நேற்று எங்களுக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க....
இன்று, வேறு ஒரு பதிவு எழுத தயார் ஆகி கொண்டு இருந்த பொழுது, ஒரு சீரியஸ் பதிவு எழுத வேண்டியதாகி விட்டது.
மன்னிக்கவும்.
இங்கு பரப்பரப்பு இல்லாத பெரிய நியூஸ்.... ஆனால், இந்தியாவில் பரபரப்பா பேசப்படுற நியூஸ் இது, என்று நண்பர் ஒருத்தர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார்.
http://timesofindia.indiatimes.com/world/us/Duped-Indian-students-ignored-red-flags/articleshow/7393658.cms
இதை விட தெளிவாக எழுத முடியாதே ...... உண்மையை சொல்லி இருக்காங்க....
உனக்கென்ன தெரியும்னு கேட்காதீங்க..... இங்கே வெட்டியாக இருக்கிற நேரம் எல்லாம், சில Indian Students' Association உடன் சேர்ந்து ஏதாவது ப்ரோக்ராம் organize செய்வதில், ஒத்தாசையாய் இருப்பது எனது பொழுதுபோக்கு. அவர்களின் மன நிலைகளும் எண்ண அலைகளும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புகளும் கிடைத்து இருக்கின்றன.
அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க, "லார்டு லபக் தாஸ்" வீட்டாளுக மட்டும் தான் என்று இருந்தது தான் அந்த காலம். இப்போ, யார் வேண்டுமானாலும் படிக்க வரலாம் என்கிற அளவுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் வந்து இருக்கின்றன.
எல்லாம் செய்து கொடுத்தாலும், கடைசியிலே மாங்கு மாங்குனு படிச்சு எழுதினால் தான் ஒழுங்கான டிகிரி கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மாணவர்களுக்குரிய F1 டைப் விசா பெற்று, வருபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் பெருகி கொண்டு தான் வந்து இருக்கிறது. இதுவும் நல்ல விஷயம் தான்.
http://www.nriol.com/oisnet/usastudentstats.asp
அந்த லிங்க்ல் உள்ளது படி, 2009 கணக்கு படி அமெரிக்காவுக்கு அதிகமாக படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தில் வந்து இருக்கிறது. அந்த வருடம், 103,260 மாணவர்கள், இங்கே வந்து இருக்கிறார்கள். இதுவும் நல்ல விஷயம் தான்.
மேட்டர் என்னன்னா, இப்படி படிக்க வர எல்லோருமே, "நல்லா படிச்சு, டிகிரி வாங்குறதுதான் என் உயிர் .... என் மூச்சு.... என் கடமை..... என் கட்டுப்பாடு......" என்று வருவது இல்லை. பெயர் வாங்கி உள்ள பெரிய பல்கலைகழகங்கள் எல்லாம் சேர்ந்தால், "rules and regulations" ரொம்ப பேசுறாங்கப்பு..... எனக்கு நோகாமல் நொங்கு எடுக்கணும். அதுக்கு என்னா வழி?" அப்படின்னு இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்னாலேயோ ..... இல்லை வந்தவுடன், பிரத்யேக Forum ...காரம் மூலமாகவோ எங்கே சீப்பா fees இருக்கும்? எங்கே அமெரிக்க மண்ணுல காலை வச்ச உடனேயே ..... இந்த கையில ஒரு வேலையை கொடுத்து, அடுத்த கையில டாலர்ஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும் என்று பார்த்து கிட்டு ..... யோசிக்காமல் குதிச்சுடுறாங்க....
வாசித்து பார்த்தால், குறுக்கு வழியில கைலாசம் போக எப்படி ஆலோசனை கேக்குறாங்க..... அது தப்புன்னு சொல்றவங்க பேசுறதை, இந்த காதில் வாங்கி .... அந்த காதில் எப்படி விடுறாங்க என்று தெரியும்.
இந்த மாதிரி மாணவர்களை டார்கெட் செய்து, சில online universities .... சட்டத்தில் இருக்கிற ஓட்டையை .... பெருசாக்கி, தங்களுக்கு சாதகமாக மாற்றி, இந்த மாணவர்களுக்கு வசதியாக்கி கொடுத்து இருக்காங்க. ஒரு டிகிரி வாங்கி முடித்த பின் , அல்லது முடிக்கும் தருவாயில், தாங்கள் படித்து இருக்கும் துறை சம்பந்தமான வேலைகளில் - trainee - ஆக இருக்க மட்டுமே பயன்பட கொடுக்கப்படும் CPT மற்றும் OPT work permits ..... இவர்களுக்கு, university il சேர்ந்த முதல் வாரத்திலேயே கிடைக்கும் படி செய்து விடுகிறார்கள். தங்களின் துறையில் மட்டும் இல்லாமல், பெட்ரோல் பங்க் வேலையில் இருந்து IT வேலை வரை, எல்லா வேலைகளையும் செய்ய இந்த வொர்க் பெர்மிட் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
இதனால், நியாயமாக அந்த வேலை கிடைக்க வேண்டிய இன்னொரு இந்தியருக்கு கூட அந்த வேலை கிடைக்காமல் போய் விடும் நிலை உள்ளது.
இந்த பல்கலைகழகங்களில், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தான். அதுவும் கண் துடைப்புக்காக மட்டுமே. அதை அமெரிக்காவில் எந்த மூலையில் இருந்து கொண்டும், இவர்கள் படிப்பது போல, பாவ்லா கட்டிக் கொள்ளலாம். எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில், கட்டிய fees க்காக ஒரு diploma டிகிரியோ .... ஒரு வெத்து மாஸ்டர்ஸ் டிகிரியோ கொடுத்துடுவாங்க.
இந்த டிகிரியை வைத்து அமெரிக்காவில் எங்கும் வேலை வாங்க முடியாது என்பதை, இந்த மாணவர்கள் புரிந்து கொள்வதில்லை. பெரும்பாலும் இந்த universities எல்லாம், blacklisted ஆக இருக்கும். அதை பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை.
இப்படிப்பட்ட பல்கலைகழகங்களை தவிர்க்க சொல்லி, எத்தனையோ Forum மற்றும் பல்வேறு வழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு.
இப்பொழுது பிடிபட்டு, இழுத்து மூடப்பட்டு இருக்கும் Tri-valley University - ஒரு சீனப் பெண்மணியின் கவனிப்பின் கீழ் இருந்து இருக்கிறது. அந்த பல்கலைகழகத்தின் கட்டடத்தை பார்த்தாலே, அது போலி என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.
அப்படி இருந்தும் அதில் சேர்ந்தது - 90 % மேலாக இந்தியர்கள்தான். H 1 B வொர்க் விசா வாங்கி வந்து இங்கே வேலை பார்க்கும் சில இந்தியர்களின் கணவருக்கோ, மனைவிக்கோ H 4 விசா (Dependent visa) கொடுக்கப்படும். ஆனால், இந்த விசாவை வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது. ஆனால், இப்படிப்பட்ட பல்கலைகழகங்களில் சேர்ந்து கொண்டு, தங்கள் விசா status மாற்றி கொண்டு, வேலைக்கு செல்பவர்களும் உண்டு.
இந்த மாய வலையில், தெரிந்தோ தெரியாமலோ விழும் சில மாணவர்கள், தாங்கள் படிக்க வந்த நல்ல பல்கலைகழகங்களில் இருந்து, மாற்றி கொண்டு - டிகிரி பற்றி கவலைப்படாமல் உடனே பணம் சம்பாதிக்கும் ஆசையில், இங்கே சேர்ந்து விடுவதும் உண்டு.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், Tri-Valley University இல், இது வரை மாட்டி இருக்கும் பெரும்பாலானோர், ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்களில் பலர், தாங்கள் எந்த மாதிரி பாதையில் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை நன்கு தெரிந்து கொண்டவர்களே.
மாட்டாத வரை, செய்வது தவறல்ல என்ற மன நிலையை என்னவென்று சொல்வது?
இந்த பல்கலைகழகம் பற்றிய சந்தேகம் வரவும், அரசாங்கம் விசாரணை ஆரம்பித்து விட்டது. விசாரிக்கப்பட்ட மாணவர்களில் சிலர், வெளியே தகவல்கள் கொடுத்து அலெர்ட் செய்து இருக்கிறார்கள். அதை பலர் புறக்கணித்து இருப்பது, இப்பொழுது வெளியே வந்து இருக்கிறது. வார்னிங் மெசேஜ்களை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்ட வெகு சிலரே, உடனே வேறு மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டு விலகி விட்டார்கள்.
Tri-Valley University இல் உள்ள மாணவர்களின் தகவல்கள் அத்தனையும் அரசாங்கத்தின் கையில் .....
இதில் வேடிக்கை என்னவென்றால், நானூறுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முகவரியாக, ஒரே வீட்டின் முகவரியை தந்து இருக்கிறார்கள்.
இப்பொழுது, அந்த ஊரில் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருக்கும் அத்தனை மாணவர்களும் உடனே Immigration office, தொடர்பு கொள்ள சொல்லி உத்தரவு வந்து இருக்கிறது. இதில், H 4 விசாவை மாற்றி விட்டு, "அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாய் இருக்கும்" இந்தியர்களுக்கு வயிற்றில் புளி கரைத்து இருக்கிறது. ஏனெனில், அவர்களது இந்த டம்மி வொர்க் பெர்மிட் விசா status ரத்து செய்யப்படும் போது, அவர்கள் "out of status" ஆக நேரிடலாம். அதனால், தன் கணவரையோ, மனைவியையோ விட்டு விட்டு இந்தியா திரும்பி செல்லும் நிலை நேரிடலாம்.
இதை போன்ற நிலைகளை தவிர்க்க, இங்குள்ள Immigration lawyers மற்றும் Telugu Association of North America (TANA) வின் உதவிகளை நாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஊரிலேயும், sensation news ஆக்கி, இந்திய அரசாங்கத்தை உதவிக்கு அழைக்கிறார்கள்.
நம்ம நாட்டில் இருக்கும் அரசாங்க விதிகளை மதித்து - அதற்கு உட்பட்டு இருப்பது, ஒவ்வொரு இந்தியரின் மனப்பக்குவத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது ஆக இருக்கலாம். ஆனால், தாய் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வரும் போது, அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து, அதற்கேற்ப நடக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறதல்லவா?
நம்ம ஊரில், "நம்ம நாட்டாமை வீட்டு பையானாம்.... கேஸ் போடாதே!" என்றோ, "நம்ம MLA வுக்கு வேண்டியவராம். கண்டுக்காதே!" என்றோ சொல்லி, தவறுக்கு தண்டனை இல்லாமல் போவதை சாதரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்ட பலருக்கு, இது கஷ்டம் தான்.
இருந்தாலும் இந்த மாணவர்களுக்கு, எந்தவித discrimination ம் அமெரிக்க அராசங்கம் காட்டவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அது மட்டுமே செய்யப்படுகிறது. விசாரணைக்குப் பின், தெரிந்தே தவறு செய்தவர்களின் விசா - பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள், வேறு எங்கும் விதிகளை மீறி, சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் முழுதும் எடுத்து முடிக்கும் வரை, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க chip transmitters காலில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவர்களை, சிறையில் அடைக்க வகை இருந்தும் (giving fraudulent information, knowingly) அப்படி செய்யாமல் , அவர்களை Voluntary deportation - தாங்களாகவே முன் வந்து இந்தியா திரும்ப செல்ல, அமெரிக்க அரசாங்கம் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அப்படி திரும்பி இந்தியா செல்ல விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம், இவர்களுக்கு உதவும் வண்ணம் மாற்று ஏற்பாடு செய்து, அமெரிக்காவிலேயே தங்கும் படி செய்ய எதிர்பார்க்கிறார்கள்.
அது எப்படி உனக்குத் தெரியும் அப்படின்னு கேட்கிறீங்களா? TANA மூலமாக இந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் TANA Students' Chair ஆக இருக்கும் அஷோக் கொல்லாவுடன் (Ashok Kolla) தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர் இந்த பல்கலைகழகத்தில் படிக்கவில்லை என்றும், இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள ஆந்திர மாணவர்களின் பிரதிநிதியாக தான் இருப்பதால், TV 9 முதல் கொண்டு பேட்டி தந்து இருப்பதாக தெரிவித்தார். அந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும் இந்திய அரசாங்கம் தலையிட்டு - ஆவன செய்ய வேண்டும் என்று மாணவர்கள்
விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த பல்கலைகழகம் தான் தவறான தகவல்கள் தந்து மாணவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சொன்னார்.
அந்த மாணவர்களை, victims என்ற பொழுது மட்டும் வந்த சிரிப்பை, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன். ஒரு பதிவுக்கு உள்ள கமென்ட் போடுவது போல இருந்தால், "ஹா, ஹா, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி, ஹி, ஹோ, ஹோ, ஹோ, ஹோ, ஹையோ ஹையோ ஹையோ ..... " என்று சிரித்து இருக்கலாம். ப்ச்.....
ஈஸியாக கிடைக்குதே என்று தெரிந்தே சென்ற இந்த மாணவர்கள், victims என்றால், அங்கே தமிழ் மீனவர்களை சுட்டு கொண்டு இருக்கிறாங்கப்பா..... அவங்களை என்னவென்று சொல்வது? முதலில் அதை கவனிங்கப்பா... அப்புறம் இதை பற்றி கவலைப்படலாம்.
ஒழுங்காப் படிக்க வந்து, நல்ல பல்கலைகழகங்களில் இருக்கும் எல்லா இந்திய மாணவர்களையும், Garnier Shampoo products சொல்ற மாதிரி, அமெரிக்காவில் பத்திரமாக பார்த்துக்கிறாங்க.... மரியாதையாகத்தான் நடத்துறாங்க. அவர்களுக்கு, இந்த பிரச்சனை எதுவும் இல்லை.
வேலியில் ஓடுவது ஓணான் என்று தெரிந்தும், எடுத்துக் கொண்டு, இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால்? ............ ம்ம்ம்ம்ம்ம்...........
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும், எங்கள் மாணவ குழுவில் ஒரு தமிழ் நண்பர், "இந்த ஆந்த்ரா பசங்களே இப்படித்தான், சித்ரா.... எப்படியாவது loophole பிடித்து அமெரிக்காவில் தங்க புளப்பை பாத்துக்கிடுவாங்க. இப்போ மாட்ட ஆரம்பிச்சிருக்காங்க!" என்று சொல்லிக் கொண்டு இருந்த பொழுது - அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர், "Hey man! Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது. "சித்ரா, எனக்குத்தான் அவங்க ஆந்த்ரா.... இவங்களுக்கு, இந்தியர்கள். என்னையும் அவர்களையும், இந்தியர்களாக பார்க்க மட்டும் தான் இந்த அமெரிக்கனுக்குத் தெரியும். ஆந்த்ரா, தமிழ், மலையாளம் என்று இல்லை.... அதை ஒரு நிமிஷம் மறந்துட்டேன். ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்.
என்னத்த சொல்ல......???? நான் அவர் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தேன்.