(Thanks to "Tasty Appetite Jay" for this Rava Kesari photo through Google Images)
அன்னைக்கு ரவா கேசரி, நிறைய நெய் ஊற்றி கிண்டி கொண்டு இருந்தேன். நெருங்கிய உறவினர் இந்தியாவில் இருந்து அழைத்து இருந்தார்.
"என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சித்ரா?"
"ரவா கேசரி கிண்டிக்கிட்டு இருக்கேன்."
"அப்படியா.... எனக்கு கேசரி ரொம்ப பிடிக்கும். முன்பு அடிக்கடி சாப்பிடுவேன். உங்க பக்குவம் சொல்லுங்க."
" ரவா கேசரியில் என்ன பக்குவம் வேண்டி கிடக்கு. கொஞ்சம் ரவா......"
" ரவையில் , ராகி - பார்லி மாதிரி அதிகம் சத்து கிடையாது தெரியுமா? ரவை நிறைய சேர்த்துப்பீங்களோ? சரி, அப்புறம் சொல்லுங்க...."
"நெய்......"
"நான் (diet ) டயட் ல இருக்கேன். இப்போல்லாம் நெய் சேர்த்துக்கிறது இல்லை. அதுல எவ்வளவு கொழுப்பு இருக்கிறது தெரியுமா? அப்புறம்...."
"சீனி ....."
"சீனியா? அதில் வெறும் எம்ப்டி கலோரீஸ் (empty calories) தான் இருக்குது. நான் sweetener தான் தேவைப்பட்டால் கொஞ்சம் உபயோகிப்பேன். சீனி சேர்த்துக்க மாட்டேன்."
" அப்படியா? அப்போ ஒண்ணு பண்ணுங்க.... டயட் (diet) ல இருக்கிறவங்களுக்கு ஏத்த மாதிரி ரவா கேசரி செய்ய பக்குவம் சொல்றேன். ரவைக்கு பதிலாக, சத்து அதிகம் உள்ள ராகி கொஞ்சம் எடுத்துக்கோங்க. நெய் வேண்டாம். அதுக்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட மோர் எடுத்துக்கோங்க. சீனி வேண்டாம். ஒரு பின்ச் உப்பு போட்டு நல்லா கலக்குங்க....."
"சித்ரா, என்ன இது? ரவா கேசரி பக்குவம்னு பார்த்தால், இது ஏதோ ராகி/கேப்பை கூழ் மாதிரி சொல்றீங்க..."
"புரிஞ்சிடுச்சா?.... நல்லது. "
ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. அவங்க இருக்கட்டும். வேண்டாங்கல. அதற்காக, ஒழுங்கா - நல்லா சாப்பிடுறவங்க எல்லாம் ஏதோ வாழ்க்கையில் தப்பு பண்றவங்க மாதிரி ஒரு பில்ட் அப் கொடுக்கிறாங்க பாருங்க...... அந்த கொசுக்கடி தொல்லை, தாங்க முடியல.
நானும் முன்னொரு காலத்துல அந்த தப்பு செய்ஞ்சு இருக்கேன். அதாங்க, இந்த டயட்ல இருக்கிறது.
டயட்ல இருக்கிறதுனா என்னன்னு கேட்கிற பாவப்பட்ட ஜீவராசிகளுக்காக ஒரு சின்ன குறிப்பு:
வேற ஒண்ணும் இல்லை. வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் இருக்குதோ, அதெல்லாம் கொழுப்பு சத்துக்கு ஒட்டி பிறந்த தம்பின்னு நினைச்சு சாப்பிடாம ஒதுக்கி வச்சுடணும். ஆடு கோழியை தம்மு கட்டி அதுவரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருந்ததை விட்டுட்டு, பரிகாரமாக - ஆடு கோழிங்க சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே நீங்க மேயணும். சாரி, சாப்பிடணும். அப்படி "கொத்தி கொத்தி" சாப்பிடும் போது, எப்படியும் வயிறு முட்ட சாப்பிட தோணாது. கால் வயித்துக்கு நிரப்புறதுக்குள்ளேயே, போதும் போதும்னு ஆயிடும். கண்டிப்பா, எப்படியும் வெயிட் குறைஞ்சுடும்.
அப்புறம், நாம ஒதுக்கி வச்சு - அழகு பார்த்து - பெருமூச்சு விடுற ஐட்டத்தை எல்லாம் மத்தவங்க சாப்பிடும் போது, உள்ளுக்குள்ள வயித்தெரிச்சல் பட்டுக்கிட்டு - காது வழியா வருகிற பொறாமை புகையை மறைக்க - அவங்க சாப்பிடுறது எல்லாம், "மண்டையோடு பிளஸ் X மாதிரி எலும்பு துண்டுகள்" இருக்கிற label வச்சு வருகிற விஷ பாட்டில்ல வந்து இறங்கின சரக்குகள் மாதிரி "உவ்வே" காட்டி ஒரு நீள lecture (லெக்சர்) அடிக்கணும்.
டயட் என்றால் அம்புட்டுதேன், மக்காஸ்! அப்படி நான் இருந்தப்போ, நான் எதிர்பார்த்த அளவுக்கு அங்கே வெயிட் குறையல..... வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்து, டயட்ல இருந்து பார்த்தாலும் வெயிட் குறையல. ஒரு நாள் வெறுத்து போய், வந்து எங்க அப்பா முன்னால வந்து உட்கார்ந்தேன்.
"என்ன ஆச்சு, சித்ராம்மா?"
"நானும், ஒரு வாரமா இலை தழைனு மாடு மாதிரி சாப்பிடாத குறையா டயட்ல இருக்கேன். இன்னும் கழனி பானையை மட்டும் தான் தேடி போகல. வெயிட் குறைவேனாங்குது."
" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?"
(எங்க வீட்டிலே எல்லோரும் கொஞ்சம் chubby சைடு தான்..... ஹி, ஹி, ஹி....)
" இருந்தாலும் அப்பா, நான் ட்ரை பண்ணுவேன்."
"ஏலே, ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."
"போங்கப்பா ...... நானே வீட்டுல fry பண்ணிக்கிட்டு இருக்கிற கோழி வாசனையை மோப்பம் மட்டும் பிடிச்சிக்கிட்டு, கடுப்புல இருக்கேன்....."
அன்னைக்கு எங்க அப்பா சொன்னது எனக்கு புரியல. ஒரு வேலை விஷயமாக, சமீபத்தில் மெடிக்கல் செக் அப் செய்ய வேண்டியது வந்தது. அதில் cholesterol டெஸ்ட்ம் எடுத்தார்கள். எல்லாத்தையும் இப்போ பிரிச்சு கட்டி ஒரு வெட்டு வெட்டுற எனக்கு, நார்மல் என்று ரிசல்ட் வந்து விட்டது. (சரி...சரி..... கொழுப்பு, வெட்டி பேச்சில் மட்டும் தான் போல.... ) ஆனால், என்னுடைய தோழிக்கு அந்த கொடுப்பினை இல்லை.
cholesterol அதிகம் இருந்த அவளிடம், டாக்டர்: " நீங்க ஏற்கனவே வெயிட் குறைவுதான். ஆனாலும், உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாறுதல் வேண்டும் என்று நினைக்கிறேன். ரெட் மீட் (red meat) சாப்பிடுவதை விட்டுடுங்க."
"டாக்டர், நான் முட்டை கூட சாப்பிடாத வெஜிடரியன். "
"உடற்பயிற்சி செய்வீங்களா?"
"தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போவேன்."
"பழங்கள் காய் கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்."
"salad - பழங்கள் தான் பொதுவாக இரவு நேர உணவாக சாப்பிடுவேன்."
"lunch?"
"சாதம், பருப்பு, காய் என்று......"
"ஹாங்...... உங்களுக்கு வெள்ளை சாதம் ஆகாது என்று நினைக்கிறேன். இனி, பார்லி, சோயா, ராகி, ஓட்ஸ் என்று சாப்பிடுங்க. உங்களுக்கு cholesterol problem - hereditary (பரம்பரை) என்று நினைக்கிறேன். அதான், நீங்க எவ்வளவு கவனமாக டயட் இருந்தாலும் உங்களுக்கு cholesterol அளவு அதிகம் வந்து விட்டது."
"ஞே.......!!!!"
வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை. ஆரோக்கியத்துக்காக டயட் இருக்க வேண்டியதுதான். வேற வழி இல்லை. அழகுக்காக?????? ம்ம்ம்ம்..........!!! "Fair and lovely" மாதிரி "ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா? கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான். ஹி, ஹி, ஹி, .....
படங்கள் : நன்றி கூகுள் லேடி.