கடந்த சில நாட்களாக பயணங்கள் ........ இன்ன பிற வேலைகள்......
பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது. ஆனால், நிறைய விஷயங்கள் உண்டு. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
"இடுக்கண் வருங்கால், நகுக...." என்ற வள்ளுவர் வாக்கு, எந்த அளவுக்கு நடைமுறைக்கு உதவும் என்று யோசித்தது உண்டு. வாழ்க்கையில், சில சமயங்களில் அதை கடைப்பிடித்த போது, உண்மையில் சூழ்நிலையின் இறுக்கம் குறையத்தான் செய்கிறது. தாமும் உறுதியாய் நின்று, மற்றவர்களின் மேல் தங்களின் கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க , நகைச்சுவை உணர்வு நன் மருந்தாக அமைந்து விடுகிறதே!
சவுண்டு பார்ட்டி:
ஒரு கட்டிடத்தில் இருந்து 15 அடிகள் கால் தவறி கீழே விழுந்து விட்ட ஒரு தோழியின் தந்தையை (தமிழ் நாட்டில் இருந்து அமெரிக்கா வந்தவர்) காண, ஒரு மருத்துவமனையின் Surgical ICU வுக்குள் நுழைந்தோம். முதுகு தண்டில், எலும்புகள் சில பகுதிகளில் நொறுங்கி விட்டதால், இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்து இருந்தது. முதல் surgery மட்டுமே , பத்து மணி நேரங்களுக்கு மேலாக நடந்தது. வலியின் மிகுதியில் சத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தவரை பார்க்கும் போது, பாவமாக இருந்தது.
ஆதரவுடன் கரம் பற்றி, "அங்கிள், ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டேன்.
அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து, "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்," என அந்த நேரத்திலேயும் அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது, அவருடன் சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.
முயற்சி திருவினையாக்கும்:
ஒரு நண்பரின் மனைவி, கடலை மாவில் ஏதோ இனிப்பு செய்து (முயற்சி செய்து!!!!) கொண்டு இருந்தார். அவரிடம், "என்ன ஸ்வீட் செய்யப் போறீங்க?" என்று நான் கேட்டதும்,
எந்த வித பதட்டமும் இல்லாமல், "சித்ரா, நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை.... கூழ் மாதிரி வந்தா, பேசன் (besan = கடலை மாவு) கீர் ; இளக்கமாக வந்தால், பேசன் பர்பி; கட்டியாகிப் போச்சுனா, மைசூர் பாக். அதையும் மீறி, கல்லு மாதிரி ஆகி விட்டது என்றால், இருக்கவே இருக்கு எங்கள் வீட்டுக் குப்பை கூடை. எந்த ஸ்டேஜ்ல வரப் போவுது தெரியாம கிண்டிக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுங்க."
(கடைசியில், மைசூர் பாக்குக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட ஒரு புது பக்குவம் வந்தது என்பது வேற விஷயம்! எண்ணிப் பார்த்துட்டேன். என் பற்களின் எண்ணிக்கை குறையவில்லை. தப்பிச்சேன்டா, சாமி! அந்த இனிப்புக்கு, நாங்க வைத்திருக்கிற பெயர்: "கல்"லூர் பாக் )
"பால்" சோறு:
பார்டிக்காக உணவு தயாரித்து கொண்டு இருந்த தோழிக்கு உதவியாக அவளது அம்மாவும் நானும் இருந்தோம். அப்பொழுது அங்கே தன் குழந்தைக்கு சோறு ஊட்ட வந்த இன்னொரு தோழி, சூடான சாதம் எடுத்து தட்டில் போட்டு விட்டு, fridge உள்ளே இருந்த கிண்ணத்தில் இருந்ததை எடுத்து சாதத்தில் ஊற்றிய பின் தான், தான் எடுத்தது தயிர் இல்லை, மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள். அப்பொழுது தோழியின் அம்மா, " என்னம்மா இது? தோசை மாவுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கே?" என்று கேட்டார்கள். இவள் முகம் கோணாமல் - சளைக்காமல் - சட்டென்று, " ஆன்ட்டி, நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. வித்தியாசம் தெரியல," என்று பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.
சுவாசத்தில் கலப்பாயே:
என் அமெரிக்க தோழி ஒருத்திக்கு கொஞ்சம் depression . ஒரு
change of place க்காக எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது, Jaya Max இல் சில பாடல்களை, அவளுடன் சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன். தொடர்ந்து வந்த மூன்று பாடல்களில், ஹீரோ ஆசையுடன் முத்தமிட நெருங்குவதும், ஹீரோயின் மேடம் முகத்தை திருப்பி கொண்டு விலகி விடுவதுமான வழக்கமான சீன்கள். அதை கவனித்த தோழி, "ஹீரோக்கள் முத்தமிட வரும் முன் , வாய் துர்நாற்றத்துக்கு ஏதாவது செய்து இருக்கலாம். ஹீரோயின்கள் சகிக்க முடியாமல் எப்படி டீசன்ட் ஆக விலகி விலகி போகிறார்கள்," என்று சொன்ன பிறகு தான், ஒரே விஷயம், அடுத்தவர் பார்வையில் - வேறு அர்த்தத்தில் - எப்படி எல்லாம் தெரிகிறது என்று நினைத்து சிரித்தேன். அவளுடைய depression நேரத்தில், எப்படி பேசுவது - எதை பற்றி பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் அது வரை இருந்த இரண்டு பேரும், அதன் பின் பல விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது.
காதல் அணுக்கள் - neutron- electron:
நண்பர் ஒருவர், ஒரு மாதமாக சரியாக சாப்பிடாமல் - தூங்காமல் - இரவு பகல் - சனி ஞாயிறு - என்று ஒரு Human Health research project இல் மூழ்கி, அவரது லேப் வேலையே (lab work ) கதி என்று இருந்தார். அதன் பின்னும் அவர் எதிர்பார்த்து இருந்த ரிசல்ட் வராததால், வெறுத்து போய்விட்டார். மீண்டும் இப்படி வொர்க் செய்ய வேண்டுமே என்ற எரிச்சல் வேறு.
வீட்டுக்கு வந்ததும், மிகவும் ஆதரவாக அவர் மனைவி, " நீங்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டு, சோபாவில் ரிலாக்ஸ் செய்ங்க. நான் காபி கொண்டு வரேன்," என்றார்.
அந்நேரம், நமீதா பாடல் ஒன்று தமிழ் சேனலில் ...... கோபமும் எரிச்சலுமாய் வந்து எங்களோடு உட்கார்ந்தவர், நமீதாவை பார்த்து விட்டு சத்தம் போட்டு சிரித்தார்.
"செல்களை (cells) மொத்தமாக பார்த்தால், ரிலாக்ஸ் ஆகிறது. அதே, ஒற்றை ஒற்றை செல்லாய் பார்த்து cell research செய்து fail ஆகிவிட்டால், stress அதிகம் ஆகி விடுகிறது," என்று சொல்லி சிரித்தார்.
"Laughing faces do not mean that there is absence of sorrow; but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare.
A great sense of humor can make the dull moments, brighter.