணர்ந்து பார்க்கணும்.... ஹி, ஹி, ஹி, ஹி, ஹி....  இதுக்குத்தான் திருமண நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டூர் அடிக்கக் கூடாது..... இப்படித்தான் எழுத வருது....


 சரி, இப்போ  எங்கே விட்டேன்? ..... ஆங்..... ஏணியை விட்டேன்.... ச்சே.... ஏணி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்....  அந்த காலத்துல,   ஆபத்து நேரங்களில், இந்த ஏணிகளை, குகைக்குள் ஏறி விட்டு உள்ளே இழுத்து வைத்து கொள்வார்கள்.  ஏணிகளை பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் தான் பயன் படுத்தி இருக்கின்றனர். கூட்டத்தில் உள்ள இளைஞர்கள்,  ஏணி இல்லாமலே  மலையில் தங்கள் குகைகளுக்கு,  குரங்கு மாதிரி  ஏறி விடும் வகை தெரிந்து இருந்தார்களாம்.  பயமில்லாமல், மளமளனு அவங்க எப்படி ஏறி இருப்பாங்கனு நினைத்து பார்த்த போது அதிசயமா இருந்துச்சு...  அப்படி ஏறி பார்க்க ட்ரை பண்ணினியானு கேப்பீங்க?  இஃகி ..... இஃகி .... பதில் சொல்ல மாட்டேனே.....


இன்னும், சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,   கீழே இருந்து பார்க்கும் போது குகை மாதிரி பல ஓட்டைகள் மலையில் தெரியும்.  ஆனால், எது குகையின் வாசல், எது குகையின் சன்னல், எது எதிரிகளை ஏமாற்ற குகை போல அமைக்கப்பட்ட ஓட்டைகள் என்று கண்டுப்பிடிக்க முடியாது.  தவறான வழியில் ஏறி விட்டால்,  பாம்புகள் வாழும் பொந்துக்குள்  கை விட்டு விட்டு,  ஒரேயடியாக  போய் விட வேண்டியதுதான்.   இல்லை,  சரியான பிடிமானம் இல்லாமல், கீழே விழுந்து, அப்புறம் - லிப்ட் இல்லாமலே மேலோகம் போக வேண்டியதுதான்.
Rattle snake: 
 சிலந்தி பூச்சியின் சைஸ் பார்த்தீங்களா?  இது கடிச்சுதுனா ..... யம்மாடி!

வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நாம் சொல்கிற  மாதிரி, அவங்க சொல்லும் போது - மலைக்கு மலை நோ வாசப்படி என்று சொல்லி இருப்பாங்களோ?  


மேற்கொண்டு விவரங்கள் தெரிந்து, உங்கள்  பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள:  

http://en.wikipedia.org/wiki/Bandelier_National_Monument


இப்படி பல சுவாரசியமான இடங்கள், நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உண்டு....  எல்லாத்தையும் சொல்லி,  உங்களை "கடிச்சு "  வைக்க விரும்பல.... ஆனால்,  அதில் வெகு முக்கியமாக இன்னும் ஒரே  ஒரு இடத்தை மட்டும் விரைவில் சொல்லிவிட்டு நியூ மெக்ஸிகோ தல சுற்றுலா புராண கதையை முடிச்சிக்கிறேன்....  ஓகேவா? 

பின் குறிப்பு:  நான் எடுத்த படங்கள்.... பர்சனல் ..... அதான், கூகிள் ஆல்பத்துல கைவச்சுட்டேன்.