Sunday, February 28, 2010

ஆளுக்கேத்த பட்டங்கள்



நண்பர் மகேஷ், ஒரு புதிய சைனீஸ் restaurant போய்விட்டு வந்தார். அவரிடம் நாங்கள் அந்த restaurant பத்தி கேட்ட பொழுது உணவை பற்றி விவரித்து சொன்னார். உணவு ஐட்டங்களின் விலை பற்றி ஒரு நண்பர் கேட்க, அதற்கு மகேஷ், "மோசம் இல்லை. எனக்கு ஒரு M.T.,  சாப்பாட்டிற்கு பணம் கொடுத்து விட்டான்" என்றார்.
அவர் உணவுக்கு தண்டம் அழுத நண்பர் உண்மையிலேயே M.T. - Management of Technology இல் டிகிரி வாங்க, படிக்க வந்தவர். 
அவரை "மங்குனி தோழன் - M.T." என்று பொருள்பட சொல்லியதும் சிரித்தோம்.

அப்படியே எங்கள் கேலி பேச்சும் வெட்டி சிந்தனையும் மற்ற "பொருத்தமான டிகிரி" பற்றிய ஆராய்ச்சிக்கு தாவியது.  எங்கள் குழுவின் கண்டுபிடிப்புக்கள்:

கீழே குறிப்பிட்டுள்ளவை - நண்பர்கள்/தெரிந்தவர்கள்  படித்து வாங்கிய  degreeயும் அதற்கேற்ப, அவர்களுக்கென்றே அமைந்த அர்த்தமுள்ள வாழ்க்கை அம்சங்களும்:

சாந்தியின் அம்மா:   
M.Sc. - Mother of Seven Children

விஜயின் கண்டிப்புக்கார தந்தை: 
M.A. -  மிரட்டல்  அதிகாரி.

ராமனின் "எதையோ சொல்ல நினைத்து எதையோ பேசி மற்றவர்களை தூங்க வைக்கும்" மாமா:
B.A. -  Boring  ஆசாமி.

மணியின் நக்கல் அடிக்கும்  தந்தை: 
M.A.B.L. -  மாட்டிக்கிட்ட  அனைவரிடமும்  பயங்கர  லொள்ளு.

Thesis எழுதும் நினைப்பிலேயே இருந்து, மற்ற காரியங்களில் சொதப்பும் நண்பர் சந்தீப்:
Ph.D. - Permanent Head Damage

எந்த கருத்து விவாதத்திலும் உடனே பின்வாங்கி விடும் நண்பர், பாஸ்கர்: 
M.S. -  Man to   surrender.

மூன்று முறை காதலில் தோற்ற நண்பரின் தம்பி:
M.B.B.S. -  மறுபடியும்  பல்புமேல  பல்பு  சாருக்கு

காரியம் முடியும் வரை நட்பு பாராட்டிவிட்டு, பின் மறைந்து போகும் நபர் ஒருவர்: 
M.B.A. -  மொட்டை,  பன்,  ஆப்பு

தோழியின் அண்ணன்,  வக்கீல் கருணா:
B.B.L.  -  buckets and   buckets of   lies/லொள்ளு

ஒரு அலட்டல் "மங்கம்மா":  
M. Phil.     -    முடியாத    Philmu (எப்பவும் "film" காட்டுறது)

ஒண்ணும் இல்லாத மேட்டர்ல கூட, எதிர்ப்பார்ப்பை ஏத்தும் பேச்சு கொண்டவர்:
B.E.   -  build-up  for   everything/எல்லாத்துலேயும். 

எல்லா விஷயத்துக்கும் ஒரு கதை, ஒரு உவமை, ஒரு விளக்கம் கொடுக்கும் ஆசிரியை தோழி:
M.Ed.      -    Miss   Examples'   directory  (e-d)
 
வெட்டி பேச்சு சித்ரா: 
B.Com. -  Bachelor of  Comedy 
அல்லது -  Bachelor of  Complete  மொக்கை  (co-m)

பி.கு.:
தமிழ் பட விமர்சகர், ஜெட்லி:
M.C.A. -  மொக்கை  சினிமாக்களின்  analyst

கொசுறு தகவல்:

என் கணவர், சாலமன், "கொஞ்சம் வெட்டி பேச்சு" ப்லாக் பார்த்துவிட்டு: 
"Followers???    ஏன் இத்தனை பேர் என் பொண்டாட்டியை "துரத்திட்டு" வாராங்க? " 
B.Com.  கொடுத்த பதில்:
"உங்களுக்கு போட்ட மொக்கையை பதிவுலகத்தில் போட்டேன். அதான்! "
சாலமன்:  "அப்போ நீ இந்த பக்கம் ஓடுறேனா, நான் அந்த பக்கம் ஓடுறேன்.  ஏன் அவளை,  இப்படி எழுத விட்டேன்னு என்னையும் சேர்த்து  துரத்த போறாங்க...." 

 

Friday, February 26, 2010

பதின்ம வயதினிலே ........!!!

என்னுடைய கிரிக்கெட் தொடர் பதிவை பாத்துட்டு, கண்டிப்பாக நான் பதின்ம வயது தொடர் பதிவையும் எழுதியே தீரணும் என்று ஆசைப்பட்டோ ஆசைபடமலோ கேட்டு கொண்ட திரு. V. ராதாகிருஷ்ணன் சாருக்கு, நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். மத்தவங்க என்ன சொல்லணுமோ,  அவருக்கு தனியா ஆட்டோவில மெசேஜ் அனுப்பிடுங்க.
(warning: இது கண்டிப்பாக மொக்கை பதிவு கிடையாது - அப்படி என்று நினைக்கிறேன்.)

பள்ளி:
அது வரைக்கும் - ஆசிரியர்களை  பார்த்தால் கிலி - இப்பொழுது,  ஆசிரியர்களை பார்த்தால் கிண்டலாக மாறியது.

கவலைகள்:
அது வரைக்கும் - குச்சி ஐஸ் கிடைக்காமல் போவது வாழ்க்கை பிரச்சினை என்று இருந்தது - இப்பொழுது,  பத்தாம் க்ளாஸ் பரீட்சை நல்லபடியாக எழுதுவதுதான் வாழ்க்கையின் முக்கிய பிரச்சினையாய் ஆகியது.

கதை:
அது வரைக்கும் - குழந்தைகளுக்கேற்ற புராண கதைகளை, கண்கள் விரிய வியந்து கேட்க தோன்றியது  -  இப்பொழுது, புரணி கதைகளில் கூட ஆர்வம் வந்தது.

கொஞ்சல்:
அது வரைக்கும் - மற்றவர்கள், குழந்தையாய்   கொஞ்ச, அழகாய் சிரித்தவள் - இப்பொழுது,  மற்ற குழந்தைகளை கொஞ்சி அழகாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

பொருள்:
அது வரைக்கும் - சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், அப்பள பூ வாங்கியவள் - இப்பொழுது, மல்லிகை, ஒற்றை ரோஜா பூவை விரும்பி வாங்க நேரம் வந்தது.

அம்மா:
அது வரைக்கும் - அவளிடம் பெருமையுடன் பார்த்த விஷயங்களை - இப்பொழுது,  அம்மா கவலையுடன் பார்க்க ஆரம்பித்தாள்.

சினிமா:
அது வரைக்கும் -  heroine போடுற கலர் டிரஸ், வளையல், கம்மல், ஹேர்-கிளிப் என்று இருந்த கவனம் - இப்பொழுது,  hero பக்கம் திரும்பியது. ஹி,ஹி,ஹி,ஹி.....

மழை:
அது வரைக்கும் - மழையில் நனைஞ்சு காகித கப்பல் விட்டு கொண்டு இருந்தவள் -------இப்பொழுது,  காகித "கடிதங்கள்" வர ஆரம்பிக்கவும் மழையில் நனையாமல் பதுங்க  ஆரம்பிக்கிறாள். ...............  :-(

நிலா:
அது வரைக்கும் - நிலாவை கண்டு சோறு உண்ணும்  வேலைகள் முடிந்து - இப்பொழுது,  நிலாவை கண்டு கனவு காணும் வேளைகள் வந்தன.

உருவம்:
அது வரைக்கும் - 1 ஆக  இருந்தவள் - இப்பொழுது,  8 ஆகிய மர்மம். .

சரிதானே?

Monday, February 22, 2010

cricket தொடர்பதிவு.


 தொடர் பதிவுக்கு அழைத்த, மீன் துள்ளியான் அவர்களுக்கு நன்றி. 
(அவர் கிரிக்கெட் ஆட்டத்தை வேடிக்கை பாக்க போனா, என் கையிலேயும் மட்டையை கொடுத்துட்டு, கிரிக்கெட் ஆடுங்க அப்படின்னு ஒரு நெல்லை மண் பாசத்துல சொல்லிட்டார்.)

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.  
(வெட்டி பேச்சு::   நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. அப்படின்னு நினைக்கிறேன்.)

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
(வெட்டி பேச்சு::  ஆமாம், கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே கிரிக்கெட் விளையாடியதாக, கல்வெட்டான் குழி கல்வெட்டு சொல்கிறது. அவர்கள் பெயர்கள், உங்களுக்கு தெரிந்தால், அவர்கள் பேர் சொல்லி புகழ் பரப்புங்க. இல்ல, "ஆயிரத்தில் ஒருவன் - பாகம் 2 பட ரிலீஸ் ஆக வெயிட் பண்ணுங்க.)

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
(வெட்டி பேச்சு:: இந்த தொடர் பதிவு "கொலைக்கு" ரெண்டு கூட்டாளி வேற வேணுமாம். யாருக்கு இந்த பதிவு பாத்துட்டு தோணுதோ , அவங்க அடுத்து போட்டு தள்ளலாம்..)

 காசு வாங்கிட்டு - bet கட்டிக்கிட்டு -  மேட்ச் fixing செஞ்சு -  advertisements மூலமாகவும் கல்லாவை நிரப்பிக்கிட்டு -  சண்டை போட்டு - scandals ல அகப்பட்டு - கிசு கிசு வில வந்து - அரசியல் காமெடி பண்ணிக்கிட்டு -  இத்தனைக்கும்  முன்னால பின்னால நடுவுல அப்போ அப்போ கிரிக்கெட் விளையாட்டையும் கவனிச்சிக்கிட்டு வந்த வீரர்கள் லிஸ்ட்,  ரெண்டு வருஷமா தொலைஞ்சு போச்சு. நோ டச்.
question paper ஒன்றை திடீர்னு நீட்டியவுடன் - பதில்கள் தப்பா ரைட் ஆ என்று குழம்பிய வேளையில் -   நமது தோழர் பட்டாள கிரிக்கெட் சிங்கம், தினேஷ் அவர்கள்  உடனே காப்பி அடிக்க பதில் பேப்பர் நீட்டிட்டார். 

சீரியஸா பதில் சொல்லும் முன், ஒரு நிமிடம் என் நண்பர்கள்குல கிரிக்கெட் மாணிக்கங்களுக்கு ஒரு மரியாதை சல்யூட்.

இவர்கள் இன்னும் சென்னை 600028 படத்தின் சாயலில், கடல் தாண்டியும் ஒரு ஈடுப்பாட்டுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார்கள். 

தன் மனைவியை பிரசவத்துக்காக Houston மருத்துவமனையில் காலையில் சேர்த்து விட்டு, டாக்டர் இடம் பேசிய போது, அவர் அன்று மதியத்துக்கு மேலதான்  பிரசவம் ஆகும் என்று சொல்லியதும் மறு வினாடியே சந்தோஷமாக பக்கத்தில் உள்ள கிரிக்கெட் கிரௌண்ட்க்கு போய் ஏற்கனவே ஒத்து கொண்டிருந்த மேட்ச்க்கு umpire ஆக நின்ற ஜெயந்தியின் கணவருக்கு முதல் சல்யூட். 

விடிய காலை மூன்று மணிக்கு என்றாலும் எழுந்து, பக்கத்தில் உள்ள குஜராத்தி ஒருவர் நடத்தும் மொடேல் ஹால் ஒன்றில் மேட்ச் பார்க்க போன நண்பர் குழு -  இந்தியாவுக்கு கொடி பிடித்து, டிவிக்கு இந்த பக்கம் நின்னாலும் கை தட்டி விசில் அடித்து, பாக்கிஸ்தான் ரசிக கூட்டத்துடன் ரகளை ஆகி, அமெரிக்க போலீஸ் வந்து எச்சரிக்கை செய்து அனுப்பும் அளவுக்கு "கிரிக்கெட் எங்கள் பேச்சு, இந்திய டீம் எங்கள் உயிர் மூச்சு" என்று இருப்பவர்களுக்கு  ஒரு சல்யூட். 50 இன்ச் டிவி க்கு முன்னால இருந்த 20 அடி ரூமில்  நடக்க இருந்த எல்லை போர் நிறுத்தப்பட்டது. 

20/20 மேட்ச் பற்றிய நண்பர் கருத்தரங்கில்: 
கிரிக்கெட் விளையாட்டு, adrenaline rush க்காக மட்டும் பார்க்கவில்லை, எங்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் தேசிய உணர்வையும் தட்டி எழுப்பும் அம்சமாக பார்க்கிறோம். அதை, 20/20 டீம்ஸ் என்று பிரித்து அயல் நாட்டினரையும் உள்ளுக்குள் விட்டு, யார் யார் எங்கே என்று புரியாமல் தெரியாமல், ஏதோ பொழுதுபோக்கு சினிமா மாதிரி ஆகிவிட்டதை கண்டித்து, புறக்கணித்து கொண்டிருக்கும் மற்றொரு நண்பர் குழுவுக்கு ஒரு மரியாதை. 
(அதில் ஒரு நண்பர் கமென்ட் - தமிழ் சினிமாவில், மதுரை பக்கம் ஒரு ஊரில் காதலிக்கிறவன், கனவு சீன் மட்டும் ஸ்விஸ் மலைக்கு முன்னால் டூயட் ஆட வெளிநாடு போகிற மாதிரி, இந்தியாவுக்குள்ள இருக்கிற டீமில் அப்போ அப்போ  வெளிநாட்டு முகங்கள்  தலை காட்டுது.  மனதில் ஒட்ட மாட்டேங்குது.)

சரி, இனி சீரியல் கில்லிங்:

1. பிடித்த கிரிக்கெட் வீரர் : Sachin Tendulkar, Viv Richards, Kapil Dev

2.
பிடிக்காத கிரிக்கெட் வீரர் : Javed Miandad, Aamer Sohail

3.
பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : Wasim Akram

4.
பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : Debasis Mohanty

5.
பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : Shane Warne

6.
பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : Sanath Jayasuriya

7.
பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : Sachin Tendulkar

8.
பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :

9.
பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : Brian Lara

10.
பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : Aamer Sohail

11.
பிடித்த களத்தடுப்பாளர் : Jonty Rhodes

12.
பிடிக்காத களத்தடுப்பாளர் : Anil Kumble

13.
பிடித்த ஆல்ரவுண்டர் : Kapil Dev, Imran Khan

14.
பிடித்த நடுவர் : Venkat Raghavan

15.
பிடிக்காத நடுவர் : Steve Bucknor

16.
பிடித்த நேர்முக வர்ணனையாளர் : Tony Greg

17.
பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : Ramiz Raja

18.
பிடித்த அணி : West Indies (Sir Gary Sober’s Team), Indian (MS Dhoni’s Team), Australia (Steve Waugh’s Team)

19.
பிடிக்காத அணி : Pakistan

20.
விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- India, Australia, South Africa

21.
பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- Bangladesh VS West Indies

22.
பிடித்த அணி தலைவர் : Kapil Dev, Imran Khan, Ganguly, Dhoni, Sir Sobers

23.
பிடிக்காத அணித்தலைவர் : Shahid Afridi

24.
பிடித்த போட்டி வகை : Test (only on the 5th day J last session)

25.
பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : Sachin, Shewag

26.
பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : Sidhu - Mongia

27.
உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : Viv Richards

28.
சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : Sachin Tendulkar, Shane Warne

29.
பிடித்த விக்கெட் கீப்பர் : Gilchrist, Dhoni


hello மக்களே, நான் இதில் ஈ அடிச்சான் காப்பி செஞ்சிருக்கேன் என்று சொல்லி இருக்கேன். கூகிள் ஆண்டவரையும் தினேஷ் ஆண்டவரையும் துணைக்கு அழைத்தேன். அந்த லிஸ்ட் உக்கு மேல உள்ளதுதான் ஒரிஜினல் சரக்கு. தொடர் பதிவில் விளையாடினேன். ஜோக் ஆ எடுத்துக்கோங்கப்பா. பர்சனல் சாய்ஸ் கிடையாது. இந்த லிஸ்டுக்கு நான் கிரெடிட் வாங்க முடியாது.
 

Thursday, February 18, 2010

"பாடும் பட்டு புடவை".

சுவரமாதுரி ...................இது ஏதோ புது தமிழ்  சினிமா பட நாயகி, இப்போதான்  போஜ்புரியில் இருந்து வந்து இறங்கி இருக்காங்க என்று நினைத்து விடாதீர்கள். இது அடுத்த மெகா பட்ஜெட் படத்தில், ஒரு டூயட் பாடலில், கதாநாயகி உடுத்த போகும்  "பாடும் பட்டு புடவை".   

அன்னைக்கு ஹிந்து பேப்பர் படிச்சா, நியூஸ் -  "‘singing silk saree’  embedded with eight micro speakers on its border has caught the fancy of many silk traders down South. 

எப்படிங்க, இப்படி எல்லாம் ரூம் போட்டு (இதுக்கு ரூம் இல்ல, ஒரு மாடி வீடே கட்டி) யோசிச்சி புதுசு புதுசா புடவையில் புதுமை புகுத்துறாங்க?   ஆந்தராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் டவுன்ல, மிளகாயை கடிச்சிக்கிட்டே யோசிச்சா இப்படியெல்லாம் ஐடியா வருதுன்னு, இதை டிசைன் பண்ண பி.மோகன் சொல்லி இருக்கார். 

புடவைக்குள்ள எட்டு மைக்ரோ ஸ்பீக்கர்ஸ்.  அப்புறம், முந்தானையில் ஒரு சின்ன டிஜிட்டல் ம்யுசிக் பிளேயர். இது இருநூறு பாடல்கள் வரை non-stop ஆ நான்கு மணி நேரத்துக்கு பாடுமாம். திருவாளர் மோகன் அவர்கள்,  2-GB memory chip இந்த சேலைக்குள் வைத்து இருக்கிறார்.  இந்த ஐடியா சரியா வர ரெண்டு மாதமா மண்டையை சொரிஞ்சிக்கிட்டேன் என்று மண்டை சொரிஞ்ச விஷயத்தை அவரே ஹிந்து பேப்பர்ல சொல்லி இருக்கார்.  படிச்சு பாருங்க.

இந்த புடவை டிசைன் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கிற திரு. ஷிவா என்ன சொல்றார்னா, "இந்த புடவைக்கு நிறைய ஆர்டர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பட்டு கடல் (கடை)களில் இருந்து வருதாம். ஆர்டர் எடுத்து மாளலை" என்று புலம்புற மாதிரி பெருமை அடிச்சிக்கிறார். 

இந்த புடவையை டிசைன் பண்ணவங்க, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அவர்களின் தீவிர பக்தர் என்பதால் அவருடைய musical compositions இந்த புடவையில் கேக்குற மாதிரி சேர்த்து விட்டிருக்காங்க. இந்த புடவை  கட்டிகிட்டா  மகாலச்சுமி மாதிரி இருக்குமாம். 
மகாமேரிகளும், மகாபாத்திமாக்களும் கவனிக்க  -  உங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டர்ல வேற பாடல்கள் வருது.

திருவாளர் மோகன், எதையாவது செஞ்சு கண்டுபிடிச்சி, இந்த பெண்களை எப்படியாவது ஒழுங்கா சாரி கட்ட வச்சுரணும்னு முயற்சி எடுத்துகிட்டே இருக்கிறார். போன வாட்டி,  சின்ன LED bulbs பொருத்துன ‘lighting sarees’
கொண்டு வந்தார். பளிச் பளிச் ஐடியா. இது கிண்டல் அல்ல. நிஜம்.
கல்யாண சீசன் டைம்ல,  பொழுது சாயுற நேரத்துல, பளிச் பளிச்னு இருட்டுல தெரிஞ்சா போக வேண்டிய கல்யாண மண்டபம் வந்துடுச்சுன்னு கார்,  பைக்  அப்படியே ஏத்திடாதீங்க. அப்புறம்,  மணப்பெண் போய் சேர்ந்துட்டானு சொல்லி கல்யாணத்தை கருமாதியா மாத்திடுவாங்க.

இவர் இதற்கு முன் நெய்து தந்த சந்தனகட்டை சேலைகளுக்கு ரொம்ப மவுசு இருக்காம். அந்த சந்தன மணம், சேலையில் permanent ஆ இருக்குமாம்.  அதான், எங்க தெருவுல இருந்த மீனாட்சி பாட்டி, அவங்க மருமகளை, "கட்டையில போறவளே" னு அடிக்கடி சொன்னாங்க போல. நான் கூட மருமகளை இப்படியெல்லாம் திட்டுறாங்களே என்று அவங்களை தப்பா நினைச்சிட்டேன்.

சரி, மறுபடி "பாடும் புடவை" கச்சேரிக்கு  வருவோம்.
"ஒரு புடவை நெய்து முடிக்க, பத்து பேர் சேர்ந்து ராப் பகலா உழைச்சா, ஒரு மாதம் ஆகுதாம்."
வர ஆர்டர்களை சமாளிக்க எத்தனை பத்து பேருக்கு வேலை கொடுக்கணும்? யாரங்கே, நம்ம ஆளுங்க இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவங்களை, உடனே தர்மாவரம் அனுப்புங்க. அடுத்த IT industry அங்கே தான் கொடி (சேலை) கட்டி பறக்க போகுது.

ஆமாம், மோகன் சார், பெண்களுக்கு மட்டும் இப்படி டிஜிட்டல் கலக்கல் ஆடைகள் னு சொன்னா, உங்கள் ஆண் வர்க்கம் பீலிங்க்ஸ் காட்டுறாங்க. அப்படியே பட்டு வேஷ்டிகளில்,  சட்டைகளில் இப்படி சேர்த்து விட்டுட்டீங்கனா, அவங்க பாட்டுக்கு,  பாட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க பாருங்க - பொண்டாட்டி பாட்டு காதில் விழாது.  அப்புறம், அந்த பல்புகள் சேர்க்க மறக்காதீங்க. தண்ணி அடிச்சிட்டு ஆட்டம் போடும்போது, அந்த அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி பளிச் பளிச்.

இங்கே இன்னொரு அன்பர், பட்டாடைகள் கட்டுரவங்களுக்கு மட்டும்தான் இந்த ஜிகினா ஜிகினா டிஜிட்டல்  வேலையா என்று வன்மையா கண்டித்து consumer court எல்லாம் போறேன் என்கிறார். விரைவில், உங்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட்களில்  ......... பளிச் பளிச் னு லைட் அடிக்க , "சுர்ருங்குது , உர்ருங்குது" னு பாட்டு கேக்கலாம். ரோடுல பொண்ணுங்க இப்படி நடக்க ஆரம்பிச்சா நமீதா, ரகசியா, முமைத் கானுக்கு என்ன  வேலைகள் என்று, பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப் ஆ போய் காத்து கிடக்கும் ஒரு ரோடு சைடு ரோமியோ, ஜொள்ளுகிறார்.

   ஆந்த்ராவுக்கே எல்லா பெருமையும் லாபமுமா என்று தமிழ்நாடு நினைக்குது.  எப்பொழுது   திருப்பூர் பனியன்கள் அண்ட் ஜட்டிகள் போடும்  கம்பனிகள், டிஜிட்டல் யுகத்துக்கு வர போகிறார்கள்?
"நாக்க மூக்க, நாக்க மூக்க ...."   பளிச், பளிச்......

 International Science Innovation conference 2010 இல்,  இந்திய விஞ்ஞானியின் பேச்சில் இருந்து:  "டெக்னாலஜி............ டெக்னாலஜி........எங்க ஊரு, M.R.ராதா சார்  சுட்டி காட்டியது போல -  "நீங்க நீராவியில் ரயில் விடுறதுக்கு முன்னாலேயே , நாங்க அதுல இட்லி அவிச்சோம்ல "....... நாங்க, யாரு? டெக்னாலஜிக்கே  டெக்னாலஜி கத்து கொடுக்கிறவங்க. நீங்க iphone, iMAC, ipod னு சின்ன சின்ன பொருளா உருவாக்கிட்டு இருங்க. நாங்க,  iSari, iJatti, iPalich னு ........... எப்பூடி?"

ஆமாம், இந்த மாதிரி புடைவைகளைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் அந்த தாய்குலங்கள் யார்? துட்டை கையில் வைச்சுக்கிட்டு என்ன செய்ய என்று தெரியலையே என்று திருதிருன்னு முழிக்கிற, கஷ்டப்பட்ட பெண்களோ?   இல்லை, " FM ல, CD ல,  போன்ல பாட்டு கேட்டு  கொண்டு இருக்கேனே. நான் கட்டி இருக்கிற புடைவையிலேயே பாட்டு கேக்க முடியவே முடியாதா?" என்று வாழ்க்கையில் அடுத்த வேளைக்கு எதில் பாட்டு கேக்க போகிறோம்னு தெரியாத  பாவப்பட்ட அபலை  பெண்களோ? 
இங்கே எத்தனை உயிர்களுக்கு சோத்து பாட்டுக்கே வழியை காணோம். காசை கொண்டு எந்த பாட்டுல  போடுறாங்க பாருங்க.






Monday, February 15, 2010

சமையல் "அட்டூழியம்"

எனது முந்தைய பதிவுகளில் ஒன்று  - சமையல் கலை -
http://konjamvettipechu.blogspot.com/2009/10/samayal-kalai.html


அதில் குறிப்பிட்டிருந்த  பிரியாணி ரெசிபி கதை  வேண்டும் என்று, அதை படித்த சிலர் கேட்டு,  ரொம்ப ஆர்வமா தொல்லை  பண்ணிட்டாங்க.  கவனிக்க: பிரியாணி  ரெசிபி அல்ல - ரெசிபி கதை வேண்டும் என்று.

சரி, அந்த ரெசிபி சொந்தக்காரர்,  "சமையல் அட்டூழியங்கள்"  நாயகன் ஆன, மாண்புமிகு தினேஷ் அவர்களிடம் அனுமதி கேட்டேன்.

அவரின் அனுமதி பதில்: (நிஜமா, இப்படித்தான் அவர்  இ-மெயிலில்  சம்மதம் அனுப்பி இருந்தார்.)

"ஆட்டு தலையில தண்ணிய தெளிச்சாச்சு. அது தலைய ஆட்டாமய இருக்கும். பிரியாணிக்கு ஆடு ரெடி........!" 

 வெட் கிரைண்டர் அப்படியே சுத்துனா - எத்தனை  நாள்தான் கொசுவத்தி  சுருளையே சுத்திக்கிட்டு இருக்கிறது.
மேலும், இது சமையல் சம்பந்த பட்ட பதிவு வேற ------------------------

நாங்கள்  Texas இல் இருந்த நேரம், ஒரு நாள் தினேஷுக்கு,  நண்பர்களுக்கு தன் கையால சமைச்சு போடணும்னு,  எங்க கிரகம் - நேரம் -  சரியில்லாத நேரத்துல தோணிடுச்சு.   மற்ற  நண்பர்கள்  எட்டு  பேருக்கும்,  மாலை ஆறு மணிக்கு போன் பண்ணி, "இன்னைக்கு நான் சிக்கன் பிரியாணி பண்றேன். சித்ரா வீட்டுக்கு கொண்டு வந்துடுறேன்.  எல்லோரும் அங்கே ஒரு ஒம்பது மணிக்கு, டின்னருக்கு  வந்துருங்க" என்று சொல்லியாச்சு.

எனக்கும்  போன் பண்ணி,  "சித்ரா,   இன்னைக்கு  நீங்க சமைக்க வேண்டாம். நான் சிக்கன் பிரியாணி செஞ்சு கொண்டு வரேன்" என்ற பில்ட்-அப் வேற.
ஒவ்வொருத்தராக எட்டரை மணியில் இருந்து வர ஆரம்பித்தார்கள்.  ஆனால் வர வேண்டியவங்க  வர ஒம்பது அரை ஆயிட்டு.
பிரியாணி செய்து கொண்டு வர இவ்வளவு நேரமானு கேக்கணும்னு தோணுச்சு. கேள்வி கேட்டா மட்டும் போதுமா? பதில்னு ஒண்ணு இருக்கணும்ல.

தினேஷ் உடன், நண்பர் ஸ்ரீநாத். அவர் கையில் ஒரு  பெரிய குக்கர்.  விட்டா, சிக்கன் என்ன, ஒரு முழு ஆட்டையே  உள்ளே வச்சு பிரியாணி பண்ணிடலாம். அப்படி ஒரு சைஸ்.

எல்லோரும் ஆசையாய் பார்க்க,  ஸ்ரீநாத் ஏதோ Burj Khalifa வுக்கு திறப்பு விழா துபாயில நடத்துற மாதிரி பதவிசா குக்கர் மூடியை திறந்து வைத்தார். தினேஷ், என்னை சிறப்பு விருந்தினர் மாதிரி, "சித்ரா, முதலில் நீங்க. அப்புறம் நாங்க" என்று சொல்லி தட்டை என் கையில் கொடுத்தார். ( என்னை அன்று முதல் பலி கொடுத்ததுக்கு, தினேஷ் --- இன்று இந்த பதிவில் -  உங்க இமேஜ், டோட்டல் டேமேஜ் பழி(லி)  வாங்கல்.)

பக்கத்தில போனா, பிரியாணி வாசனை மிஸ்ஸிங்.  கரண்டியை உள்ளே விட்டா, சிக்கன் பீஸ் மிஸ்ஸிங்.
இங்கே  பசி,  விஷயம் தெரியாம  இமய மலையின் உச்சத்தில் கொடி நாட்டிக்கிட்டு  இருக்கு.
 குக்கருக்குள் எட்டி பாத்தேன்.  பிரியாணியை,  என்றிலிருந்து இப்படி களி மாதிரி கிண்ட ஆரம்பிச்சாங்கன்னு  தெரியலையே?

"தினேஷ்,  பிரியாணி அரிசி  மாதிரியே தெரியலையே?"
"சித்ரா, என் ரூம் மேட் கிட்டே கேட்டேன். நாம வெறும் பச்சரிசி மட்டும் தான் வாங்குனோம். பிரியாணி அரிசி இல்லைன்னு சொல்லிட்டான். ஆறு அரை மணிக்கு மேல,  இந்தியன் ஸ்டோர்ஸ், அவ்வளவு தூரம் எங்கே போறது? அதான்."

சித்ரா:       "பிரியாணி மசாலா அரைச்சி போட்டீங்களா, இல்ல ரெடிமேட் மிக்ஸ் ஆ?"
தினேஷ்:    " பிரியாணி மசாலா அரைச்சி போட என்ன வேணும்னு யாருக்கு தெரியும்? ரெடி மேட் மிக்ஸ் இருக்குனு தான்   ஆரம்பிச்சேன்.  எல்லாம் அடுப்புல வச்சுக்கிட்டு தேடி பாத்தா, இல்ல."
                   "அப்புறம், என்ன மசாலா போட்டீங்க?"
                    " பாட்டிலில் மஞ்சளா ஒரு ஒரு பொடி இருந்தது."
சுதாகர்:        "டேய், அது மஞ்சள் தூள் டா."
தினேஷ்:       "அது கறி மசால் இல்லையா? சித்ரா, அப்போ மசாலா ஏதும் போடல."

சித்ரா:         " நெய் சாதம் மாதிரி பண்ணி இருக்கலாம்ல."
தினேஷ்:      "நெய் வாங்குறது இல்ல. பட்டர் ஸ்டிக்ஸ் தான்."
சித்ரா:        "அதை உருக்கி போட்டுற வேண்டியதுதானே."
ஸ்ரீநாத்:       "சித்ரா,  மத்தியானம் உருளை கிழங்கு வச்சு என்னமோ பண்றேன்னு,   இருந்த ரெண்டு ஸ்டிக் பட்டர் ஐயும் பாத்திரத்துல போட்டு உருளை கிழங்கை அதில் சறுக்கி விளையாட விட்டு ரோஸ்ட் பண்ணி வச்சான்.  உருளை வறுவல்னு நினைச்சா,  நெய் வறுவலில்,  கொஞ்சம் உருளை இருந்தது.   அப்புறம், பிரியாணிக்கு குக்கர் அடுப்புல வச்ச பிறகு, எண்ணெய் ஊத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்."

மது:          "டேய்,  எல்லாம் சரி. சிக்கன் பீஸ் எங்கேடா?"
தினேஷ்:    "நம்ம சுதாகர் கிட்டே சொல்லி நேத்தே சிக்கன் வாங்கி fridge இல் வச்சிடுனு சொன்னேன்."
சித்ரா:         "அப்புறம்?"
தினேஷ்:      "வாங்கிட்டு வந்தவன், fridge இல் வைக்காமல்,  மறந்து போய் கார்லேயே வச்சுட்டான். சம்மர் ஹீட்.  இந்த வெயிலில், நேத்து மதியத்துல இருந்து கார்லேயே இருந்த சிக்கன், இன்னைக்கு சாயந்திரம் போய் எடுத்து பாத்தா, நாத்தம் தாங்கலை. குப்பையில் போட்டுட்டோம். அதுக்குள்ள கடுகு வெடிச்சிட்டு. எல்லோரும், பசியோட வெயிட் பண்ணுவீங்க. இனிமே கடையிலே போய் வாங்கிக்கிட்டு வந்து வச்சா நேரம் ஆயிடுமேன்னு , சிக்கன் போடல."

சித்ரா:        "எப்படி, தினேஷ்?  அப்புறமும் சிக்கன் பிரியாணினு  சொல்லி குக்கர் திறந்து வச்சீங்க?"
தினேஷ்:       "போன வாட்டி பண்ணேன், சித்ரா. நல்லா வந்தது.
சித்ரா:          "நான் நம்பிட்டேன்."
தினேஷ்:        "இந்த வாட்டிதான்  சொதப்பிடுச்சு."
சாலமன்:       "சொதப்பல் என்பது ஒரு சாதாரண வார்த்தைனு நினைச்சேன்." 
மது:              "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட  பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"
சித்ரா:         " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே,  சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல.    அடுத்த வாட்டி,  சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."

தினேஷ், "I am your best friend, yaar" என்று சொல்வது கேட்கிறது.

எங்கள் நட்பு இரும்பு சங்கிலியால்  பிணைக்கப் பட்டது.  இன்றும், தினேஷ் எங்கள் நெருங்கிய நண்பர். அவருக்கு, இன்னும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
தளபதி படத்தில்  "காட்டு குயிலு" பாடலில் வரும்:
"என் நண்பன் போட்ட சோறு,   நிதமும் தின்னேன் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்."
எங்களுக்காக:
"என் நண்பன் போட்ட சோறு,  அதையும் தின்னோம் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவோம்." என்று பாட்டு பாடும் வானம்பாடி பறவைகள்,  நாங்கள்.

  தினேஷ், இப்பொழுது சென்னையில் வாசம். தினேஷின் அம்மா,  நாங்கள்  ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும், மட்டன் அல்லது சிக்கன்  பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து தந்து, பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.

Tuesday, February 9, 2010

கிராமத்து அத்தியாயம்.

எங்கள் நண்பர் முருகன், இங்கே அமெரிக்காவில் இருந்து மூன்று வருடங்கள் கழித்து, இந்தியாவுக்கு திரும்பி செல்கிறார்.  வேலை பளு காரணமாக,  ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தார்.   இப்பொழுது பெங்களூருவில்  வேலை கிடைக்க,  இந்தியா செல்ல வழி கிடைத்தது.  அவர், மதுரை பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர். குடும்பத்தில், இவரின் பெற்றோர், மற்றும் இவரின் அக்கா மட்டும் தான். அக்காவும் திருமணம் ஆகி பக்கத்து கிராமத்தில் தான் வாசம். இவரை தவிர, இவர் வீட்டில்,  வேற யாரும் மதுரையை தாண்டாதவர்கள். பட்டணம்னா மதுரை தான். சென்னை என்றால்,  "சினிமாகாரவுக"   இருக்கிற இடம்.  அவ்வளவுதான்.
எப்படிப்பட்ட குடும்ப பின்னணி, ஊர் பின்னணியில் இருந்து,  முன்னேறி வந்து இருக்கிறார், பாருங்க.

எங்களுடன் ஷாப்பிங் வந்தார்.   இந்தியன் கடை ஒன்றுக்கு சில மளிகை பொருட்கள் வாங்க  சென்றோம்.  அந்த கடையில் இந்திய மளிகை பொருட்களுடன், suitcase  மற்றும் இதர பொருட்களும்  இருப்பதை  முருகன் பார்த்தார். அந்த கடை ஆளிடம், விலை பற்றி விசாரித்தார்.

"சார், B visa, H1 visa, Green Card - இதில் எது?"
"பெட்டிக்கும் விசாவா?"
" Business visa னா - ஒரு ட்ரிப் தாக்கு பிடிக்கிற மாதிரி இருக்கும். $20.
H 1 விசா - இரண்டு ட்ரிப் - போயிட்டு திரும்பி வர வரைக்கும் தாங்கும். $40
green card -  நாலு தடவையாவது வரும்.  $60.  அதான் கேட்டேன். "
முருகன் பெட்டி வாங்காமலே,  திரும்பி விட்டார்.

சித்ரா:       வீட்டுக்கு என்ன பரிசு பொருட்கள் வாங்க போறீங்க?  அக்காவுக்கு என்ன புடிக்கும்?
முருகன்:   "அவளுக்கு  நான்,  கால் கிலோ தங்கம் தவிர எதை வாங்கி கொண்டு போனாலும் பெரிதா தெரியாது.'
"அமெரிக்காவில் இருந்து தங்கமா?"
"அக்காவுக்கு, சென்னை தாண்டிட்டா,  பம்பாய்,  துபாய் எல்லாம் வந்துரும். அங்கே போனால், சுத்த தங்கம் நிறைய வாங்கலாம். அமெரிக்கா, லண்டன் எல்லாம் துபாயில் உள்ள தெரு பெயர்கள்."
"ஓ.   இப்போ என்ன செய்ய போறீங்க."
" மதுரைக்கு கூட்டிட்டு போய், "தங்க மயில்" கடையில் ஏதாவது ஒரு நகைக்கு,  நான் மொய் எழுதுனா சரியாய் ஆயிடும்."

" அப்புறம், இங்கே என்ன வாங்க போறீங்க?"
"அக்கா கணவர், கேமரா கேட்டு  இருக்கார்."
"டிஜிட்டல் கேமரா - இப்போ நிறைய மாடல் வந்து இருக்கு. "
"சித்ரா, விளையாடாதீங்க. அப்புறம்,  அதுக்காக கம்ப்யூட்டர் வாங்கணும்.  அங்கே ஒரு நாளைக்கு,  அஞ்சு மணி நேரமாவது கரண்ட் இருக்காது.  இருந்துட்டாலும், கம்ப்யூட்டர் இல் அவர் புலி பாருங்க. அப்படியே  பாய்ஞ்சு பிராண்டுரதுக்கு. .............. எல்லாம், பெட்டி மாதிரி அடுக்கி வச்சு அழகு பாக்கத்தான்."

"அப்பாவுக்கு?"
"அவருக்குனு  நான் எதுவும் வாங்கி கொண்டு போறேனோ இல்லையோ,   ஊரு பெருசுங்க கிட்ட கொடுத்து அவருக்கு பேர் வாங்குற மாதிரி  வாங்கிட்டு வான்னுட்டார்."
"என்ன வாங்க போறீங்க? சென்ட் பாட்டில் மாதிரியா?"
"ஆமாம். அது ஒண்ணு தான் பாக்கி. பண்ற நாட்டமை வேலைக்கு சென்ட் போட்டு போனா, மைனர் மாதிரி இருக்கும்.
பட்டன் வச்சு திறக்குற குடை  ஆறாவது வேணுமாம். மணி பாக்க,  எட்டு   வாச்சு வேணுமாம். இவர் பவுசுக்கு, என் பர்சு கரையுது."

"அம்மாவுக்கு?"
"நான் அவங்க சொல்ற பொண்ணை கல்யாணம் கட்டிகிட்டா போதுமாம்."
"பொண்ணு என்ன செய்யுறா?"
"வீட்டு சுவத்துல சாணி ஒண்ணு பிசைஞ்சு எரு தட்டலை. மத்த எல்லாம் செய்வா."
"எல்லாம் வேலையும் இழுத்து போட்டு செய்ய, இப்படி ஒரு பொண்ணு அமையணுமே."
" ஏன் சொல்ல மாட்டீங்க? நான் அமெரிக்காவில இருக்கிற பொண்ணை கட்டிக்கிறேனா சொன்னேன். மதுரையில் புறந்து, வளர்ந்து, படிச்ச பொண்ணு ஒண்ணு கேக்குறேன். பட்டணத்து பொண்ணு, குடும்பத்துக்கு வேணாமாம். எங்க அம்மாவை மதிக்க மாட்டாளாம். அம்மா காட்டுற பொண்ணை நான் கட்டுனா,   எவனும் என்னை மதிக்க மாட்டான். பேசாமா, சந்நியாசம் வாங்கி எங்க ஊரு ஆல மரத்தடியில் கடை போட்டுற வேண்டியதுதான்."

"உங்க ஊரில் உள்ள  நண்பர்கள் யாராவது அம்மா கிட்ட பேசி புரிய வைக்கலாமே."
"எனக்கு வாய்ச்சது எல்லாம், நான் எத்தனை பாட்டில் வாங்கி வந்துருக்கேன், யார் யாருக்கு வாங்கி வந்து இருக்கேன் என்பதை தான்,   அவங்களோட  வாழ்க்கையில் பெரிய  பிரச்சினையாய் நினைப்பானுங்க. எதுவும் சொன்னா, "நம்ம முருகனுக்கு இப்படி ஒரு சோகமானு நினைச்சாலே, மனசு கேக்கலை. இன்னும் கொஞ்சம் ஊத்துப்பா" என்பானுங்க. "

"என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை. மூணு வருஷம் கழிச்சு போறீங்க. எவ்வளவோ விஷயங்கள் மாறி இருக்கலாம்."
"நீங்க ஒண்ணு. தமிழ் படத்துல, ஒரு சின்ன கிராமத்து பொண்ணு, சென்னை பட்டணத்துல இல்லை ஊட்டியில போய் படிக்க போவா. கோடை விடுமுறையோ வேற விடுமுறையோ இல்லாத பள்ளி போல. வளர்ந்து பெரிய பொண்ணா, கிராமத்து  வாசனை இல்லாம திரும்பி வர வரைக்கும், ஊரு பக்கம் தலை வச்சு படுக்க மாட்டா.    இதை நம்புற ஊரு.
நான் அமெரிக்காவுல இருந்து போறேன். "சிவாஜி" படத்துல ரஜினி வந்த மாதிரி,   நான் எத்தனை கோடி சேர்த்து வச்சுகிட்டு , ஊருல வந்து சேவை செய்ய போறேன் என்று வாயை புளந்துக்கிட்டு நின்னாலும் ஆச்சர்யப் பட மாட்டேன்."

"இதுக்கு மேல ஒண்ணும் சொல்லாதீங்க. என்னால ("சிரிச்சு")  முடியல."

பி.கு.   வெள்ளந்தியாய் மனிதர்கள்   -     இவர்கள், அழிந்து வரும் இனமா?
அவர்கள் இப்படி இருப்பது innocence -  கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.
அவர்கள் இப்படி இருப்பது ignorance - அசிங்கம் என்று நண்பர் சொல்கிறார்.
நாட்டாமையாய் நீங்கள் - கருத்து சொல்லுங்க. கமெண்ட் பண்ணுங்க.

Thursday, February 4, 2010

சந்தோஷ நடை போடு!



சென்ற வார இறுதியில், ராக்கி மலை தொடரில் (Rocky Mountains Range) உள்ள Colorado Springs and Manitou Springs என்ற ஊர்களுக்கு செல்வது என்று முடிவு செய்து, பயணத்தை துவங்கினோம். இங்குதான் 14,110 அடி கடலுக்கு மேல் உள்ள Pikes Peak என்ற மலை இருக்கிறது. அதான்ப்பா, நம்ம ஊட்டி மலை
(about 7500 ft above sea level) மாதிரி கிட்ட தட்ட ரெண்டு மடங்கு உயரம்.

வீட்டை விட்டு கிளம்ப தயாராகி கொண்டிருந்த போது, தோழி ஒருத்தி கூப்பிட்டு,
"weather forecast பார்த்தாயா? இன்னைக்கு ராத்திரியில் இருந்து snow storm. பன்னிரண்டு இன்ச்  வரை snowfall எதிர் பார்க்குறாங்க. நீங்க கண்டிப்பாக போக வேண்டுமா? பார்த்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கை மணி அடித்தாள்.
"பெட்டிகளை load பண்ணிக்கிட்டு இருக்கோம். போலாம்னு முடிவு பண்ணிட்டோம்."
"புள்ளைங்களையும் கூட்டிகிட்டா?"
"கைலாசத்துக்கு போறதுன்னு இருந்தா, கூண்டோடு - குடும்பத்தோடு போகலாம்னுதான்."
"நீங்க ஒரு லூசு குடும்பம்," என்றாள்.

Airport அடையும் வரை பனிக்கான அறிகுறி இல்லை. "சித்ரா அண்ட் குடும்பம், பத்திரமா உள்ளே போயிட்டாங்களா, அட, அதற்குதான் நான் waiting," என்று பனி காத்திருந்தது போல, gate அருகே வந்து சேரவும், கொட்ட ஆரம்பித்தது. United Airlines, Denver செல்லும் flight service, பனிமழை காரணமாக ரத்து செய்து விட்டதை அறிவித்தது. அடுத்தவன் எப்படி ஆனா நமக்கு என்ன, நம்ம flight service என்ன சொல்றான் என்ற "உயர்ந்த" மனுஷித்தன உள்ளத்தோடு, நாங்கள் செல்ல விருந்த Southwest airlines, கவுன்ட்டர் இல் விசாரித்தேன். இரண்டரை மணி நேரம் flight delay செய்திருப்பதாக சொன்னார்கள்.
"அது போதுங்க. வண்டியை கிளப்புனா சரிதாங்க," என்று நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

நீங்கள் யாராவது இரண்டரை மணி நேரங்களை airport உள் ஒரு ஒண்ணரை வயது வாண்டு பயலை  சமாளித்து கொண்டு, இருந்து இருக்கிறீர்களா?
இல்லை என்பவர்களுக்காக:

             "அடம் பிடிச்சா தாங்க மாட்ட;
              அசந்து போயி  தூங்க மாட்ட;
              ஓடும்   பாரு,  ஒரே இடத்தில்  நிக்க  மாட்ட."

ஒரு வழியாக, இரண்டரை மணி நேரத்தில், வாட்ச் ஐ இருநூறு தடவை பாத்த பிறகு, போர்டிங் டைம் வந்தது.

விமானம் take-off ஆனதுமே,  நம்ம வாண்டு, டம்ளர் கையில் எடுத்து, அதில் இருந்த பாலை கொட்டி சிரித்தான். 
 கொட்டிய பாலையும் என் அசட்டு தனத்தையும் துடைத்து விட்டு உட்கார்ந்த பொழுது:
pilot செய்த அறிவிப்பு: "வெளியில் பாருங்கள். எவ்வளவு snowfall என்று. வேற நாள் எதுவும் கிடைக்காமல், இப்படி ஒரு நல்ல நாளை, பயணம் செய்ய தேர்ந்தெடுத்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்" என்று நக்கலாக அறிவித்தார்.  சூழ்நிலை மறந்து, சிரித்தேன்.
அவர் மீண்டும், "நாம்  29,742 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம். என்னை நம்பாதவர்கள், வெளியில் ஒரு measuring tape கொண்டு சென்று இங்கிருந்து தரைக்கு உள்ள தூரத்தை அளந்து பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல, அனைவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். 
பத்திரமா தரை இறங்கி விடுவோமா என்ற கவலை இருக்க வேண்டிய நேரத்தில்,  டென்ஷன் இல்லாமல், அந்த பைலட் கிண்டலாக எதையாவது அப்போ அப்போ சொல்லி கொண்டே வந்தார்.   காமெடி ஷோ மாதிரி என்ஜாய் செய்தோம். 

நகைச்சுவையின் வலிமையையும் பயனும்,  நமக்கு இந்த மாதிரி நேரங்களில் தான் புரிகிறது..

கடவுள் அருளால், நல்ல படியாக விமானம் தரை இறங்கியது.   வானம் பனி அழுகையை நிறுத்தி, தன் முழு நிலா முகம் காட்டி சிரித்து கொண்டு இருந்தது. வானமும், அந்த பைலட் அடித்த ஜோக்ஸ் கேட்டிருக்கும் போல.

மறு நாள் காலை,  Pikes Peak. அங்குள்ள Cog train மூலமாக செங்குத்தாக மலை உச்சிக்கு செல்ல, டிக்கெட்ஸ் வாங்கி கொண்டு அமர்ந்தோம். அமர்ந்த ஐந்து நிமிடங்களில், ஐந்து ரயில் சிநேகங்கள், அறிமுகம் ஆயினர்.  கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசி கொண்டு சென்றோம்.
ஒன்றரை மணி நேரம்,  ரயில் வேகத்தில் கரைந்தது.

மலை உச்சிக்கு போனதும், ரயிலை விட்டு இறங்கினால், தலை சுற்றல், காது அடைப்பு, ஒரு கிர்ர்ரர்ர்ர்ர் உணர்வுகள். நமக்கு மட்டும்தான் இப்படி என்று "ஞே" என்று முழித்து கொண்டு, உதவி கேட்க திரும்ப, கிட்டத்தட்ட எல்லோரின் முகத்திலும் அதே பேமுழி தான்.

எங்கள் guide, "14000 அடிகளுக்கு மேல இருப்பதால், oxygen போதுமான அளவு இல்லாமல், இப்படி தோன்றும். எங்களுக்கு அடிக்கடி வந்து பழகி விட்டதால் வித்தியாசம் தெரியாது," என்றார்.
இதெல்லாம் முதலேயே சொல்ல கூடாதா?
மேல வந்தது, மூச்சு முட்டுனா எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளத் தானா? என்று பதிலுக்கு கேக்க நினைத்து வந்த வார்த்தைகள் கூட கப்சிப்.  பேச்சு, மூச்சு ரெண்டுக்கும் oxygen எவ்வளவு தேவை என்று புரிந்தது. அடுத்த முறை, சாப்பாடு மூட்டை கட்டி கொண்டு வரேனோ இல்லையோ, ஒரு oxygen cylinder முதுகில் கட்டி கொண்டு வரணும்.
 scenic mountain view ஏரியா பக்கம் போனால்................. அழகு - பனி மலை தொடரின் அழகு - அப்படி ஒரு அழகு.
இப்பொழுது, என் முகத்தில் தெளிவு. அழகை சுவாசித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது,  ஐந்தாறு பேர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகத்தில் பெருமிதம் - சாதித்து விட்ட மகிழ்ச்சி. நாங்கள் ரசிக்கும் அதே காட்சி, அவர்கள் கண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிக ரசனைக்குரியதாக தோன்றுவது நன்கு தெரிந்தது. பேச்சு கொடுத்தோம். அவர்கள், trekkers. அந்த மலையை, நடந்தே ஏறி வந்ததாக சொன்னார்கள்.
கண்கள் விரிய, "எத்தனை நாட்கள் ஆகியது?" என்று கேட்டேன்.
"நாட்களா? எங்களுக்கு எட்டு மணி நேரங்கள் ஆனது. இன்னும் fit ஆக இருக்கும் குழுவினர் என்றால், ஆறு மணி நேரங்களில் வந்து இருப்பார்கள்" என்றார்கள்.
லூசு பய புள்ளைக. ...................

wait a minute for 5 minutes:

என் தோழி, எங்களை லூசு குடும்பம் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது.
பனி புயல், ஒண்ணரை வயது புயல், எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல், நாங்கள் இங்கு வந்தது, அவளுக்கு லூசுத்தனமாக தெரிந்தது. இவர்கள், இந்த குளிரில் - பனியில் -   நடந்து மலை ஏறியது, எனக்கு லூசுத்தனமாக தெரிகிறது.

மண்டைக்குள்  மணி அடிக்குதே -  டிங், டிங், டிங், டிங்..............
வாழ்க்கையில் பிரச்சினை மலைகளை, நாம் எப்படி பார்க்கிறோம்?
புயல் வந்திரும், எதுவோ நடந்திரும் என்று பயந்து வீட்டில் இருந்து கொண்டே புலம்ப போகிறோமா?
துணிந்து அடுத்த அடி எடுத்து வைத்து, comfort zone விட்டு வெளியில் வந்து, அழகை ரசிக்க போகிறோமா?
'ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' னு, ஒரு சவாலா ஏத்துக்கிட்டு, இந்த trekkers மாதிரி மலைகளை துச்சமாக எண்ணி ஏறி மிதித்து விட போகிறோமா?
அவர் அவர்களுக்கு முடிந்த வரையில், தெரிந்த வகையில், தன் நம்பிக்கையோ தெய்வ நம்பிக்கையோ கொண்டு, மலை ஏறி விட்டால் ............. அழகு!
 "ஞே" முழி போய், "ஞான" முழி மலையில் எனக்கு வந்தது.

எங்களுடன் பேசி கொண்டிருந்தவர்,
"உங்களுக்கு தெரியுமா? 12000 அடிகளுக்கு மேலே மரங்கள்   இந்த மலையில் வளர்வது இல்லை. மரங்கள், மனிதர்களை விட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். இங்கு வருடந்தோறும், marathon race நடைபெறும். 12000 அடிகளுக்கு மேலே, oxygen குறைவாக இருப்பதால், நடப்பதே கடினமாக இருக்கும் போது, ஓட வேண்டும் என்றால் ..............  பெரும்பாலோர், அந்த உயரத்துக்கு மேலே, ஒரு மைல் ஓடுவதற்கு அரை மணி நேரம் கூட எடுக்கலாம். ஆனாலும், இத்தனைக்கும் மத்தியில்,  ஒருவர் 3 1/2 மணி நேரத்தில் மேல ஏறி கீழே ஓடி வந்து record வைத்து இருக்கிறார்."
கிட்டத்தட்ட நாங்கள் வந்த ரயில் வேகத்தில், அவர் ஓடியே மேலே ஏறி இறங்கி இருக்கிறார். 
எனக்கு மீண்டும், கிர்ர்ரர்ர்ர்ர்.........!!!

என்னை என் தோழி, ஆச்சர்யமாக பார்க்கிறாள். நான், trek செய்து வந்த இந்த புது நண்பர்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன். அவர்கள், marathon race இல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களை, ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.  
ஒரே மலை - ஒரே காட்சி. எப்படி ஏறி வருகிறோம் என்பதில் தான் மேட்டர் இருக்கிறது.

நம் வாழ்க்கையில் குறுக்கிடும் மலைகள் -  
பயந்துக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருந்தால் -  மலை அளவு, மலைக்க வைக்கும். 
கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் - உங்களுக்கு சுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை -  அது அதிகமாக  இருக்கிறவங்க துணையுடன்,  சிரிச்சிகிட்டே தைரியமாக சிகரங்களை தொடுங்கள். 
அழகு - அழகு - எல்லாமே வெற்றி தரும் கொள்ளை அழகு!