Sunday, December 19, 2010

விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?

 கிறிஸ்துமஸ் சீசன் ........  எங்கே பார்த்தாலும் அலங்காரங்களும் .....  அழகு விளக்குகளும்....பரிசு மழையும் விருந்துகளும்....... வேட்டும் வெட்டும் தான்....

எல்லாம் ஜாலியாகத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம்,  சர்ச்ல நடந்த ஒரு விருந்துக்கு, ஒரு அமெரிக்க தோழி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.  மேலும், அந்த விருந்து - ஒரு fund raiser என்பதால், நன்கொடைக்கு குறைந்தது இருபது டாலர்கள் ஆவது கொடுக்க ரெடி ஆக வரச் சொன்னாள். ....... சூப்பர் விருந்துதான்........ கேக்ஸ் .... ஐஸ் கிரீம்னு கொடிகட்டி பறக்கும்னு ஓகேனுட்டேன்......  ஏதோ கல்யாணத்துல பேருக்கு மொய் எழுதிட்டு, மொக்கிட்டு வர மாதிரி ...... ஹி, ஹி, ஹி , ......

 வாசலில் வைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது.  அந்த நம்பர் குறித்து வைத்து இருக்கும் டேபிள் - chair - இல் அமர்ந்து கொள்ள சொன்னார்கள்.  விருந்துக்கு டோக்கன்???  ம்ம்ம்ம்.....

உள்ளே நுழைந்து பார்த்தால்,  15  பேருக்கு மட்டும் ஒரு பெரிய வட்ட மேஜை.... அழகான விரிப்புகள்,  கோல்ட் ரிம் போட்ட தட்டுக்கள்,  விலை உயர்ந்த நாப்கின்ஸ்,  கோல்ட் plated fork , ஸ்பூன் என்று  ரிச் லுக்கில் அமர்க்களப் பட்டது.

அடுத்து  சின்ன மேஜைகள்.  அதில், சாதாரண தட்டுக்கள்,  காகித நாப்கின்ஸ்,  பிளாஸ்டிக் போர்க், ஸ்பூன் என்று ரொம்ப சிம்பிள் ஆக இருந்தது.  35 பேர்கள், அங்கே உட்காரும் வண்ணம்  மிடில் கிளாஸ் லுக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அடுத்து  தரையில்,   பத்து பத்து பேராக -  ஐந்து குழுக்களாக -  அமர்ந்து சாப்பிடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தரை விரிப்பு கூட கிடையாது. மண் கிண்ணங்கள் வைக்கப் பட்டு இருந்தது.  தண்ணீருக்கு சின்ன குவளைகள். அவ்வளவுதான்.

எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் குழப்பமும்...... ஏன் இந்த பாராபட்சம்?  அதிகமாக நன்கொடை வழங்குவோருக்கு  என்று பிரித்து வைத்து இருப்பார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன் நம்பர் படிதான் விருந்துக்கு அமர சொன்னார்கள்.  அமைதியாக அமர்ந்தோம். எனக்கும் தோழிக்கும்   சாதாரண நடுத்தர மக்களின்  இருக்கைகள் கிடைத்து இருந்தன.  பெரிய மேஜையை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாலும்,  மண் கிண்ணத்தை விட இதுவே தேவலாம் என்று தோன்றியது.  தப்பு ....தப்பு.... தப்பு.... அப்படி நினைக்கிறது தப்பு.... என்று மைன்ட் வாய்ஸ் சொன்னாலும்,  ம்ஹூம்......

உணவு பரிமாறப்பட்டது..... அலங்கார மேஜைக்கு - கோழி - விலை உயர்ந்த Filet Mignon என்று எல்லாமே மணம் கமழ கமழ கொண்டு வைத்தார்கள்.  எல்லாமே உயர்ந்த ரக பானங்கள் - உணவு பதார்த்தங்கள்.


எங்கள் மேஜைக்கு,  ஆளுக்கு இரண்டு பிரட் டோஸ்ட் - கொஞ்சம் வெண்ணையுடன், மற்றும்  சிறிது வெள்ளை சாதம் அதற்கு ஏற்றார் போல ராஜ்மா மாதிரி வழவழ கொழகொழனு  பீன்ஸ் வகை ஒன்று இருந்தது.  (எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிட்னி பீன்ஸ்.......ஐயே..... போன பதிவில், நான் சொல்லி இருந்ததை கேட்டு விட்டு, யாரோ என் சாப்பாட்டு மேல கண்ணு, காது,  மூக்கு, கை, கால் எல்லாம் வச்சுட்டாங்கபா!)  சுத்தமான தண்ணீரும் தரப்பட்டது.

கீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க.......  அந்த கிண்ணத்தில், வெறும்   வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது.  அதுவும் ஏதோ ஒரு வயசு குழந்தைக்கு இருக்கும் அளவுதான்.   தண்ணீரும் கொஞ்சமே!


எல்லோருமே சாப்பிட சங்கோஜப்பட்டு கொண்டு இருந்தார்கள்...... குறிப்பாக,  அலங்கார மேஜைகாரர்கள்.......  அவர்களால், எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி சாப்பிடவும் முடியவில்லை - வேஸ்ட் பண்ணவும் தோன்றவில்லை. நெளிந்தார்கள்.   அனைவரும் அமைதியுடன் கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முனைந்தோம்.  சாப்பிட முடிந்ததற்கும் அதிகமாய் உணவு வகை - ஒரு பக்கம் ;   ஏதோ ஒன்றை வயிறு நிறைய சாப்பிடும் படி  ஒரு பக்கம் ;  கால் வாயிற்றுக் கூட சாப்பிட வழியில்லாமல்,  மற்றவர்கள் ஒரு பக்கம் ............

விருந்துக்கு ஏற்பாடு செய்த குழு,  முன்னால் வந்தது.  அவர்கள் தெரிவித்த அறிக்கையில்,
" இன்றைய விருந்து உங்களுக்கு வித்தியாசமாக இருந்து இருக்கும். இதற்கு பெயர் - Hunger Banquet.
இந்த பாகுபாடு கண்டு, உங்களுக்குள் பல எண்ணங்கள் தோன்றி இருக்கலாம்.  நாங்கள் நூறு விருந்தினர்களை அழைத்தோம்.

அலங்கார மேஜையில் 15 பேருக்கு - அடுத்த மேசைகளில் 35 பேருக்கு - கீழே 50 பேருக்கு என்று இடம் ஒதுக்கினோம்.
உலகில்,   இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் -  பிடித்ததோ இல்லையோ,  ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள்  - சரியான  உணவு  இல்லாமல்  - கொடிய  பசியில்  வாடி  கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த ஏற்ற தாழ்வு - முரண்பாடுகளை உங்களுக்கு விளக்குவதே எங்கள் நோக்கம்.

பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்.
அறுவடை கால ஆசிர்வாதங்களை  பிறருடன்  பகிர்ந்து கொள்ள, 
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் விருந்து உண்ணலாம். 
கிடைப்பதை சந்தோஷமாக - இறைவனுக்கு நன்றி சொல்லி,   உண்ணுங்கள் . 
இது கூட கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறவர்களை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பசி மட்டும் நீங்க போதுமானது இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருக்காதீர்கள். 
மற்றவர் பசி நீக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவ மறக்காதீர்கள்.
எக்காலத்திலும் உணவையோ உணவு பொருட்களையோ விரயம் ஆக்காதீர்கள்.

இன்று நாங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பசியில் மரித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு உணவு வழங்க நன்கொடை வசூலித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் இயன்றதை தாருங்கள், " என்று பேசி முடித்தனர்.

எல்லோர் விழிகளிலும் கண்ணீர்.   தங்கள் உணவை , மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணத்தான் தோன்றியதே தவிர, கிடைத்த வரை லாபம் என்ற மனப்பாங்கு யாரிடமும் இருக்கவில்லை.   எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன்.  அவை ஏற்படுத்தாத பாதிப்பை,  அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.
இந்த நல்ல மெசேஜ் தான்,  எனது புத்தாண்டு மெசேஜ் ஆகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொண்டாட்ட நேரங்களிலும்,   அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்  புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
Merry Christmas and Happy New Year!

ஒரு அறிக்கை:

 அன்புள்ள தந்தை குலமே - தாய் குலமே ............ உங்கள் பொன்னான வாக்குகளை - இலவச  பிளாஸ்டிக் குடம் - இலவச டிவி - இலவச வாஷிங் மஷீன் - பிரியாணி பொட்டலம் - எதுவும் கொடுக்காமல், தமிழ்மண தேர்தலில்  கூசாமல்  மூன்று "தொகுதிகளில்" நிற்கும் எனக்கு -  வோட்டு போட சொல்லி கேட்கிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது..... இருந்தும்,  அன்பால் சேர்ந்த கூட்டம், கொஞ்சம் அசந்து இருக்கிற நேரத்தில் கேட்டால், வோட்டு போட்டுருவாங்களேனு கேட்டுப்புட்டேன்.

பெண்பதிவர்கள் தொகுதி (பதின்ம வயதினிலே)  - நகைச்சுவை தொகுதி  (சமையல் அட்டூழியம்) -  பயண கட்டுரை தொகுதி  (அமெரிக்காவில் ரங்குஸ்கி)

வெற்றி பெற்றால் - எனக்கு கொண்டாட்டம் - தோல்வி என்றால் அந்த சோகத்தை, எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். 


முக்கிய அறிவிப்பு:

 கிறிஸ்துமஸ் லீவு விட்டாச்சு..... நம்ம ப்லாக்குக்கும் சேர்த்துதான்..... அதனால்,  ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.  உங்கள் பதிவுகளிலும் - பின்னூட்டங்களில்  - அதுவரை சந்திக்க இயலாது என்று  பீலிங்க்ஸ் உடன் அறிவித்து  கொள்கிறேன்.  மக்காஸ், அதற்குள்  என்னை மறந்து விடாதீங்க....  மீண்டும் ஜனவரி ஐந்தாம் தேதி அன்று - புது பொலிவுடன் - புத்தாண்டில் சிறப்புடன் சந்திப்போம்.

Tuesday, December 14, 2010

கேள்வி நேரம் (தொடர் பதிவு)

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தப்போ,  நம்ம "Tasty Appetite -  Jay" 
- ஒரு  தொடர்  பதிவு  கேள்வி நேரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்காங்க.  இந்த கேள்விகள் எல்லாம், சமையல் ராணிகளின் கோட்டைக்குள்ளே  சுத்திக்கிட்டு இருந்து இருக்குப்பா.  Jay - ஒரு வம்பு பண்ணலாம்னு நினைச்சு,   இதுல என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க....  நல்லா இருங்க, மக்கா!

வெட்டி பேச்சில் வந்த  "சமையல் அட்டூழியம்"  என்ற பதிவை   பார்த்த பிறகு, மக்கள் பெருவெள்ளத்தின் கோரிக்கை:  "தயவு செய்து சமையல் குறிப்பு எதுவும் நீங்க போட்டுராதீங்க,"  என்று.  இன்னைக்கு வரைக்கும், சத்தியத்தை காப்பாத்திட்டு வாரேன்.  ரைட்டு!

வெயிட் அ மினுடே போர் ௫ மினுட்ஸ்.  ஏதாவது புரிஞ்சுதா?  Jay Madam அனுப்பிய  கேள்வி எல்லாம் ஆங்கிலத்தில் இருந்துச்சா -   அதை அப்படியே டைப் பண்ணா,  சரி வரல. .  இருங்க ..... முழி  பேத்துருவோம் .... சாரி ... மொழி பெயர்த்து விடுவோம்.

1.  உங்களுக்குப் பிடித்த  உணவு வகை (cuisine -  உதாரணம்: சைனீஸ்?  மெக்சிகன்? இடாலியன்? தாய்? இந்தியன்?) 
அல்லது உணவு ஐட்டம்  எது?
மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள்  அல்லது   நாலு கால் + சின்ன வால்   (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்)  அல்லது  காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ  "மீன்"!)  வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும்   ஓகே தான்.   இல்லைங்க,  அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா   என்று எல்லாம் நான்  பார்க்கிறது இல்லை. 


2.  If you could have any four people, from any where in place, over for dinner, who would they be?
 சிறப்பு விருந்தில்,  கூட இருக்க விரும்பும் நான்கு பேர் .......
1.  என் தட்டில் இருப்பதை "தட்டி" கொண்டு போகாதவர்.
2.   நன் சாப்பிடும் போது, என்னை அழ - கோபப்பட - எரிச்சல் பட வைக்காதவர்.  அதாவது, என் தட்டில் துப்பி வைக்காதவர்.
3 .  உப்புக்கு பதில் சீனியையோ - சீனிக்குப் பதில் உப்பையோ கலந்து வைக்காதவர்.
4 . மிக முக்கியமாக,   நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து  பில் பே (pay)  பண்ணக் கூடியவர்.
இந்த நான்கையும் செய்யக் கூடிய நான்கு பேர்தான்.......

3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்? 
(What made you to  decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட,  ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......


4 .  புதிய வாசகர்களுக்கு, உங்கள் ப்லாக்கை எப்படி விவரித்து சொல்வீர்கள்?
(How would you describe your blog  site to new readers?)
நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.

5.  நீங்கள் இந்த உலகத்தில் இருந்து அழித்து விட நினைக்கும் ஒரு உணவு பொருள் எது?
(If you could just banish any one food, from the earth, what would it be? )
Tofu போட்டு சமைத்த பாம்பு கறி.   இரண்டுமே உவ்வே..........

6.   உங்களுக்கென  இருக்க விரும்பும் ஒரு சூப்பர் பவர் எது?
( What’s the one super power that you wish you had?)
 சூப்பர்  Sonic வேகத்தில், எல்லா இடத்துக்கும்  பறந்து போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும் இல்லை.... ம்ம்ம்ம்........இப்போதைக்கு,  சூப்பர் பவர் மட்டும் இல்லை,  வெறும் பவர் டிடர்ஜென்ட் சோப்பு  கூட என் கையில் இல்லையே...... அவ்வ்வ்வ்.......


Jay , என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல.  ஆனால், நீங்களா யாராவது வந்து மாட்டிக்கிட்டீங்கனா கொண்டாட்டம் தான்..... ஸ்டார்ட்டுங்க! 

Sunday, December 12, 2010

அப்பாவுடன் அரட்டை நேரம்

எங்களின் முதல் அமெரிக்க பயணத்துக்கு முன், என் அப்பாவிடம் ஒரு நாள் வழக்கம் போல  பேசி கொண்டு இருந்தது,  இன்று நினைவுக்கு வந்தது.

"அப்பா,  காந்தி தாத்தாகிட்ட அவங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி, வெளிநாடு போகப் போற என்கிட்டே சத்தியம் எதுவும் வாங்கலியா அப்பா?"
"ஏலே,  நீ இந்திய மண்ணை விட்டு தானே போற?  இந்திய அடையாளத்தை விட்டு  விட்டா போற?  சத்தியம்லாம் எதுக்குல?"
"ஆனாலும்,  என் மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை, அப்பா."
"உங்க  அம்மாவும் நானும் வளர்த்ததுல, எங்களையே குத்தம் கண்டுபிடிக்க சொல்றீயால?"

"இல்லைப்பா. அறிவுரைனு......"
"ஆமால. நான் பத்து வாட்டி அமெரிக்கா போயிட்டு வந்துட்டேன் -  உனக்கு அறிவுரை சொல்றதுக்கு.  இங்கே இருக்கிறதை வச்சுக்கிட்டு, அங்கே இருக்கிறதுக்கு  என்னத்தல சொல்ல?  நீ அங்கே எப்படி எப்படி நடந்துக்கணும்னு கடவுள் புத்தி தருவாரு."

 "சித்ராமா, வருஷத்துக்கு ஒரு முறையாவது வர முடியுமாலே?"
"தெரியலப்பா.  போய் பார்த்த பின் தான் சொல்ல முடியும்.   அமெரிக்காவுக்கு போறதற்கே  வருஷத்துக்கு ஒரு வாட்டி வான்னு சொல்றீங்களே. எத்தனை தமிழ் படம் பார்க்கிறீங்க.  சின்ன வயசுல ஒரு பொண்ணு,  "கை வீசம்மா கை வீசு" ஸ்டைல்ல அப்படியே டாட்டா காட்டிட்டு ட்ரைன்ல கிளம்பி, இந்தா இருக்கிற  சென்னைக்கு படிக்க போனா  அப்புறம், காலேஜ் முடிச்சு வர வரைக்கும் ஊர் பக்கமே  எட்டி பார்க்காம - வராம இருப்பாளே. அவள் குடும்பத்து மக்களுக்கே அவ எப்படி இருப்பான்னு தெரியாம வளர்ந்து, ஹீரோயின் ஆக வந்து நிப்பாளே!"

(இந்த படம் பாருங்க... இதில் ட்ரைன் எங்கே இருக்குதுனே தெரியல. அவ எப்படி இடம் பிடிச்சு, அதில் ஏறி வர முடியும்? அதான், வரலியோ?

"ஆமாலே,  அவ படிக்கிற ஸ்கூல்ல லீவு கூட கிடையாது. போனவ என்ன ஆனா என்று யாரும் கவலை பட்டதாவே தெரியாதுல."
"அதானே,  அதையும் படம்னு - கதைனு - பார்த்தோம்ல - அதை சொல்லணும்."

"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா..... சென்னைக்கு போயிட்டே அரையும் குறையுமாத்தான் டிரஸ் பண்ணிட்டு வருவாளுக.  அமெரிக்கா போய்ட்டுனா?    கிராமத்துல நாட்டமை குடும்பம் அப்படி ஒரு கௌரவம் - கலாச்சாரம் பார்க்கும். பொண்ணு மட்டும் - கயித்த அத்துதான் கழுதை - எடுத்துதான் ஓட்டம்னு  -  பாஞ்சிக்கிட்டு இருக்கும்."
 "ஹா, ஹா, ஹா, ஹா, ஹா.....  மக்களை முட்டாளா ஆக்குறதுக்குன்னே கதை எழுதுவாங்க போல, அப்பா."


"என் நண்பர் ஒருத்தர் சொன்னது ஞாபகம் வருதுல.  அமெரிக்காவுல  ஒரு சமயம் ஒரு தமிழ் டாக்டரை ,  பெரிய விருந்துக்கு அழைச்சாங்களாம்.  அவர் மனைவிக்கு கூட போக முடியல.  கணவர் வந்ததும்,  விருந்து பத்தி கேட்டுருக்காப்புல.  எல்லாத்தையும் சொல்லி இருக்காரு.  அப்புறம்,  அவரு மனைவி ஆசையாய்,  வந்த பொண்ணுங்க போட்டு இருந்த  டிரஸ்சு - நகைங்க -  பத்தி கேட்டாளாம்.
அதுக்கு அவரு,  " நான் டின்னெர்க்கு போனப்போவே எல்லோரும் டேபிள் சுத்தி உட்கார்ந்துட்டாங்க.  டேபிள்க்கு மேல,  தெரிஞ்ச அவங்க  தோள் பகுதி எல்லாம்  ஏதும் போட்டு இருந்தாப்புல தெரியல. டேபிள்க்கு கீழே குனிஞ்சு என்ன போட்டு இருந்தாங்க என்று பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அதனால், எனக்கு எதுவும் தெரியாது.  ஒண்ணும் கேட்காத," என்றாராம்."

"ஹா, ஹா, ஹா,......   சரியா போச்சு, அப்பா! குளிச்சிட்டு அப்படியே துண்டை கட்டிக்கிட்டு வந்தாலும் யாருக்கும் தெரியாது போல."
" அவங்க ஊரில தானே அப்படி  இருக்காங்க. இருந்துக்கிட்டு போகட்டும். "

"ஆமாம்,  அப்பா.  இன்னும் கொஞ்ச வருஷத்துல  தமிழ்  பொண்ணுங்க கூட அப்படியெல்லாம் டிரஸ் பண்ணிக்கிட்டு  இங்கேயே சுத்தப் போகுதுங்க."
"இப்போவே அவன் அவன் ஒரு தினுசா ஆகாயத்துல பிறந்து,  லண்டன்ல  வளர்ந்து,  உலகத்தை சுத்திட்டு,  தப்பான ஸ்டாப்ல தமிழ்நாட்டுல  இறங்கிட்ட மாதிரிதாம்ல  நடந்துக்கிறாங்க.  அதுக்காக அவங்களை எல்லாம் நாடா கடத்திட்டோம்? சும்மா இருலே!"

(கீழே படத்தில், அப்பாவின் நினைவஞ்சலி நாளில் (நவம்பர் 28)   நடந்த "ஆதலால் காதல் செய்வீர்!"  புத்தக வெளியீட்டு விழாவில், அப்பா எழுதிய பல புத்தகங்களை கொண்ட  மேடை அலங்காரம். படத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும். அவர்,  பட்டிமன்றங்களுக்கு - வழக்காடு மன்றங்களுக்கு -  நடுவராக இருந்தவரும்  கூட.)
 

இப்படியே எங்கள் பேச்சு கலகலப்பாக நீண்டு கொண்டே போனது.   எங்க அப்பா,  எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும்,  அவரை நாங்கள்  நினைக்காத நாளு இல்லை.  அவரிடம் பேசும் கருத்துக்களை மிஸ்  பண்ணாத நாளும் இல்லை.  ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர்.  அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க,  எடுத்து விடுறேன்.  எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது.   அது ஆசிர்வாதமே!  இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.

Tuesday, December 7, 2010

"ஆசிமோ" - எந்திரன்

Hello, World!

 எந்திரன் படம் பார்த்துட்டு வந்து மாதங்கள் ஆகி போச்சு....  படம் நல்லா இருந்துச்சா - இல்லையா - அது சரியா - இது சரியா - அது சரியில்லை - இதுல குறை என்று மத்தவங்க பேசிக்கிட்டு இருந்தப்போ,   எனக்கு சின்ன புள்ள மாதிரி,  ஒரே ஆர்வக் கோளாறு ஆகி போச்சு.   எனது  ஆர்வம் எல்லாம் எப்போ "சிட்டி"  மாதிரி ஒரு ரோபோவை கண்டுப்பிடிக்க போறாங்க -  விஞ்ஞானி வசீகரன், சிட்டியை அறிமுகப் படுத்தின மாதிரி அதை எப்போ,  எப்படி, யாரு  அறிமுகப்படுத்துவாங்க - படத்தில வர மாதிரி இருக்குமா - இல்லை, வேற மாதிரி இருக்குமா  என்று ஒரே நினைப்ஸ் தான்.  நிறைய அதை பத்தி வாசிக்க ஆரம்பித்தேன்.

அப்படி ஒரு நாளில் தான்,  ஏற்கனவே Honda கார் கம்பெனி - ஜப்பான்ல Humanoid Robot Research க்கு முன்னோடியாக இருந்து கொண்டு -  2007 ஆம் ஆண்டு, ஒரு மாடல் அறிமுகப்படுத்தி இருக்காங்க என்று தெரிஞ்சிக்கிட்டேன்.   அதன் பெயர் - சிட்டி இல்லை - ஆசிமோ .    Humanoid research செய்து வரும் அனைவருக்கும், இப்பொழுது செல்ல பிள்ளையாக இருப்பது, இந்த ஆசிமோ தான்.  இது,  பத்து வருட ஆராய்ச்சி வேலையில் உருவான குழந்தை அல்ல,  இருபத்திரண்டு வருட ஆராய்ச்சியின் ஆக்கம்.

http://asimo.honda.com/

அது இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் தான் இருந்தாலும், உலக நாடுகளுக்கு அது ஏற்கனவே பயணம் செய்ய ஆரம்பித்து, மற்ற விஞ்ஞானிகளுக்கு ,  Humanoid Robot குறித்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக செல்ல ஒரு புது வழியைக் காட்டி கொண்டு இருக்கிறது.  (இன்னும் வில்லன் விஞ்ஞானி  யாரும்  "ரெட் சிப்" போட்டு விட்டு வேடிக்கை பார்க்கலியே...... தப்பிச்சோம்!)

ஆசிமோவை - அவர்கள் பயன் படுத்த நினைக்கும் காரியங்களும் கிட்டத்தட்ட "எந்திரன்" படத்துல சிட்டி செய்ற வேலைகளுக்காகத்தான்.  - தீ விபத்தில் மக்களை காப்பாற்றுவது,  மருத்துவ உதவி,  Toxic சூழ்நிலையில் சுத்தப்படுத்தி உதவுவது ........ (ஆஹாங்...... இன்னும் உணர்வுகள் - டூயட் - ரேஞ்சுக்கு ஆராய்ச்சி போகல...... ஹோண்டா மக்காஸ், சீக்கிரம் ....சீக்கிரம்....... வேலையை பாருங்க........ )

ஆசிமோ - உண்மையான எந்திரன்  வீடியோவை பார்த்தேன், மக்கா.  சூப்பர்.  எந்த நிமிடமும் அந்த ஹெல்மெட்டை கழட்டி விட்டு, ஒரு ஆளு  வந்து ஹாய் சொல்ற மாதிரியே தோணுச்சு. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....   இரண்டாவது முறை வீடியோ பார்க்கும் போதுதான், அது முழுவதும் எந்திரன் - மனிதன் இல்லை என்றே என் மூளைக்கு ரிஜிஸ்டர் ஆச்சு. (சரி,  சரி, கற்பூர புத்திக்கு ஒரு லெவல் கம்மிதான் ......)

சென்செர் (Sensors)  மற்றும் கேமராக்கள் வைத்து - எதிலும் தடுக்கி விழாமல் balance செய்து அது நடப்பதை கூட, இந்த வீடியோவில் விளக்கி சொன்ன பின்,  இன்னும் ஆர்வமும் வியப்பும் கூடி விட்டது. நீங்களும் பாருங்களேன். 



http://www.youtube.com/watch?v=cfaAiujrX_Y

பூம் பூம் ரோபோடா..... ரோபோ டா.......
பூம் பூம் - ஆசிமோடா..... ரோபோடா......

ஹையோ....ஹையோ...... இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கிறது.  ஒழுங்கா Physics வகுப்புகளில்,  கொட்டம் அடிக்காமல் படிச்சு இருந்தால்,  இன்னும் நல்லா புரியுமே....   அதனால் என்ன, இனிமேலா  நான் விஞ்ஞானியாக  ஆகப் போறேன்?.......  ஆசிமோவை பார்த்து,  வியந்து நிற்கத்தானே போறேன்....  அதற்கு  இந்த  அளவுக்கு "ஞானம்"  போதுமே! ஹி, ஹி,  ஹி ,ஹி.......

நான் டென்த்  படிக்கும் (???) போதுதான் கடைசியா அறிவியல் புத்தகத்தை தொட்டது.  இறுதி தேர்வு எழுதியதும்,  மூணு தடவை தலையை சுத்தி தாமிரபரணி ஆத்துல புத்தகத்தை மிதக்க விட்டாச்சு.  காமர்ஸ் குரூப் இரு கரம் நீட்டி  அழைக்க, ஏதோ எதிர்காலத்துல Reserve Bank of India வே என்னை நம்பித்தான் இருக்க போகுதுன்னு ஒரு நினைப்புல,  சந்தோஷமாக சேர்ந்தாச்சு.  ச்சே,  நிறைய சாதித்து இருக்க வேண்டிய ஒரு நல்ல விஞ்ஞானியை ( ஹலோ, நான் என்னை சொன்னேன்!)   உலகம் இழந்துடுச்சோ?

யாரது,  என் பஞ்ச் டயலாக்,  "  நினைப்ஸ் தான்,  புளைப்ஸ் கெடுக்த்ஸ்," னு என்கிட்டேயே சொல்றது?  பிச்சிப்  புடுவேன் பிச்சி!   ஹா, ஹா, ஹா, ஹா.......

  Bye for now, World!


Sunday, December 5, 2010

ஒரு வினாடியில் "வடை" போச்சே!

இரண்டு சம்பவங்களை, இன்று  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  சென்ற வாரம்,  எங்க பக்கத்து ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்:

வீட்டில் எல்லோரும் வெளியே சென்று இருந்த நேரத்தில் - அந்த வீட்டு   குடும்ப தலைவர்,  தன் துப்பாக்கி எடுத்து தற்கொலைக்கு முயன்று விட்டார்.  சுட்ட அடுத்த நொடியில், அவர் நினைத்த படி உயிர் போகவில்லை.   மரண பயம் மனதில் படற,  தானே அவசர உதவிக்கு 911 போன் கால் செய்து உதவி நாடி இருக்கிறார்.  ஐந்து நிமிடங்களுக்குள்,  உதவி வந்து மருத்துவமனையில் சேர்த்தும் பயன் அளிக்காமல், சில மணி நேரங்கள் கழித்து இறந்து விட்டார்.


இறக்கும் முன், மரண வாக்குமூலமாக அவர்  மருத்துவர்களிடம் தெரிவித்தது என்ன தெரியுமா?  "சுடும் வரை,  எனக்கு பயம் இருந்தது.  எனக்கு இருந்த கஷ்டங்களை மட்டுமே நினைத்து கொண்டே இருந்தேன்.  பயம் குறைந்தது. உடனே சுட்டு விட்டேன். அடுத்த நொடியே, நான் நினைத்தது போல இறக்காமல் இருந்த பொழுது,  வாழ்க்கையின் அருமை புரிந்தது.  மரண பயம் வந்து விட்டது. என் பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றி விட்டது. நான் வாழ ஆசைப்படுகிறேன்.  என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்," என்று கேட்டு இருக்கிறார்.
 அடங் கொக்க மக்கா -  கஷ்டங்களை மட்டும் நினைத்து depression  (அதிக மன சோர்வு) ஆகி,  இந்த முடிவு வந்ததற்கு பதில், கொஞ்சமாவது positive ஆக யோசித்து கொண்டு இருந்து இருந்தால்,   இந்த நிலை அவருக்கு இல்லையே..... மக்கா, இந்த பதிவை  வாசிக்கும் யாராவது "அப்படி இப்படி"  நினைத்து வாழ்க்கையின் எல்லையை நோக்கி ஓட நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் - அப்படியே ஒரு அபௌட் டர்ன், ப்ளீஸ்.   போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! 

அது ஒரு புறம் இருக்க,   எங்க நண்பர் முருகன்,  எங்களிடம் பகிர்ந்து கொண்ட  ஒரு  சம்பவம்:

முருகன் வேலை பார்க்கும் ப்ராஜெக்ட் ஒன்றில் கூட வேலை செய்யும் தமிழர் ஒருவர், ரவி.   தனக்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் ஆரம்பித்து இருப்பதாக சொல்லி,   தமிழகத்திற்கு  வந்து இருந்தார்.   அவரது  அம்மா, இவருக்காக தேர்வு செய்து வைத்து இருந்த பெண்கள் ஒரு லிஸ்ட் போடும் அளவுக்கு இருந்ததாம்.  ரவி அவர்களை நேரில் ஒவ்வொருவராக பார்த்து - சந்தித்துப் பேசி  - இறுதி தேர்வு செய்து -  முடிவு எடுக்க ஏற்பாடாம். 

ஒவ்வொருவராக பார்த்து,  பெண் வெள்ளையாக - அழகாக - இல்லை என்ற காரணத்தைத் தன் அம்மாவிடம் சொல்லி கழித்து விட்டார்.  லிஸ்ட்ல் இன்னும் இரண்டு பெண்கள் தான் பார்க்க வேண்டியது இருந்தன.


நண்பர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை.  முருகன்  வெளிப்படையாகவே ,   " நீ பெரிய ஹீரோ லுக்னு நினைப்பாடா?  பொண்ணு மட்டும் வெள்ளை வெள்ளைனு ஏண்டா அலையுற?  வெள்ளை தான் அழகுனு - சோப்பு, கிரீம் கம்பெனிகாரன் தவிர வேற எவனும் சொன்னதில்லை.  வெள்ளை பொண்ணை உனக்கு பிடிச்சு இருந்தாலும் - அவளும்,   'இந்த மாப்பிள்ளை வேண்டாம்.    அமாவாசையும் பௌர்ணமியும் சேர்ந்து வந்தாப்புலதான்  இருக்க போகுதுனு,'  சொல்லிட்டா என்ன செய்ய போறே?" என்று சொல்லிட்டாரு.

    "அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி" என்று நெல்லை பக்கம் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். அது  போல, ஏதோ தான் அமெரிக்காவில் இருப்பதே பெரிய காந்த சக்தி என்பது ரவியின்  பதில்  வாதம்.
  நினைப்ஸ் தான்,  புளைப்ஸ் கெடுக்த்ஸ்.

லிஸ்ட்டில் பாக்கி இருந்த   ஒரு பெண்ணின் தந்தையை,  ரவியின்  குடும்பம்,  கோவிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து இருப்பதாகவும், இன்றே பெண்ணையும் அங்கே பார்த்து விடலாம் என்றும் ரவியின் அம்மாவிடம், பெண்ணின் தந்தை  சொல்லி இருக்கிறார்.  பெண்ணின் தந்தை , நல்ல கருப்பு நிறம்.  பெண்ணும் அப்படித்தான் என்ற நினைப்பில், தன் அம்மாவிடம்,  எப்படியாவது இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று கூறி விட்டு,  ரவி  காருக்கு வந்து விட்டார்.   அம்மாவும்  இவர் பேச்சை கேட்டு,   இடத்தை தட்டி கழித்து விட்டு காருக்கு வந்து விட்டார்கள்.

கிளம்பு முன், இளநீர் அருந்தி கொண்டு இருந்த பொழுது,  அந்த பெண்ணின் தந்தை, தனது மனைவி மற்றும் மகளுடன்,  அவரது காரில்  ஏறுகின்ற பொழுது,  ரவி  தற்செயலாக பார்த்து இருக்கிறார்.  பெண்,  இவர் எதிர்ப்பார்த்து தேடி கொண்டு இருந்த நிறம்.  ரவி  நினைத்த மாதிரி, அப்பாவின் நிறத்தில் இல்லாமல், அம்மாவின் நிறத்தில்...... அவ்வ்வ்வ்.....

அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சியும், அம்மா  மறுத்து விட்டார். "அந்த இடம் வேண்டாம் என்று நீ சொன்னதை கேட்டு,  கோவில்னு கூட பார்க்காம,  என்னவெல்லாம் பொய் சொல்லி - அவங்க மனம் கோணாம -  வேண்டாம்னு  சொல்லி விட்டு வந்து இருக்கேன். இப்போ, எந்த முகத்தை வச்சுக்கிட்டு போவேன்?" என்று சொல்லி விட்டார்.

ரவி , முருகனை அழைத்து, " எனக்கு எப்படிடா தெரியும்?  பனமரம் நிறத்துல அப்பா வந்து நிற்கிறார். உரிச்சு வச்ச  பனங்கிழங்கு நிறத்துல மகள் இருப்பாள்னு நான் நினைச்சேனா?, " என்று "நியாயம்" கேட்டு இருக்கிறார்.
முருகன், "அந்த பொண்ணுக்கு கோவிலுக்கு வந்த  நல்ல நேரம்டா. தப்பிச்சிட்டா!" என்றார்.

 இந்த ட்ரிப்ல எதுவும் அமைந்து வராமல்,  திரும்பி வந்து விட்டு,  இன்னும் "வடை போச்சே" என்று அந்த பெண்ணை நினைத்து கொண்டு, ரவி   புலம்பி கொண்டு இருக்கிறார்.  இவரை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  இந்த vivel சோப்புல இருந்து எல்லா சிகப்பழகு கிரீம்கள்  வரை இந்த  "கலர் மேஜிக்  கொசுக்கடி"  தொல்லை தாங்க முடியல......... Perfect Radiance - பரிபூரண சர்மம் - மாசு மருவற்ற மென்மையான (???) அழகு - எல்லாம் சிகப்பழகுக்கு மட்டும் தான் என்று பெரிய ஆராய்ச்சி எல்லாம்  பண்ணி கண்டுபிடிச்ச மாதிரி  சொல்லிட்டாகப்பு....... அதை நிசம்னு நினைச்சு, இந்த பயபுள்ள இப்படி அலையுதே!!!

சிகப்பழகு கிரீம் அதிகம் பயன்படுத்துவதால்  வரும் தீமைகள் பற்றி:
 http://www.naturalnews.com/022893.html

ம்ம்ம்ம்........

Tuesday, November 30, 2010

தலையணை சண்டை

 தோழி ஒருத்தி நேற்று அழைத்து பேசினாள்.  'சித்ரா, நீ உன் ப்லாக்ல வித்தியாசமான ஊர்கள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள் பற்றி எழுதுறியே.  இன்னைக்கு நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உடனே உன் நினைப்பு வந்துச்சு.  அந்த விஷயத்தை பற்றி எல்லா தகவல்களும் தொகுத்து உனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கேன். பாத்துட்டு சொல்லு," என்று உற்சாகத்துடன் பில்ட்-அப் கொடுத்தாள்.

சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.

இதோ, அவள் அனுப்பிய இன்றைய வெட்டி பேச்சு டாபிக்:

WORLD (???)  PILLOW FIGHTING CHAMPIONSHIPS:

 14 வயதிற்கு மேற்பட்ட "பெரியவங்க" மட்டுமே பங்கு பெறும்  இந்த போட்டி,  36 வருடங்களாக நடத்தப்படுகிறது. 
பெரும்பாலும் 20 + தான் போட்டிக்கு வராங்க. 
California மாநிலத்தில் உள்ள Kenwood என்ற இடத்தில் தான் இந்த "அறிவுபூர்வமான" போட்டி நடக்க ஆரம்பிச்சுதாம். இப்போ,  நிறைய இடங்களில்  நடக்குதாம். 
பெரிய புள்ளத்தனம் எல்லாத்தையும் அரங்குக்கு வெளியே கழட்டி  வச்சுட்டு வந்து விளையாடுற ஒரு சின்னப்புள்ளத்தனமான போட்டியாம்.  விளங்குனாப்புல தான்!

சொதசொதனு ஈரத்துடன்  இருக்கிற ஒரு களிமண்ணு பரப்பு  (pit of mud).  அதுக்கு மேல, வழுவழுனு இருக்கிற ஒரு மரக்கட்டை.  

போட்டியாளர் கையில், ஒரு தலையணை - வாத்து இறைக்கைகளால்  (Goose feathers - not duck feathers) நிரப்பப்பட்ட தலையணையை தண்ணீரில் முக்கி, ஈரப்படுத்தி கொடுத்து இருப்பார்கள். தலையணையை ஒரு கையில் மட்டுமே பிடித்த படி, கட்டையின் ஒரு முனையில் இருந்து நடுவில் -  களிமண்ணுக்குள் விழாமல் - வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.  அதே போல, மறுமுனையில் இருந்து இன்னொரு போட்டியாளர் வருவார்.  அடுத்த கையையோ காலையோ உபயோகிக்காமல்,  இந்த ஈரத் தலையணையை வைத்து அடித்தே அடுத்தவரை, களிமண்ணுக்குள் விழ வைக்க வேண்டும்.   

முப்பது வினாடிக்கு மேலாக அடிக்காமல் டபாய்க்க கூடாது.  ஒரு நிமிடத்துக்குள் யாரும் விழாவிட்டால், ஒரு கையை பின்னால் வைத்து கொண்டே, மறு கையில் தலையணையுடன் அடுத்தவரை தள்ள முயல வேண்டும்.  


இப்போவே  முட்டிக்கணும் போல இருக்கிறவர்கள்,  அந்த பக்கமா போய் சுவத்துல  முட்டிக்குங்க. கம்ப்யூட்டர் ல முட்டி கிட்டி வச்சு, damage ஆனா கம்பெனி பொறுப்பு எடுக்காது.  

சரி, அது ஒரு பக்கம் என்றால்,  Michigan மாநிலத்தில் Grand Rapids என்ற இடத்தில் நடந்த தலையணை சண்டையை பாருங்க:  



பி.கு. இந்த மாதிரி தலையணை சண்டை அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளில் இப்படி தெருக்களில் "தலையணை சண்டை" நடக்குது என்பது கொசுறு செய்தி.   உலக நாடுகளில் உள்ள சுமார் 25 பெரிய நகரங்களில்,  நடந்து இருக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Pillow_fight_flash_mob

நாளைக்கு உங்களுக்கு யாருடனாவது  என்ன பிரச்சனை என்றாலும்,  தெருவுல தலையணை சண்டை போட்டு தீத்துக்கோங்க. ஏதோ "உலக அமைதி"க்காக, என்னால ஆன கடமை உணர்ச்சியில், சொல்லிட்டேன்.   சரியா, மக்கா!
 இதற்காக எனக்கு அமைதிக்கான நோபெல் பரிசுக்கெல்லாம் பரிந்துரை செய்து விடாதீங்க, ப்ளீஸ்!

Saturday, November 27, 2010

நன்றி மறப்பது நன்றன்று

இந்த ஸ்பெஷல் நட்சத்திர  வாரத்தை, என்னால் மறக்கவே முடியாது.

நவம்பர் 22 முதல் 28 வரை தமிழ்மண நட்சத்திரமாக இருக்க, என்னை  தேர்ந்து எடுத்த தமிழ்மண குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னை பொறுத்தவரை எல்லாம் இறைவன் செயல் தான்.  சில சமயம், காரணங்கள் புரியும் - சில சமயம், காரணங்கள் இருந்தும் மனிதரால் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம் - சில சமயம், காரணங்கள் நமது சாதாரண அறிவுக்கு எட்டாமல் போகலாம்.     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,  வேறு ஒரு புரிதலில் வாழ்க்கையின் அர்த்தம் - காரணங்களுடன் எல்லாமே கடந்து போகலாம்.

எனக்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டியது இருந்ததால்,  அதில் என்ன எழுதலாம் - எப்படி எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்ததில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்து கொண்டு இருக்கும் சில சம்பவங்களின் இறுக்கமான சோக பிடியில் இருந்து வெளியே வர பெரிதும் உதவியது.  திங்கள் அன்று "முன்ன பின்ன செத்து இருந்தால்தானே? " என்று புலம்பி ஆரம்பித்த வாரத்தில்,  "மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்"  என்று நான் கற்று கொண்டேன்.   இந்த வாரத்தை,  எப்படி மறக்க முடியும்?   உங்களின்  ஆதரவான பின்னூட்டங்கள்  மூலம், எனக்கு தேவையான சப்போர்ட் மற்றும் உங்களின் தூய அன்பினை கண்டு நெகிழ்ந்தேன்.  பதிவர்களாக இருப்பவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.  அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.


நவம்பர் 26 , வெள்ளி அன்று - அர்ச்சனாவின் பெற்றோரும் அவளது அண்ணனும் இங்கு வந்து விட்டார்கள்.  டிசம்பர் 4 , அர்ச்சனாவின் பிறந்த நாள் வருவதால், அது முடிந்த பின்,  வேறு ஒரு நாளில்   அர்ப்பணாவின் மறைவை குறித்து   அவளுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
அர்ச்சனா இன்னும் intensive care unit தான் இருக்கிறாள்.   இரண்டு வாரங்களுக்குள், அட்லாண்டாவில் உள்ள ஒரு Rehab மருத்துவமனைக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.  அவளுக்கு அங்கு வைத்து ஆறு மாதங்கள் வரை தெரபி மற்றும் treatment தொடர்ந்து நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் தள்ளி போய்விட்டால், இப்பொழுது போல அடிக்கடி நான் அவளை பார்க்க முடியாது.   அவள் பூரண நலன் பெற்று திரும்பி வர தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

நவம்பர் 28 , என் தந்தை, திரு. பொ.ம. ராசமணி அவர்களின்  முதலாம் ஆண்டு நினைவு நாள்.  அவரை பற்றி பெருமையுடன் நினைத்து பார்த்து, அவரை எனக்கு தந்தையாக தந்த இறைவனுக்கு நன்றி  சொல்கிறேன்.
என் அம்மாவுக்கு அவர் காதலுடன் எழுதி இருந்த  கவிதைகளை, என் தம்பி ஒரு கவிதை தொகுப்பு புத்தகமாக - "ஆதலால் காதல் செய்வீர்!" என்ற தலைப்பில்,  அவர் நினைவு நாளான இன்று,  நெல்லையில் வெளியிடுகிறான்.  அந்த தொகுப்பு -  புத்தகமாக வர வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமும் என்று சொல்லி சென்று இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், எனது தம்பியின் திருமணத்தின் போது, என்றும் இளமையாய் நின்ற என் தந்தை வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த படம். 

தொடர்ந்து தங்களது பரிந்துரை மூலமாகவும் - பின்னூட்டங்கள் மூலமாகவும் - வோட்டு மூலமாகவும் - விருதுகள் தந்தும்,  நானும் ஒரு தமிழ்  பதிவர் என்ற அங்கீகாரம் கொடுத்து,  என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. 


எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, November 26, 2010

(அமெரிக்காவில்) சோளம் விதைக்கையிலே......

சென்ற மாதம், நிறைய இடங்களில் குழந்தைகளுக்கென Fall Festival - (Autumn Festival)  நடந்தது. 

எங்கள் ஊரிலும் நடந்தது.  இங்கே  உள்ள University இல் இருக்கும் விவசாய கல்லூரி டிபார்ட்மன்ட் பேராசிரியர்களும், மாணவர்களும்,   அவர்களது research மற்றும் studies க்காக உள்ள  சோள காட்டில் இந்த விழாவை  நடத்தினார்கள்.

முதலில், கார் பார்க் செய்ததும்,  எல்லோரையும்  Farm area வுக்கு அழைத்து செல்ல,  tractors வரிசையாக நின்று கொண்டு இருந்தன. அவற்றின் பின்னால் வைக்கோல் கட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து இருக்கைகளாக (seats ) அமைத்து வைக்கப்பட்டு இருந்தன.  ஏறி கொண்டோம்.  வித்தியாசமான அனுபவம். 



 சேர வேண்டிய இடத்தை அடைந்ததும்,  முதலில் எங்களை வரவேற்றது, பால் பண்ணை துறை.  பெரிய பண்ணையில் மிஷின் மூலம் மொத்தமாக கறக்கும் வண்ணம் விளக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வீடுகளில், இன்னும் பசு நேசரின் "செண்பகமே .... செண்பகமே...." முறைதான்.   மழலை பட்டாளத்துக்கு தாங்களும் செய்து பார்க்க ஆசை. அதற்காகவே, ஒரு மரத்தில்,  பசு (wooden milking cow) போல செய்து வைத்து இருந்தார்கள். அதனுள், பால் மாதிரி வெள்ளையாக தண்ணீர் வேறு.  Latex (ஒரு வகை ரப்பர்) மடுவில் இருந்து "பால்" கறந்து மகிழ்ந்தார்கள். நல்ல வேளை, மரப்பசு. குழந்தைகள் வந்த வரத்துக்கு,  நிஜ பசு என்றால்,  விஜயகாந்த் கையில் அகப்பட்ட வில்லன் மாதிரி துவம்சம் ஆக்கப் பட்டு இருக்கும். ஹா,ஹா,ஹா,.....


 அது முடிந்ததும்,  அடுத்து எங்களை  பண்ணை வீடுகளில் (Farm House) வளர்க்க முடிகின்ற கால்நடைகளையும் பறவைகளையும் காண்பதற்கு அழைத்து சென்றார்கள். ஆடு, மாடு, பன்றி, வான் கோழி, கோழி, கழுதை, குதிரை, லாமா , முயல் என்று பட்டியல் நீண்டது. 


நிறைய படங்கள் இருக்கின்றன. ........ பதிவின் நீளம் கருதி போட இயலவில்லை.

அப்புறம்,  miniature குதிரையில் ஏறி, குழந்தைகளை ஒரு ராட்டினம் மாதிரி அழைத்து சென்றார்கள்.  ஒரு கம்பத்தை சுற்றி,  நான்கைந்து குட்டி குதிரைகள் கட்டப்பட்டு இருந்தன. குழந்தைகளை வைத்து ராட்டினம் மாதிரி சுற்றி சுற்றி வர செய்து இறக்கினார்கள்.  எனக்கு என்னமோ நம்ம ஊரு செக்கு மாடு மாதிரி இருந்தது.


அதன் பின்,  சாக்குத் துணி  வைத்து சறுக்கி வைக்கோல் போருக்குள் விழுந்து, குழந்தைகள் போட்ட ஆட்டம்  இருக்கிறதே...... சூப்பர். எங்கள் குழந்தைகளை காரணம் காட்டி, அவர்களுக்குத்  துணைக்கு செல்வது போல நாங்களும் அவர்களுடன்  சறுக்கி கொண்டோம். ஹி,ஹி,ஹி,ஹி.....
வைக்கோல் போருக்குள் விளையாட்டு: 
 நான் ரசித்து பார்த்தது, மண் குவியல் போல நன்கு காய்ந்த முத்தி போன சோளத்தை (corn) ஒரு இடத்தில் பரப்பி வைத்து இருந்தார்கள். அதற்குள், குழந்தைகள் குதித்து - தங்கள் கை கால்களை புதைத்து - விளையாடியதை பார்த்தது -  ஒரு குதூகல கவிதை.

Corn Maze:

அப்புறம்,  ஆறு  அடிகளுக்கு மேலே வளர்ந்து இருந்த சோளகாட்டுக்குள், ஒரு பக்கமாக நுழைந்து வழி கண்டு பிடித்து, மறு பக்கமாக வர வேண்டும்.  தவறான வழியில் திரும்பி விட்டால், சுற்றி சுற்றி சோளக்காட்டுகுள்ளேயே வந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.  ஒரு இடத்தில், உயரே ஒரு மேடை அமைத்து வைத்து இருந்தார்கள். அதில் ஏறி பார்த்தால்,  அந்த Corn Maze பாதை, எந்த வடிவத்தில் அழகாக அமைக்கப் பட்டு இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.

காலியான Barrels வைத்து குழந்தைகளுக்கென ஒரு சின்ன ரயில் வண்டி:


இப்படியாக பல விஷயங்கள்.   ...........  உண்மையில், அன்று என் குழந்தைகளை விட அதிகம் என்ஜாய் செய்தது நான்தான். 

வந்து இருந்த மக்கள்,  தங்கள் வீடுகளில், மரம் மற்றும் செடிகள் வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை  அங்கே இருந்த விவசாய துறை மாணவர்களிடம் இலவசமாக கேட்டு தெளிவு பெற்று கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.  அந்த மாணவர்களுடன் பேச்சு கொடுத்தோம்.  

"நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் எத்தனையோ மகிழ்ச்சியான அனுபவங்கள்  கிடைக்காமல் போய் விடுகின்றன.  எல்லாமே வீடியோ கேம்ஸ் மற்றும் டிவி என்ற வட்டத்தில் முடிந்து விடுவதில்லை.  இந்த மாதிரி திருவிழாக்களில்,   அவர்களக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
அவர்களை வயல் வெளிகளுக்கு வர வைக்கிறோம்.  சிறு வயதில் இருந்தே இந்த வாழ்க்கையில் ஈடுபாடும் - ஒரு ஈர்ப்பும் - வர உதவி விட்டால்,  இன்று வந்த குழந்தைகளில் ஒரு சிலராவது விவசாய வாழ்க்கைக்கு வர ஆசைப்படுவார்கள்.  அந்த துறையில் படித்து, நிறைய சாதிக்க விரும்புவார்கள்.


மேலும், இன்று குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கும் அவர்களது வழக்கமான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நல்ல மாறுதல்.  பலர், இங்கு வந்து செலவிடும் நேரங்களில் மீண்டும் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள்.
அமெரிக்கர்களில்,  சிலர் தங்களது ஐம்பதாவது வயதிலேயே தங்களது வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு,  கிராமப் புறங்களுக்கு வந்து விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு,  முட்டை பண்ணை அல்லது பால் பண்ணையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.  அரசாங்கமும்,  அப்படி வருபவர்களை நன்கு ஊக்குவிக்கிறது," என்றார்கள். 

விவசாய துறை மாணவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் மேலும் கூடியது.  அவர்கள், பொறுப்புடன் சிறு குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டுவதை பாராட்டினோம்.  மேலை நாட்டு கலாச்சாரம் என்று எதை எதையோ பின் பற்றுபவர்கள், என்றுதான் இந்த மாதிரி விஷயங்களையும்  பின் பற்றுவார்களோ?

 படங்கள்:  கூகுள்  - நன்றி.

Thursday, November 25, 2010

எந்த ஊரு நேம் பஜ்ஜியோ?

Excuse number 1:  வியாழன் அன்று,  அமெரிக்காவில் "Thanksgiving Day" கொண்டாடப்படுகிறது. வியாழன் முதல், ஞாயிறு வரை பலருக்கு லீவு தான்.  எங்கள் வீட்டில்  விருந்தினர்கள் விசிட். 
Excuse number 2 :  கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் .
Excuse number 3 : "தமிழ்மண நட்சத்திரம்" காரணமாக,  தினம் ஒரு இடுகை  என்பது எத்தனை பெரிய சவால் என்பதை புரிந்து கொள்கிறேன்.  ஈஸி ஆக, தினம் ஒரு இடுகையை தரும்  பதிவர்களுக்கு, ஒரு ஸ்பெஷல் வணக்கம்.
Excuse number 4 :  வேற என்ன excuse எல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதனால் சகல பதிவர்களுக்கும்  அறிவிப்பது என்னவென்றால்,  உங்கள் பதிவுகளில்,  மீண்டும் பின்னூட்டப் புயல் அடிக்க, சிறிது நாட்கள் ஆகும்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  இப்போ draft பரணிலேயே ரொம்ப நாட்களாக இருந்ததை, தூசி தட்டி எடுத்து,  எழுதி  முடித்த இன்றைய  கோட்டா இடுகை:

 நான் Texas க்கு  புதிதாக வந்து இருந்த சமயம்:

இந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்த தோழி ஒருத்தி, சென்னையில் தன் உறவினர் ஒருவர், தன் கடைக்கு நேமாலோஜி (Nameology)  படி -  Vani (வாணி) ஸ்டோர்ஸ்  என்று தன் மகள் பெயரில்  இருந்ததை,   Vaannee (வான்நீ)  ஸ்டோர்ஸ் என்று மாற்றி விட்டதாக சொன்னாள். நல்ல வேளை, அவர் மகளையே இன்னொரு வீட்டுக்கு மாற்ற சொல்லவில்லை. தப்பிச்சிட்டா! என்று கமென்ட் அடித்து கொண்டோம்.   பின், என்னை ஒரு இந்திய Association நடத்திய விழாவுக்கு அழைத்துச்  சென்றாள். 

"எல்லாமே புது முகங்களாக இருக்குதே .... யாரையும் தெரியாது.  சீக்கிரம் திரும்பி போய்டலாம்," என்றேன்.  "போடி புள்ள,  நீதாண்டி இங்கே புது முகம். அவங்க எல்லாம், இங்கேயே பல வருஷமாக பழம் தின்னு கொட்டைய   போட்டவங்க.  நல்ல கதையா இருக்குதே!" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.  அவ்வ்வ்.....

ஒரு வீராப்புடன், நானே என்னை  அறிமுகப்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
அருகில் இருந்தவரிடம்:

"Hi - Hello,  I am Chitra."
"Oh!  I am Shawn."
"ஷான்?"
"ஸ்ரீனிவாசன் தாங்க.  சொந்த ஊரு,  அம்பாசமுத்ரம். அமெரிக்கர்கள் கூப்பிட வசதியாக ஷான் என்று சொல்லிடுவேன். அந்த பழக்கத்திற்கு இப்போதும் வந்துட்டுது."
(மக்கா, உங்களுக்கே ஓவரா தெரியல. என்னை பார்த்தால், ஸ்ரீனிவாசன் என்று சொல்ல கஷ்டப்படுற ஆளு மாதிரியா தெரியுது?)

ஆனால்  சும்மா சொல்ல கூடாது! ஷானுக்கு ரொம்ப நல்ல மனசு. அவரே, என்னை தனது நட்பு வட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


இனி,   "நேம் ஈஸியாலாஜி அமெரிக்க பஜ்ஜி சொஜ்ஜி " படி  மாறி இருந்த இந்திய பெயர்களைப்  பாருங்க.

Gary - கேரி - குருப்ரீத் சிங்
Matt - மது
Anna - ஆனந்தி
Rick - ரிக் - ராகவபெருமாள்
ஸ்டான்லி - தேனப்பன்
MARK -   மாதவ் (M) அனந்த (A) ராம (R) கிருஷ்ணன் (K)
 Steve - ஸ்டீவ் - ஷைலேந்தர் தேவ்.
Kayla - கேய்லா - குழலி
Danny - தினேஷ் மணி
Paul - பாலசுந்தரம்
Andy - ஆனந்தன்
Ash - அக்ஷயா
Sam - சாமிநாதன்.
Sara - சாரா - சரஸ்வதி
Chris - கிருஷ்ணகுமார் 
Jay - ஜைலேந்தர் சிங்
Ray - ராம்குமார்
Bob - பாபுமோகன்
Becky - பாக்கியலட்சுமி
 Jack - ஜெகன்நாத் ஷர்மா
Tammy - தேஜஸ்வினி
Vickie - விக்கி - விசாலாட்சி
Nancy - நாகேஸ்வரி
Luke - லக்ஷமணன்
Max - மாதேஷ்வர்
Nathan - நாதன் அல்ல நேதன் -  நரேந்திரன்
Bryan - ப்ரயன் - பரணிகுமார் ரெட்டி
Pam - பிரமீளா தேவி
Ron - ரான் - ராம சுப்பிரமணியன்
Mike - மீனாக்ஷி சுந்தரம்.
Dan - தாண்டவ மூர்த்தி.
Cathy - கார்த்திக்கா

இவங்க இப்படி "அமெரிக்க நேம் ஈஸியாலாஜி"க்காக பெயர்களை மாற்றி கொண்ட பின்,  அமெரிக்க வாழ்க்கை ரொம்ப நல்லா - ஈஸி ஆக  இருக்குதாம். 


இது ஒரு புறம் இருக்க,  சில அமெரிக்கர்களை சந்திக்கும் போது அந்த ஊரில்,  தங்களது தெரிந்த இந்தியர்களை பற்றி உயர்வாக  சொல்ல  ஆரம்பிப்பார்கள்.  அவர்கள் சொல்லும் பெயர்களை வைத்து யாராக இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்குள் ........ ஸ்ஸ்ஸ்ஸ் ......  யப்பா.......  (என் பெயரை  பெரும்பாலும் சரியாக சொல்லி விடுவதால், தப்பிச்சேன்! சிலர் மட்டும்   - ச்சிட்ரா  - Chitra  -  )

சன் டீப் or சன் டிப்  -  Sandeep (சந்தீப்)
ஸப்பையா - Subbaiah (சுப்பையா) 
அ  ராவின் - Aravind (அரவிந்த்)
 சைத்தான்  யா - Chaitanya (சேத்தன்யா)
ஷேம் லா - Shamala
சவுண்ட் ஏரியா - Sound ariya - சௌந்தர்யா

கஸ்ஹந்த் சாம் (Sam )  - அது என்ன கல்கண்டு கஷ்டம்டா சாமி என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது,  எழுதி காட்டினார்.
Kuzhanthai Sami -  குழந்தை சாமி

ஒரு டவுட்டு:  யாருங்க, தமிழில் சிறப்பு "ழ"கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது,  "zha "  ("ழி" - "zhi ")  என்று எழுதணும்னு விதி அமைத்தது?  ரூல்ஸ்  போட்டவங்க, தமிழ் மக்களை தவிர, வேற யாருக்கும் அதை  பற்றி சொல்லல போல.  நம்மாட்களை தவிர,  மத்தவங்க "ஜா" - "ஸா" -  "zaa " மாதிரி தான் வாசிக்கிறாங்க.  அவர்களிடம், "zha " என்று இருந்தால் "ழ" என்று சொல்லணும் என்று சொல்லி கொடுக்கிறதுக்குள்ள - உள்ள தமிழும் எனக்கு  மறந்து விடும் போல.  அதனால், நானே இப்போ "L " தான் போட்டு எழுதி காட்டுவேன்.  இந்த ரூல் மீறிய குற்றத்திற்காக,  என்னை தமிழச்சி இல்லைன்னு ஒதுக்கி வச்சிருவாங்களோ?  pleeeeeez ......அப்போ  யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.....

மக்காஸ்.... உங்களுக்கும் இந்த மாதிரி பெயர்ஸ் ...சாரி, பெயர்கள் தெரிந்தால்  எஜூதி - எஸூதி  - சே,  ezhuthi - eLuthi - எழுதி - பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Wednesday, November 24, 2010

CNN வெளியிட்டுள்ள டாப் 10 ஹீரோக்கள்

வணக்கம்:  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா"

கடந்த எட்டு  வாரங்களாக சிறந்த சேவைகள் செய்பவருக்கான விருதுக்கென ஓட்டு எடுப்பு, CNN நடத்தியது.  அதன் முடிவுகள் இப்பொழுது வெளியாகி உள்ளன.
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/index.html


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு:
http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html

2010 CNN Hero of the Year ஆக - இதுவரை,  செக்ஸ் அடிமைகளாக இருந்த சுமார் 12000 பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை மீட்டெடுக்க உதவிய அனுராதா கொய்ராலா அம்மையார் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

 இவரது சேவைகளுக்கு மேலும் உதவும் வகையில், இவருக்கு $100,000 வழங்கப்பட்டது.
 டாப் 10 ஹீரோக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்,  அவர்கள் சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம்
$ 25,000 வழங்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கும் மேலான நாடுகளில் இருந்து,  10,000 க்கும் மேலான நபர்களை , அவர்களது சமூதாய சேவைகளுக்கென மக்கள்  சிபாரிசு செய்து இருந்தனர்.  ஒரு குழு அமைத்து அவர்களில் சிலரை தேர்ந்து எடுத்து வாக்கெடுப்புக்கு அறிவித்தனர்.  வாக்கெடுப்பு மற்றும் குழுவின் பரிந்துரை படி,  பத்து பேர்களை தேர்ந்து எடுத்து கௌரவித்து உள்ளனர்.

Alphabetical order படி (ranking படி அல்ல) தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்:

Guadalupe Arizpe De La Vega  :

Juarez என்ற மெக்ஸிகோ  நகரத்தில்  மருத்துவமனை கட்டி, இலவச மருத்துவம் ஏழை மக்களுக்கு  கிடைக்க செய்தவர்.

Susan Burton :

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில்,  மது மற்றும் drug போதைக்கு அடிமையாகி சிறைக்கு கூட சென்று வந்துள்ள பெண்களுக்கு மறுவாழ்வும் வீட்டு வசதியும் செய்து கொடுத்து, அவர்கள் திருந்தி வாழ சேவை செய்பவர்.

Linda Fondren :

அமெரிக்காவில், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில்,  அதிக உடல் எடையால் பல நோய்களுக்கு உள்ளான மக்களுக்கு தீவிர பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊட்டுவதன்  மூலம் உடல் இளைக்க உதவுகிறார்.

Anuradha Koirala :


1993 ஆம் ஆண்டில் இருந்து,  நேபால் நாட்டில்,  செக்ஸ் அடிமைகளாக   விற்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு மறு வாழ்வுகளும் வேண்டிய உதவிகளும் கிடைக்கும் படி சேவை செய்து வருகிறார். இந்திய நேபால் எல்லையிலும் கண்காணித்து , இப்படி விற்கப்பட்டு வரும் பெண்களை காப்பாற்றி வருகிறார்.


Narayanan Krishnan :

 2002 ஆண்டு முதல், தனது அக்ஷயா டிரஸ்ட் மூலம்,  கைவிடப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து,  உணவு வழங்கி வருகிறார்.



Magnus MacFarlane-Barrow :


1992 ஆம் ஆண்டில் இருந்து , Scotland நாட்டில் இருந்து Mary's meals என்கிற சேவை நிறுவனம் மூலம்,  உலகத்தில் பல பகுதிகளில் இருக்கிற 400,000 குழந்தைகளுக்கு இலவச உணவு கிடைக்கும் வண்ணம் உதவி வருகிறார்.


Harmon Parker :


1997 ஆம் ஆண்டில் இருந்து, கென்யா நாட்டில்,  தன் கைப்பட சிலர் உதவியுடன் 45 மரப்பாலங்கள் காட்டாறுகளுக்கு மேல கட்டியுள்ளார்.  திடீர் என்று பிரவாகமாக எடுத்து வரும் வெள்ளங்களில் இருந்தும்,  கொடிய மிருகங்களிடம் இருந்தும்  இந்த பாலங்கள் மூலமாக ஏழை மக்கள் தப்பிக்க உதவி வருகிறார்.


Aki Ra:

1993 ஆம் ஆண்டு முதல், கம்போடியா நாட்டில்,  சுமார் 50,000 landmines (கண்ணி வெடிகள்)  கண்டுபிடித்து எடுக்க உதவி வருகிறார்.

Evans Wadongo :

23 வயதுதான் ஆகும் இவர், கென்யா நாட்டில்  புகை அடிக்கும் மண்ணெண்ணையும் தீயையும் மட்டுமே எரிபொருளாக - ஒளிக்காக - நம்பி அவதி பட்டுக்கொண்டு இருந்த பல கிராம மக்களுக்கு பயன் படும் விதமாக சூரிய வெப்பம் (Solar Power) கொண்டு எரியும் lanterns கண்டுபிடித்து விநியோகம் செய்து வருகிறார். 


Dan Wallrath :

2005 ஆம் ஆண்டில் இருந்து,  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் காயம்பட்டு திரும்பி வந்துள்ள போர் வீரர்கள் சிலருக்கு, இலவச வீடுகளை, சிலர் உதவியுடன் தன் கைப்பட கட்டி கொடுத்து வருகிறார்.  இப்பொழுது, இந்த குழு ஐந்து வீடுகளை அமெரிக்காவில்,  Texas மாநிலத்தில் கட்டி வருகின்றது.

  தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாக, ஒரு சராசரி மனிதர் ,  மனித நேயம் மட்டும் இருந்தால்,  சமூதாயத்தில்  மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று காட்டி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தனி மனிதன் நினைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து காட்டியுள்ள இவர்கள்,  எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம். 

இவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் சமூதாயத்தில் மேல் உள்ள அக்கறையையும்  மதித்து, இவர்களுக்கு வோட்டு போட்டு,  அங்கீகாரம் கிடைக்க செய்த அனைவருக்கும் நன்றிகள்.  இனி, இந்த நல்ல உணர்வுடனே நமது அரசியல் தலைவர்களையும் தேர்ந்து எடுப்பதில், வோட்டு போடும் போது காட்டுவோம். 

(ம்ஹூம்....... தனி ஆளாவே, இவுக எல்லாம் இம்ப்பூட்டு செய்றாவுகளே, நம்ம அரசியல் தலகள்  எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சாலே........ எம்பூட்டு நல்லா இருக்கும்!!!!  ம்ம்ம்ம்...... ஆசைதேன்.... கனவுதேன் ...... ஒரு நாள் நடக்கும்தேன்..... ம்ஹூம்......) 

நன்றி, வணக்கம்.  இப்படிக்கு ஒரு ஆதங்க  பெருமூச்சுடன்,  உங்களிடம் இருந்து விடை பெறுவது, தம்பட்டம் தாயம்மா. 


 

Tuesday, November 23, 2010

வாயை வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்கலாம்

 நானும், ஒரு இந்திய நண்பரும், இரண்டு அமெரிக்கர்களுடன் (மருத்துவ மாணவர்கள்)  சும்மா பேசி கொண்டு இருந்தோம்.  பேச்சு  - அங்கே சுத்தி - இங்கே சுத்தி -  ரைட்டுல திரும்பி -   லெஃப்ட்ல கட் பண்ணி -   ஒரு ரவுண்டு அடிச்சு நேரா  இந்திய கலாச்சாரத்தில் வந்து விழுந்தது.  நாங்களும்  பெருமையாக இந்தியாவில் இன்னும் மேலோங்கி இருக்கும் "Arranged Marriages"  பற்றி சொல்ல ஆரம்பித்தோம்.   "ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை முதல்,  இந்தியாவின் குறைந்த விவாகரத்து விகிதம் வரை எதையும் விட்டு வைக்கவில்லை.

அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவர்களில்,  Ben என்பவர்   ஆங்கிலத்தில்,  "நான் கேட்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள்.   நான் நேற்று தான், எனது வகுப்பில், உலகம் முழுவதும்  இருக்கும் பிரச்சனையான AIDS பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.   உலக நாடுகளிலேயே, AIDS மற்றும் HIV positive ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையில், மூன்றாவது  இடத்தில் இந்தியா இருக்கிறது.   நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உள்ள நாட்டில், எப்படி இது சாத்தியமாகிறது?  வட இந்தியாவை விட, தென் இந்தியாவில்  ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகம் பரவி உள்ளதாகவும் statistics  இருக்கிறதே," என்று சந்தேகம் கேட்பது போல  அணுகுண்டு கேள்விகளை வீசி கொண்டு இருந்தார்.

http://www.indexmundi.com/g/r.aspx?t=10&v=35
http://www.indexmundi.com/map/?v=35&l=en&t=10

பேச்சு,  பேச்சாத்தான் இருக்கணும்.  இப்படி லா பாயிண்ட் எல்லாம்  வச்சு கேள்வி கேட்டு "தாக்க" கூடாது என்று சொல்லணும் போல இருந்தது.  ஆனால்,  என் மூளை -    திருவிழா நேரத்துல, அம்மா அப்பா கிட்ட சொல்லிக்காமலே  பலூன்காரன் பின்னால போற சின்ன புள்ளையாட்டம் -  மனசுக்குள்ள ரெட் சிக்னல் அடிக்கவும்,  என் கிட்ட சொல்லிக்காமலே,  ஹாய்யா எங்கேயோ போய்டுச்சு.   "மேல்மாடி"யில்  ஆள் இருக்கிறாப்புல தெரியல.   பரீட்சையில நல்ல கேள்வி கேட்டாலே, தலை நாலு நாளுக்கு வலிக்கிற மாதிரி  சொரிஞ்சி யோசிப்பேன்.  என்னை நிக்க வச்சு நல்லா கேள்வி கேக்குறாங்களே, இதுக்கு நாலு ஆளை வச்சு சொரிஞ்சி யோசிக்கணும் போல.


கூட இருந்த இந்திய நண்பருக்கு வந்ததே கோபம்!  "என்னது, தென்னிந்தியாவை பற்றி இப்படி சொல்றீங்க?  ஏதோ லோ கிளாஸ் மக்கள் கிட்ட எடுக்கிற சர்வே வச்சு - நடக்கிறதை  வச்சு - அப்படி  சொல்லாதீங்க, "  என்று பாய்ந்தார்.

Ben விடாமல், "ஏன்?  அவர்களும்  இந்தியர்கள் - தென் இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.

என்னுடைய லொடலொட வாய், இப்போ "கப்சிப்"!  நண்பரும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் தானே?

" ஒரு அமெரிக்க பெண்ணை, கல்யாணம் கட்டிக்கணும்னா நான் யோசிப்பேன். ஆனால், தென் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கணும்னா, நான் யோசிக்க தேவையில்லை," என்று சூடு குறையாமல் சொன்னார்.

அவரது கையை பிடித்து அழுத்தினேன்.  அமெரிக்காவுல,  இன்னைக்கு நடக்கப் போகும் கொலைக்கு நான்தான்  சாட்சியா அப்படின்னு தோணுச்சு.
"AIDS சர்ச்சை:  தமிழ் நாட்டுக்கும் நியூ யார்க் க்கும் யுத்தம்!"  அப்படின்னு newspaper headlines கண்ணுக்கு தெரிஞ்சுது. 
"கோன் பனேகா HIV? -  ஆந்திர மதராசி? or சென்னை மதராசி?"  அப்படின்னு  வட நாட்டு ஆளு  ஒருத்தர்,  ஹிந்தி  சேனல்ல ஒரு டிவி ப்ரோக்ராம் நடத்துற மாதிரி தெரிஞ்சுது. 

                                       Ben சிரித்துக் கொண்டே, " அமெரிக்கர்கள் அனைவரும் AIDS   நோயாளிகள் என்று எதற்கு நினைக்கிறீர்கள்?  இந்த சர்வே பார்த்த பிறகும், இந்தியாவில் அனைவரும் அப்படித்தான் என்று நான் நினைக்கவில்லையே, " என்றார்.

என் நண்பரோ,  "இந்தியாவில் யாரோ செய்யுற தப்புக்கு, எதற்கு மொத்த  இந்திய  பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும்? பெரும்பான்மையோர் ஒழுங்காத்தான் இருக்கோம்,"என்றார்.
 Ben , நண்பரின் தோளைத் தட்டி கொடுத்த படி,  "நாட்டில் இருக்கும் ஒரு  problem பற்றி பேசாவிட்டால்,  நாட்டில் அந்த problem இல்லவே இல்லை  என்று அர்த்தம் இல்லை.  It is just a form of denial. பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, தீர்வு காண முடியும்.  அதை ஒழிக்க முடியும்," என்று கூறி விட்டு தன் நண்பருடன் சென்று விட்டார்.

புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுத்து இருப்பீங்க .... "அசட்டு "  புன்னகை மன்னன் என்று பட்டம் கொடுக்க ஆள் தேடிக்கிட்டு இருந்தீங்கனா,   என் நண்பருக்கு தான் அன்னைக்கு கொடுத்து இருப்பீங்க..... யெம்மா ... என்னா அசடு! என்னா வழிசல்! என்னா சமாளிச்சிஃபையிங்  ஆஃப் இந்தியா ஸ்மைல்!


  அவர்கள் சென்றதும் என்னிடம்,  " அமெரிக்கர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கு தெரியும்.  அவர்கள், இந்தியர்களை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாம் நினைக்கிறாங்களோ? "

"நான் வேணா ஒரு சர்வே எடுக்கவா?" என்று கேட்டேன்.  

""ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை இல்லாதவர்தான் தமிழ்நாட்டுத் தலைவர்.  அதையே கண்டுக்காமல் தான், இந்திய கலாச்சாரம் பற்றி பேசிக்கிட்டு இருக்கேன்.  நம்ம நாட்டில் நடக்கிற,  தெரிஞ்சே செய்யுற சில  தப்புக்களுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தையே எத்தனை நாளுக்கு குத்தம் சொல்ல முடியும்?   நான் சுவத்துல முட்டிக்கிறதா?  மரத்தில முட்டிக்கிறதா?  எங்க வீட்டு கதவுல முட்டிக்கிறதா? என்று சர்வே எடுத்து சொல்லுங்க," என்று ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா காட்டினார்.

பஞ்ச் டயலாக் அடிக்க என் மூளையின் உதவியை மீண்டும் தேடினேன்.  "மேல்மாடி"யில்  அமைதியாக நின்று, "என் புருஷன்தான் - எனக்கு மட்டும் தான்," என்று  என் கணவரின் முகம் பார்த்து   முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.  தொந்தரவு  செய்யாமல் நடந்தேன்.

இந்தியாவில் AIDS ஒழிப்பு பற்றிய விவரங்களுக்கு:
   http://www.avert.org/aidsindia.htm

ஹலோ

Monday, November 22, 2010

மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.

நேற்றைய பதிவின் மூலம், இங்கு அருகில்  உள்ளவர்களிடம்  வெளிப்படையாக காட்ட முடியாத - சொல்ல முடியாத - என் உணர்வுகளை பகிர்ந்து இருந்தேன்.  எழுத்தில் கொட்டியபின்,  மனம் அமைதி ஆனது.   ஆறுதலாக, கரிசனையுடன்  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.   

இங்கு உள்ள  இறுகி போன சூழ்நிலை - மன நிலையில் இருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது, சில நிமிடங்கள் அர்ப்பணாவை பற்றி நினைத்தேன்.  அவளது மறைவின் சோக பிடியில் இருந்து நான்  வெளி வர,  அவள் வாழ்ந்த வாழ்க்கையே எனக்கு உதவுகிறது. 
  


அர்ப்பணாவின் வாழ்க்கை,   சீக்கிரம் முடிந்து போய் இருக்கலாம். ஆனால், கடைசி நிமிடம் வரை, நன்றாக சிரித்து விட்டு சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய் இருக்கிறாள்.  "Live for the moment" என்று எங்கள் அனைவருக்கும் காட்டி விட்டு சென்று இருக்கிறாள்.  யாரும் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது,  பிறர் நலன் கருதியும்  உதவி செய்து,  வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்.   தன் காரியமாக மட்டும் இருந்து விட்டு, நல்ல படியாக வாழ பாக்கி வைத்து விட்டு செல்ல கூடாது  என்று சொல்லி கொடுத்து இருக்கிறாள்.  A quote to share:  (Author unknown)
 தோழிகள், அனைவரும் சந்திக்கும் போது, பலர்,  அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள்.  இவள் எப்பொழுதும் சந்தோஷமாக - positive ஆக பேசி கொண்டு இருப்பாள்.  "நீங்க எல்லாம் இங்கே இப்படி கவலை படுவதால் மட்டும்,   அங்கே அந்த வேலை அல்லது பிரச்சனை,  தானாக  முடிந்து விடுமா?  அப்புறம் எதற்கு அதை பற்றியே நினைத்து கொண்டு , புலம்பி கொண்டு இருக்கீங்க?  அவரவருக்கு இருக்கும் டென்ஷன் இல் இருந்து விடுபட,  ஒரு change குத்தானே சந்தித்து கொள்கிறோம். இங்கேயும் அதே டென்ஷன் நினைப்புதானா?" என்று உணர வைப்பாள்.


"அடுத்து வரப் போகும்  கஷ்டத்தை பற்றி மட்டும் நினைக்காமல், அடுத்து வரப் போகும் நல்ல விஷயத்தை பற்றியும்  நினைங்க.  வாழ்க்கையை நினைத்தால், அத்தனை பயமாக இருக்காது.  உற்சாகமாக இருக்கும்" என்பது அவளின் பாலிசி.
Life is not just a terrifying thing, but a terrific thing too.  


அர்ப்பணாவின் மறைவிலும்,   எங்களால்  இன்னும் புன்னகைக்க முடிகிறது என்றால்,  அவளை பற்றி நினைக்கும் போது, அவள் வாழ்ந்த வாழ்க்கையில்  உள்ள அர்த்தமும் ஒரு காரணம். எங்கள் புன்னைகைகளில் அவளும் வாழ்கிறாள்.
  என்னை பழைய உற்சாகத்துடன் மீட்டு எடுத்து கொண்டு வர இதுவே போதுமே!!!!
இப்படி ஒரு நட்பு  கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும்.  கிடைத்து விட்டு "போனால்" அல்ல.

தமிழ்மண நட்சத்திரத்துக்காக , எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!