எங்கள் சின்ன வயதில், பாக்கியம் என்ற பாட்டி, எங்கள் ஊரில் இருந்ததை மறக்க முடியாது. வெள்ளந்தி மனம் கொண்டவர். சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல், மற்றவர்களிடம் கேட்பார். "என்ன பாட்டி, இது கூட தெரியாதா?" என்று யாராவது கேட்டால் போதும் - "தம்பி,
முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்? எனக்கு எப்படி தெரியும்?" என்று சொல்லி பொக்கை வாய் காட்டி சிரிப்பார்.
அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ? அந்த பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமோ? எனக்கு தெரியாது. ஆனால், கடந்த நவம்பர் 12 ந் தேதி மாலை ஐந்து மணியில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள், எனக்கு பல அர்த்தங்களை, கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றன.
அர்ச்சனாவும் அர்ப்பணாவும் பல கனவுகளுடன், மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர்கள். இந்த டிசம்பர் மாதத்துடன், தங்களது இரண்டரை வருட படிப்பை முடித்து விட்டு, ஜனவரியில் இருந்து வேலை தேடுவதில் மும்முரமாக இருக்க திட்டம்.
இந்த சூழ்நிலையில், எனது நெருங்கிய தோழிகளுள் ஒருத்தியான அர்ப்பணா, நவம்பர் 12, ஒரு பெரிய விபத்தில் சிக்கி சில மணி நேரங்களில் எங்களை விட்டு சென்றாள். அர்ச்சனா, பின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு - Spinal Cord Injury - ஆகி paralyzed ஆக மருத்துவமனையில் critical care இல் இருக்கிறாள். அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இரட்டை பிறவிகள் - எனக்கு இரட்டை தோழிகள் - அர்ச்சனாவும் அர்ப்பணாவும்
விபத்து நடப்பது சகஜம்தான். அதில் மரணம் சம்பவிப்பது, நியூஸ் ஐட்டம் என்று ஆகி விடுகிறது - அது நம் வீட்டிலேயே நடக்கும் வரை.
"முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்?"
எங்கள் ஊரில் இந்தியர்கள், மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்போம். அதிலும் 35 - 40 பேர்கள், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக இங்கு வந்து செல்பவர்கள். இந்த சம்பவம் எங்களை, உலுக்கி எடுத்து இருக்கிறது.
நடந்தது நடந்து விட்டது. அழுதோமா - முடித்தோமா - போனாமா என்று இருக்கும் சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது, தொலைத்து விடுகிறோமோ?
சிலர் அர்ச்சனாவை கவனித்து கொள்ள - வேறு சிலர், அர்ப்பணாவை இந்தியாவுக்கு அனுப்பவதில் உள்ள பேப்பர் வொர்க் செய்ய வேண்டியது இருந்தது. Indian Embassy , இந்த மாதிரி இந்தியர்கள் பரிதவிக்கும் நேரங்களில், இன்னும் கொஞ்சம் ஆதரவாக பேசி - விஷயங்களை நல்லபடியாக விளக்கி - செய்ய வேண்டிய காரியங்களை, அவர்களது வேலையாக/கடமையாக மட்டும் நினைக்காமல் (just an official work) , கலங்கி போய் இருக்கும் உள்ளங்களுக்கு கரிசனையாக செய்யும் உதவியாக - கொஞ்சம் passion உடன் செய்து இருக்கலாமோ? Indian Embassy நிலைமை, எண்ணம் தெரியாமல் எதுவும் நான் சொல்ல கூடாதோ?
நான் கடந்த வாரத்தில், கொஞ்சம் சிரிக்க மறந்துதான் போனேன். அது மட்டும் அல்ல, என் உணர்ச்சிகளையும் ஒதுக்கி வைத்தேன். அர்ப்பணாவுக்காக அழவா? அர்ச்சனாவுக்காக கவலைப் படவா? அழுது கொண்டு இருக்கும், மற்ற இந்திய மாணவர்களை ஆறுதல் படுத்தவா? அர்ப்பணாவை "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து கவனிக்கவா? உடனே இங்கே கிளம்பி வர துடித்தும், வர முடியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோரின் மன நிலையை நினைத்து கலங்கி நிற்கவா?
அர்ச்சனாவுக்கு இது வரையில் அர்ப்பணாவின் மறைவு பற்றி தெரியாது. பெற்றோர்கள் வந்த பின், அவர்களே நேரம் பார்த்து சொல்லி கொள்ளட்டும் என்று காத்து இருக்கிறோம். ஆனால், இரட்டை பிறவிகளுக்கே உள்ள அமானுஷ்ய உணர்வு எதையோ அவளுக்கு எச்சரிக்கிறது என்று நினைக்கிறோம். அர்ப்பணா பக்கத்து அறையில், இவளை போல்தான் எழுந்து வர முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள் என்று சொல்லி இருக்கிறோம். நம்பாமல், போட்டோ வேண்டும் என்றாள். எங்கள் தோழி, வினு, அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள். அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது?
மஞ்சள் உடையில்: அர்ப்பணா - மற்றவர், அர்ச்சனா - இந்த புகைப்படத்தை, "தனி மரங்களின்" இந்த வருட தீபாவளி பார்ட்டி போது, நவம்பர் ஐந்தாம் தேதி அன்று, நான் எடுத்தேன்.
எல்லாவற்றையும் கடந்து, என்னை திணற அடித்தது எது தெரியுமா? ஒரு நொடியில், அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர். சமீபத்தில் தான், படிப்பு முடித்து விட்டு சிகாகோ ஏரியாவில் வேலையில் சேர்ந்தார். மே மாதம் தான் திருமணம் ஆகி உள்ளது. ஜூலை மாதம் தான், அவர் மனைவி அமெரிக்கா வர முடிந்தது. தன் மனைவிக்கு தான் படித்த University யையும் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக Kentucky வந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
மதியம், எங்கள் வீட்டில், ஒன்றாக நாங்கள் சாப்பிட்டதும், நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டார்கள். எனக்கு, இரவு உணவு அனைவருக்கும் சமைக்கவும், இன்னும் பிற வேலைகளும் இருந்ததால், வரவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்கள் எங்கள் வீட்டை விட்டு கிளம்பிய இரண்டு மணி நேரத்தில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
நிதினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் மனைவிக்கு சில காயங்கள். அவற்றிற்கு மருந்து இட்டு, வீட்டில் இருந்தே கவனித்து கொள்ள சொல்லி, மருத்தவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள். அவளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு.
எனது ஆருயிர் தோழியை, என்னை விட்டு பிரிந்து செல்ல வைத்தவன், வேறு யாராவது என்று இருந்து இருந்தால், மனதார திட்டி இருப்பேன். ஆனால், என் கவனிப்பில், என் பொறுப்பில், என் வீட்டில், guilty feelings உடன் கண் முன் நிற்கும் போது, என்ன செய்வது?
இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள். முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே! ஆனால், சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது. என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல், எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? என் எதிரி என்று யாராவது இருந்தால் கூட, இப்படி ஒரு மன நிலையில் சிக்க கூடாது என்று வேண்டி கொள்கிறேன்.
மருத்துவமனையில், அர்ச்சனாவை பார்த்து விட்டும் வருத்தப் படுவேன் - வீட்டில், நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன். நான் நல்லவளா? கெட்டவளா?
பி.கு.: அர்ப்பணா, நவம்பர் 21 அதிகாலை, இந்திய நேரப்படி , இறுதி சடங்குக்காக ஊருக்கு வந்து விட்டாள். அவள் பெற்றோருக்கு விசா கிடைத்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள், அர்ச்சனாவை கவனிக்க வந்து விடுவார்கள்.
நிதின், போலீஸ் ரிப்போர்ட்க்காக காத்து கொண்டு இருக்கிறான். அவன் மட்டுமே காரணமா? அவனது காரை இடித்த அடுத்த காரை ஓட்டியவருக்கும் பங்கு உண்டா என்று தெரிய வரும். லீகல் நடவடிக்கைகள், அதன் பின் எடுக்கப்படும்.
நாளை, "அர்ப்பணாவுக்கு அர்ப்பணம்" ......... எழுதலாம் என்று இருக்கிறேன்.