Wednesday, July 28, 2010

பேட்டி வாங்கலியா பேட்டி.....!!!



"எல்லா புகழும் இறைவனுக்கே!"


வலைப்பதிவில், இப்பொழுது ஒரு சுற்று வந்து கொண்டு இருக்கும்,  "பதிவுலகில் நான் - பேட்டி" fever - அங்கே சுத்தி - இங்கே சுத்தி, "அமைதிசாரல்" வழியாக எனக்கும் வந்துருச்சு.... 


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


சித்ரா .......   அன்புடன்  சித்ரா -  பண்புடன் சித்ரா  -  பிரியமுடன் சித்ரா  - பாசத்துடன் சித்ரா -  நேசத்துடன் சித்ரா  - சிரிப்புடன் சித்ரா  - வியப்புடன் சித்ரா - அடக்கத்துடன் சித்ரா - அலட்சியத்துடன் சித்ரா - வீரத்துடன் சித்ரா - தெம்புடன் சித்ரா  -  வம்புடன் சித்ரா - கம்புடன் சித்ரா  - வெறுப்புடன் சித்ரா - கசப்புடன்  சித்ரா -  கோபத்துடன் சித்ரா  -  எரிச்சலுடன் சித்ரா  -  கண்ணீருடன் சித்ரா -  ஏக்கத்துடன் சித்ரா  - நக்கலுடன் சித்ரா - ஆப்புடன் சித்ரா - கொழுப்புடன் சித்ரா  ........ இப்படி ஏதாவது அடைமொழியோடு வரலாமா என்று கூட யோசித்தேன்.  அப்புறம்,  ஒன்றுடன் மட்டும் வேண்டாம் - இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று இருக்கலாமே என்று ......... அப்படியே  வலைப்பதிவில்  "தோன்றி" விட்டேன். 



2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அதுதான் உண்மையான பெயர் என்று சொன்னால்? இல்லை, அது பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, உண்மையான பெயர் வச்சுக்கிட்டு பொய்யான பெயர் என்று சொன்னால்? இல்லை, பொய்யான பெயர் வச்சுக்கிட்டு, அதான் உண்மையான பெயர் என்று சொன்னால்?  அப்போ என்ன செய்வீங்க????.... அப்போ என்ன செய்வீங்க.....????

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
தடாலடியாக ஏதாவது செய்யலாம் என்ற அதிரடி நடவடிக்கை.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்னது? என் வலைப்பதிவு பிரபலமா?  கூகுள் நியூஸ்ல வந்த போது, நான் லீவ்ல போயிட்டேன் போல.... மிஸ் பண்ணிட்டேனே!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எல்லாமே என் சொந்த சரக்கா? இல்லை மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா   என்று நேரிடையாகவே கேட்டு இருக்கலாமே.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இந்த பேட்டிக்கு கூட கேள்விகளுடன் நீங்கள் அனுப்பிய $1000 செக், இன்றுதான் பேங்க்ல டெபாசிட் ஆகிவிட்டதாக செய்தி வந்தது.... அதான் உடனே, பதில் சொல்றேன். 


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
வலைப்பதிவுக்கும் audit ரிப்போர்ட் , income tax ரிப்போர்ட் உண்டு என்பதை, உங்கள் கேள்விகள் மூலம் தெரிந்து கொண்டேன். 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அந்த பீலிங்க்ஸ் எல்லாம்,  தமன்னாவும் அனுஷ்காவும் தூய தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு காட்டிக்கலாம் என்று காத்துக்கிட்டு இருக்கேன்....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பில் கேட்ஸ்....அவர்தான் முதலில் பாராட்டணும்னு நினைத்தாராம், அதற்குள் ஒபாமா முந்திக்கொண்டு பாராட்டி விட்டார்.  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி,  கொஞ்சம் லேட் ஆக வந்தாலும், லேட்டஸ்ட் ஆக வந்து பாராட்டி விட்டு போனதை மறக்க முடியாது. 


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
முந்தைய கேள்விகளுக்கு உள்ள பதில்களை படித்து விட்டு,  நீங்கள் என்னை பற்றி என்னவெல்லாம் சொல்லி திட்டுகிறீர்களோ - அத்தனையும் நான் இல்லை.... நான் இல்லை.... நான் இல்லை...... என்று சொல்கிறேன்...  நம்புங்க.... சார், நம்புங்க.... மக்கா, நம்புங்க..... மேடம், நம்புங்க..... மச்சி, நம்புங்க...... தோழா, நம்புங்க..... தோழி, நம்புங்க..... 
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... 

 பி.கு:  
பதிவுலக நண்பர்கள் -   "warrior " தேவா, விஜய் மற்றும் சௌந்தர் இணைந்து நடத்தும்,  பதிவர்களுக்கான புதுமையான  பல்சுவை கொண்ட  வலைப்பதிவு: "கழுகு"  .  அதில், சென்ற வாரம் , என்னையும் ஒரு பதிவராக மதித்து ஒரு பேட்டி எடுத்து போட்டு இருந்தார்கள்.

http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_26.html

அந்த மொக்கை பதில்களையும் வாசித்து விட்டு, மொத்தமாக என்னை "திட்டிக்" கொள்ளவும்.  அந்த பேட்டி வாங்கினால், இந்த பேட்டி இலவசம்.   நன்றிகள் பல. 

ஆமாம், பேட்டி மேல பேட்டி - என்ன விசேஷம்ங்கறீங்களா?  Tasty Appetite, Jay  - என்னையும் "The Versatile Blogger"
அப்படின்னு சொல்லிட்டாங்கப்பா.....!!  ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... 

 

Monday, July 26, 2010

மாத்தி யோசிங்க.....

"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

 என்ன ஆச்சு? திடீர்னு இப்படி ஒரு "வெட்டி பேச்சு"  அப்படின்னு நீங்க யோசித்தீங்கனு வைங்க..... அப்போ, உலகம் சுற்றும் திசை மாறி போச்சுன்னு நினைக்கிறேன்.... அப்படி நினக்கலைனா, "வெட்டி பேச்சு" ப்லாக்ல, இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக்குவீங்க....

http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html 
படித்தீர்கள் என்றால், நம்ம மாதவன் சார் என்னை ஒரு  பதிவுக்கு அழைத்து இருப்பது தெரிந்து இருக்கும்.   அட, பதிவுலக நண்பர், மாதவன் சார்தாங்க..... "அலை பாயுதே";  "3 Idiots" மாதவன் சார் பதிவு எழுத அழைத்திருந்தால், உலகம் சுற்றும் திசை மாறி போச்சுனு அர்த்தம். 

சரி, உலகம் எதிர் திசையில் சுற்றும் போது என்ன நிகழ்வுகள் நடக்கும்?

சு(வ)ணக்கம்.  வால்(தலை)ப்பு  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா":

தமிழ்நாடு:  

*  நமீதா அவர்கள்,  ல, ள, ழ சொல்ல பழகிவிட்டு சென்னை தொலைக்காட்சி நிறுவனத்தில், தமிழில் செய்திகள் வாசித்து கொண்டு இருக்கிறார். 



*  திருமதி குஷ்பூ அவர்கள், அன்னை தெரசா ஆசிரமத்தில் சேர்ந்து விட்டு, சமூக சேவை செய்து கொண்டு இருக்கிறார்.

*  திரு. சிம்பு அவர்கள், தன் விரல் வித்தை உதவியால்,  கேட்கும் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பேசி உதவி செய்து கொண்டு இருக்கிறார்.

*  மே  மாதத்தில்,  சென்னையில், இரண்டு அடி அளவு பெய்த பனியால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* முன்னொரு காலத்தில் கூவம் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படும் நமது "தமிழ்நாட்டு குமரகம்", சிறந்த சுற்றுலா (resort) பகுதி என்று பரிசு பெற்று இருக்கிறது.



*  அரசியலில் இளைஞர்களுக்கும், குடும்ப அரசியல் இல்லாத  புதிய திட்ட வழிமுறைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தனது 65 ஆம் வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர், திரு. கருணாநிதி "கடிதம்" எழுதி உள்ளார்.  அதை,  LIC  இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் மகன், ஸ்டாலின் ஆமோதித்து உள்ளார்.

*  Adayar Cancer Institute க்கு , தன் சொத்து பூராவும் எழுதி விட்டு,   தனது காசி பயணத்தை தொடரப் போவதாக,  செல்வி.ஜெயலலிதா "அறிக்கை" விட்டுள்ளார். 

இந்தியா: 

* போபால் விஷ வாய்வு வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுந்தண்டனை வழங்கியது குறித்து, "நீதி, நேர்மை, நியாயம், தர்மம்"  - இந்தியாவின் நீதி மன்றங்களின்  சிறப்பு அம்சங்கள்  என்று மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி, நீதிபகளுக்கு பாராட்டு விழா எடுக்க உள்ளனர்.  

*  இந்திய தெருக்களைப் போல சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள சிங்கப்பூர் குழு ஒன்று,  நாளை மும்பை வருகிறது.

*   இந்திய ரயில்வேஸ் தொழில்நுட்பம், ஜப்பான் மக்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு ஆலோசனை குழு, இன்று மாலை ஜப்பான் செல்கிறது. 


* இந்தியாவில் குறைந்து வரும் ஜனத்தொகையை எப்படியும் அதிகப்படுத்தி, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள்,  50 கோடியை தொட்டு விடுவோம் என்று தேசிய குடும்ப நல அமைச்சர் கூறி உள்ளார். 

உலக செய்திகள்:  

* "Macro-soft , எந்த கம்ப்யூட்டர் வைரஸ் ப்ரோக்ராம் கொண்டும் ஊடுருவ முடியாதது," என்று "அமெரிக்க அம்பானி" என்றழைக்கப்படும் பில் கேட்ஸ் தெரிவித்தார். 


*   "என்னதான் முயன்றாலும் "quitters" எங்களுக்கு ஈடாகாது  என்று "footbook" கூறி உள்ளது. 


விளையாட்டு செய்திகள்: 

* உலக கால் பந்தாட்ட போட்டியில் இந்தியா, Spain நாட்டை வென்று பரிசு கோப்பையை தட்டி சென்றது.


* கால்பந்தாட்டத்துக்கே எல்லா sponsorship பணமும்,  மக்களின் வரவேற்பும்  சென்று விடுவதால் தான், தங்களை போன்ற  திறமையான விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக, கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு விளையாடும் சச்சின் மற்றும் தோனி வருத்தம் தெரிவித்து உள்ளார்கள். "சேப்பாக்கம் கால்பந்தாட்ட மைதானம்" பிரபலம் ஆகி இருப்பது போல, கிரிக்கெட்க்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்கள். 


*  கில்லி விளையாட்டு,  ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரை  செய்திகள்: 

*  "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக  நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது.  சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது.  "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது.  



*  செம்மொழி தமிழை வளர்க்கும் சன் தொலைகாட்சி நிறுவனம்,  தங்களது கல்வெட்டு ஆராய்ச்சியில் மூலம் தெரிந்து கொண்ட,  சங்ககால கலைநிகழ்ச்சிகளுக்கே  இனி முதலிடம் கொடுப்போம் என்று அறிவித்து உள்ளது.  

* "தொலைக்காட்சி நாடகங்கள் யாவும், அறிவுபூர்வமாகவும் உயர்ந்த நகைச்சுவை தொனியிடனே இருப்பதால், மாறுதல்கள் வர வேண்டும்"  என்று "மினி சீரியல்" நாயகி, தமன்னா கூறினார். 

பதிவுலகம்:  

*   "எங்கள் ப்லாக்" , இனி "எதிர் வீட்டு ஜன்னல்" ப்லாக் என்று அழைக்கப்படும். 

*   "திருக்குறள், என் பார்வையில்" என்ற இலக்கிய புத்தகம் எழுதிய பதிவர்,  தமிழ் காவலர்  "பார்த்ததும் படித்ததும்" ஜெட்லி, தன் அடுத்த தமிழ் இலக்கிய சேவைக்காக, "சங்க கால மனிதர்களும் அவர்களின் "நொறுக்குகளும்" " என்ற  புத்தகம் எழுதப் போவதாக தெரிவித்தார்.


"எந்திரன்" பட பாடல் வெளியீட்டு விழாவுக்காகச் செல்லும்  சித்ராஷ்கானா  வை, பேட்டி எடுக்க விரும்புவதாக "நிறைய வெட்டி பேச்சு" பதிவர், ஐஸ்வர்யா ராய் கூறி உள்ளார். 
  
நன்றி. மீண்டும் வறுபட வருக!  இப்படிக்கு என்றும் "தம்பட்டம் தாயம்மா" 
 
பி.கு.:
படங்கள் அனைத்தையும்  blogspots மற்றும் பிற websites இல் இருந்து எனக்காக "திருடி" ......சாரி, "தேடி"  கொடுத்த Mr.Google Robin Hood க்கு நன்றிகள் பல. 
 

 

Thursday, July 22, 2010

நைட்டியும் லுங்கியும் பட்டையை கிளப்புது.

 ஹலோ, எல்லோரும் நலமா? இதோ, என்னை முழுவதும் நீங்கள் மறக்க முயற்சிக்கும் முன், ஆஜர் ஆயிட்டேன்...... ஹையா, அவ்வளவு சீக்கிரம் விட்டுருவோமா?

சின்ன அம்மிணி, என்னை வைத்து காமெடி பண்ணுவதற்காக ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள்.

http://chinnaammini.blogspot.com/2010/07/blog-post.html

தொடர் பதிவு டாபிக் விவரம்:  

 சித்ரா - காமெடில கலக்கற வெட்டிப்பேச்சு சித்ரா. உங்க டாபிக் - நைட்டி போட்டுட்டு கடைக்கு போற பொண்ணுங்களையும், லுங்கி கட்டிட்டு வெளில சுத்தற பசங்களையும் பத்தி ஏதாவது உங்க ஸ்டைல்ல எழுதுங்க. 

குடும்ப தலைவிகளாய் உணர்ந்து, கடைக்கு போகிற பெண்களையும் - குடும்ப தலைவர்களாய் உணர்ந்து  வெளியில் சுத்துற பசங்களை பத்தியும் - ஒரு உணர்ச்சி பெருக்கத்தில்,  உணர்ச்சி வசப்பட்டு, ஒரு குடும்ப பதிவராய் நான் உணர்ந்து -  எழுதி கொள்வது:  
 

காமெடில, நான் காபி தூள் போட்டு தான் கலக்கணும்....  இந்த டாபிக்ல என்னன்னு சொல்றது?  
இரவு தூங்கும் நேரம் தவிர, பைஜாமா போட்டுக்கிட்டு சுத்துவதை,  தெய்வ குத்தம் போல நினைக்கும் அமெரிக்காவில் உட்கார்ந்துகிட்டு,  இதை பத்தி எழுதப்போறேனே ............. ம்ம்ம்ம்......

ஏன் நிறைய தமிழ்  பொண்ணுங்க நைட்டியிலேயே தமிழ் நாட்டில சுத்துறாங்க? 
"மங்கை"  நைட்டி மாதிரி ஒரு நைட்டி எடுத்து போட்டாங்க என்று வைங்க - அப்படியே,  அவங்க "உடலில் ஒரு அங்கமாய் ஆகிவிடுகிறது."   - கர்ணனின்  கவச குண்டலம் மாதிரி. அப்புறம் கழட்ட  வந்தால் தானே?  பாருங்க, அப்படிதான் இந்த விளம்பரமே சொல்கிறது.



ஒரு குடும்ப தலைவியாய், ஒரு பெண்ணை உணர வைப்பதற்கே நைட்டி தேவைப்படும் காலம் இது ......
இனி, திருமண வைபவங்களில் கூட  மணப்பெண்ணுக்கு பட்டு நைட்டிதான் போல.  அப்புறம்,  கல்யாணத்துக்கு வரவங்க,  "என்னடா கல்யாண பொண்ணு,  குடும்ப பாங்கா இருக்காது போல" என்று முடிவு கட்டி விடக்கூடாது பாருங்க.....
பட்டு புடவை கட்டும் போது,  என்ன மாதிரி உணர வேண்டும் என்று தெரிந்து கொள்ள  அடுத்த விளம்பரத்துக்கு காத்திருக்கிறேன்.


தேவயானி மேடம் நடித்து உள்ள, "பொம்மீஸ்" நைட்டி விளம்பரம் பார்த்தேன்.  அதில், "எங்கும் எங்கெங்கும்" என்று சொல்றாங்களே.... அப்படினா என்ன?
எங்கும் - Everywhere 
எங்கெங்கும் - ??????  
தமிழ் மணம் கமழும் ஆடை அதுவல்லவா?
 அதை எப்பொழுதும் - எங்கும் எங்கெங்கும் அணிவது முறையல்லவா?
விமான பணிப்பெண்கள் முதல் டிவியில் செய்திகள் வாசிக்கும் பெண்மணி வரை - நைட்டி - நைட்டியில்தான் வேலைக்கு வரும் நாள் எப்பொழுது?

Going back to விளம்பரம், என்ன தான் சொல்லுங்க: பல சமயங்களில், நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் பட்டையை கிளப்புது.  இந்த விளம்பரத்தை பாருங்க..... !
 



குடும்ப தலைவரா பொறுப்புடன் உணரத்துடிக்கும் ஆண்கள் பீலிங்க்ஸ் புரியுது.  உங்களுக்கு வேஷ்டி - pant தராத உணர்வை - Co-optex வழங்கும் குறுஞ்சிபாடி லுங்கிகள் தருவதாக செய்தி  வந்து கொண்டு இருக்கிறது.

http://www.fibre2fashion.com/news/association-news/cooptex/newsdetails.aspx?news_id=59985

படித்து பாருங்க - விஷயம் தெரியும்.  UK ல் famous ஆகி, demand கூடிக்கிட்டு இருக்காம் (கோ-ஒப்டேக்ஸ் ஆயிரம் லுங்கிகளை ஏற்றுமதி பண்ணி இருந்தால் செய்தி.  லட்சம் லுங்கிகளை ஏற்றுமதி செய்து இருந்தால், fashion நியூஸ்.. .....
UK குடும்பத்தலைவர்கள் சிலர்:  அவர்கள்  முகத்தில் எத்தனை பெருமிதமான குடும்ப தலைவர் பீலிங்...... அடேங்கப்பா!


எதிலும் சுதந்திரம் என்று சொல்லும் அமெரிக்காவில்,  உடை அணிந்து கொள்வதெற்கென்று ஒரு எழுதப்படாத வரைமுறை உண்டு.  முதல் பிரிவாக - summer clothes - fall (autumn) clothes and winter clothes.  இதில் உடையின் நிறங்களை கூட - கோடை கால நிறங்கள்,  இலை உதிர் கால நிறங்கள் மற்றும் குளிர் கால நிறங்கள் என்று பிரித்து வைத்து விடுகிறார்கள்.    Sleepwear,  Lounge-wear, Home clothes, Casual wear, Semi-casual wear, Evening wear, Formal wear, Swimwear,  Beach wear, Sports-wear, Work-out/Yoga wear,  wedding gowns, Prom wear, party wear  - என்று ஒவ்வொரு occasion க்கு ஏற்ற மாதிரி உடை உடுத்தி கொள்ள வேண்டும்.  இப்படி இல்லாதவர்களை,  rebel - gothic பிரிவினரோடு சேர்த்து கொள்ள வேண்டும்.   அவ்வவ்வ்வ்வ் .......


பெரும்பாலான உணவகங்களில் கூட -  shirts and shoes required - என்று அறிவிப்பு பலகை எழுதி வைத்து  இருப்பார்கள். 
  
என் நண்பர் ஒருவர் (தமிழர்) ,  சென்னையில் நடந்த தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்களை, எனக்கும் ஒரு அமெரிக்க தோழிக்கும் காட்டினார்கள்.  நான் சகஜமாக பார்த்து கொண்டு இருந்த போது, அந்த தோழியோ, "தமிழ் பெண்கள் எத்தனை அழகாக, பல வண்ணங்களில் பாரம்பர்ய  உடை உடுத்தி கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால்,  ஆண்களில் பலர் ஏன் ஆபீஸ் வொர்க் க்கு போவது போல pants  and shirts  அல்லது   ஜீன்ஸ் போட்டுக்கொண்டு casual  ஆக  உடை உடுத்தி கொண்டு இப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு வந்து பங்கு கொள்கிறார்கள்?  அவர்களுக்கு இந்த வகை நிகழ்ச்சிகளுக்கு  என்று டிரஸ் code எதுவும் கிடையாதா?" என்று கேட்டாள்.  

நான்  மனதுக்குள், நல்ல வேளை குடும்ப தலைவர்கள் - குடும்ப தலைவிகள் என்று நைட்டியிலும் லுங்கியிலும் வராமல் இருந்தார்களே (எங்கும் - எங்கெங்கும் - திருமண நிகழ்ச்சிகள் கூட) என்று நினைத்து கொண்டேன். 
 நண்பரோ  விட்டுக் கொடுக்காமல்,  "திருமண அழைப்பிதழில், எந்த மாதிரி உடை என்று மறந்து போய் குறிப்பிடாமல் விட்டு விட்டோம். அதான் என் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  இந்த குளறுபடி," என்று சொல்லி சமாளித்தார்.  
அவ்வ்வ்வ்.......

இந்திய நாட்டில் தான் இந்த சுதந்திரம்...... நைட்டியை டேட்டியாய் (dayty) - வேட்டியை லுங்கியாய் -  கட்டி கொண்டு வீட்டு வேலை - குடும்ப வேலை -  வெட்டி வேலை எல்லாம் 'எங்கும் எங்கெங்கும்' செய்ய முடியும்.  கொடுத்து வைத்தவர்கள்!

சரி, சித்ரா..... இப்போ என்ன சொல்ல வர?  நைட்டியும் லுங்கியும் போட்டுக்கிட்டு விருந்தினர்களை வரவேற்கிறது, வெளியிலே  சுத்துறது,  சரி என்கிறாயா,  இல்லை என்கிறாயா?   
 சில நாடுகளில் எதிர்பார்க்கிற மாதிரி,  இப்படித்தான் உடை உடுத்தி கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்வதற்கோ  - இல்லை,  சிரியா, பிரான்ஸ் போல சில உடைகளை போட்டு கொண்டு வெளி இடங்களில் செல்ல தடை  செய்த மாதிரி -  முடிவு சொல்வதற்கு நான் என்ன தனி அரசாங்கமா நடத்துறேன்?   இது சும்மா, ஒரு வெட்டி பேச்சுப்பா.....  

நீங்க நைட்டியை - லுங்கியை போடுங்க,  இல்லை போடாம இருங்க. அது உங்க இஷ்டம். ஆனால், அதை போட்டாக்க "குடும்ப தலைவியாய் உணர முடியுது" - "உடலில் ஒரு அங்கமாய் மாறுது" என்று சொல்லி பீதியை கிளப்பாதீங்க!
ப்ளீஸ்.... எங்களை பயமுறுத்தாதீங்க..........  அப்புறம் இன்னும் ஐந்து வருடங்களில் இன்னும் அதிகமாக கொளுத்தப் போகிற கோடை வெயிலால் தமிழ்  கலாச்சாரம் மாறி,  நாயுடு ஹாலும்  tantex ம்  அப்படி சொல்லிக்கிட்டு கிளம்ப,  தமிழ் மக்களும்  குடும்ப தலைவியா -  தலைவரா உணர்ந்துக்கிட்டு அப்படியே 'எங்கும் எங்கெங்கும்'  சுத்தப் போறாங்க...... 

கொசுறு செய்தி:  நான் காமெடி பண்ணல. நிஜமா சொல்றேன்:  
அமெரிக்காவிலும் tantex இருக்குதே......
TANTEX  - Telugu Association of North Texas 
http://en.wikipedia.org/wiki/Tantex
தமிழ் சங்கத்துக்கு (அதுவும் T தான்)  இப்படி பெயர் வைக்கணும்னு தோணலியே.......  தப்பிச்சோம்! 
என் கவலை எனக்கு! 




Wednesday, July 7, 2010

கொஞ்சம் நிம்மதியாய் இருங்க.....


.....  தொடர்ந்து வரும் வேலை பளு - மற்றும் பயணங்கள் -  வெட்டி பேச்சை குறைத்து கொள்ள வைக்கிறது ...... வலைப்பூ பக்கம் வருவது சாத்தியம் இல்லாமல் போகிறது......


...... பின்னூட்ட பெட்டிகள் - வோட்டு பெட்டிகள்  - பரிந்துரை பெட்டிகள்  - பொறுத்தருள்க......  பதிவுலக நண்பர்கள்,  அழாதீங்க.... ப்ளீஸ்..... இதுக்கெல்லாம் போய்......  என்னது?  சந்தோஷத்துல பார்ட்டி பண்றீங்களா?  அவ்வ்வ்வவ்.....


இதெல்லாம் சகஜமப்பா......




ஜூலை 26 மீண்டும் சந்திக்கிறேன்.   தொடர் பதிவுகளை மறக்கவில்லை ........

Monday, July 5, 2010

தொடர் பதிவு பலி

பதிவுலகத்தில், அப்போ அப்போ உலா வரும் "contagious"  THODARUNGOTITIS சீசன் இது....... ஒருத்தருக்கு வந்தா, ரெண்டு அல்லது மூன்று பேருக்கு மேலா, ஒரே நேரத்தில் தாக்கி ரகளை பண்ணிடும்....  அப்படித்தான்,  இப்போ அமெரிக்க சுதந்திர தின நாள் லீவு , மூணு நாளு முடிச்சிட்டு வந்து பார்த்தா..... எனக்கு நாலு  பேர்கிட்ட இருந்து  "அழைப்பு".....
இதை பத்தி THODARUNGO .....அதை பத்தி THODARUNGO என்று ...... சரி -

முதலில் சாத்தூர் ராமசாமி கண்ணன் அவர்கள் "இருமியது"  - சாரி - இடுகையிட்டது:
http://satturmaikan.blogspot.com/2010/07/blog-post.html

அவர் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த விவரம்: 
முத பலி:
நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான் ( நாங்களாம் யூத்துல).  திடிர்னு நம்ம கடவுள் சார்வாள் உங்க முன்னாடி வந்து மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கைய குழந்தை பருவத்துல இருந்து ஸ்டார்ட் பன்னி புச்சு புச்சா எதுனாச்சும் பன்னிக்கலாம் அப்படின்னு ஒரு வரம் கொடுத்தா என்ன என்னலாம் பண்ணலான்னு நீங்க நினைப்பீங்க. உங்களுக்கு உண்டான 
தலைப்பு:    “ மீண்டும் குழந்தை பருவத்திலிருந்து”.


ராமாசாமி அங்கிள்:    சித்ரா செல்லம், இங்கே வாம்மா ...... யார் வந்துருக்கா பாரு........!!
சித்ரா செல்லம்:   அங்கிள்,  அங்கிள்,  ஆரு ...இது?
ராமசாமி அங்கிள்:   இவர் தான் கடவுள் சார்வாள்.  உனக்கு பிடிச்ச எதுனாச்சும் புச்சு புச்சா பண்ணிக்கலாம்னு சொல்றார். .....   சித்ரா குட்டி,  கடவுளுக்கு ஹாய் சொல்லுடா......
சித்ரா செல்லம்:   ஹாய் ....கடவுள் அங்கிள்..... உங்க சிரிப்பு என்க்கு புச்சிருக்கு.....
ராமசாமி அங்கிள்:  அவருக்கு ஒரு பாட்டு பாடி காட்டும்மா.....
சித்ரா செல்லம்:   என்க்கு குச்சி ஐஸ்  வேணுமே......
ராமசாமி அங்கிள்:  அவரே தருவார்மா ...... பாடு ராஜாத்தி.....
சித்ரா செல்லம்:  அப்போ சரி......
(குழந்தை ஏதோ பாடுகிறாள்...... அது கடவுளுக்கு மட்டும் புரிகிறது.....  ராமசாமி அங்கிள், ஒண்ணும் புரியாமல்,  ஏதோ நேசமித்திரன் சார் கவிதையை,  அவர் வாசித்து விட்டு கமென்ட் போடுற   மாதிரி - புரிந்தும் புரியாமலே - புரியாமல் புரிந்தும் - ஹி, ஹி, ஹி, என்று வழிந்து கொண்டு..... நல்லா இருக்குது, என்கிறார்.....)


சித்ரா செல்லம்:  ஐஸ்-கிரீம்க்கு தேங்க்ஸ், கடவுள் அங்கிள்.  நெம்ப நன்னா இருக்குது....  உங்க  கூட "கண்ணா மூச்சி .....ரே..... ரே......" விள்யாத போலாமா?
ராமசாமி அங்கிள் கூட டூ.... டூ...... டுட்டூ ..... வெவ்வே வெவ்வெவ் வெவ்வே ..... நான் போன வாட்டி,   ப்ளோரிடா போனப்போ, ஐஸ்-கிரீம் வாங்கி தராமா...... டாட்டா சொல்லிட்டார்.... போ..... போ.....
கடவுள் அங்கிள்,  நான் இப்படியே இருக்கேன்..... சரியா?  அங்கிள் கூட சண்டை..... அவர் சீக்கிரம் தாத்தா ஆவட்டும்....
எப்போ பாரு, நான் யூத் யூத் என்று பீலா விடுறார்...... கடவுள் அங்கிள்,  ராமசாமி அங்கிள் கிட்ட பொய் சொல்லக் கூடாதுனு சொல்லுங்க..... ஹையா ஜாலி....... எல்லாம் ஓகேனு சொல்லிட்டாங்க..... அய் லவ் யு, கடவுள் அங்கிள்!  உம்மா.......

ராமசாமி அங்கிள்:   ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா,.......  சின்ன பிள்ளைங்க அப்படிதான்..... கடவுள் சார்வாள்..... கண்டுக்காதீங்க...... சித்ரா குட்டி,    சும்மா ஐஸ்-கிரீம்,  பாட்டு, கண்ணா மூச்சு விளையாட்டு தானா...... இது கடவுள் மா.... கடவுள்..... வேற எதுவும் கேக்க தோணலியா?   அவர் வரம் கொடுப்பார்..... என்ன கேட்டாலும் தருவார்..... நல்லா யோசித்து கேளுமா?
சித்ரா செல்லம்:   எனக்கு இப்போ அதான் வேணும்..... இன்னும் ஒரு ஐஸ்-கிரீம் வேணும்......
ராமசாமி அங்கிள்:   எத்தனை விஷயங்கள் இருக்குது?   சாதி, மதம், சண்டை, கவலை, ஏமாற்றம், இன்னல், ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லாத காலம் வேண்டும் என்று என்னை மாதிரி கேட்க தெரியலியே?
சித்ரா செல்லம்:  அப்படினா என்ன?  அங்கிள், அங்கிள், அங்கிள், ..... உங்களுக்கு காலமே ஐஸ்-கிரீம் வேணுமா? ஹாங்....  என்ன, அங்கிள்?


கடவுள் அங்கிள்:   ராமசாமி,  குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்..... விளையாட்டு,  இனிப்பு,  ஐஸ்-கிரீம், பாசம் -  இது போல தான் அவங்க உலகம்..... இதை பெரியவர்கள் கெடுக்காமல்,  கிடைக்க வேண்டியதை மட்டும் கொடுக்க வழியை பாருங்க.... அதுக்குதான் உங்களை பெரியவர்களாக இருக்க விட்டுருக்கேன்..... சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க...... டி வி, சினிமா, கம்ப்யூட்டர் தான் உலகம்னு குழந்தைகளுக்கு காட்டுறீங்க..... அதையும் தாண்டி, நான் படைச்ச உலகம் இருக்குனு புரிய வைக்க மறக்குறீங்க......  வெள்ளந்தி மனசுல விஷத்தை பாய்ச்சுட்டு, இதெல்லாம் எப்போ மாறுமோ? நல்ல காலம் எப்போ பிறக்குமோ? என்று புலம்புறீங்க.....  எனக்கு நேரமாச்சு..... நான் சித்ரா செல்லத்துக்கும் அவள் கூட இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் நல்ல கதை சொல்ல போறேன்..... வர்ட்டா......


"நிலா நிலா ஓடி வா என்றால்
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
கண்ணீரால், கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்."
இந்த  பருவம் - விலை மதிப்பு இல்லாத பொக்கிஷ பருவம்....... எந்த விலை கொடுத்தும் திரும்ப வாங்க இயலா பருவம்.... அந்த பருவத்தில், நல்ல விஷயங்களை பயிர் செய்...... 

வாசகர்கள்:     ஆமாம்  .....   ஜோரா இருக்குதே...... யார் எழுதியது  இது?  
சித்ரா :  மக்காஸ்...... காமெடி பண்ணாதீங்க...... நான் பதிவுலக குழந்தையா இருந்தப்போ  "கவுஜ"னு கிறுக்கியதுதான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....

பி.கு.  அடுத்த "THODARUNGOTITIS "  பலி கடா யார் ஆகணுமோ  ஆகிக்கோங்க.......................!!!!!!!
 வர்ட்டா......