Sunday, July 31, 2011

நன்றி! மீண்டு வருகிறேன்.


அனைவருக்கும் வணக்கம்.

இந்தியா போனது ஒரு மாதம் என்றால், jetlag மற்றும் ஊரு நினைப்பில் இருந்து மீண்டு வந்து சகஜ நிலைக்கு வரவும், ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு bonding ...... பாசப் பிணைப்பு....


ப்லாக்
பக்கம் வரலாம் என்றால்..... இங்கே பதிவுலகில் ஏகப்பட்ட மாறுதல்கள், குளறுபடிகள் வந்து வந்து வந்து வந்து வந்து போய் கொண்டு இருப்பதாக பதிவுலக நண்பர்கள் சிலரிடம் இருந்து அன்பான "ரிப்போர்ட்". இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வரலாம் என்றால், மேலும் சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான "கட்டளைகள்" ......."உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....

அப்படி இப்படினு காலைத் தேச்சு ஒரு வழியாக மீண்டு வந்து - மீண்டும் எழுதியே தீருவது என்று முடிவு பண்ணிட்டேன். இது எச்சரிக்கை இல்லை, அறிக்கை. (நானும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்து இருக்கேன்ல......)

தமிழ் நாட்டில் இருந்த முப்பது நாட்களில், 26 நாட்கள் ஊர் சுத்தலிலே போய் விட்டன. சந்தித்த பல அற்புதமான மனிதர்கள் - அற்பமான மனிதர்கள்; அடித்த சேட்டைகள் - எடுத்த சாட்டைகள் - பற்றியெல்லாம் எழுதாமல் எப்படி இருப்பது?

இந்த பதிவில், ஊரில் நடந்த வெட்டி பேச்சுக்களில் இருந்து ஐந்து துளிகள்:



கடையில் பரிச்சயமான ஒரு நபர்: "இப்போ எங்கே இருக்கீங்க?"
வெட்டி பேச்சின் பதில் : "அமெரிக்காவில தான்."
அவர்: " அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே....."
வெட்டி பேச்சு : "ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க...."
அவர்: "மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். "
வெட்டி பேச்சின் பதில் அல்ல, ரியாக்ஷன்: "ஞே!!!!!"



நெடு நாள் கழித்து சந்தித்த உறவினர் ஒருவர்: "சித்ரா, இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கியா?"
வெட்டி பேச்சின் பதில்: "இங்கே இருக்கிற சென்னையில் இருந்து கிட்டு, அமெரிக்காவில் இருக்கிறதாக எல்லோர்கிட்டேயும் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்."



டிவி பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உறவுக்கார பெண் : "ஹமாம் சோப்பு போட்டு குளிச்சா, 'என் வீட்டில், பத்து ஸ்கின் ப்ரோப்லேம் - நோ டென்ஷன்'ங்கறா. அப்போ, என் வீட்டு மாமியார் தருகிற 'பத்து ப்ரோப்லேம் - நோ டென்ஷன்' ஆக எதை போட்டு குளிக்கிறதுனுதான் தெரியல."
வெட்டி பேச்சின் பதில்: "எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."



நெல்லையில்
எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."



நெருங்கின உறவினர் ஒருவர்: "வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்?"
வெட்டி பேச்சின் பதில்: "திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்."
உறவினர்: " நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன? Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே."
வெட்டி பேச்சின் பதில்: "மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். "
உறவினர்: "பிளாக்கர்னா என்ன செய்றீங்க? "
வெட்டி பேச்சின் பதில்: "இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்."
உறவினர்: "அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா?"
வெட்டி பேச்சின் பதில்: "ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
உறவினர்: "ஞே!!!!"


பதிவர்
என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....
அட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்?