Wednesday, March 23, 2011

தமிழ் பெண் எழுத்து???!!!

 தம்பட்டம் தாயம்மாவும்  நானும் ரொம்ப நாள் கழித்து சந்தித்து கொண்டோம்.  சென்ற வாரம் நடந்த செமினார் பற்றி அவளிடம் கூறிவிட்டு, அதை பற்றி தான் பதிவு எழுதப் போகிறேன் என்று சொல்லி கொண்டு இருந்த பொழுது, அங்கே பதிவுலக தோழி, ஆசியா ஓமர் வந்து சேர்ந்தாங்க.....

ஆசியா:   சித்ரா,  எப்படி இருக்கீங்க?  உங்களை, நான் ஒரு தொடர்பதிவுக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைத்து இருக்கிறேன்.
http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html

சித்ரா:  இப்போதானே லீவு முடிஞ்சுது..... அதற்குள்ள தொடர்பதிவா? என்ன டாபிக்?

ஆசியா: "பெண் எழுத்து " பற்றி நீங்களும் எழுதணும்னு ஆசைப்படுகிறேன்.

சித்ரா:  பெண் எழுத்து????  புதுசா இருக்கே....  நான் சின்ன வயசுல தமிழ் இலக்கண கிளாஸ்ல பாதி தூங்கியும் தூங்காமலும் டீச்சர் சொல்றதை கேட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. "அவன் - ஆண் பால்; அவள் - பெண் பால்"  இதை பத்தி நான் என்ன எழுதுறது? 

ஆசியா:   அய்யோ சித்ரா...... அது பத்தி இல்லை.... பெண் எழுத்து பத்தி.

சித்ரா:   Kindergarten/UKG கிளாஸ்ல  பசங்களும் பொண்ணுங்களும் ஒண்ணா படிச்சோம்.  அப்போ பசங்களும், "அ" என்ற  தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னாங்க.... பொண்ணுங்க, நாங்களும் - "அ"  என்ற தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னோம்.   பொண்ணுக்கு என்று தனியா தமிழ் எழுத்து என்று எதையும் சொல்லி கொடுத்த மாதிரி நினைவு இல்லையே.... ஒரு வேளை, அன்னைக்குத் தூங்கிட்டேனோ?
தமிழில், உயிர் எழுத்து - மெய் எழுத்து - உயிர்மெய் எழுத்து தானே உண்டு. பெண் எழுத்து என்று இருக்கா என்ன?

 தம்பட்டம் தாயம்மா:   ஏ புள்ள சித்ரா...... தலைப்பை பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது.  பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ?  தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!

சித்ரா:  தாயம்மா, பப்ளிக் பிளேஸ். ...... சும்மா இரு! 

ஆசியா:  சித்ரா, நீங்க எழுத்து உலகில் பெண்கள் பங்கை  பற்றி சொல்லணும்.

 (அந்த படத்தில், மேலே டேபிள்ல  கம்ப்யூட்டர்கள் ரெஸ்ட் எடுக்குது... பெண்கள், தரையில் உட்கார்ந்து....கஷ்டப்பட்டு எழுதுறாங்களே....)

தம்பட்டம் தாயம்மா:  அடியே.... உன்னை பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்றாங்க டோய் ....

ஆசியா:  நீங்க ரெண்டு பேரும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்களா?  நான் எவ்வளவு சீரியஸ் ஆக பெண்கள் எழுத்துக்களில் இருக்கும் "கடமை...கண்ணியம்.... கட்டுப்பாட்டை" பற்றி  
 எழுதி இருக்கேன். அதை பற்றி மேலும் உங்கள் கருத்துக்களை சொல்ல சொல்லி தான் இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு....

சித்ரா:  நான் தமிழ் ப்ளாக் மட்டும் அல்ல,  சில ஆங்கில பதிவுகள் - ஐரோப்பா,  ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் இருந்து எழுதுவதையும் வாசித்து இருக்கிறேன். அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல.  அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம  சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால்,  "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்.

தம்பட்டம் தாயம்மா:  அப்போ, இந்த முட்டுக்கட்டை இருக்கிறது  இந்திய  பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்று நினைக்கிறியா?

சித்ரா:  தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  உட்பட்ட மற்ற இந்திய மொழிகளின்  எழுத்துக்களும்  ரஷ்யன், mandarin சைனீஸ், அரபிக் உட்பட்ட மற்ற உலக மொழி எழுத்துக்களும் எனக்கு  ஒண்ணுதான். அவங்க என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும்,  எல்லாமே அச்சுல வச்சு பிழிஞ்ச இடியாப்பம், முறுக்கு மாதிரி தான் அழகா தெரியுதே தவிர,  என்ன சொல்ல வராங்க  என்று  எனக்கு ஒண்ணும் புரியல.    இந்தியாவில் மத்த பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று எனக்கு  தெரியாது. ஆனால், கண்டிப்பாக தமிழ் பெண்களுக்கு இல்லை என்று சொல்வேன்.

ஆசியா:  எதை வச்சு சொல்றீங்க?

தம்பட்டம் தாயம்மா:  எனக்கு புரியுதே.
ஆண் எழுத்தாளர்கள்,  தங்கள் கருத்துக்களுக்கோ,  கருவுக்கோ (topics) , எழுத்துக்கோ எந்த வித வரைமுறையும்  இங்கே கிடையாது.
ஆனால்,  ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......

 கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால்,  "லோலாயி,  எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......

கொஞ்சம் "யூத்தா" எழுதினா,  "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....

கொஞ்சம் காரசாரமா எழுதினால்,  "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.

மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.

தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.

எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.

இவ்வளவு ஏன்?   முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது,  இன்னொரு  பொண்ணாகவே கூட இருக்கலாம். இப்படி ஒரு இமேஜ்குள்ள மாட்டிக்காமல், சுதந்திரமாக எதை பத்தியும் எழுத இங்கே முடியாதே.

சித்ரா:  தாயம்மா,   வழக்கம் போல ......குட்டையை தெளிவா குழப்பிட்டா....   எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம் உண்டு....  Science fiction  மற்றும்   Harry Potter மாதிரி தீம்ல எல்லாம் எதனால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் நிறைய எழுதுறது இல்லை .....


 ஆசியா:  சொன்னாப்புல...... காதல்,  சமையல்/மருத்துவ/குடும்ப நல குறிப்பு,  பயணம்,  ஆன்மிகம், சமூதாய நலம், அனுபவம்/ஆதங்கம் போன்றவையே கருவாக கொண்ட  கவிதைகள், கட்டுரை, சிறுகதை என்ற குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் தங்கி விடுகிறோம்.

சித்ரா:  சேலை கட்டினாலும் சரி, சல்வார் போட்டாலும் சரி .... ஆண் பிள்ளை கையில் இருக்கும் செல் போன் ஆயுதத்திற்கு ஒதுங்கி,  "கவனமாக"  இருக்க சொல்லி, பெண்களுக்கு மட்டும் தான் எச்சரிக்கை வருது.   அதற்காக பொது இடங்களில், எல்லா ஆண்களையும் விட்டு விலகியா ஓட முடியும்?
அவள் உணர்வுகளுக்கு  மதிப்பு கொடுத்து, "ஆண்களே, அப்படியெல்லாம் தொல்லைகள்/துன்பங்கள்/மிரட்டல்கள்  பெண்களுக்கு தராமல் டீசன்ட் ஆக நடந்து கொள்ளுங்கள்" என்று பேச்சு வருதா?
எது நடந்தாலும், பொண்ணுங்க ஜாக்கிரதையாக இல்லாததால் தான் நடந்துச்சுன்னு ஒரு பார்வை.  இப்படி ஒரு சமூதாய கண்ணோட்டம் இருக்கும் போது, அதே தான் எழுத்துலகுக்கும் வருதுன்னு நினைக்கிறேன். 

தம்பட்டம் தாயம்மா:  ஆசியா, உன்னை பெண் எழுத்து பற்றி தொடர் பதிவு எழுத சொன்னால், நீ என்ன தமிழ் பொண்ணு தலை எழுத்து பத்தி பேசிக் கிட்டு இருக்க?"

சித்ரா, ஆசியா:  அவ்வ்வ்வ்வ்.......!!! 

படங்கள்:  கூகிள் அக்காவுக்கு நன்றி. 
 



Sunday, March 13, 2011

பத்து நாளு லீவு!



 அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம்...... 

இங்கே செமினார் வேலை .....  மற்ற வேலைகள்  காரணமாக பதிவுலகில், பதிவுகள் - மற்றும் பின்னூட்டங்கள் - வோட்டுக்கள் - எல்லாவற்றில் இருந்தும் ஒரு சின்ன பிரேக். 



மீண்டும்,  மார்ச் 22 சந்திக்கிறேன். 

 ஒபாமா:  "சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா?  பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு.  என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே...  பிறகு  அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும்  என்று  ஒரு அறிக்கை நான்   விடணும்.  அதான் கேட்டேன்."


என்றும் அன்புடன் சித்ரா

Tuesday, March 8, 2011

இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா.....

போன வாரம், நான் நெல்லையில் உள்ள ஒரு தோழியிடம் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருந்த பொழுது, அவள் ஒரு கேள்வி கேட்டாள்.  "சித்ரா, நீ அமெரிக்காவிலேயே இருக்கியே?  நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா?"  

எனக்கு அமெரிக்காவில் பிடித்ததில் முக்கியமாக ஒரு விஷயம் - இங்கே உள்ள கலாச்சார சுதந்திரம்.  ஹலோ, தப்பா எடுத்துக்காதீங்க...  நீங்க எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் இங்கே பின்பற்றலாம் என்று சொல்ல வந்தேன்.  அது உங்கள் உரிமையாக கருதப்படுகிறது ... அத்துமீறல்கள்  நடக்கும் வரை. கட்டுப்பட்டியாகவும் இருக்கலாம் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்கலாம். அது சுதந்திரமாக நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.  


நான் இருக்கும் மாநிலத்திலும் சரி, அருகில் உள்ள சில மாநிலங்களிலும் சரி - தமிழ் கலாச்சாரங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு,  ஆமீஷ் ( Amish)  என்ற ஒரு பிரிவினர் (sect)  வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள்,   நம்மூரு கலாச்சாரத்தைப் பின் பற்ற தடை என்ன?  சொல்லுங்க... 



அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருப்பதால், காமெடி கீமெடி பண்ணாமல்,  செய்திகளை  மட்டும் இந்த பதிவில்,  தொகுத்து தந்து இருக்கிறேன். 

Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination) சார்ந்தவர்கள்.  எளிமையான வாழ்க்கை முறை -  உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை -   எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது,  இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள். 

 1693 ஆம் ஆண்டு,  Switzerland ல்  Jakob Ammann என்பவரால் தான் இந்த ஆலய சபை முறை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.   ஆமானை பின்பற்றியவர்கள்,  ஆமிஷ் என்றழைக்கப்பட்டார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது. 

18 நூற்றாண்டில், இதில் பலர், அமெரிக்காவில் பென்சில்வேனியா  ( Pennsylvania ) என்ற மாநிலத்திற்கு வந்து குடியேறி இருக்கிறார்கள்.  அன்றைய வாழ்க்கை முறையையே இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா?   அமெரிக்காவின் சாயல் இவர்களை பாதிக்கவில்லை. 
2010 இல் எடுக்கப்பட்ட கணக்குப் படி,  கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் சுமார் 2, 50, 000 ஆமிஷ் மக்கள் இன்னும் அந்த வாழ்க்கை முறைப்படி வாழ்வதாக சொல்கிறார்கள்.  

தங்கள்  பிரிவைச் சார்ந்தவர்களைத் தவிர, இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. இவர்கள் எல்லோரும், அந்த அந்த மாநிலத்தில் ஒரே colony யாக சேர்ந்து வாழ்கிறார்கள்.  ஒரு காலனி என்பது - 20 - 40 குடும்பங்கள் கொண்டதாக இருக்கும்.   அடுத்த வீடுகளில் வசித்தாலும், கூட்டு குடும்பத்து முறைப்படி மாதிரிதான், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். 


தங்களுக்கு வேண்டிய பெரும்பாலான உணவு தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி,  காய்கறி பயிர் உற்பத்தி எல்லாம் அவர்களின் கைவேலைகளே. 



இவர்கள் தச்சு வேலை செய்வதில் வல்லுனர்கள். தங்கள் வீடுகளை,  அவர்கள் குழுவினரின் உதவியுடன் தாங்களே கட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தச்சு வேலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மர மேஜைகள்,  நாற்காலிகள் போன்ற பொருட்களை தங்கள் காலனி பக்கமே கடையாக போட்டு விற்கவும் செய்வார்கள்.  பெண்களும் தையல் குறிப்பாக quilting என்ற கலையில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்.


இப்படி தனித்து வாழ்வதால்,  இவர்களுக்கு மற்ற கலாச்சாரத்தைக் கண்டு எந்த வித தூண்டுதலும் (temptation) இருக்காது போல.  இவர்கள் வாழ்க்கை முறைக்கு, இவர்கள் நகரங்களில் இல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் தான் தங்கி இருக்கிறார்கள்.

அவர்களது  மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.  

அவற்றில், முக்கிய பத்து விதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: 

1.  அவர்கள் உடைகள் கவர்ச்சியான  நிறத்தில் - முறையில் - இல்லாமல், ( பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்)  எளிய முறையில் தைத்து இருக்கப்பட வேண்டும்.  

ஆமீஷ் இளம்பெண்கள்: 




2 . எந்த காரணம் கொண்டும்  மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.  அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது.  தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை. 

அவர்களின் சமையல் அறை:  எல்லாம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜாம் மற்றும் பொருட்கள்: 
இவர்கள் செய்யும் ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை.  fridge இல்லாததால், உணவு பதார்த்தங்கள் பதப்படுத்தப்படுகின்றன:


3.  கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது.  குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில்  தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.  நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா!) 


4.  தொலைபேசிகள் மற்றும் அலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது.  சில ஆமீஷ் வியாபாரிகள் (குடும்பங்கள் அல்ல) , சில சமயம் தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் அலைபேசி சில சமயங்களில் பயன்படுத்துவது பழக்கத்துக்கு வந்துள்ளது.

5.  அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும்.  இதனால், இவர்கள் எந்தவித ராணுவ சேவைகள் செய்வது இல்லை. 

6.  அதை பின்பற்ற விருப்பமில்லாதவர்கள்,  ஆமீஷ் வாழ்க்கை முறையை விட்டு விட்டு, அந்த காலனியையும் விட்டு  விலகி சென்று விட வேண்டும்.  அங்கேயே இருந்து கொண்டு புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.  மீறி,  குடும்பத்துடன் தங்க விளைந்தால்,  சபையே இவர்களை விலக்கி வைத்து விடும்.  (நம்ம ஊரு பக்கம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது போல.....) 

அவங்களுடைய பார்கிங் லாட்:


7.  குழந்தைகளையும் அவர்களே தங்கள் காலனியில் நடத்தும் - ஒரு அறை கொண்ட பள்ளிக்கூடத்திலேயேதான் கல்வி கற்க அனுப்ப வேண்டும்.  அதுவும் அவர்கள் கல்வி முறை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.  அதன் பின், வாழ்க்கை கல்வி என்ற பெயரில்  அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையான  விவாசய செய்முறை (usually organic living) - தச்சு வேலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்முறை எல்லாம் கற்றுத் தரப்படும். 


குழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறையை சட்டமாக கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம்,  இவர்கள் குழந்தைகளை ,  அமெரிக்க கல்விகூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்ட பொழுது, 1972 ஆம் ஆண்டு,  அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம்,  இவர்களின் குழந்தைகளை கட்டாய கல்விக்கு வலியுறுத்துவது, Free Exercise Clause of the First Amendment விதிமுறையை மீறுவதாக அமைந்து விடும் என்று தீர்ப்பு கூறி விட்டது.   

The First Amendment (Amendment I) to the United States Constitution is part of the Bill of Rights. The amendment prohibits the making of any law "respecting an establishment of religion", impeding the free exercise of religion, infringing on the freedom of speech, infringing on the freedom of the press, interfering with the right to peaceably assemble or prohibiting the petitioning for a governmental redress of grievances.

8.  உலகப் பிரகாரமான கேளிக்கைகள் (சினிமா உட்பட) மற்றும் விளையாட்டுக்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.  இன்னும் பம்பரம் விடுதல்,  roller skating  போன்ற விளையாட்டுக்கள் தான் இங்கே பிரசித்தம்.  பொழுதுபோக்கு முறைக்காக,  இறைவனைத் துதித்து பாடும் பாடல்களை,  அவர்களே  கைகளால் செய்யப்பட இசைக்கருவிகள் கொண்டு இசைத்துப் பாடிக் கொள்வார்கள். அதற்கேற்ப, பவ்யமாக ஆடிக் கொள்வார்கள். 



எங்க ஊரு பக்கம் உள்ள ரோடு sign . காரில் வேகமாக வருபவர்கள்,  கவனமாக ஓட்ட வசதியாக: 


9.  இயேசு கிறிஸ்துவை  மட்டுமே வாழ்கையின் ஆதாரமாக கொண்ட நம்பிக்கை உடையவர்கள்.  அவர்களுக்கென்று உள்ள ஆலயம் செல்வதும், கூட்டு பிரார்த்தனைகள் செய்வதுமே முதன்மையானதாக கருதப்பட வேண்டும். 

10.  பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும்.  தலைக்கனம், பெருமை,  ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.

இவர்கள் தாங்களாக புகைப்படங்கள் கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை.  புகைப்படங்கள் எல்லாம்,  தம்மை அழகாக காட்டிக் கொள்ள தூண்டி விடும் தற்பெருமைக்குள் (personal vanity) தன்னை தள்ளிவிடக் கூடும் என்று கருதுகிறார்கள். இறைவன் படைப்பில், எல்லோரும் அழகானவர்கள் தான் என்று நம்புகிறார்கள். 


மற்றவர்கள் (ஆமீஷ் மக்கள் அல்லாதவர்கள்)  தங்கள் ஆல்பத்துக்காக,  இவர்களை புகைப்படம் எடுக்க , இவர்கள் சம்மதம் வாங்கி எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் - குழந்தைகள் வளர்ப்பில் மற்றும் அன்றாட தேவைகளுக்கு,  சமூகமாக ஒன்றுபடல் - இறைவன் ஆராதனை மட்டுமே தங்கள் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். 

மாட்டுக்குப் பதிலாக குதிரை அல்லது கழுதை வைத்து விவசாயம் நடைபெறுகிறது: 




தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை கொண்டவர்கள்.   இன்னும் கடும் உடல் உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால்,  பொதுவாக மற்றவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் இவர்களுக்கு வருவதில்லை.  அப்படியே நோய்வாய்ப்பட்டாலும்,  கைமருத்துவம் தான் நம்பி இருக்கிறார்கள்.  அதையும் மீறி வரும் பொழுது,  இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள்.  மிகவும் அபூர்வமாகத் தான் வெளிமருத்தவம் நாடி,  அவர்களுக்கென்று சபை சம்மதம் தெரிவித்து உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறை கொண்டவர்கள். விவாகரத்து என்பதே இவர்களில் கிடையாது.  
 அவர்களில் ஒருவரை  சந்தித்த பொழுது,  நவீன வசதிகளை எதற்காக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டோம்.  அவர் சொன்ன பதிலில் இருந்து நான் இன்னும் மீளவில்லை: 

" நவீன வசதிகள் எல்லாம் - மின்சாரம் பயன்படுத்துவது உள்பட - மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இயங்கச் செய்ய வைப்பதாகவே  உள்ளது.  (It encourages independent style of living.)  எங்கள் சமூகத்தை சார்ந்து வாழும்,  கூட்டு  வாழ்க்கை முறையை விட்டு விட்டு, தனி மனித - தனி குடும்ப வசதி முறைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக மாற்றி விடக் கூடியதாக  உள்ளது.  அது மட்டும் அல்ல,  அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும்.  எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும்.  அந்த பொருட்களை பயன்படுத்துவது,   நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும்,  நமது பணத்தேவைகளையும்  அதை விட பலமடங்கு பெருக்கி,  எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும், " என்றாரே பார்க்கலாம். 

இவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள: 

இப்பொழுது என் தோழி கேட்ட கேள்விக்கு எனது நேரிடையான பதில்: 

அமெரிக்க constituition  சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது,  ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும்,  தங்கள் தங்கள் விருப்பப்படி  தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே.  First Amendment Rights  பற்றி தெரிந்து கொள்ள: 


அதனால்,  எனது விருப்பப்படி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற எனக்கு அமெரிக்காவில், சட்ட ரீதியாகவே  முழு உரிமை உண்டு.   தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால்,  அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.





Sunday, March 6, 2011

என் பேரைச் சொல்லவா ....


இது வழக்கமான பதிவு இல்லைங்க...  இது ஒரு சுய  பெயர் புராண  பதிவு.  இப்போ அதற்கு என்ன அவசரம் என்று கேட்கிறீங்களா?  நம்ம பதிவுலக நட்பு வட்டத்தில் இருந்து,  ராஜியும் இளங்கோவும்  "பெயர் காரணம் தொடர்பதிவு"  என்ற பெயரில்,   என்  பேருக்கு கேள்விகள் கேட்டு இருக்காங்க.... 
என்ன பதிவு,  ஒரு பேருக்காவது  ஒப்பேத்த என்ன பதிவு போடலாம் என்று  நினைத்த பொழுது, இந்த பேர் பதிவே சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன்.  


 
ராஜி:   வணக்கம்,  சித்ரா. 
 சித்ரா:  வணக்கம், ராஜி. 

இளங்கோ:  வணக்கம், சித்ரா.    நாங்க இரண்டு பேரும், ஒவ்வொரு கேள்வியிலும் "பேரு" வைத்து கேட்கப் போறோம். நீங்க பதில் சொல்லணும்னு கேட்டுக்கிறோம்.
சித்ரா:  வணக்கம், இளங்கோ.   சரிங்க...


ராஜி:  சித்ரா என்பது உங்கள் சொந்த பெயரா? இல்லை பதிவிற்காக வைத்த பெயரா
சித்ரா: சித்ரா, என் சொந்த பெயர். அதுவே நல்லாத்தானே இருக்குது -   பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு  எடுக்கணும் என்று சித்ரா என்ற என் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். 


இளங்கோ:  உங்களுக்கு சித்ரா என்ற பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டா? 
சித்ரா:  விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான்  பிறந்ததால்,  எங்க வீட்டில் எனக்கு சித்ரா என்றே  பெயர்  வைத்து விட்டதாக  எங்க அப்பா சொல்லி இருக்காங்க. 
நிறைய குழந்தைகளுக்கு  நட்சத்திரம் பார்த்து  பேரு வைப்பாங்களாம்.  எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க.... 

ராஜி:   பெயர் காரணத்துக்கும்  ஒரு பில்ட் அப்பு..... சரியா போச்சு!   உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்
சித்ரா: சித்து.

இளங்கோ: இதுதான் நீங்கள் பதிவுலகிற்கு தரும் முதல் பேர் சொல்லும்  பேட்டியா?
சித்ரா:  இல்லை... முன்பு ஒன்றிரண்டு  மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன்.

ராஜி: உங்களுக்கு நிறைய பட்டப் பெயர்கள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அவற்றில் உங்களுக்கு வித்தியாசமாக தோன்றும் பெயர் எது?
சித்ரா:   குயீன் குல்னார்.  (Queen Gulnar) இந்த பெயர் எனக்கு ஏன் வந்துச்சு ....எதுக்கு வந்துச்சுன்னு தெரியல... ஆனால், சின்ன வயசுல இருந்து என் கூடவே இருக்குது... 

இளங்கோ:  பதிவுலகில் நல்ல பெயர் வாங்க ஏதாவது டிப்ஸ் கொடுக்க முடியுமா? 
சித்ரா:         நான்  பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால்  போதுமா?  
 
 ராஜி:   பதிவுலகில்,  கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பேர் பெற்று இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 
சித்ரா:  ஒருவர்,  தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு,  அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள்  இருக்கிறது. 
 
 
இளங்கோ:  இப்போ நிறைய பதிவர்கள் வந்து இருக்காங்க.  அவர்கள் சார்பாக ஒரு கேள்வி:  
எப்பொழுது ஒரு பதிவர்,  பிரபல பதிவர் என்று பேரு எடுத்துட்டார்னு  தெரிந்து கொள்வது? 

சித்ரா:  தமிழ்மணத்துல விரைவில்,  பிரபல பதிவர்களின் பெயர்கள்  பட்டியல்கள் வாரா வாரம் வெளியிடப் போவதாக ஒரு ரகசிய செய்தி வந்து உள்ளது.   அதன்படி, இனி
இந்த வார முன்னணி  ப்ராப்ள (problem) பதிவர் பட்டியல்  :  அந்த அந்த  வாரம் பதிவுலக சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பிரபலமாகும்  பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
இந்த வார  முன்னணி "ப்ரா"பல பதிவர் பட்டியல்:            அந்த அந்த வாரம் நடிகைகளின் படங்களை போட்டு,  அவர்களின் ப்ரா பலத்தில் பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும். 
   வேறு எந்த எந்த பிரிவில் எல்லாம் பிரபலப் பதிவர்கள் பட்டியல் போடணும் என்று புதிய பதிவர்கள், தமிழ்மணத்துக்கு "பரிந்துரை" செய்து எழுதி அனுப்பலாம்.  அப்படி வரும்  பட்டியல்களில் ஒன்றிலாவது  உங்கள் பெயர் அங்கே இருந்தால் மட்டுமே,  நீங்கள் பிரபலமான பதிவர்  என்று தெரிஞ்சுக்கலாம்...



ராஜி:  அந்த கேள்விக்கு,  உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே  சொல்லி இருந்து இருக்கலாம்...   ம்ம்ம்ம்.....  நீங்க நிறைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுறீங்க.  ஆனால், சர்ச்சைக்குரிய பதிவுகள் என்றால் அப்பீட்டு ஆகிவிடும் பதிவர் என்று பேர் எடுத்து இருக்கீங்களே.... 

சித்ரா:  சர்ச்சைக்குரிய பதிவுகள் - பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன்.  இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால்,  அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு  போய்டுவேன்.  பின்ன என்னங்க?  நான் என்ன ....இந்தியா -  பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்?  நாலு பதிவுகள் வாசித்தோமா -  நாலு வோட்டுக்கள்  போட்டோமா -  அருமை,  :-) ,  சூப்பர்,  வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல,  வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ  பதிவுகள்  போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  



இளங்கோ:  பேருதான் பெத்த பேரு கேள்விகணைகளில்  உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி.    நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?
சித்ரா:  ஆ .... ஆ......  ஆஆஆ ......  (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)