எங்கள் நண்பர் முருகன், இங்கே அமெரிக்காவில் இருந்து மூன்று வருடங்கள் கழித்து, இந்தியாவுக்கு திரும்பி செல்கிறார். வேலை பளு காரணமாக, ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தார். இப்பொழுது பெங்களூருவில் வேலை கிடைக்க, இந்தியா செல்ல வழி கிடைத்தது. அவர், மதுரை பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர். குடும்பத்தில், இவரின் பெற்றோர், மற்றும் இவரின் அக்கா மட்டும் தான். அக்காவும் திருமணம் ஆகி பக்கத்து கிராமத்தில் தான் வாசம். இவரை தவிர, இவர் வீட்டில், வேற யாரும் மதுரையை தாண்டாதவர்கள். பட்டணம்னா மதுரை தான். சென்னை என்றால், "சினிமாகாரவுக" இருக்கிற இடம். அவ்வளவுதான்.
எப்படிப்பட்ட குடும்ப பின்னணி, ஊர் பின்னணியில் இருந்து, முன்னேறி வந்து இருக்கிறார், பாருங்க.
எங்களுடன் ஷாப்பிங் வந்தார். இந்தியன் கடை ஒன்றுக்கு சில மளிகை பொருட்கள் வாங்க சென்றோம். அந்த கடையில் இந்திய மளிகை பொருட்களுடன், suitcase மற்றும் இதர பொருட்களும் இருப்பதை முருகன் பார்த்தார். அந்த கடை ஆளிடம், விலை பற்றி விசாரித்தார்.
"சார், B visa, H1 visa, Green Card - இதில் எது?"
"பெட்டிக்கும் விசாவா?"
" Business visa னா - ஒரு ட்ரிப் தாக்கு பிடிக்கிற மாதிரி இருக்கும். $20.
H 1 விசா - இரண்டு ட்ரிப் - போயிட்டு திரும்பி வர வரைக்கும் தாங்கும். $40
green card - நாலு தடவையாவது வரும். $60. அதான் கேட்டேன். "
முருகன் பெட்டி வாங்காமலே, திரும்பி விட்டார்.
சித்ரா: வீட்டுக்கு என்ன பரிசு பொருட்கள் வாங்க போறீங்க? அக்காவுக்கு என்ன புடிக்கும்?
முருகன்: "அவளுக்கு நான், கால் கிலோ தங்கம் தவிர எதை வாங்கி கொண்டு போனாலும் பெரிதா தெரியாது.'
"அமெரிக்காவில் இருந்து தங்கமா?"
"அக்காவுக்கு, சென்னை தாண்டிட்டா, பம்பாய், துபாய் எல்லாம் வந்துரும். அங்கே போனால், சுத்த தங்கம் நிறைய வாங்கலாம். அமெரிக்கா, லண்டன் எல்லாம் துபாயில் உள்ள தெரு பெயர்கள்."
"ஓ. இப்போ என்ன செய்ய போறீங்க."
" மதுரைக்கு கூட்டிட்டு போய், "தங்க மயில்" கடையில் ஏதாவது ஒரு நகைக்கு, நான் மொய் எழுதுனா சரியாய் ஆயிடும்."
" அப்புறம், இங்கே என்ன வாங்க போறீங்க?"
"அக்கா கணவர், கேமரா கேட்டு இருக்கார்."
"டிஜிட்டல் கேமரா - இப்போ நிறைய மாடல் வந்து இருக்கு. "
"சித்ரா, விளையாடாதீங்க. அப்புறம், அதுக்காக கம்ப்யூட்டர் வாங்கணும். அங்கே ஒரு நாளைக்கு, அஞ்சு மணி நேரமாவது கரண்ட் இருக்காது. இருந்துட்டாலும், கம்ப்யூட்டர் இல் அவர் புலி பாருங்க. அப்படியே பாய்ஞ்சு பிராண்டுரதுக்கு. .............. எல்லாம், பெட்டி மாதிரி அடுக்கி வச்சு அழகு பாக்கத்தான்."
"அப்பாவுக்கு?"
"அவருக்குனு நான் எதுவும் வாங்கி கொண்டு போறேனோ இல்லையோ, ஊரு பெருசுங்க கிட்ட கொடுத்து அவருக்கு பேர் வாங்குற மாதிரி வாங்கிட்டு வான்னுட்டார்."
"என்ன வாங்க போறீங்க? சென்ட் பாட்டில் மாதிரியா?"
"ஆமாம். அது ஒண்ணு தான் பாக்கி. பண்ற நாட்டமை வேலைக்கு சென்ட் போட்டு போனா, மைனர் மாதிரி இருக்கும்.
பட்டன் வச்சு திறக்குற குடை ஆறாவது வேணுமாம். மணி பாக்க, எட்டு வாச்சு வேணுமாம். இவர் பவுசுக்கு, என் பர்சு கரையுது."
"அம்மாவுக்கு?"
"நான் அவங்க சொல்ற பொண்ணை கல்யாணம் கட்டிகிட்டா போதுமாம்."
"பொண்ணு என்ன செய்யுறா?"
"வீட்டு சுவத்துல சாணி ஒண்ணு பிசைஞ்சு எரு தட்டலை. மத்த எல்லாம் செய்வா."
"எல்லாம் வேலையும் இழுத்து போட்டு செய்ய, இப்படி ஒரு பொண்ணு அமையணுமே."
" ஏன் சொல்ல மாட்டீங்க? நான் அமெரிக்காவில இருக்கிற பொண்ணை கட்டிக்கிறேனா சொன்னேன். மதுரையில் புறந்து, வளர்ந்து, படிச்ச பொண்ணு ஒண்ணு கேக்குறேன். பட்டணத்து பொண்ணு, குடும்பத்துக்கு வேணாமாம். எங்க அம்மாவை மதிக்க மாட்டாளாம். அம்மா காட்டுற பொண்ணை நான் கட்டுனா, எவனும் என்னை மதிக்க மாட்டான். பேசாமா, சந்நியாசம் வாங்கி எங்க ஊரு ஆல மரத்தடியில் கடை போட்டுற வேண்டியதுதான்."
"உங்க ஊரில் உள்ள நண்பர்கள் யாராவது அம்மா கிட்ட பேசி புரிய வைக்கலாமே."
"எனக்கு வாய்ச்சது எல்லாம், நான் எத்தனை பாட்டில் வாங்கி வந்துருக்கேன், யார் யாருக்கு வாங்கி வந்து இருக்கேன் என்பதை தான், அவங்களோட வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாய் நினைப்பானுங்க. எதுவும் சொன்னா, "நம்ம முருகனுக்கு இப்படி ஒரு சோகமானு நினைச்சாலே, மனசு கேக்கலை. இன்னும் கொஞ்சம் ஊத்துப்பா" என்பானுங்க. "
"என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை. மூணு வருஷம் கழிச்சு போறீங்க. எவ்வளவோ விஷயங்கள் மாறி இருக்கலாம்."
"நீங்க ஒண்ணு. தமிழ் படத்துல, ஒரு சின்ன கிராமத்து பொண்ணு, சென்னை பட்டணத்துல இல்லை ஊட்டியில போய் படிக்க போவா. கோடை விடுமுறையோ வேற விடுமுறையோ இல்லாத பள்ளி போல. வளர்ந்து பெரிய பொண்ணா, கிராமத்து வாசனை இல்லாம திரும்பி வர வரைக்கும், ஊரு பக்கம் தலை வச்சு படுக்க மாட்டா. இதை நம்புற ஊரு.
நான் அமெரிக்காவுல இருந்து போறேன். "சிவாஜி" படத்துல ரஜினி வந்த மாதிரி, நான் எத்தனை கோடி சேர்த்து வச்சுகிட்டு , ஊருல வந்து சேவை செய்ய போறேன் என்று வாயை புளந்துக்கிட்டு நின்னாலும் ஆச்சர்யப் பட மாட்டேன்."
"இதுக்கு மேல ஒண்ணும் சொல்லாதீங்க. என்னால ("சிரிச்சு") முடியல."
பி.கு. வெள்ளந்தியாய் மனிதர்கள் - இவர்கள், அழிந்து வரும் இனமா?
அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.
அவர்கள் இப்படி இருப்பது ignorance - அசிங்கம் என்று நண்பர் சொல்கிறார்.
நாட்டாமையாய் நீங்கள் - கருத்து சொல்லுங்க. கமெண்ட் பண்ணுங்க.
74 comments:
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு
திரும்புபவர்களின் எண்ணங்களை
நன்றாக சொல்லி இருக்கீங்க.......
அதுவும் அவர் நண்பர்கள் பற்றி
கூறியது மிகவும் சரி....
நாட்டாமை ஆகணும்னா சொம்பு
கொடுங்க...ஆலமரம் செட்டிங் வேணும்..
சீக்கரம் ரெடி பண்ணுங்க...
//அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.//
என் கருத்தும்.
நாட்டமை செட்டிங் பொருட்களை, முருகனிடம் கொடுத்து விடுகிறேன். சரியா? ஹா,ஹா,ஹா,ஹா.....
அமெரிக்கா, லண்டன் எல்லாம் துபாயில் உள்ள தெரு பெயர்கள்."]]
ஹா ஹா ஹா
உங்க நண்பர் வெள்ளந்தியான்னு யார்ன்னா தீர்ப்பு குடுக்கட்டும்
ஆனா நெம்ப விவரமானவருங்கோ
(பின்ன உங்க நண்பராச்சே ...)
அவங்க வீட்ல உள்ளவங்க வெள்ளந்தி தான்
தீர்ப்பு சொல்லியாச்சி.
இப்படி பட்ட இடத்திலேர்ந்த அவருக்கு வாழ்த்து சொல்வதா - அந்த நிலையை இழந்து இந்த உலகின் கருப்பு பக்கங்களுக்குள் வந்துட்டாரேன்னு வருத்தம் தெரிவிக்கிறதா - தெரியலை.
கிராமம் - என்றும் அழகு தான் கசடுகள் இருந்தாலும்.
//அவர்கள் இப்படி இருப்பது ignorance - அசிங்கம் என்று நண்பர் சொல்கிறார்.//
அறியாமை அவர்கள் தவறல்ல என்றே தோன்றுகிறது.
கடைசியில உன் நண்பர் ஒண்ணும வாங்கிட்டு போகலேன்னு சொல்லு.. இது தன இந்தியர்களோட மனநிலை. அவருக்கு நல்ல பொண்ணா கிடைக்க என் வாழ்த்துக்கள். கிடசுட்டாலும் பாவம் அந்த பொண்ணு. இன்னொசென்ட்டா இருப்பது தனி மனிதனுக்கு வேணா அழகா இருக்கலாம் ஆனா இந்தியாவுக்கு இல்ல.. உங்க நண்பர் சொல்லற மாதிரி அசிங்கமும் இல்ல......
”போடா போடா உலகம் பெருசு, நீ ஒரு பொடி டப்பா” அப்படிங்கற பாட்டுதான் ஞாபகம் வருது.. நாம எல்லாருமே ஒரு வகையில் குண்டு சட்டியில் குதிரை ஓட்றவங்க தான். அந்த கிராம மக்களுக்கு 40 மைல் தூரம் வரைக்கும் தான் உலகம்னா, நமக்கு ஒரு 4000 மைல் வரைக்கும் தெரியும் (at least தெரியரதா நினைச்சுக்குறோம்).. எல்லாமே relativeness தான்..
நிறைய நேரங்களில் வெள்ளந்தியாய் இருப்பதே சுகம்..
நல்ல எழுதியிருக்கீங்க.. எப்டியிருந்தாலும் நண்பர்தான் ஜெயிக்க போறார்...
உண்மையைச் சொல்லலாந்தான். ஆனா...
Hi..
The above said is 100% true in rural village..Even I too came from the same kind of place.
Thanks chitra to written such a nice artcile..
I am in singapore and Naanum veettukku pokum pothu sister's kku gold, appavuku watch, ammavukku "avanka pakkura ponna kalyanam pannanum"(every time i am escaping from them)..appuram relation's kku belt,beer,etc.... kodumai :)..
Still the peoples are not knowing about city culture and even i dont want the city culture to be mingled with rural..
I choose to live in rural because of the people's nature..
Thanks once again chitra to present such a nice one...
Karuppu
oru kiramaththan
குணங்கள் மாறிவிட்டன.
(கிராமத்து) மனிதன் ஃபிளைட்டில் ஏறிப்போய் தன் குணத்தையும், ஃபிளைட்டில் இருந்து இறங்கி மண்ணின் குணத்தையும் மாற்றிவிட்டான்.
//குணங்கள் மாறிவிட்டன.
(கிராமத்து) மனிதன் ஃபிளைட்டில் ஏறிப்போய் தன் குணத்தையும், ஃபிளைட்டில் இருந்து இறங்கி மண்ணின் குணத்தையும் மாற்றிவிட்டான்.//
I won't accept this pont..
Intha ulagam avanai matri vittathu,,,, If i will follow my own village characteristic's, can i sign in this world...no way..
Here(city) the peoples are living with two faces but this is not the case in rural...
As R.Selvakumar said,May be few of the peoples are trying to change the village culture( over vetti velai, veti banda..).. but no one can change the village nature... if some one trying to change he will be out from his native itself...
Karuppu
என்னைப் பொறுத்தவரை அவர்கள் அப்பு நிறைந்த அழகர்கள் தான்...ஏன் கிராமத்துப் பென்ணுக்கு என்ன குறைச்சலாம்? படிக்கலைன்னாலும் பாசமா இருப்பாங்க
மைதிலி சொன்ன மாதிரி கடைசில உங்க நண்பர் எதுவும் வாங்கலையா சித்ரா நல்ல தமிழன் ஆனா அப்பா அம்மாவும் அப்படித்தான் இருக்காங்க
இன்னும் பல மனிதர்கள் வாழ்ந்த சூழலை விட்டு வெளியே வர நினைப்பதில்லை. அவ்வளவு ஏன் ? நகர வாழ்க்கை சில தினங்களுக்கு பழகி விட்டாலே நாம் எதையும் துறக்க நினைப்பதில்லை. அவர்களும் அப்படியே. ஆனால் மாறி வரும் உலகில் இந்த அணுகுமுறை சில சங்கடங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நண்பர்களைப் பற்றிய கருத்து மிகவும் சரி. ஒண்ணு பாட்டில் கேப்பார்கள்,இரண்டு செலவுக்கு பணம் இல்லை என்றால் ஒரு வேலை இருந்தால் சொல்லு என்பார்கள். இது மூன்றும் கண்டிப்பாய் இருக்கும். வீட்டில் நாம் ஒருவருக்கு வாங்கிச் சென்று மற்றவருக்கு வாங்கவில்லை என்றாலே அல்லது மறந்து விட்டால் கருத்து வேறுபாடு வருவது சகஜம். இது எல்லாம் பார்த்தால் ஏண்டா வெளி நாட்டுக்கு வந்தோம் என்று ஆகிவிடும். என்னைப் பொறுத்த வரையில் வாங்கிச் சென்றால் என் வீட்டில் இது எல்லாம் எதுக்கு வீண் செலவு என்று திட்டுதான் விழுகும்.
ஆனால் கிராமம் குறித்த கருத்துக்கள் உண்மை இல்லை. தமிழ் நாட்டில் இப்போது நண்பர் சொல்வதைப் போல கிராமங்கள் இருப்பது மிகவும் அரிது. சாட்டிலைட் டீ.வீயும்,செல்போனும் மக்களை மாற்றி விட்டன. நன்றி சித்ரா.
வெளி நாட்டிலிருந்து வருவோர் அன்புக்காக ஏங்குகின்றனர். ஆனால் இங்கிருக்கும் சுற்றமோ அவர்கள் வாங்கி வரும் பொருட்கள் மீதே கண் வைக்கிறது. கிராமமோ நகரமோ யாராயினும் இதனை மாற்றி கொள்ள வேண்டும்! இது தான் இந்த நாட்டமையின் தீர்ப்பு.!!
யோசிக்க வேண்டிய விசயம்தான்.. காச மட்டுமே எதிர்பார்த்தா என்ன பண்றது? ஆனா அப்படிதான் இருக்காங்க.
இப்படி கிராமங்கள் இன்னும் இருப்பது அதிசயமே..இப்போது எல்லாம் எந்த நாட்டில் எந்த பொருள் நல்லா(Quality) இருக்கும் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் நாம் இருந்தாலும் நமக்கு தெரியாத பல விசயங்களை கிராமத்தில் உள்ளவர்கள் விளக்குகிறார்கள்.
"நம்ம முருகனுக்கு இப்படி ஒரு சோகமானு நினைச்சாலே, மனசு கேக்கலை. இன்னும் கொஞ்சம் ஊத்துப்பா" என்பானுங்க. "
இது கண்டிப்பா நடக்கும் அவர்க்கு மூணு வருசத்துக்கு ஒரு முறை,எனக்கு ஒரு வருசத்துக்கு ஒரு முறை
"மதுரைக்கு கூட்டிட்டு போய், "தங்க மயில்" கடையில் ஏதாவது ஒரு நகைக்கு, நான் மொய் எழுதுனா சரியாய் ஆயிடும்."
நல்ல வேளை ஏன் ரெண்டு சிஸ்டர்கும் கல்யாணம் ஆகிடிச்சு.இல்லேன்னா நானும் நம்ம ஊரு "சாரா ஜுவெல்லர்ஸ்" மொய் எழுதவேண்டி இருக்கும்.(ஏற்கனவே நெறைய மொய் துபாய்லே எழுதியாச்சு)
படுச்சு போட்டு வெளிநாட்டுக்கு போயிடு வந்திட்டா பெரிய ஆள் இல்ல அப்பன் ஆத்தா பேச்சு கேட்டு நடகோணும் எம்புட்டு பெரிய ஆளா இருந்தாலும் ......
ஆத்தா காட்ன பொண்ண கட்டனும் அவ மனச குளிர வைக்கணும் இது தான் இந்த நாட்டமையோட தீர்ப்பு...
ரசிக்கும்படியான உரையாடல் :)
வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் நிலை இது தான்.
///அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.///
இது மட்டுமே சரி.
innocence-ம், ignorance-ம் கலந்துதான் இருக்கிறது.. கிராமத்தில் innocence அதிகம். நகரத்தில் ignorance தான் அதிகம்.
:-)
//ஜெட்லி said...
நாட்டாமை ஆகணும்னா சொம்பு
கொடுங்க...ஆலமரம் செட்டிங் வேணும்..
சீக்கரம் ரெடி பண்ணுங்க...//
ரிப்பிட்டேய்....
சரி சரி .. இந்த ஓரு தடவை அட்ஜஸ்ட் பண்ணி தீர்ப்பு சொல்ல்லாம்..
“innocenceன்னு சொல்றவங்க ஓரு கூட்டமாவும், ignoranceன்னு சொல்றவங்க ஓரு கூட்டமாவும் ஆத்தா முன்னாடி தீ மிதிக்கோணும்... எந்த கூட்டத்துல அதிகமாக சாமி ஆடுறாங்களோ அவங்க பக்கம் நியாயம்.
இதுதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு... இத ஆராச்சும் மீறினாங்கன்னா.. அவங்களை பின்நவினத்துவ பதிவுகளை படிக்க சொல்லிருவோம்”
//சென்னை என்றால், "சினிமாகாரவுக" இருக்கிற இடம். அவ்வளவுதான்.//
இன்னாது , என்னைக்கூட தெரியாமா கீதே !! சினிமால , சென்னை இன்றதுக்கு சென்ட்ரல தான் காமிப்பாங்கோ இப்பல்லாம் - என்னத்தானே காமிக்கராங்கோ !!
//அவர் புலி பாருங்க. அப்படியே பாய்ஞ்சு பிராண்டுரதுக்கு. .............. எல்லாம், பெட்டி மாதிரி அடுக்கி வச்சு அழகு பாக்கத்தான்."//
அட நம்பள மேரி தான் !! ( மொத வரிய சொன்னேன் , பிலி )
எப்படிப்பட்ட குடும்ப பின்னணி, ஊர் பின்னணியில் இருந்து, முன்னேறி வந்து இருக்கிறார், பாருங்க.
சந்தோஷமாகத்தான் இருக்கிறது .ஒரு குக்கிராமத்திலிருந்து அத்தனை அறிவு வளர்ச்சியோடு சென்றவர் ...தம் சுற்றத்தாரின் சின்ன சின்ன ஆசைகளை ,பலரோடும் இளக்காரமாகப் பகிர்ந்து கொள்ளாமல் சந்தோஷமாக வாங்கிச் சென்றிருந்தால் அவர் பாராட்டப் படவேண்டியவர்.மாறாக தம் குடும்பத்தாரின் வெள்ளேத்தி இன்னசென்ஸ்,இக்னரன்ஸ் என்ற அடுத்தவருக்குத் தொல்லைதராத குணங்களைக் கொண்டிருந்த சுற்றத்தாரை தாழ்த்தியிருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.
அவர் Innocent இல்லை, அது கிராமிய மனம், அவர் இன்னும் அப்படியே இருந்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பரின் வாழ்க்கை மேலும் சிறப்படைய என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க.
ம்ம். அழகுதான்
அவங்க அப்படியே இருக்கட்டும். அப்படி தான் இருக்கணும். அவங்க அப்படி இருப்பதனால எதை இழந்தாங்க. நாம அப்படி இல்லாததால் எதை அடைந்தோம். நாகரீகம் மனித வாழ்வை எந்தளவு வளப்படுத்தியதோ, அந்தளவு சீரழித்தும் இருக்கு. நம் மண்ணை, அந்த மக்களின் உணர்வை கேலி பேசுவது மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது போலத் தான்.
சுவாரச்யமான எழுத்து நடை. நல்லாருந்துச்சு:)
"இதுக்கு மேல ஒண்ணும் சொல்லாதீங்க. என்னால ("சிரிச்சு") முடியல..
நகைச்சுவை .என்பது அடுத்தவரைச் சிரிக்க வைப்பது ..அடுத்தவரைப் பார்த்து சிரிப்பதல்ல.....
இந்த பதிவைப் படித்ததும் ,எனக்குள் முட்டிய வாக்கியம்..
you too chithra
கோமா மேடம்,
நான் "சிரிச்சு" என்று quotes உக்குள் போட்டதுக்கு அர்த்தம் உண்டு. அவர் கதையே சோகமா இருக்க,
தமிழ் திரை படங்களில் வரும் காட்சிகளை அந்த இடத்தில் சொல்லி மேற்கோள் காட்டியதை குறிப்பிட்டு தான் சொல்ல வந்தேன். அவரை பார்த்தோ, அவர் கதையை கேட்டோ அல்ல.
// "நம்ம முருகனுக்கு இப்படி ஒரு சோகமானு நினைச்சாலே, மனசு கேக்கலை. இன்னும் கொஞ்சம் ஊத்துப்பா" என்பானுங்க. "
//
வெடித்துச் சிரித்தேன் :))
அவரும் இப்படி இன்னொசண்டாவும், இக்னொரண்டாவும் இருந்தவர்தானே ஒருகாலத்துல? நாலு இடம் பாத்தவுடனே இவர் டீசண்ட் ஃபெல்லோ ஆகிட்டாராமா!! கிராமமோ, நகரமோ, உறவினர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. இவர் அவங்ககிட்ட ஒண்ணுமே எதிர்பார்க்கலையா (பணத்தைத் தவிர)? கொடுக்கல், வாங்கல் இல்லாத இடம் இல்லை.
சித்ரா
விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது
சந்தேகத்தை then and there தீர்த்துக்கணும்
அதைத்தான் செஞ்சேன்
நன்றி சித்ரா
உங்களல மாதிரி இந்தியாவுல2% இருக்கீங்க எங்களல மாதிரி கிராமத்தான் நிலை எனன ?பெத்தவங்களுக்கு சோறு கூட போட முடியல..?
சரியான காமெடிங்க. அருமையா எழுதியிருக்கீங்க
எனக்கு ஏனோ படிக்கும் போது சிரிப்பு வரல.., ஒரு வித எரிச்சல் தான் வந்துச்சு உங்க நண்பர் மேல .., நானும் கிராமாத்தான் என்பதால் கூட இருக்கலாம்..,
நகைச்சுவைக்காக எழுதியிருக்கிறீர்களா? அல்லது உங்கள் நண்பர் உண்மையிலேயே அப்படித்தானா என்று புரிய வில்லை.
உண்மையாக இருந்தால்....
"உங்கள் நண்பர் சொல்வது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை, தனியார் தொலைக்காட்சிகள், இல்லாத கிராமங்கள் இல்லை என்ற இன்றைய நிலை. கைபேசிகளே இல்லாத மனிதர்கள் என்ற இன்றைய சூழ்நிலையில் இவர், குடும்ப உறுப்பினர்களின் நாகரீக அறிவு வளர்ச்சிக்கு முயற்சிக்க வில்லை என்றே தோன்றுகிறது. (இதெல்லாம் தெரியாதது "அறியாமை" என்று நீங்கள் கூறுவதையே நான் மறுக்கிறேன்.) கிராமத்து மனிதர்களின் அனேக இயற்க்கை, விவசாயம், நடைமுறை வாழ்வு சார்ந்த விஷயங்கள் நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் இயந்திரங்களிடம் ஒப்படைத்துவிட்டு செயற்கை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எப்படி அவர்களை பற்றி சொல்ல அருகதை அற்றவர்கள்....
உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள், "மனமிருந்தால், மாற்றம் நிகழும்.. அவர்களையும், இன்றைய நாகரீக வளர்ச்சிகள் சென்றடையும்."
மிகவும் சுவாரசியமான உரையாடல். சில விடயங்களை சம்பந்தப் பட்டவர்கள் சூட்சுமமாகத் தீர்க்க வேண்டும். மற்றவர்கள் ஆலோசனையை விட அது தான் சிறந்தது.
ஹஹஹஹ முருகனுக்கு எனது அனுதாபங்கள்... வேற என்னத்தச்சொல்ல...
பதிவுக்காக நீங்களோ அல்லது கிண்டலுக்காக உங்கள் நண்பரோ எல்லோர் ஆசையையும் சற்று மிகைபடுத்தி இவ்வாறு கூறியிருக்கலாம் என நான் நினைக்கிறன்.
எங்கள் வீட்டை பொறுத்தவரை இதே போல் நான் திரும்பி வரும்போது எல்லோரும் "நீ இந்தியா வாப்பா, அதுவே எங்களுக்கு போதும்னு" தான் சொன்னாங்க.
மற்றபடி //அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.// இதுவே என் கருத்தும்.
பாவம்க அவரு. அவருக்கு புடிச்சத எதையும் செய்ய முடியல :(
ignorance - அசிங்கம் என்று நண்பர் சொல்கிறார்.
////////////////////////////////
Ignorace is Bliss gentelman.
நீங்கள் முதல் முதலாக ஒரு மொபைல் ஃபோனைப் பார்த்த குறுகுறுப்பு இன்று இருக்கிறதா? முதன் முதலாக ஒரு லாப்டாப்பை பார்த்தபோது உங்களுக்கு அதில் எல்லாம் தெரிந்திருந்ததா?
தங்கத்தை நேசிக்கும் பெண்களும் தான் சொல்ற பொண்ணைதான் பையன் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற அம்மாவும் மதுரைக்குப் பக்கத்துல இல்ல.. நியூஜெர்ஸியிலும் டோக்யோவிலும் கூட இருப்பார்கள்.
அவர்கள் விரும்புவது பொருளை அல்ல..என் பையன் என் தம்பி என் மச்சான் வாங்கிட்டு வந்தது என்று பெருமையடித்துக் கொள்ள.அதில் தானே அவர்களுடைய மகிழ்ச்சியின் உச்சக்கட்டம். மேடம்! உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்... அபத்தங்களை நினைத்து வாழ்க்கையின் ஆதார சந்தோஷங்களை இழந்து விடப் போகிறார்.
(போயா...போய் மத்தவங்களை சந்தோஷப் படுத்தற பாக்கியம் கிடைச்சிருக்கு..அனுபவிக்க வேண்டியதை விட்டுட்டு..பொலம்பிக்கிட்டிருக்க..நீ என்னமோ வால் ஸ்ட்ரீட்ல உக்காந்து அமெரிக்கன் எகானமியை ரிப்பேர் பண்ணிட்டு இருக்கற மாதிரியும்..இங்க இருக்கிறவனெல்லாம் அழகிரிக்கு அடியாளா இருக்கிற மாதிரியும்..)
அது எப்படி விடாம சிரிக்க வைக்கிறிங்க
கம்ப்யூட்டர் இல் அவர் புலி பாருங்க. அப்படியே பாய்ஞ்சு பிராண்டுரதுக்கு. ...
:))
கிராமமோ நகரமமோ வெள்ளந்தியா இருக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாலில்லாத நரி கூட்டத்தில் அவர்கள்..
- அழிக்கப்படும் இனம்..
நீங்களும் வெள்ளந்தியா இருந்தீங்கன்னா உங்களுக்கும் அவங்க கே்கிறதெல்லாம் வாங்கிட்டுபோக தோணும்.. ஆனா கலாச்சார மாற்றத்தில நீங்க கொஞ்சம் டெவலப் ஆனதும் வெள்ளந்தித்தனமும் அதிக உரிமை எடுத்திக்கிறதும் எரிச்சலா இருக்கும்.
உங்க பதிவெல்லாம் தொடரந்து வாசிப்பேன்.. நல்ல நகைச்சுவையா எழுதிறீங்க.. கொடுத்து வைச்சவர் சாலமன் அண்ணர்.. :)
அருமையா எழுதியிருக்கீங்க!!!
Chitra....Good one...what you have written is the truth...no doubt...and the situation might be changing....with more kids getting educated and getting out...albeit a bit slow...
and nobody is right or wrong...
And if a village person marries a city bred girl....it is quite natural that he will gradually move away from his family at native place...
Some may prefer to deny this...but the fact remains that people who are used to some sort of amenities will not be comfortable in a village setup.....so they try to avoid going there….
It is just my opinion...based on what little I have seen of life...
Where as a person brought up in a village..will not have any qualms when he returns there..as he had been comfortable there....when he/she was young..
GH
ரெட்டைவால் ' ஸ் said...///போயா...போய் மத்தவங்களை சந்தோஷப் படுத்தற பாக்கியம் கிடைச்சிருக்கு..அனுபவிக்க வேண்டியதை விட்டுட்டு..பொலம்பிக்கிட்டிருக்க..நீ என்னமோ வால் ஸ்ட்ரீட்ல உக்காந்து அமெரிக்கன் எகானமியை ரிப்பேர் பண்ணிட்டு இருக்கற மாதிரியும்..இங்க இருக்கிறவனெல்லாம் அழகிரிக்கு அடியாளா இருக்கிற மாதிரியும்..)///
Bull's eye
அருமையான பதிவு.
//அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன்.//.........
நானும் அப்படிதான் நினைக்கிறேன் சித்ரா!
மிக்க நன்றி. என் நண்பரின் புலம்பலுக்கு காரணமாக நான் நினைப்பது - ஊரில் இருக்கும் எதிர்பார்ப்புகள். அவர்களுக்கு வேண்டியது போல நடக்காவிட்டால், "படிச்சிட்டு வெளியில போனா, யாரையும் மதிக்காம போய்ட்டான்" என்று முடிவு கட்டி பேசுவதும், படித்து வெளியேறி வர ஆர்வமாய் இருக்கும் பிள்ளைகைளையும் அடக்கி வைத்து விடுவார்களோ என்ற பயம் உண்டு. அந்த உணர்வும், தனக்கு வேண்டியது போல வாழ்க்கை அமையாது போய் விடுமோ என்ற கவலையும் தான் அவருக்கு.
கிராமத்து பொண்ணை கண்ணாளம் கட்டிக்க பொல்லுங்க. முன்னால கசக்கிற மாதிரி தெரிந்து பின்னால அடிக்கரும்பு மாதிரிக்கு இனிக்கும்.
சித்ரா..கவனிச்சீங்களா.அவர் பேச்சிலே கள்ளம் கபடமில்லாத ஒரு அழகு இருக்கு.இதுதான் கிராமம்.அது எந்த அமெரிக்காவிலயோ சுவிஸ்லயோ கிடைக்காது.அவர் அப்பிடியே இருக்கட்டும்.விடுங்க.
மக்கள் மனதை எங்கே பார்க்கின்றார்கள்...பணத்தை அல்லவா பார்க்கின்றார்கள்...பணம் இன்று வரும்..நாளை போகும்...மனம்..?
பதிவு அருமை..
வாழ்க வளமுடன்,
வேலன்.
கிராமத்துக்காரன்
கிராமியமனத்துடன்
நகரத்து
யோசனையுடன்
வெளிநாட்டு
வாசத்துடன்
இருந்தால் நல்லதுதான்னு நினைக்கிறேன்
[பி கு
டீச்சர் கையில் பிரம்பிருக்கா தப்பாசொல்லிடா கொஞ்சம் அஜஸ்பண்ணிக்கோங்க டீச்சர், அடிச்சா வலிக்கும்]
நெகிழ வைத்த அழகிய பதிவு. இப்பொழுதெல்லாம் பல கிராமங்களில் கூட்டம் கூடுவதில்லை. பத்து பதினைந்து வருடங்கள் முன்னால் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள் என்றால் கிராமமே கூடிவிடும். வெள்ளந்தியான மனிதர்கள் என்றும் அழகு.
தங்க சொம்பு, கரை வெட்டி, துண்டு எல்லாம் அனுப்பி வையுங்க தீர்ப்பு சொல்லுறேன்
//சென்னை என்றால், "சினிமாகாரவுக"// பெட்டி அடையாளங்கள் // லண்டன் , அமெரிக்கா எல்லாம் துபாய் தெருப்பெயர்கள் // சிவாஜி ரஜினி மாதிரி ..... நகைச்சுவை ததும்பிய இடங்கள் ... இப்ப வெள்ளந்தித்தனம் பெருமளவில் தொலைந்து போய்விட்டது ... எல்லாம் கள்ள மயம், கணக்குமயம் ஆகி கொண்டிருக்கிறது . முருகன் குடும்பம் மாதிரி ஒன்றிரண்டு உள்ளது.... அதையும் அறியாமை என்று சொல்லி மாற்றிவிடுவோம் ... சுவையாக சொல்லியுள்ளீர்கள் .. வாழ்த்துக்கள் .
அழகை எதுக்கு கெடுக்கணும்..
விட்டிடலாம்.
நல்லா எழுதி இருக்கீங்க சித்ரா.
இன்னமும் இப்படியும் மனிதர்கள் இருக்காங்க.
ஆனால் எண்ணிக்கையில் குறைவாகவே
மிகவும் இயல்பான கருத்துதான். நாம் நினைப்பது போல் கிராமத்து மனிதர்கள் அவ்வளவு வெள்ளந்தியானவர்கள் அல்ல என்பது என் கருத்து.
மிகவும் இயல்பான கருத்துதான். நாம் நினைப்பது போல் கிராமத்து மனிதர்கள் அவ்வளவு வெள்ளந்தியானவர்கள் அல்ல என்பது என் கருத்து.
நானும் உங்க கட்சிதான் சித்ரா!அப்புறம் இப்ப கிராமத்துல யாரும் உச்சி வழிய தைலம் வச்சி நுனிவரை ரிப்பன் வச்சு கூந்தல் முடிக்கிறாங்களா? முத்துவடிவுக பலர் கப்பலோ,விமானமோ ஏறிட்டாக...அப்புறம் ஐசு,காத்ரீனால்லாம் அரைக்காசு.
நல்ல எழுதியிருக்கீங்க..
வந்தது என்னமோ லேட்டு..
ஆனா போட்டாச்சு வோட்டு..
நல்லா எழுதி இருக்கீங்க.. இன்னும் கொஞ்ச காலம் தான்.. கிராமங்களை அப்புறம் நாம் புத்தகத்துல தான் பாக்க முடியும்..
நிதர்சன உண்மை என்றைக்குமே கசக்கும்..
நன்றி..
அவர்கள் இப்படி இருப்பது innocence - கிராமத்தின் அழகு என்று நினைக்கிறேன் தோழி.
வெள்ளாந்தியா இருப்பார்கல் ஆனால் விபரமானவர்கள் என்று சொல்வார்கள்.
நல்ல பகிர்வு சித்ரா/.
இப்போது எந்த கிராமம் கிராமமாக இருக்கிரது.எல்லாமே
சுயம் இழந்து விட்டது!!
கிராமத்துல இருந்து படிச்சு முன்னேறி வந்துட்டா கிராமத்து பெண்ணைக்கட்டக்கூடாதுன்னு இருக்கா என்னங்க இது.. கட்டிக்கிட்டு நாகரீகம்ன்னு இவங்க நினைக்கிறத எல்லாம் சொல்லிக்கொடுத்தாப் போச்சு..
அவர்களுக்கு என்ன தேவைன்னு அழகா புரிஞ்சு வச்சிருக்கார்.. அக்காக்கு நகை வாங்கி கொடுக்கிறது சந்தோசம் ( தம்பி பெரியாள் ந்னு சொல்லிக்கிறதுல சின்ன சந்தோசம் புகுந்த வீட்டுல அது தப்பா ).. அப்பாக்கு தன் பையன் பெரியாளாகிட்டான்னு பெருமையா சொல்லிப்பதில் மகிழ்ச்சி.. அம்மாக்கு என்ன வேண்டும் ..தன் பையனை நல்லா பாத்துக்கற பெண்.. எல்லாருமே இவருக்கு நல்லது தானே நினைக்கிறாங்க.. அவர் இன்னும் நல்லா இருப்பார்..
Post a Comment